உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்குங்கள்!

உலகம் உன்னுடையது
உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்குங்கள்!
Published on

பாகிஸ்தானிலுள்ள லாகூரில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1952 ல் பிறந்த சாஹித் கான் இன்று அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபர்.

1968 ல் அமெரிக்காவிற்கு பொறியியல் படிக்க போகும்போது இவரின் கையிருப்பு வெறும் 30 ஆயிரம் ரூபாய். இன்று ஏறக்குறைய 23 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உள்ள இவர் பிளெக்ஸ் இன் கேட் என்ற வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்.போர்ப்ஸ் பத்திரிகையின் கணக்குப்படி அமெரிக்காவின் 122 வது பணக்காரர். அமெரிக்காவில் பாகிஸ்தான் வம்சா வளியினரில் முதல் பெரும் பணக்காரர்.

கானின் அப்பா கட்டுமான தொழிலில் இருந்தவர். அம்மா கணித பேராசிரியை. 1968 ல் தன்னுடைய 16 வது வயதில் பொறியியல் படிக்க அமெரிக்காவின் அர்பானா மாநிலத்திலுள்ள இல்லினோஸ் பல்கலைக்கழகத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் கையிருப்போடு வருகிறார் கான்.கல்லூரி விடுதியில் இடம் கிடைக்காமல் முதல் நாள் அங்குள்ள ஙுMஇஅ -வில் இரவு தங்குவதாக ஏற்பாடு. ஓர் இரவு சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் அன்றைய தேதியில் 180 ரூபாய் செலவாகிவிடுகிறது.தன்னுடைய கையிருப்பை கணக்கிட்ட கான்,இப்படி போனால் சில மாதங்கள் கூட வண்டியோட்ட முடியாதே என்ற கவலையுடன் படுக்கைக்கு செல்கிறார். அடுத்த நாள் காலை சமையற்கூடத்தை சுற்றிவந்த கானுக்கு கிடைத்த தகவல்,

சமையலறை பாத்திரங்களை கழுவ ஒரு மணி நேர சம்பளம் 72 ரூபாய் என்பது.கானின் பிரச்னைக்கு அங்கேயே தீர்வு கிடைத்துவிட்டது. உற்சாகமாக படிக்கும் போதே வேலை செய்து பணத்தேவையை பூர்த்திசெய்து கொண்டார்.

1971 ல் தொழில்துறை பொறியியல் பட்டபடிப்பு முடித்த கையோடு பிளெக்ஸ் இன் கேட் நிறுவனத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்தார்.  பெரிய டிரக்குகளுக்கு பம்பர்களை செய்யும் வேலையை பிளெக்ஸ் இன் முக்கியமாக செய்து வந்தது.ஆனால் அதை செய்வதற்கு 15 வகையான பொருட்களை வெல்டிங் செய்து பம்பரை தயாரித்துக் கொண்டிருந்தர்கள். கானுக்கு தன் முன்னால் உள்ள சவால் தெரிந்துவிட்டது. ஒரே உலோகத்தால் பம்பரை தயாரிப்பது அவரது திட்டம். ஆனால் அன்றைய நிலையில் புது எண்ணங்களை உள்வாங்கிக்கொள்ளும் மன நிலையில் கம்பெனியும் இல்லை,மார்க்கெட்டும் இல்லை.

1978 ல் சிறிய பேங்க் லோனுடன் ‘பம்பர் வொர்க்ஸ்’ என்ற சொந்த கம்பெனியை தொடங்கிவிட்டார் கான்.எடை குறைவான, எரிசக்தியை மிச்சப்படுத்தும் இவருடைய பம்பருக்கு நல்ல வரவேற்பிருந்தது ஆச்சர் யமல்ல. அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அப்போது ஜப்பானின் ‘இசுகு’ விலிருந்தும், கிரெஸ்லர் நிறுவனம் மிசுசுபியிலிருந்தும் கனரக வாகனங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது.இரண்டிற்குமே அதனுடைய எடை பிரச்னையாக இருந்த சமயத்தில் கானின் பம்பர் சரியான தேர்வாக அமைந்தது.

