இப்பிடியே நாம எங்காவது போயிடலாமா?

துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்....
மு. க. ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின்
மு. க. ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின்
Published on

அந்த நாட்கள் ரொம்பக் கொடுமையான காலகட்டம்! கல்யாணமாகி அஞ்சே மாசத்தில வந்த மிசா நாட்களை நினைச்சாலே மனசு நடுங்குது.

அப்போ கோபாலபுரம் வீட்ல எங்களுக்கு இருந்த பெட்ரூம் ரொம்பச் சின்னது. ஒரு பீரோவும் கட்டிலும் போட்டு இடையில் ஒரு ஆள் நடக்க மட்டும்தான் இடம் இருக்கும். ராத்திரியில் படுத்தா படுத்தவுடன் இவங்கள நினைச்சு கரகரன்னு கண்ணுல தண்ணி கொட்டும்!

அந்தக் கஷ்ட சமயத்தில் அந்த ரூம்ல நான் தனியா படுக்க வேண்டாமேன்னு துணைக்கு பத்து வயசு பையனா இருந்த தயாநிதியை என் ரூமில் படுக்கச் சொல்லியிருந்தாங்க! அவன் நான் விக்கி விக்கி அழறதைப் பார்த்துட்டு ‘‘அத்தை அழுவாதீங்கத்தை.. மாமா வந்துரும்னு'' ஆறுதல் சொல்லிட்டே இருப்பான். அவன் சின்னப் பிள்ளைதானே? நான் அழறதைப் பார்த்து பயந்துட்டு நான் இனிமே அத்தையோட படுக்க மாட்டேன், அவங்க நைட் எல்லாம் அழுதுட்டே இருக்காங்கன்னு சொல்லிட்டான்.

அதைக் கேட்டு மாமா ( கலைஞர்) ரொம்பக் கவலை ஆயிட்டார். இனிமே என்னைத் தனியா படுக்க வேண்டாம்னு சொல்லி மல்லிகா அண்ணியோட என்னைப் படுத்துக்கச் சொன்னார். அப்போ மாறன் அண்ணனும் மிசாவில் கைதாகி சிறையில் இருந்ததால் மல்லிகா அண்ணியோடு அவங்க வீட்ல நான் படுத்துப்பேன்.

நாங்க ரெண்டு பேரும் பெரும்பாலான நேரம் தூக்கம் வராம மிசா ஜெயில்ல கஷ்டப்படுற கணவரை நினைச்சு அழுதுட்டே எதாவது பேசிட்டே இருப்போம்.

வெளியில தெருவில் ஏதாவது சின்னதா சத்தம் கேட்டாலும் கூட ஒருவேளை அவங்க ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாங்களோன்னு ஆவலா பேசிப்போம். உடலில் உயிர் மட்டும் ஓடிட்டு இருந்தது.

எங்க அப்பா ரொம்ப நாளா சாமி கும்பிடாமலேயே இருந்தார். தன் உயிருக்கு உயிரான அன்பு அமனிவி திடீர்னு இறந்ததில் மனசு வெறுத்துப் போய் சாமி கும்பிடரதியே நிறுத்திட்டார். அப்படிப்பட்டவர், எங்க வீட்டுக்கார மிசாவில் கைதாகி நிலைமை இப்படி விபரீதமா போனதில் அப்படியே மாறி இறைவனே சரணம்னு எந்நேரமும் பூஜை புனஸ்காரம்னு ஆயிட்டார்.

தன் மாப்பிள்ளைக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு தினம் தினம் அதிகாலையிலேயே குளித்து ஈரத்துணியுடன் பூஜையை ஆரம்பிச்சுடுவாராம் அப்பா! சுலோகங்களை  எல்லாம் வரிசையா சொல்லி கரகரன்னு கண்ணீர் விட்டு அழுதுடுவாராம்! அந்தச் சமயத்துல எனக்கும் ஒரு வைராக்கியம்.. எங்க வீட்டுக்காரங்க இல்லாம நான் எங்க ஊருக்குப் போக மாட்டேன்னு அந்த ஒரு வருஷமும் நான் சொந்த ஊர்ப்பக்கம் போகவே இல்லை.

