உண்மையான பொய்!

இணையத்தில் என்ன பார்க்கலாம்?
உண்மையான பொய்!
Published on

If you are not paying the product, then you are the product

கடந்த சில மாதங்களாகவே சுஷாந்த் சிங், ரியா

சக்ரவர்த்தி, கங்கனா ரனாவத்  ஆகியோர் தொடர்பான செய்திகள்தான்  இந்தியாவின் மிகப் பெரும் பிரச்னைகளாக நம்மை நம்ப வைத்ததில் சமூக வலை தளங்களின் பங்கு பெரியது. நாம் எதைப் பற்றி கவலைப்பட வேண்டும், எதைப் பற்றி விவாதிக்க வேண்டும், நம்முடைய சிந்தனை ஓட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. எப்படி என்பதைத்தான் தெளிவாகப் பேசுகிறது ‘சோஷியல் டைலமா (The Social Dilemma)' என்ற நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம்.

பேஸ்புக், ட்விட்டர், கூகுள், இன்ஸ்டாகிராம், யூ ட்யூப், லின்கெடின், பிண்ட்ரெஸ்ட் என்று பல சமூக வலைதள நிறுவனங்களில் முக்கிய பொறுப்பாற்றிய பலர், இது எவ்வாறு செயல்படுகிறது என்று இந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கிறார்கள். இந்த படத்தின் நம்பகத்தன்மைக்கு இவர்களே காரணம்.

சமூக வலைதளத்தால் ஏற்பட்ட நன்மைகளை புறக்கணிக்க முடியாது என்றாலும் இதன் மறுபக்கம் சமூகத்தில் மாற்றவியலாத ஆபத்தை கொண்டு வந்திருக்கிறது. சமூக வலைதளங்களால் உண்டாகும் பிரச்னைகளை முதலில் உணர்ந்து கொண்ட கூகுள் வடிவமைப்பாளர் ட்ரிஸ்டன் ஹாரிஸ் இது பற்றி ஒரு அறிக்கையை உருவாக்கி நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறார். எல்லோரும் ஹாரிஸ்

சொன்னதை ஆமோதிப்பதோடு, கூகுளின் தலைமைக்கு தகவலை தெரிவிக்கிறார்கள். ஏதாவது மாற்றம் வரும் என்று காத்திருந்தால் கடைசியில் ஒன்றுமே நடப்பதில்லை.

‘‘இந்த ஆபத்தைப் புரிந்துகொள்வதற்கு, சமூக வலை தள நிறுவனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம். பேஸ் புக் தொடங்கி யூ ட்யூப் வரை நமக்கு எல்லாமே இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்களின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிகள் அதிகரிக்கிறது. எப்படி? விளம்பரதாரர்களின் பணம் தான். இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை. ஒரு பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது என்றால்

நீங்கள் தான் அங்கே வியாபாரப் பொருள். பெரு நிறுவனங்கள் நம்முடைய கவனத்தை ஈர்ப்பதற்காக போட்டி போடுகிறது. நாம் அதிக நேரம் சமூக வலை தளங்களில் செலவிடும்போது அவர்களின் வருமானம் அதிகரிக்கிறது'' என்கிறார் மோஸில்லா பையர்பாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ரஸ்கின்.

நம்முடைய அத்தனை தகவல்களும் கண்காணிக்கப்படுகின்றன; தரப்படுத்தப்படுகின்றன. நம்முடைய ‘லைக்', டிஸ்லைக்', என்ன மாதிரியான வீடியோக்களை விரும்பி பார்க்கிறோம், அதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எதற்கு உணர்ச்சிகரமாக பதிலளிக்கிறோம், எதற்கு ஆதரவாக, எதற்கு எதிராக என்று அனைத்து தகவல்களும் செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களாக கணினியில்

சேமிக்கப்படுகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம், நாம் யார் என்பதை துல்லியமாக இந்த தகவல்கள் வரையறுக்கின்றன. நாம் ‘டேட்டா' ஆகிறோம். இந்த தகவல்கள்தான் பெரு நிறுவனங்களின் விளையாட்டு மைதானம். இதைக் கொண்டு அவர்கள் விரும்பியபடி மாற்றங்களை சமூகத்தில் கொண்டுவர முடியும். அமெரிக்காவின் சிலிகான் வேலியில் வேலை பார்க்கும் ஐம்பது பேர் ஐநூறு கோடி மக்கள் எப்படி சிந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.

