அமெரிக்கச் சிறை ஒன்றில் 1996 ல் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருக்கிறார் ராபர்ட் டௌனி. ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் சம்பளம். இதற்கு முந்தைய ஆண்டு இவரின் சம்பளம் நாலரை கோடி ரூபாய். ‘உனக்கு என்ன இல்லை. ஏன் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு இங்கு வந்திருக்கிறாய்’ என்று சக கைதிகள் கரித்துக் கொட்டுகிறார்கள்.
இதே ராபர்ட் டௌனியைத் தான் 2015 ஆம் ஆண்டின் அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகராக சொல்லியிருக்கிறது போர்ப்ஸ் பத்திரிகை. சுமார் ஐநூறு கோடி சம்பளம் வாங்கி ஜாக்கி சானை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தவர் டௌனி. அயர்ன் மேன் மற்றும் தி அவென்ஜர்ஸ் படங்களின் நாயகன் என்றால் எளிதில் விளங்கும்.
அப்பா ராபர்ட் டௌனி சீனியர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர். அம்மா நடிகை. ஐந்து வயதிலேயே அப்பாவின் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நன்றாகப் பாடக் கூடியவர்.( இந்த கதை தமிழ் நடிகர் ஒருவருக்கு அப்படியே பொருந்துகிறதே என்று நீங்கள் நினைத் தால், நிர்வாகம் பொறுப்பல்ல).
30 வயதிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் இவர் அதிகம் இருந்தது ஜெயிலில்தான். இப்படியான வாழ்கையிலிருந்து எப்படி ஜெயிலுக்குப் போனார்? கஞ்சா, கோக்கைன் போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததே காரணம். ராபர்ட் டௌனியின் போதை பழக்கத்திற்கு காரணம் அவருடைய அப்பா. அவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். ஆறு வயதில் டௌனிக்கு போதை வஸ்துக்களை அறிமுகப்படுத்தியவரும் அவரே. ‘அப்பா தன்னுடைய பாசத்தை காட்டும் வழியாக போதை பொருட்களை அவருடன் சேர்ந்து நானும் உபயோகிக்க அனுமதித்தார்’ டௌனி நீதிமன்றத்தில் சொன்ன வாசகங்கள் இவை.
1970 ல் தன்னுடைய ஐந்து வயதில் அப்பாவின் திரைப்படமான பௌண்ட் படத்தில் அறிமுகமாகி தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். 1992 ல் சார்லி சாப்ளின் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இவை எல்லாவற்றையும் மீறி போதை பழக்கம் டௌனியை தீவிரமாக ஆட்கொண்டிருந்தது. 1996 ல் முதன்முறையாக அதிபோதையில் காரில் அனுமதி பெறாத துப்பாக்கி, போதை பொருட்களுடன் பறந்து கொண்டிருந்த போது பிடிபட்டார். பரோலில் வெளிவந்த சில நாட்களில் திரும்பவும் போதையில் பக்கத்து வீட்டின் படுக்கை அறைக்கு சென்று உறங்கியதால் கைது செய்யப்பட்டார். 1996 ல் இருந்து 2001 வரை தொடர்ச்சியாக பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாசத்தை அனுபவித்திருக்கிறார் டௌனி. கலிபோர்னியா மாநில சிறையில் தினமும் நான்கு மணி நேரம் போதை பழக்கத்திலிருந்து விடுபட அவருக்கு புனர் வாழ்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஒரு வழியாக போதை பழக்கத்திலிருந்து திரும்பி வந்த டௌனிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு ஆலி மெக்பெல் தொலைக்காட்சி தொடர்.
சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது.பெரிய திரையில் டௌனியை முயற்சித்துப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. திரும்ப ஜெயிலுக்கு எப்போது போவாரோ என்ற பயம் தான்.
ஆனால் ஏர் அமெரிக்கா படத்தில் இவருடன் இணைந்து நடித்த மெல் கிப்சன் டௌனியை நம்பினார். 2003 ல் சிங்கிங் டிடெக்டிவ் படத்திற்கான இன்ஷ்யூரன்ஸ் பாண்டில் கையெழுத்திட்டு நண்பனின் திரை வாழ்க்கையை மீண்டும் துவக்கி வைத்தார்.
டௌனியை உச்சத்திற்கு கொண்டு சென்றது அயர்ன் மேன் திரைப்படம் தான். ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடிவிட்டார்கள். அதற்கடுத்து தி அவென்ஜர்ஸ் படமும் பெரிய வரவேற்பை பெற்றது.
2001 க்குப் பிறகு இன்று வரை போதையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை டௌனி. முந்தைய பிரச்னைகளைப் பற்றி இவர் எப்பொதும் சொல்வது, ’எந்த விதமான போதை பழக்கத்திலிருந்தும் விடுபட்டு விடலாம்; மன உறுதி மட்டும் இருந்தால்’.
உண்மைதானே?
ஜனவரி, 2016.