யாராவது எங்க வீட்டுக்காரங்களைப் பத்தி ஏதாவது ஒரு சின்ன தகவல் சொல்ல மாட்டாங்களா.. அவங்க எங்க இருக்காங்கன்னு ஏதாவது சேதி வராதான்னு நான் அலைபாய்ஞ்சுட்டு இருந்த அந்த நாட்கள்ல இவங்க கைதான இருபத்தி நாலு நாள் கழிச்சி ஒரு போஸ்ட் கார்டு வந்துச்சு.நாங்க சென்னை மத்திய சிறையில்தான் இருக்கோம். எங்களைப்பத்திக் கவலைப்பட வேண்டாம்'னு ரெண்டே வரியில் இவங்க  எழுதி இருந்தாங்க. அவ்வளவுதான். அதே நாள்ல கொஞ்ச நேரம் கழிச்சு கோபாலபுரம் அட்ரசுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தும் ஒரு போஸ்ட் கார்டு வந்தது. எங்க வீட்டுக்காரங்க பெயரைக் குறிப்பிட்டு அவங்க மனைவி நேர்ல வரவும்னு அதில இருந்தது.

எங்க முதல் கல்யாண நாள் அன்னிக்கு இவங்க மிசா இருந்தது பத்தியும், இவங்க உடம்பு சரியில்லைன்னு அன்னிக்கு ஜி.எச்.சுக்கு நேர்ல வந்திருந்தப்போ இவங்களோட வந்திருந்த போலீஸ்காரங்ககிட்ட ரெக்வெஸ்ட் பண்ணி, பத்து நிமிஷம் நாங்க அந்த அறைக்குள்ள தனிமையில பேச ராஜி அண்ணி நேரம் வாங்கித் தந்தாங்க.

கல்யாணமான புதுசுல பல மாசங்கள் பிரிஞ்சிருந்த அந்த நிலைமையில் எங்களுக்குள்ள நிறைய பேசணும், ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கணும்கிற ஆவலும் துடிப்பும் பொங்கி வழிஞ்சாலும்கூட ஒருத்தருக்கொருத்தர் எதுவும் பேசிக்காமலேயே எப்படி ஆளுக்கொரு பக்கமா திரும்பி நின்னிருந்தமோ, அதே போலவே நின்னிட்டிருந்தோம்.

இவங்க முதல்ல பேசட்டுமே! இத்தனை மாசம் கழிச்சு நேர்ல பார்க்கிறோம். என்ன ஏதுன்னு மூஞ்சியைப் பார்த்து பேசக்கூடாதான்னு நான் நினைக்க... இதுதான் முதல்ல பேசட்டுமே.. இவ்வளவு நாள் ஜெயில்ல இருக்க நம்மைப் பார்க்க வந்திட்டு எப்படியிருக்கீங்கன்னு ஆசையா நம்மகிட்ட கேட்கக் கூடாதான்னு அவங்க நினைக்க அந்தப் பத்து நிமிஷமும் வீணாப் போச்சு. பின்னாள்ல ஒரு தரம் இதைப்பத்தி குறிப்பிட்டு ‘அன்னிக்கு நீங்க ஏன் பேசலைன்னு? நான் கேட்டப்போ, நீ முதல்ல பேசுவேன்னு நெனைச்சேன்னு இவங்க சொல்ல, ‘நீங்க பேசுவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன்'னு நான் சொல்ல, ஒரே வெட்கமாப் போச்சு!

கோயிலுக்குப் போறதில்லைங்கிற திராவிடக் கொள்கையை இவர் கடைப்பிடிச்சாலும் கூட அதுக்காக யார் மனசையும் புண்படுத்தினதில்லை. சொல்லப்போனா நான் என்னோட ஆன்மீகக் கடமைகளைச் செய்ய ஒரு கணவரா அவங்க எனக்கு உதவிதான் பண்ணியிருக்காங்க..

