உங்கள் நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போகனுமா

உங்கள் நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போகனுமா
Published on

“சாப்பிட்டு சாப்பிட்டு வீட்டுலயே தூங்கிட்டு இருந்தா சர்க்கரை நோய் தான் வரும். ஏன், ஆர்த்ரிட்டீஸ் கூட வரும்” அவர் சொன்னபோது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. மனிதர்களை பற்றிப் பேசியிருந்தால், ஆச்சரியத்திற்கு அவசியம் இல்லை. ஆனால் அவர்  சொன்னது, நாய்களைப் பற்றி. சொன்னவர் ஸ்ரீராம் சேகர் என்ற 28 வயது இளைஞர்.வீட்டில் வளர்க்கும் செல்லப்பிரணிகளான நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதை பா பிரிண்ட்ஸ் (pawprints) என்ற இவரது நிறுவனம் பிசினசாகச் செய்து வருகிறது. கேட்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் ரொம்ப அக்கறையுடனேயே இதைச்  செய்து வருகிறார் ஸ்ரீராம்.

“பிப்ரவரி மாசம் வீட்டுல ஒரு நாய்க்குட்டி வாங்கினோம். நமக்கு இருக்குற வேலைப் பளுவுல அந்த நாய்குட்டியை தினமும் வாக்கிங் கூட்டிகிட்டு போறது ரொம்பவே சிரமமா இருந்தது. இதுமாதிரி தானே மத்தவங்களுக்கும் இருக்கும். அதையே பிசினசா செஞ்சா என்னன்னு ஒரு சின்ன ஐடியா. அது தான் இன்னிக்கு பா பிரிண்ட்சா மாறியிருக்கு” என்ற இவர் யு.கே.வில் எம்பிஏ படித்துவிட்டு சென்னையில் நிதி ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

“ஏப்ரல் மாசம், சாதாரணமாத் தான் ஆரம்பிச்சோம். தொடங்கின மறுநாளே முதல் கஸ்டமர் கிடைச்சார். இன்னிக்கு 10 கஸ்டமர்களும், 7 ஊழியர்களும் இருக்காங்க. காலையில அஞ்சுலருந்து ஏழு மணி வரைக்கும் தான் வேலைங்கறதால, நிறைய ஸ்டூடண்ட்ஸ் கூட ஆர்வமா வேலைக்கு வர்றாங்க.  அப்படி வர்றவங்களுக்கு இன்டர்வியூ வச்சு தான் வேலைக்கு எடுக்குறோம். ஏன்னா, அவங்களுக்கு நாய்கள் மீது இயற்கையாவே ஒரு பிரியம் இருக்கணும். அப்பதான் இந்த வேலையைச் சலிப்பில்லாம செய்ய முடியும்” என்று சொன்னவரிடம் உங்களுக்கு தோன்றும் அதே சந்தேகத்தை கேள்வியாகக் கேட்டோம்.

“இதையெல்லாம் ஒரு பிசினஸா செஞ்சு ஜெயிக்க முடியுமா?”

“நிச்சயமா. வசதியான வீடுகள் தான் எங்க டார்கெட். அந்த வீடுகள்ல தான் நாய்கள வாக்கிங் கூட்டிட்டுப் போறது பெரிய பிரச்சனையா இருக்கு. வீட்டு  வேலைக்காரங்க, டிரைவர், வாட்ச்மேன்னு நிறைய பேர் நாய்கள வாக்கிங் கூட்டிட்டு போனாலும், அது அந்த பிராணிகளுக்கு சரியான உடற்பயிற்சியா  இருக்கறதில்ல. தெருமுனை வரைக்கும் போயிட்டு வந்திடுவாங்க. இல்லனா ஒரு டீ குடிச்சிட்டு திரும்பிடுவாங்க. இந்த நடையெல்லாம் நாய்களுக்கு பத்தாது. நடக்காம வீட்டுலயே சாப்ட்டு தூங்கிட்டு இருந்தா, சீக்கிரத்துல நாய்களுக்கு நோய் வந்திடும்.  நாய்களின் உடலமைப்புக்கு ஏற்ப நடைப்பயிற்சி தேவை.” என்றார் ஸ்ரீராம்.நாய்களின் உருவத்தையும், அதன் குணத்தையும் பொறுத்தே வாக்கிங்குக்கான வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பக்கத்தில் நிற்கும் ஆளுயர “கிரேட் டேன்’ முதல் தரையோடு தரையாக இருக்கும் “டேஷண்ட்’ வரை எந்த வகையாக இருந்தாலும் ஓகே தான். தோராயமாக மாதத்திற்கு மூவாயிரம் ரூபாயில் தொடங்குகிறது கட்டணம். ஸ்ரீராமின் டாக் வாக்கிங் சேவை தற்போது சென்னை திருவான்மியூர், பெசன்ட்நகர், அடையார், ஈசிஆர் பகுதிகளைச் சுற்றியே அமைந்துள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள் சென்னை முழுவதும் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.

 நாய்களுக்கு வாக்கிங் தேவையா என்பது பற்றி கால்நடை மருத்துவர் வி. அருணிடம் கேட்டோம். “நாய்களுக்கு காலை, மாலை இருவேளை வாக்கிங் அவசியமானது (‘ கக்கா’ வாக்கிங் இதில் சேர்த்தி இல்லை). 3-4 மாத குட்டிகளுக்கு 5-6 முறை வாக்கிங் தேவை. 7 வயதிற்கு அதிகமான சீனியர் நாய்களுக்கு குறைவான வாக்கிங் போதுமானது. வாக்கிங் போவதனால் நாய்களுடைய மோசமான பழக்கங்கள் (தேவையில்லாமல் குரைப்பது, ஆட்களை கடிப்பது, வீட்டு பொருட்களை நாசம் செய்வது...) குறையும். லேப்ரடார், ரெட்ரீவர், பீகிள் போன்ற ஸ்போர்டிவ் வகை நாய்களுக்கு அதிகப்படியான உடற்பயிற்சி தேவை.பெரிய நாய்களான மேஸ்டிப், கிரேட் டேன் வகைகளுக்கும் டாய் பிரீட்ஸ் எனப்படும் சிறிய வகை நாய்களுக்கும் குறைவான உடற்பயிற்சி போதுமானது”  என்கிறார்.  நடக்கட்டும்!

அக்டோபர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com