இரண்டு பெண்கள்; இரண்டு புத்தகங்கள்

இரண்டு பெண்கள்; இரண்டு புத்தகங்கள்
Published on

அம்மா என்ற தமிழ் வார்த்தைக்கு மலையாளத்திலும் அதே அர்த்தம்தான்; ஆனால் உருவம் வேறு. கேரளத்தின்  நவீனப் பொது மொழியில் அம்மா என்றால் அது ‘மாதா அமிர்தானந்த மயி’தான். விதிவிலக்கு சினிமா நடிகர்கள். அவர்களுடைய அமைப்புக்குப் பெயர் அம்மா. ஆனால் பெருவாரியான மக்களின் கவனத்தில் அம்மா என்றால் அமிர்தானந்தமயி என்றுதான் பதிந்திருக்கிறது. அந்த மனப்பதிவை ஆட்டம் காண வைத்திருக்கிறது அண்மையில் வெளியான ஒரு புத்தகம். எழுதியவர் கிரெய்ல் ட்ரெட்வல் என்ற ஆஸ்திரேலியப் பெண்மணி. இருபது ஆண்டுகளுக்கு மேலாக அமிர்தானந்த மயியின் சிஷ்யையாகவும் சேவகியாகவும் இருந்தவர்.

ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகளையும் வன்முறைகளையும் நேரில் பார்த்து நொந்து போய் சொந்த நாட்டுக்குத் திரும்பிய ட்ரெட்வல் ‘புனித நரகம்’ என்ற தனது புத்தகத்தில் ஆசிரம ரகசியங்களைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.

தனது இருபத்தொன்றாம் வயதில் ஆன்மீகத் தேடலுடன் ஆசிய நாடுகளில் பயணம் செய்த கிரெய்ல் ட்ரெட்வல் கேரளத்துக்கு வந்து சேர்ந்தார். அமிர்தானந்த மயியின் சீடராக ஆசிரமத்தில் சேர்ந்தவர் விரைவிலேயே அந்தரங்க சேவகியாகவும் ஆனார். உலகம் கருணைக் கடல் என்று பாராட்டும் ‘அம்மா’ உண்மையில் வன்முறையாளர் என்பது இவரது  முக்கியக் குற்றச்சாட்டு. ஆசிரமத்தை விட்டு விலகிச்சென்ற பின்னர் தன்னை அம்மாவின் ஆட்கள் பின் தொடர்ந்தனர். அச்சுறுத்தினர். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர் என்று தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 1999 ஆம் ஆண்டு ஆசிரமத்திலிருந்து வெளியேறினாலும் அங்கு தனக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்பட்ட சிக்கல்கள் வெகுகாலம் சாதாரணமான வாழ்க்கையில் ஈடுபட அனுமதிக்கவில்லை. நீண்ட முயற்சிக்குப் பின்னர் அந்த நரக அனுபவங்களிலிருந்து மீண்டு வந்த பின்பே புத்தகத்தை எழுத முடிந்தது என்று ட்ரெட்வல் கூறுகிறார்.

‘நீங்கள் நம்புவதுபோல அமிர்தானந்த மயி இரக்கத்தின் திரு உருவம் அல்ல. அவரது கொடூர முகத்தையும் கொடும் செயல்களையும் நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன். நானே அதை அனுபவித்திருக்கிறேன். அம்மாவின் மிக அணுக்கமான சீடர் என்னைப் பலவந்தப் படுத்தியிருக்கிறார். அம்மாவின் ஆசியோடு ஒருமுறையல்ல; பலமுறை நான் வன்புணர்ச்சி செய்யப்பட்டேன். அது மறைமுகமான மிரட்டலும் கூட. அந்தரங்கச் செயலாளர் என்ற நிலையில் ஆசிரமத்தின் எல்லா ரகசியங்களும் எனக்குத் தெரிந்திருந்தன. அதை வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்கான மிரட்டல் அந்த வன்புணர்ச்சிகள். அத்துடன் இல்லாமல் மனரீதியாகவும் என்னை வதைத்தார்கள்’ என்கிறார் ட்ரெட்வல்.