நாங்க எங்களுக்குன்னு வேளச்சேரியில் வீடு கட்டினப்போவும் சரி, இப்போ இங்கே ஆழ்வார்பேட்டைக்கு மாறி வந்தப்போவும் சரி, எனக்குன்னு ஒரு பூஜை ரூம் வேணும்னு கேட்டேன்.. 'அது உன் இஷ்டம், உன் உரிமை. தாராளமா வெச்சிக்கோ! எதுக்காக என்கிட்டே பர்மிஷன் கேட்கணும்னு' ட்டாங்க.    

எங்களுக்குக் கல்யாணம் பண்ண புதுசுல எங்க அத்தை ( தயாளு அம்மாள்) அடிக்கடி பெருமையா ஒரு விஷயம் சொல்வாங்க. அவங்களோட நான்கு பிள்ளைகள்ல எங்க வீட்டுக்காரர் மட்டும் சுட்டித்தனம் பண்ணாம அமைதியா இருப்பாங்களாம். பிள்ளைன்னா அப்படி இருக்கணும். நாலு பிள்ளைகளையும் விளையாட அனுப்பினா ஸ்டாலின் மட்டும் போட்ட சட்டையோட அப்படியே வந்து நிப்பான்''னு பெருமையா சொல்லறப்போ எல்லாம் எனக்கு என்னோட ஃப்ளாஷ் பேக்தான் மனசுக்குள்ள வந்து நிற்கும். அம்மா எனக்கு பாவாடை சட்டை போட்டு அனுப்பிச்சா தெரு பூரா விளையாடி அழுக்கு சேர்த்துட்டு அப்படி அழுக்கா வந்து நிற்பேன் நான்.

எங்க வீட்டுக்காரங்க, எல்லோரும் கார்ல உட்காருங்க. கொஞ்சதூரம் அப்படியே போயிட்டு வரலாம்னாங்க.. பசங்களும் சந்தோஷமா ஏறிக்க, எங்க வீட்டுக்காரங்க நேரா டிரைவர் சீட்டுல உட்காந்தாங்க.

‘‘அய்யோ அப்பா. நீங்களா கார் ஓட்டப்போறீங்க? அதுவும் இந்த நடுராத்திரியில்? நீங்க டிரைவிங் பண்ணி நிறைய வருஷம் ஆயுடுச்சுப்பா. வேணாம்பா நா வரல..... வேணும்னா அம்மாவை வச்சு ஓட்டிட்டுப் போங்கன்னு காரில இருந்து இறங்கிட்டது எங்க பையன் உதயா. கூடவே மருமகளும்!

கார் வேகமா ஏதேதோ ரோடுகளில் போகுது... நான் இவங்களையே, இவங்க ஓட்டறதையே பார்த்துட்டு இருந்தேன்.

அரசியல் வாழ்க்கையில் பிஸியானதுக்கு அப்புறம் நாங்க ராத்திரி சேர்ந்து சாப்பிடறதுகூட இப்ப குறைஞ்சு போச்சு. முன்னே மாதிரி எனக்கு உடம்பு முடியாததால் பத்து பதினோரு மணி வரைக்கும் இவங்க வர்றாங்களான்னு பாத்துட்டு தூங்கிடுவேன். அதிலேயும் சட்டசபையில் இவங்க மானியகோரிக்கை வர்ற நேரங்களில் இவங்க அங்கிருந்து கிளம்பவே ரொம்ப நேரமாயிடும். மத்த நாட்கள்ல நிகழ்ச்சிகள், வெளியூர் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம்னு ஏதாவது ஒருவகையில் இவங்களுக்கு லேட்டாயிடும்.

அதனால இப்படியொரு பிஸியான சூழ்நிலையில் நாங்க ரெண்டுபேர் மட்டும் இப்படி வெளியே போய் மனசு விட்டுப் பேசி ரொம்ப நாளான மாதிரி எனக்கு ஒரு பயங்கர ