பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் மோதலில் ஆரம்பிக்கிற,அல்லது ஆபத்திலிருந்து கதாநாயகியைக் காப்பாற்றி அன்புக்குப் பாத்திரமாகி, கண்டதும் காதலாகி, ஈருடல் தொட்டுப்பிடித்து விளையாடி, இன்னோரன்ன சங்கடங்கள் - சாதி, கௌரவம், கொலைப்பழி, அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி வில்லத்தனம்- எல்லாம் கடந்து கடைசிக் காட்சியில் அல்லது அதற்குச் சற்று முன்னால் கல்யாணம் செய்து கொள்ளும் கதைகள்தான் அதிகம். காதலிக்கும் போது, அந்தக் காலம் என்றால் சல்வார் கமீஸ், ஸ்கர்ட் போல நவீன ‘மோஸ்தர்’ஆடைகள் அணிவார்கள். கல்யாணத்திலிருந்து கண்டிப்பாக சேலைதான். கதையின் ஆரம்பத்திலேயே கல்யாணம் செய்து கொள்ளும் குடும்பக் கதைகள் குறைவுதான். இங்கே காதலிக்க மட்டுமே நேரமுள்ள கதைகள்தான் காலகாலமாகத் திரையேறி வருகிறது.
எனக்கு நினைவு தெரிந்து, படம் ஆரம்பிக்கிற போதே எம்.ஜி.ஆர், மனைவி குழந்தைகளுடன் இருக்கிற மாதிரி நடித்த படம், ‘நான் ஏன் பிறந்தேன்’ மட்டும்தான். அதுவும் ’ஜீனே கி ராஹ்’ என்ற இந்திப் படத்தின் அப்பட்டமான தழுவல். மற்றப்படி எம்.ஜி.ஆர் படங்கள். ஒன்றிரண்டில் --வேட்டைக்காரன், தாய்க்குத்தலைமகன், நல்ல நேரம் போன்றவை-நடுவில் திருமணமாகி குழந்தையுடன் வருவார். மாறாக சிவாஜி படங்களில் குடும்பத்திற்குள் சுழலும் செண்டிமெண்ட் கதைகள் நிறைய உண்டு. இவர்கள் இருவரும் போகும் பாதையில்தான் தமிழ் சினிமா செல்லும் என்பது அந்தக் காலத்திய ட்ராஃபிக் ரூல். சிவாஜி படங்களில் குறிப்பாக தெய்வப்பிறவி, தங்கப்பதக்கம்,வியட்நாம் வீடு என்று இருநூற்றிச் சொச்சம் படங்களில் கால்வாசியாவது இப்படித் தேறும். படம் ஆரம்பித்து சில காட்சிகளிலேயே திருமணமாகி,” அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்....” என்று சிவாஜி பாடுகிற, பத்மினி வெட்கம் சொட்டச்சொட்ட ஹம்மிங் மட்டும் பாடும், முதலிரவுக் காட்சி வந்து விடும்.
இதில் ஒரு வேடிக்கை என்னவெறால், புரிந்தோ புரியாமலோ சினிமாவில், எப்போதும் தர்க்க பூர்வமாக,முதல்இரவுக் காட்சியில் ஆண் குரலில்தான் பாடல் வரும். பெண்குரல் வெட்கம் கொஞ்சும் ஹம்மிங் மட்டுமே பாடும். பொன்னாளிது போலே வருமா இனிமேலே(பூம்புகார்), பாவாடை தாவணியில் பார்த்த உருவமா,(நிச்சய தாம்பூலம்) என்னம்மா சிங்காரக் கண்ணம்மா(விவசாயி), ஒரு சிறு மாறுதலாக பாசமலரில் சிவாஜி எம்.என்.ராஜம் முதலிரவில் சாவித்ரி,‘மயங்குகிறாள் ஒரு மாது...’ பாட- ஜெமினி சித்தார் வாசிப்பார். சிலப்பதிகாரக் காலத்திலிருந்து கணவன் மனைவியைப் பிரிய அவள் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்று கற்பு நெறி காக்கிறவளாகவே வருவாள். சில படங்களில் மனைவி வேறு மாறுதலான ரோலில் வருவார், அப்படிச் சிலவற்றை ரீவைண்ட் செய்வதே இங்கு நோக்கம்.
அந்த நாளிலிருந்து தொடங்கினால் முதலில் நினைவுக்கு வருவது ‘அந்தநாள்’படம் தான். பாடலே இல்லாத படம். தன் பொறியியல் மூளைக்கு தகுந்த வரவேற்பைத் தராத சொந்த அரசாங்கத்தினை, வெறுத்து எதிர்க்கும் இளைஞனாக சிவாஜி வருவார். ஜப்பான் ராணுவத்திற்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் போது, அதை எதிர்த்துப் போராடித் தோற்ற, தேச பக்தி நிறைந்த மனைவி கணவனையே கொன்று விடுவார். இப்படி ஒரு பத்தினியை சினிமா அது வரை பார்த்ததே இல்லை. ஆனால் ‘அந்த நாள்’ வந்து கொஞ்ச நாளிலேயே, நான்கு மாதங்களுக்குள்ளாகவே, ‘கொலையும் செய்வாள் பத்தினி’என்று புறப்பட்டார் சிவாஜியின் மனைவியான லலிதா, தூக்குத் தூக்கி படத்தில். இதில் லலிதா டி.எஸ்.பாலையாவுடன் தகாத உறவு கொள்பவராக வருவார். ஆனால் ஒரு வில்லி போலவே சித்தரிக்கப் பட்டிருப்பார். இதே போல, ‘கவரிமான்’ படத்தில் ரவிச்சந்திரனுடன் தகாத உறவு கொள்ளும் மனைவியான ‘அரங்கேற்றம்’ ‘பிரமிளா’வைக் கொலை செய்யும் பாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ படத்தில், தன்னையும் குழந்தையையும் துன்புறுத்தும் மனோகரை ‘சாதுவாக இருந்து மிரளும்’ மனைவியான சாவித்ரி கொலை செய்வார். படித்தால் மட்டும் போதுமா படத்தில் ‘படிக்காத’ கணவனை வெறுத்து ஒதுக்கும் எதிர்மறையான மனைவி பாத்திரம் ராஜ சுலோச்சனாவுக்கு.
திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சொத்துக்கள் தன்னைச் சேரும்,என்கிற கட்டாயத்தில் சுதந்திரப் பறவையான கதாநாயகி,சீக்கிரம் சாகப்போகிற மரணதண்டனைக் கைதியைத் திருமணம் செய்து கொள்ளுவாள். ஆனால் அவன் விடுதலையாகி விடுகிறான். சிலபல திருப்பங்களுக்குப் பிறகு கதை அதே செக்குமாட்டுத் தளத்தில் சுற்றி வரும், ‘கணவன்’ திரைப்படத்தில். கதை: எம்.ஜி.ஆர். என்று போடுவார்கள், டைட்டிலில்.ஆனால் இதே கதையமைப்பில் ஏற்கெனவே யாரோ எழுதிய ஒரு நாடகம் புத்தகமாக வந்திருக்கிறது. கண்ணன் என் காதலன் படத்தில், நாயகன் ஓட்டி வரும் கார் மோதி கால் முறிந்து விட்டதாகப் பொய் நாடமாடி ஜெயலலிதா ஒரு நெகட்டிவ் ரோல் செய்திருப்பார். ஏ.எஸ்.பிரகாசம் கதை. குமுதம் விமர்சனத்தில், ‘வழக்கமாக இந்த மாதிரிப் படங்களில் எம்.ஜி.ஆர் மட்டுமே இருப்பார், இதில் கதையும் இருக்கிறது,’ என்று எழுதியிருந்தது.
அடங்காத காதலியே மனைவியாகி அடக்கப்படுகிற கதைகள் தமிழ் சினிமாவில் சாஸ்வதமானவை. The taming of the shrew- என்பது ஷேக்ஸ்பியரின் பிரபல இன்பியல் நாடகம். இதைப் பின்பற்றிப் பல கதைகள் வந்துள்ளன.‘அறிவாளி’ சிவாஜி - பானுமதி நடித்து வந்தது. அடங்காத பெண்ணாக பானுமதி. (அடங்காதபெண் என்பது அந்தக் கால,‘பொம்பளை சிரிச்சாப்போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு’, அளவுகோல்களின் படி.) அறிவாளியின் பாணியிலேயே, இரண்டு மூன்று மாத இடைவெளிக்குள் பெரிய இடத்துப் பெண் வந்தது.
‘அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம் அழகழகாப் படிக்குதப்பா, அச்சடித்த காகிதத்தை அடுக்கடுக்காச் சுமக்குதப்பா ஏட்டினிலே படிக்குதப்பா எடுத்துச் சொல்ல தெரியலப்பா நாட்டுக்குத்தான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா....’என்று ‘பெரிய இடத்துப் பெண்ணை’க் கேலி செய்து பாடும் எம்.ஜி.ஆர்/கண்ணதாசன் பாடல்கள் இப்போது செல்லாது. ஆனால் அதில் பாதிக்குமேல் பழி வாங்கப்படும் மனைவியாக சரோஜாதேவி வருவார். இதன் நகல்களாக தமிழில் ஐந்து ஆறு படமாவது வந்திருக்கும். மெகா ஹிட் ஆன‘சகல கலாவல்லவன்’ உட்பட. கொஞ்சம் மாறுதல்களுடன் இடையில் ‘பட்டிக்காடா பட்டணமா’ வந்தது. அதே கதையம்சத்துடன் கலரில் வந்த சவாலே சமாளியும் நன்றாக ஓடியது. இதில் மனைவியாகி விட்ட ‘கதாநாயகி’ என்னைத் தொடக்கூடாது என்று ஆணையிடுவார். “சொன்ன வார்த்தையும் இரவல் தானது/திருநீலகண்டரின் மனைவி சொன்னது” என்று கண்ணதாசன் ‘திருநீலகண்ட நாயனார்’ கதையை நினைவுக்குக் கொண்டு வந்து சிவாஜியைப் பாட விடுகிறார், ‘ எல்லாமே இங்க ஏற்கெனவே இருக்கப்பா’, என்கிற மாதிரியில்.
இவற்றிற்கெல்லாம் ரொம்ப முன்னதாக ‘அன்னையின் ஆணை’வந்தது. அதில் சாவித்ரியின் அப்பாவான ரங்காராவ், தன் அன்னைக்குச் செய்த கொடூரங்களுக்காக சாவித்ரியைக் காதலித்துக் கைப்பிடித்து ரங்காராவை வீட்டுச் சிறைக்குள் வைத்து அப்பாவையும் மகளையும் கொடுமைப்படுத்துவார் சிவாஜி. அது ‘அன்னையின் ஆணை’.
முரசொலி மாறன் கதை, வசனம். 1958 ல் மத்திய அரசு பரிசு வாங்கியது. எல்லோரும் அந்த வருடம் ‘நாடோடி மன்னன்’ படத்திற்குப் பரிசு கிடைக்கும் என்று எதிர் பார்த்தார்கள். அப்போதைய காங்கிரஸ் அரசாவது எம்.ஜி.ஆர் படத்திற்குக் கொடுப்பதாவது. இந்த மாதிரிப் படங்களில் மனைவியான பின் கதாநாயகி சில பல ரீல்கள்,சில சமயம் குழந்தையுடன், கஷ்டப்படுவார். கடைசியில் எல்லாம் சுபமே.
‘மரணம் வந்தால் தெரிந்துவிடும்/ நான் மனிதன் என்று புரிந்து விடும் ஊர் சுமந்து போகும் போது உனக்கும் கூட விளங்கிவிடும்..’ என்று ,திருந்தி வாழ நினைக்கும் கதாநாயகனைக் கண்ணீர் விட வைக்கும் மனைவிகளும் உண்டு.‘இருவர் உள்ளம்’ படத்தில் சரோஜா தேவி இதை நன்றாகச் செய்திருப்பார். அதே சரோஜா தேவி வித்தியாசமான பாத்திரமேற்று ‘வாக்குமூலம் வாங்கிட்டீங்கள்ளா, அரெஸ்ட் ஹிம் ...” என்று சொல்லி உடனேயே ‘என்ன மன்னிச்சுடுங்க கோப்பால்’ என்று கண்ணீரும் உகுப்பார் புதிய பறவையில். தவறிப் போய் தப்புச் செய்து விட்ட கணவனை ‘மௌனகீதங்கள்’ படத்தில் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார் சரிதா. மனைவியாக நேர்ந்து விட்ட வடிவுக்கரசியின் வாய்க்குப் பயந்து அடக்கி வாசித்து, கடைசியில் அன்பைக் கொட்டும் சிறு பெண்ணிடம் ஐக்கியமாகிவிடும் அற்புதமான பாத்திரத்தை அழகாகப் பண்ணியிருப்பார் ‘முதல் மரியாதை’க்குரிய சிவாஜி.
அதே போல,‘எம் புருஷன் எனக்கு மட்டும்தான்’ என்கிற பொஸஸ்ஸிவ்னெசின் உச்சத்திற்கே போய், பிரபலமான பாடகனான கணவனை, சித்தாராவை நோக்கி ஓட ஓட விரட்டுவார், ‘புதுப்புது அர்த்தங்கள்’ கீதா. Mrs Doubt fire படத்தின் காப்பியான அவ்வை சண்முகியில் பணக்காரக் குடும்பத்தின் மீனா, கமல்ஹாசனைப் பெண் வேடம் போட வைக்கும் மனைவியாக கொஞ்சம் வித்தியாசமான ரோலில் வருவார். முன்னாள் காதலனுடன் ஒருநாளைக் கழிக்கத் துணியும்,கடைசிநொடியில் மனம் திருந்தி விடும், மனைவியாக சுஜாதா ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தில் வருவார். சுஜாதா தன் பணக்காரப் பெற்றோரின் பிடியில் சிக்கி ‘ego clash’ல் உழன்று கணவரான ஜெமினியைப் பிரிந்து வாழ்வார், கோரா காகஸ் இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பும் பாதிப்புமான ‘லலிதா’ படத்தில். இதற்கு முன்பே வந்த குழந்தையும் தெய்வமும் கூட இப்படி ஒரு படம்தான். அமர தீபங்களாக வரும் ஸ்ரீதரின் கதாநாயகிகளில், ‘அவளுக்கென்று ஒரு மனம்’ இருந்தாலும் காதலனின் காதலிக்காக தன்னையே அழித்துக் கொள்ளும் பாரதி கொஞ்சம் வித்தியாசமான படைப்பு.