தன்னை மட்டுமல்ல; ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் பலரையும் அடித்துத் துன்புறுத்துவது அம்மாவின் வழக்கம் என்று குற்றம் சாட்டுகிறார். அவர் மேலும் பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்.

கேரளத்துக்கு வந்த குறுகிய நாட்களிலேயே ட்ரெட்வல் மலையாளமும் கற்றுக் கொண்டார். அதன் பலன் மிகக் குறுகிய காலத்துக்குள் அமிர்தானந்த மயி ஆசிரமம் வளர்ந்த கதையையயும் சொத்துக்கள் குவிந்த முறையையும் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் சொத்துகளுக்கு வரம்பே கிடையாது. வரும் நன்கொடைகளுக்குக் கணக்கும் கிடையாது. பணத்தின் மீதும் பொன்னின் மீதும் இந்த நடமாடும் கடவுளுக்கு இருக்கும் அடங்காத ஆசை பற்றியும் புத்தகம் சொல்லுகிறது. பணமும் நகைகளும் ஒரு ரகசிய அறையில் பாதுகாக்கப்படுவதாகவும் அவ்வப்போது அவை சீடர்களாலும் அம்மாவின் உறவினர்களாலும் கடத்தப்படுவதாகவும் சொல்லும் ட்ரெட்வல் ‘அம்மாவின் செல்வங்கள் எல்லாம் கருணைக் கொடையாகச் செலவிடப்படுகிறது என்று நம்பிய நான் எவ்வளவு பெரிய முட்டாள்’ என்று நொந்து கொள்கிறார். அவர் மட்டும்தானா? நன்கொடையாகத் தானறிந்தவரை வந்த தொகை 100 மில்லியன் ஸ்விஸ் ப்ராங்குகள் என்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு ஸ்விஸ் வங்கியில் சேமிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதிர்ச்சியடையச் செய்கிறார் ட்ரெட்வல். அதே ஸ்விட்சர்லாந்திலிருந்து வெளியாகும் ‘டாகெஸ் அன்செய்கர்’ என்ற ஊடகம்தான் ‘புனித நரகம்’ புத்தகத்திலுள்ள ரகசியங்களை வெளியிட்டிருக்கிறது. அமேசான் இணைய அங்காடி புத்தகத்தின் மின்னணுப் பதிப்பை வெளியிட்டிருக்கிறது.

இத்தனைக் கடுமையாக குற்றச்சாட்டுகளைப் பற்றி அமிர்தானந்த மயி,“ ஆசிரமம் ஒரு திறந்த புத்தகம். இங்கு எந்த தவறும் நடக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்களை மன்னிக்கவும் மறக்கவும் விரும்புகிறேன்” என்று எதிர்வினை புரிந்துள்ளார்.

ஆசிரமத்தின் சார்பில் நூலாசிரியருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

 இது இன்னொரு புத்தகம் பற்றி. ஒரு சுய சரிதை. சில வாரங்களுக்கு முன்பு ‘ஓப்பன்’ ஆங்கில இதழ் இந்தச் சுயசரிதையின் சில பகுதிகளை வெளியிட்டது. உடனே திரையுலகமும் ஊடகங்களும் பரபரப்பானது. விளைவு? புத்தகம் வெளி வந்த ஒரு மாதத்துக்குள் இரண்டாம் பதிப்புக்குத் தயாராகியிருக்கிறது.

“விடலைப் பையன்களைப் போலவே எழுபது வயதுக் காரனும் என்னை செக்சியாகவே பார்க்கிறான். எனது உடம்பின் எல்லா அங்கங்களிலும் அவர்களுடைய கண்கள் துளைத்துத் தேடுகின்றன. எனக்கு அது பிரச்சனையே அல்ல.ஏனெனில் நான் அறிமுகமாகியிருப்பது அதுபோன்ற சினிமாக்கள் வாயிலாகத்தானே! எனது நடிப்பை அல்ல; உடம்பைப் பார்க்கத்தானே அவர்கள் வருகிறார்” என்று அதன் ஆசிரியரான நடிகை குறிப்பிடுகிறார்.