எல்லாமே சரியாக போய்க்கொண்டிருப்பதாக கான் நினைத்த வேளை,அவருடைய பழைய கம்பெனி பிளெக்ஸ் இன் கம்பெனியின் ரகசியங்களை கான் திருடிக்கொண்டு வந்துவிட்டதாக அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அப்போதுதான் கம்பெனி துவங்கியிருந்த நேரம். கையிருப்பு கானின் நம்பிக்கை மட்டுமே.துணிச்சலுடன் வழக்கை எதிர் கொண்டார். பணப்பிரச்னையில் பேருக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொண்டாலும்,வழக்குக்கான அத்தனை தரவுகளையும் கானே திரட்டினார். பகலில் கம்பெனியில் வேலை,இரவில் வழக்கிற்காக தயார் செய்வது என்று சுழன்றபடியே இருந்தார்.1980-ல் கானுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

அடுத்து மாதம் 30 லட்ச ரூபாய் இழப்பில் இயங்கிக்கொண்டிருந்த பிளெக்ஸ் இன் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அமெரிக்க மோட்டார் தொழிலில் ஜாம்பவானான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களுக்கும் கானின் பம்பரை உபயோகிக்க முடிவெடுத்து கானை அழைத் தது. ஆனால் கானுடைய கம்பெனியால் இவ்வளவு பெரிய பொறுப்பை தாங்க முடியாது என்று தெரிந்து வேறொரு சப்ளையருக்கு அதை கொடுத்துவிட்டது. கான் உடைந்து போய்விடவில்லை. வாய்ப்புக்காக காத்திருந்தார். இறுதியாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஒரு உதவி கேட்டார். அவர் கேட்டது ஜப்பானிலுள்ள இசுகு நிறுவனத்தின் தொடர்பு எண் மட்டுமே.கிடைத்த உடன் ஜப்பானில் ஒருவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டு அவர்களிடம் பேசத் தொடங்கினார். ஒரே நாளில் நடந்துவிடவில்லை. ஆனால் மெதுவாக கான் அவர்களின் நம்பிக்கையை பெற்று வியாபாரத்தை தொடங்கினார். இன்றுவரை அது தொடர்கிறது.

இன்று உலகெங்கும் உள்ள கானின் பிளெக்ஸ் இன் கேட்டின் 52 தொழிற்சாலைகளில் 13 ஆயிரம் பேர் பணிப்புரிகிறார்கள். கான் சொல்வது:“கடுமையாக உழையுங்கள்.உங்களுக்கான பாதையை உருவாக்குங்கள். அதிர்ஷ்டம் உங்கள் வழியில் வரும்”

பணக்காரராக இருப்பதற்கு பயப்படுகிறார்கள்!

தலைப்பை படித்தவுடன், சும்மா டகால்டி அடிக்கிறார்கள் என்றுதானே தோன்றும். ஆனால் உண்மை. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பப்ளிசிங் மற்றும் ஹாரிசன் குழு இணைந்து நடத்திய ஆய்வில் இதை கண்டறிந்திருக்கிறார்கள். தாங்கள் பணக்காரர்கள் என்றும் தங்களுடைய சொத்து இன்னதென்றும் வெளிப்படையாக பெருமைபட்டுக்கொள்பவர்கள் மூன்றில் ஒரு பங்கு இருந்தாலும், இதைச் சொல்ல பயப்படுபவர்களின் சதவீதம் 24 லிருந்து 28 ஆக சென்ற ஆண்டு உயர்ந்திருக்கிறது. ஆடம்பர பொருட்களை வாங்கும் போதும், பெரிய தொகையை வெளிப்படையான பேரங்களில் வாங்கும்போதும் மனதில் குற்ற உணர்ச்சியுடனே செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்பவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட இந்த வருடம் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இருப்பினும் ஒரு பக்கம் பணக்காரர்கள் பணத்தை வாரி இறைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

பணமொழி

ஒரு மனிதனின் உண்மையான மதிப்பு என்பது அவன் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டே அளவிடப்படுகிறது.

- மார்கஸ் ஆர்லியஸ் அண்டோனியஸ்

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com