இலக்கிய மோதல் : அருட்பா மருட்பா போர்

இலக்கிய மோதல் : அருட்பா மருட்பா போர்

நாவலர் தொடர்ந்தது மானநஷ்ட வழக்கு. அருட்பாவா மருட்பாவா என்பதற்கான வழக்கு அல்ல.
Published on

ராமலிங்க அடிகளார் எழுதிய திருவருட்பாவை விமர்சித்து ஆறுமுக நாவலர் எழுப்பிய கண்டனக் கணைகள் தமிழ்ச்சூழலில் மிகவும் முக்கியமான விவாதங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் தேவாரம் திருவாசகம் போன்ற பஞ்ச புராணங்களுக்கு இணையாக திருவருட்பாவும் ஓதப்பட்டதைக் கண்டித்த நாவலர்,‘தனிமனிதன் பாடியதை அருட்பா என்று சொல்லக்கூடாது’ என்றார். இதற்கு ராமலிங்க அடிகளார் தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன. இப்படி அருட்பா- மருட்பா விவாதம் சூடுபிடித்தது. இதற்கிடையில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் ஆறுமுகநாவலருக்கும் இடையே மோதல். அந்த தீட்சிதர்கள் ஏற்பாட்டில் அடிகளார் ஒரு ‘பிரசங்கம்’ நிகழ்த்தினார். அதில் நாவலர் என்ற சொல்லை நா, அலர் என்று பிரித்து இதற்குப் பொருள் பொய்யன், நாவில் பழிச்சொல்லை வைத்திருப்பவர் என்கிற ரீதியில் பல பொருட்களைக் கூறுகிறார். இது ‘பேரம்பலப் பிரசங்கம்’ என்ற பெயரில் துண்டறிக்கையாக அச்சிடப்பட்டு வெளிவருகிறது. இதைக் கண்டு வெகுண்டு நாவலர் கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். “ஐந்து தீட்சிதர்கள் மற்றும் ராமலிங்க அடிகளார் மீது தொடுக்கப்பட்ட இது மானநஷ்ட வழக்காகும். பலர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் வள்ளலார் எழுதியது அருட்பாவா மருட்பாவா என்பதற்கான வழக்கு அல்ல. இதன் அடிப்படையில் நடந்த இந்த வழக்கை விசாரித்தவர் ராபர்ட்ஸ் என்ற ஆங்கிலேய நீதிபதி. வழக்கின் இறுதியில் சபா.நடேச தீட்சிதர் என்பவருக்கு 50 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.” என்கிறார் டாக்டர் ப.சரவணன். இவர் அருட்பா- மருட்பா மோதல் பற்றிய ஆய்வு நூல் எழுதியவர். 

இந்த அருட்பா- மருட்பா மோதலின் அடுத்த கட்டம் நாவலரின் மாணவருக்கு மாணவரான கதிரைவேற்பிள்ளை என்பவரால் 1903-ல் திருவருட்பாவை கண்டித்து நூல் எழுதித் தொடங்கி வைக்கப்படுகிறது. இதை எதிர்த்து களம் இறங்குபவர்கள் மறைமலை அடிகள் மற்றும் குழுவினர்.  கதிரைவேற்பிள்ளை உயிரோடு இருக்கையிலேயே அவருக்கு கருமாதிப் பத்திரிகை அடிக்கும் அளவுக்கு சண்டை உக்கிரமாக நடந்துள் ளதாம்.                      

டிசம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com