2000 த்தின் ஆரம்ப வருடங்களில் திரிசங்கு சொர்க்கத்திலிருந்த மலையாளத் திரைப்பட உலகைத் தனது சரீரதானம் மூலம் கரையேற்றியவர் அந்த நடிகைதான். ஒருவேளை அவர் ‘நடித்து’ படங்கள் வெளிவராமலிருந்தால் நிறைய திரையரங்குகள் மூடு விழாக் கண்டிருக்கும். அவரே சொன்னதுபோல விடலைகளுக்கும் கிழங்களுக்கும் மத்தியானங்களிலும் இரவுகளிலும் கனவுகளே இல்லாமற் போயிருக்கும். ஷகீலாதான் அந்த நடிகை.

‘எனக்குக் குற்ற உணர்வில்லை; ஆனால் வேதனையிருக்கிறது’ என்ற பிரகடனத்துடன் ஷகீலா தனது ‘சுயவரலாற்றை’ எழுதியிருக்கிறார். (அவர் சொன்னதை ஹரிதாஸ் என்பவர் எழுத்து வடிவில் மாற்றியிருக்கிறார்).

சென்னை கோடம்பாக்கத்தில் சாந்த் பாஷா - சாந்த் பீகம் தம்பதிகளின் மகளாகப் பிறந்த ஷகீலா தென்னிந்திய சினிமாவின் ‘உறக்கம் கொல்லி’யான கதையை இருநூற்று ஐம்பது பக்கங்களில் விவரிக்கிறார். அது அவர் நடித்த படங்களின் கிளுகிளுப்பை குற்ற உணர்வுடன் மறக்கடிக்கச் செய்யும் விதமாகச் சொல்லப்-பட்டிருக்கிறது. ஒரு சாதாரணப் பள்ளிச்  சிறுமியான தான் சினிமா உலகில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறிய கதைக்குப் பின்னால் இருக்கும் சம்பவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்கிறது இந்தப் புத்தகம். அவை கிளர்ச்சியூட்டக் கூடியவை அல்ல.

சினிமாவின் இருண்ட பகுதிகளை, மனிதர்களின் இச்சைகளை, உறவினர்களின் சுரண்டல்களை, சொந்தத்  தவறுகளைச் சொல்பவை.

தன்னை இப்படிப்பட்ட வேதனைக்கு ஆளாக்கியது தன்னுடைய அம்மா என்பது ஷகீலாவின் பகிரங்கமான குற்றச்சாட்டு. மிகுந்த கசப்புடனும் அதீத வெறுப்புடனும்தான் தனது தாயைப் பற்றி நினைவு கூர்கிறார்.

“என் அம்மாவைப் பற்றிய நல்ல நினைவுகளே எனக்குக் கிடையாது. அவளுடைய அன்பையோ ஆதரவையோ நான் ஒருநாளும் அனுபவித்ததில்லை. சின்ன வயதிலிருந்தே அம்மாவுக்கு என்னைப் பிடிக்காமல் போயிருக்கலாம் என்று நினைக்கிறேன். என்னை எப்போதும் உதாசீனம் செய்வாள்; சபிப்பாள். ஆனால் திடீரென்று ஒருநாள் என்னுடைய அழகைப் பாராட்ட ஆரம்பித்தாள். அது என்னுடைய பதினாறாவது பிறந்த நாளுக்கு அப்புறம். ஒரு நாள் என்னை ஒருவர் வந்து அழைத்துக் கொண்டு போவார் என்று சொன்னாள். அவருடன்  போகச் சொன்னாள். அங்கே ஒரு பணக்காரரை நான் குஷிப்படுத்த வேண்டும் என்றாள். அதன் மூலம் நம்முடைய பணச் சிக்கல்கள் தீர்ந்து விடும் என்றாள். அவர் சொல்கிறபடி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றாள். அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்ய வேண்டும் என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் என்ன நோக்கத்தில் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளும் வயதுக்கு வந்திருந்தேன். ஒரு அந்நிய ஆசாமி என்னைக் கூட்டிச் செல்ல வந்தார். எனக்கு வேறு வழியில்லை. அவருடன் போனேன். ஒரு ஓட்டல் அறையை அடைந்தோம். நாற்பது வயதான அந்தப் பணக்காரர் அங்கே காத்திருந்தார். நான் பயத்திலும் துக்கத்திலும் உறைந்து போனேன். அவர் என்னை நிர்வாணமாக்கினார். வன்புணர்ச்சி செய்தார். அதுதான் ஆரம்பம். அதன் பிறகு பல முறை, பல பணக்காரர் களுடன் படுத்துறங்கக் கட்டாயப்படுத்தப்பட்டேன். வலியையும் சுகத்தையும் அனுபவித்தேன். அந்த நாட்களில் எப்போது என் கன்னிமையை இழந்தேன் என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்க முடியவில்லை”.

