அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவரும் எழுத்தாளருமான ஆலிவர் சாக்ஸ் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி மரணம் அடைந்தார். நரம்பியல் தொடர்பாக சிறந்த நூல்களை எழுதி உலகெங்கும் வாசிக்கப் பட்டவர் இவர். தனக்கு புற்றுநோய் தாக்குதலால் மரணம் இன்னும் சில மாதங்களில் உறுதி என்று தெரிந்த பின்னர் அதை அறிவித்து கடந்த பிப்ரவரியில் அவர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் எழுதிய பத்தியின் சாரம் இது.
ஒரு மாதம் முன்பு நான் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். தினமும் ஒரு மைல் தூரம் நீந்தினேன். ஆனால் என் அதிர்ஷ்டம் முடிவுற்றது. சில வாரங்கள் முன்பு என் கல்லீரலில் புற்றுநோய் இருப்பதை அறிந்தேன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக கண்ணில் அரிதான ஒரு புற்று வந்தது. அதை அகற்றுவதற்காகச் செய்த கதிர்வீச்சு, லேசர் சிகிச்சையில் அந்த கண் மட்டும் பார்வை இழந்துவிட்டது. கண்ணில் வந்த புற்று உடலின் பிறபகுதிக்குப் போவதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம். எனக்கு வந்த நோய்க்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஆனாலும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை.
கண்ணில் புற்று கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் ஒன்பது ஆண்டுகள் நல்ல ஆரோக்கியமாக வாழ முடிந்ததில் மகிழ்ச்சி. இப்போது மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கிறேன். என் கல்லீரலில் முக்கால் வாசிப் பகுதியில் புற்று இருக்கிறது. இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் இந்த வகை புற்றின் வளர்ச்சியை நிறுத்த இயலாது.
மீதி இருக்கும் மாதங்களை எப்படி வாழ்வது எனத் தேர்வு செய்வது என்பதை நான் தான் முடிவுசெய்யவேண்டும். என்னால் முடிந்த அளவு பயனுள்ளதாக, ஆழமாக, முழுமையாக வாழவேண்டும். இதற்கு எனக்குப் பிடித்தமான தத்துவவாதி டேவிட் ஹ்யூமின் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன. இவர் 65 வயதில் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயில் இருப்பதை உணர்ந்து, 1776 ஏப்ரல் 22 ம் தேதி, ஒரே நாளில் தன் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றை எழுதினார். “என்னுடைய சொந்த வாழ்க்கை” என்று தலைப்பிட்டார்.
“சீக்கிரம் இறந்துவிடுவேன் என உணர்கிறேன். என்னுடைய நோயால் கொஞ்சம் வலிதான் உள்ளது. என் உடல் இவ்வளவு மோசமான பின்னும் என் உணர்வுகள் ஒரு கணமும் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியம். என் வாசிப்பு அறையில் அதே தீவிரமும் உற்சாகமும் நீடிக்கின்றன.” என அவர் எழுதினார்.
80 வயதைத் தாண்டி வாழும் நான் அதிர்ஷ்டசாலி. ஹ்யூம் வாழ்ந்த 65 ஆண்டுகளுக்கும் கூடுதலாக 15 ஆண்டுகள் எனக்குக் கிடைத்துள்ளன. உழைப்பும் அன்பும் நிரம்பிய ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் நான் ஐந்து நூல்களை எழுதினேன். ஒரு சுயசரிதை(ஹ்யூம் எழுதிய சில பக்கங்களைவிட நீளமானது) இந்த இளவேனில் காலத்தில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில் பல நூல்கள் வைத்துள்ளேன்.
ஹ்யூம் மேலும் எழுதினார், “நான் மென்மையான குணங்களைக் கொண்டவன், கோபப்படுபவன், வெளிப்படையானவன், ஒத்துப்போகிறவன், நகைச்சுவை விரும்புபவன், இணக்க குணம் உடையவன், ஆனால் கொஞ்சம் சண்டைபிடிக்கக் கூடியவனும்கூட. என்னுடைய விருப்பங்களில் கட்டுப்பாடுகொண்டவன்”
ஹ்யூமிடம் இருந்து இங்கே நான் வேறுபடுகிறேன். அன்பான உறவுகள், நட்புகள் கொண்டவனாகவும் எதிரிகளே இல்லாதவனாகவும் இருந்தாலும்கூட மென்மையான குணங்கள் கொண்டவனல்ல. தீவிர குணமும், அதிக உற்சாகமும், விருப்பங்களில் வரையறையே இல்லாத வெறித்தனமும் கொண்டவன்.