ஒரு பிரபல சினிமாப் பாடகன், கிராமத்தில் கண்டுபிடிக்கும் பாட்டுக் குயிலைக் கை பிடித்து அவளையும் சினிமாவில் பாட வைத்து, அவள் தன்னை விடப் பேரும் புகழும் அடைவதைப் பொறுக்காது, தாழ்வு மனப்பான்மையால் மனைவியைப் படுத்துவான். அற்புதமான ஜெயபாதுரி- அமிதாப் நடிப்பில் வந்த இந்த ‘அபிமான்’ என்ற ‘ஆப்பிள்’ படத்தின், ‘தக்காளித் தழுவ’லாக வந்த சூரியகாந்தியில் கணவனை மிஞ்சுகிற மனைவியாக ஜெயலலிதா சிறப்பாக நடித்திருப்பார். ‘அபிமான்’ ரிஷிகேஷ் முகர்ஜியின் அபாரமான படம். அதே ரிஷிகேஷ் முகர்ஜியின் மிகச் சிறந்த படமான, ’சத்யகாம்’ படத்தின் தழுவலான ‘புன்னகை’ படத்தில் கதாநாயகன் ஜெமினிகணேசன் மணந்து கொள்ளும், ராமதாஸால் வன்புணர்வு செய்யப்பட்ட கதாநாயகி ஜெயந்தி. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் விரல் கூட படாமல் நடிப்பார்கள். ஒரு வித்தியாசமான கணவன் மனைவி பாத்திரப் படைப்பு.
பாலசந்தரின் அபூர்வ ராகங்களில் வயதான சுந்தரராஜனைக் கைப்பிடிக்காமல் கடைசி நொடியில் மனம் மாறி விடுவார் ஜெய சுதா. கமலைக் கைப்பிடிக்காமல் தாலிக்கு மேலும் ஒரு தாலியுண்டா என்று கமலஹாசனைப் பார்த்துக் கேள்வி கேட்டு, மனம் மாறுவார் ஸ்ரீவித்யா. ஆனால் மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவி அப்பாவைக் கல்யாணம் செய்து மகனைப் பழி வங்குகிற ரோலில் நடிப்பார். காவியத்தலைவி படத்தில் சௌகார்ஜானகி, தொடர்ந்து தொல்லைகள் தரும் கணவனை, தன் வளர்ந்த குழந்தையின் வளமையான வாழ்வுக்காக கொலை செய்வார். பாலசந்தர் பட நாயகிகள் பொதுவாக வித்தியாசமானவர்கள். அச்சமில்லை அச்சமில்லை, தப்புத்தாளங்கள் சரிதா, நூல்வேலி சுஜாதா போல.
சாரதா படத்தில்,கணவனுடன் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால், கணவன் உயிருக்கே ஆபத்து என்பதால் விலகி விலகி ஓடும் ‘புனிதமான’ மனைவி பாத்திரத்தில் விஜயகுமாரியை நடிக்க வைத்திருப்பார் கே.எஸ்.கோபால-கிருஷ்ணன். அதன் வெற்றியியினால், இளம் விதவையாகி விட்ட கணவனின் தங்கையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து கணவனின் நெருக்கத்தையே தவிர்க்கிற இன்னொரு மனைவி பாத்திரத்தில் விஜயகுமாரி நடிக்க தெய்வத்தின் தெய்வம் எடுத்தார் கே.எஸ்.ஜி. இன்று நீ நாளை நான் படத்தில் இளம்விதவை லட்சுமி, சிவகுமாரிடம் தன்னை இழப்பார். ரஜினி- அம்பிகா நடித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் அரசனை நம்பி புருஷனைக் கைவிடும் பாத்திரத்தில் அம்பிகா நன்றாகச் செய்திருப்பார்.
‘இருமனம் கலந்தால் திருமணம்’ -இப்படித் தலைப்பில் ஒரு படம் வந்தது. அநேகமாக எல்லாக் கதைகளும் பாத்திரங்களும் இந்த ‘ஒற்றை வரி’ அடிப்படையிலேயே இன்று வரை சினிமாவில் படைக்கப்படுகின்றன. ஆனால் வாழ்க்கை முரண்களைச் சொல்லும் சில வித்தியாசமான, ‘இவள் இப்படித்தான்’ என்கிற மாதிரியான பெண் பாத்திரப் படைப்புடன் அபூர்வமான படங்களும் வராமலில்லை.சிலவற்றை நினைவுபடுத்திப் பார்த்திருக்கிறேன். இன்னும்கூட இருக்கலாம்.
ஜூலை, 2015.