உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

சுகா
சுகா
Published on

பாட்டு என்றால் அத்தனை இஷ்டம். பாட்டுக் கச்சேரி என்றால் இன்னும் இஷ்டம். எனக்குப் பிடித்த எத்தனையோ பாடல்களை கச்சேரிகளின் வாயிலாகவே என் மனதில் தேக்கி வைத்திருக்கிறேன். திருநெல்வேலி பகுதிகளில் நான் கேட்டு ரசித்த மெல்லிசைக் கச்சேரி பின்னணியில் எழுதப்பட்டதாலோ என்னவோ வண்ணநிலவனின் ‘மல்லிகா' என்னும் சிறுகதை என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. வறுமை காரணமாக பாட்டுக் கச்சேரிகளுக்குப் பாடச் செல்லும் இளம்பெண் மல்லிகா.

சிறுவயதில் தகப்பனை இழந்த அவளுக்கும், அவளது தாய்க்கும் உறுதுணையாக இருந்து ஆதரவு காட்டி வரும் தாய்மாமாவுக்கும், மல்லிகாவுக்குமான உறவே இக்கதை. கச்சேரி முடிந்து பஸ்ஸில் வரும் போது ‘அக்கறையுடன்' தன்னருகில் மல்லிகாவை உட்கார வைத்துக் கொள்ளும் மாமாவை மனதார வெறுக்கிறாள், மல்லிகா. அந்த வயதுக்கேயுரிய எந்த அபிலாஷைகளுக்குள்ளும் அவளைச் செல்லவிடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார், மல்லிகாவின் மாமா. கச்சேரியில் பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதி ஒரு பாட்டைப் பாடச் சொல்லி சீட்டு வருகிறது. ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' என்கிற காதல் பாடல் அது.

மனதிலிருந்து பாடும் மல்லிகாவுக்குக் காதலிக்கும் வாய்ப்பையோ, கல்யாணம் செய்து கொள்ளும் வாய்ப்பையோ அவளது மாமா வழங்கவில்லை. எங்கோ மேடையில் மல்லிகாவைப் பார்த்து, அவள் குரலில் லயித்த ஒரு இளைஞனுக்காக பெண் கேட்டு வருகிறார்கள்.  ‘இப்ப என்ன அவளுக்கு கல்யாணத்துக்கு வயசாச்சு?' என்று அதிலும் மாமா மண்ணை அள்ளிப் போடுகிறார். திருமணப் பேச்சு பேச வந்திருக்கும் தன் உறவுக்கார பெண்மணியிடம், ‘இந்தாளு என்னை இன்னொருத்தனுக்குக் கட்டிக் குடுக்க விட மாட்டாரு' என்று மல்லிகாவுக்குக் கத்தத் தோன்றுகிறது. கோபத்தை அடக்கிக் கொள்கிறாள். அத்துடன் அவள் மனம் சமாதானமாகவில்லை. ‘என்னைக் கட்டிக்கிறீங்களா, மாமா?' என்று வயதான தன் தாய்மாமனிடம் மல்லிகா கேட்பதோடு கதை முடிகிறது. இந்தக் கதையைப் படிப்பதற்கு முன்பு வாழ்க்கையில் நான் பார்த்த மல்லிகாக்களை நினைவு கூர்ந்து வருந்தியிருக்கிறேன். படித்த பிறகு சந்திக்க நேர்ந்த, கேள்விப்பட்ட மல்லிகாக்களின் கதைகள் பல நூறு. வண்ணநிலவனின் ‘மல்லிகா' என்னும் இந்தச் சிறுகதை என்னைப் புரட்டிப் போட்ட கதையல்ல. ஆனால் 27 ஆண்டுகளாக மறக்காமல் என் மனதில் தங்கியிருக்கும் கதை.

ஜூலை, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com