கடந்த சில நாட்களாக என்னுடைய வாழ்க்கையை மிகவும் உயரத்திலிருந்து பார்க்கிறேன். ஒரு நிலக்காட்சியைப்போல, அதன் தொடர்புகள் பற்றிய ஆழமான உணர்வோடு. இதற்கு அர்த்தம் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதல்ல.
மாறாக நான் தீவிர உயிர்ப்பை உணர்கிறேன். மீதி இருக்கும் நாட்களில் என் நட்புகளை ஆழப்படுத்தவும், நான் நேசிப்பவர்களிடம் விடைபெறவும், நிறைய எழுதவும், வலிமை இருந்தால் பயணம் செய்யவும், விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்வதில் புதிய எல்லைகளை சாதிக்கவும் விரும்புகிறேன்.
துணிச்சல், தெளிவு, வெளிப்படையாகப் பேசுதல், உலகுடன் என் கணக்கை நேர்செய்தல் ஆகியவை இதற்குத் தேவை. இத்துடன் கொஞ்சம் உல்லாசத் துக்கும்( கொஞ்சம் அற்பத்தனத்துக்கும்) நேரமிருக்கும்.
திடீரென ஒரு தெளிவான பார்வையும் நோக்கமும் உருவாகி இருப்பதை அறிகிறேன். அவசியமில்லாத எதற்கும் இப்போது நேரமில்லை. நான், எனது பணி, என் நண்பர்கள்- இதன் மீது மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். இனி ஒவ்வொரு இரவும் ’நியூஸ் ஹவர்’ பார்க்கமாட்டேன். உலகம் வெப்பமடைதல் பற்றிய விவாதங்கள், அரசியல் மீது கவனம் செலுத்த மாட்டேன்.
இது ஆர்வமின்மை அல்ல. விலகி இருத்தல். மத்திய கிழக்கு பிரச்னை, உலகம் வெப்பம் அடைதல், சமத்துவமின்மை பெருகுதல் போன்றவை பற்றி கவலை உள்ளது. ஆனால் அவை இனி என் வேலை அல்ல. எதிர்காலத்துக்கு உரியவை. திறமையான இளைஞர்களை சந்திக்கும் போது மகிழ்கிறேன். என் புற்றுநோய்க் கட்டியை பரிசோதனைக்கு எடுத்து கண்டுபிடித்த இளைஞனையும் கூட. எதிர்காலம் நல்ல கரங்களில் உள்ளதாக கருதுகிறேன்.
என் சமவயதினர் கடந்த 10 ஆண்டுகளாக இறந்துவருவதை அதிக கவனத்துடன் கவனித்துவந்துள்ளேன். என் தலைமுறை விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மரணமும் ஒரு அறுபடல். என்னுடைய ஒரு பகுதி துண்டாடப்படுவது போல. நாம் இறந்துவிட்டால் நம்மைப் போல் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் எப்போதும் யாரைப்போலும் யாரும் இருந்தது இல்லை. யாரும் இறப்பின் அவரிடத்தை யாரும் நிரப்ப இயலாது. அவர்கள் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார்கள். ஏனெனில் அது மரபியல், இயற்கை விதி. ஒவ்வொரு மனிதனும் தனியான மனிதன். அவன் தன் பாதையைத் தானே தெரிவு செய்து, தன் வாழ்க்கையைத் தானே வாழ்ந்து, தன் மரணத்தை தானே அடைய வேண்டும்.
அச்சம் இல்லை என்று நான் நடிக்க இயலாது. ஆனால் என்னுடைய முதன்மையான உணர்ச்சி நன்றி உணர்வே. நான் நேசித்தேன். நேசிக்கப்பட்டேன். எனக்கு நிறையக் கிடைத்தது. பதிலுக்கு நானும் கொஞ்சம் செலுத்தினேன். படித்தேன், பயணித்தேன், சிந்தித்தேன், எழுதினேன். உலகத்துடன் உறவாடினேன். அது எழுத்தாளர்களும் வாசகர்களும் கொண்டிருக்கும் சிறப்பான உறவு.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கிரகத்தில் நான் உணர்வுள்ளவனாக, ஒரு சிந்திக்கும் விலங்காக இருந்தேன். அதுவே ஒரு மாபெரும் சிறப்புரிமையாகவும் சாகசமாகவும் இருந்தது.
(நன்றி: நியூயார்க் டைம்ஸ்)
அக்டோபர், 2015.