அம்மாவைப் போலவே ஷகீலாவின் தீராத வெறுப்புக்கு ஆளாகியிருப்பவர் அவரது அக்கா. அவர் மீதான கோபத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்.

“இந்தப் புத்தகத்தைப் பலமுறை யாராவது படிக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டால் அது என் அக்கா நூர்ஜஹான் மட்டுமே. நான் ஓட்டாண்டி யானதற்குக் காரணம் அவள்தான். தென்னிந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் நடிகையாக நானாக இருந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தப் பணம் முழுவதும் என் அக்காவால் கொள்ளையடிக்கப்பட்டது. அவள்தான் என் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள். நான் அவளை முழுக்க நம்பினேன். என்னைச் சின்ன வயதிலிருந்து அக்கறையாகப் பார்த்துக் கொண்டவள் அவள்தான் என்பதனால் அவள் என்னை ஏமாற்றுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. நான் ஏமாந்து போனேன் என்று தெரிந்த போது காலம் கடந்திருந்தது. ஒரு கட்டத்தில் சினிமா அலுப்பூட்டியது. திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை வாழ விரும்புகிறேன் என்று சொன்னேன். அம்மாவும் அக்காவும் அதிர்ச்சியாகி விட்டார்கள். என்னைக் குற்றவாளியைப் போலப் பார்த்தார்கள். இது மாதிரி முட்டாள்தனமான முடிவை எடுக்காதே என்று புத்திமதி சொன்னாள். அவர்கள் நேசித்தது என்னை அல்ல; என் பணத்தைத்தான் என்பது புரிந்தது. என் எதிர்காலத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை என்று தெரிந்தது. நான் ஆத்திர மடைந்தேன். என் பணத்தைத் திரும்பக் கொடுக்கச்  சொன்னேன். எல்லாவற்றையும் குடும்பத்துக் காகச் செலவு செய்து விட்டதாக அவள் சொன்னபோது நான் திடுக்கிட்டுப் போனேன்”.

ஷகீலா உருவாக்கிக் கொண்ட அல்லது அவருக்காக உருவாக்கப்பட்ட ‘காமப் பெண்’ பிம்பத்தை ஒட்டித்தான் இந்தப் புத்தகத்தின் பரபரப்பான விற்பனை நடந்திருக்கிறது. அதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் ‘படுக்கை அறையை எட்டிப் பார்க்கும்’ ஆசையில் உருவானதுதான். அதற்கான பக்கங்கள் புத்தகத்தில் இருந்தாலும்  அதை மீறிய ஒரு தளம்  தென்படுகிறது. பெண்ணை வெறும் போகப் பொருளாகவும் கேளிக்கைத் துணையாகவும் நினைக்கும் பொதுப்புத்திக்குக் கொடுக்கப்படும் சாட்டையடி. அது ஆண் பெண் எல்லார்  மேலும் விழுகிறது. ஷகீலா ஒருவகையில் அப்பாவிதான். ஏனெனில் அவரை அப்படி உருவாக்கியதில் யார் யாருக்கெல்லாமோ பங்கிருக்கிறது, இல்லையா?

மார்ச், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com