இதில் நம்முடைய விருப்பங்களுக்கு ஏற்ப பொருட்களை விற்பது ஒரு சின்ன பகுதிதான். ஒரு நாட்டில் புரட்சி வெடிக்க வேண்டுமா, அந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமா, குறிப்பிட்ட அரசியல் கட்சியை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டுமா இப்படி பல செயல்களை இந்த தகவல்களின் மூலமாக செய்ய முடியும்; செய்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப் பட்டு சிலர் கொல்லப்படுவதற்கு, முக்கியமான அரசியல் தருணத்தில் காண்ட்ராக்டர் நேசமணி ட்ரெண்டிங் ஆனதற்கு, குழந்தை கடத்துகிறவர்கள் என்ற சந்தேகத்தில் வடநாட்டுக் குடும்பத்தை துரத்திக் கொன்றதற்கு பின்னால் அரசியல் காரணங்களும், துணையாக சமூக வலை தளங்களும் பயன்பட்டிருக்கின்றன. பொய்ச் செய்திகளை சரிபார்க்க, மட்டுப்படுத்த இந்த நிறுவனங்கள் போதுமான முயற்சியையும் எடுப்பதில்லை. இதனால் சமூகம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறது.

இந்த தகவல்களும், கோட்பாடுகளும் சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குகிறது. இதனால் எப்போதும் வெடித்துக் கிளம்பக்கூடிய எரிமலைகளாக சமூகம் ஆகிவிட்டது. அமைதி, சகிப்புத்தன்மை என்று அத்தனையும் காற்றில் பறக்கவிட்டு விடுகிறோம்.

இன்னொருபக்கம்,சினாப்சாட் டிஸ்மார்பியா (Snapchat Dyamorphia) என்பது இந்த பிரச்னைகளால் ஏற்பட்டிருக்கும் புது வியாதி. இதனால் இணையத்தில் பகிரப்படும் அழகூட்டப்பட்ட தன்னுடைய முகத்தைப் போலவே பலரும் அவர்கள் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள விரும்புகிறார்களாம்.

2009 க்குப்பிறகு வளர் இளம் பருவ பெண் குழந்தைகளின் தற்கொலைகளும், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு அமெரிக்காவில் அதிகரித்திருக்கிறது என்கிறார் நியூயார்க் நிர்வாக பல்கலைக்கழக பேராசிரியர் ஜொனார்தன் ஹெய்ட்.

சரி, இந்த பிரச்னைகளிலிருந்து எப்படி வெளிவருவது?

‘‘முதலில் மிக அவசியமானதைத் தவிர மற்ற எல்லா சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுங்கள்.கைப்பேசி திரை என்ற மாய உலகத்தைத் தாண்டி உண்மையான அற்புதமான உலகம் வெளியில் இருக்கிறது. நமக்காக படைக்கப்பட்ட இந்த உலகத்தில் நமக்கான வாழ்க்கையை வாழ்வோம்'' என்கிறார் Ten arguments for deleting your social media accounts Right now என்ற நூலின் ஆசிரியர் ஜாரன் லேனியர்.

கைப்பேசியில் அத்தனை செயலிகளின் நினைவூட்டிகளையும் அணைத்து வையுங்கள்.

குழந்தைகளுக்கு 16 வயது எட்டும் வரை சமூக வலைதளங்களை தடை செய்யுங்கள். சமூக வலை தளங்களை நடத்தும் பெரு நிறுவன அதிபர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு அதை தடை செய்திருக்கிறார்களே, ஏன் என்று யோசியுங்கள்.

இருக்கும் தளங்களில் மற்றவர்களின் கருத்துகளையும் கவனியுங்கள்,மதிப்பளியுங்கள்.

தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்

படுத்தாமல் அதை பகிராதீர்கள். தகவல்களைச் சரிபார்ப்பதற்காகவே Altnews, Boom, Webqoot போன்ற தளங்கள் உள்ளன. தமிழில் youturn தளமும் உள்ளது.

யூ ட்யூப் தளத்தில் உங்களுக்கு தேவையானதை மட்டும் பாருங்கள்.

பெரு நிறுவனங்களின் விருப்பங்களுக்கேற்ப தற்போது ஆடிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து விடுபடாவிட்டால் எதிர்காலம் அபாயகரமானதாக இருக்கும் என்பதை மனதில் தைக்கும்படி சொல்லியிருக்கிறது ‘சோஷியல் டைலமா'.

அக்டோபர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com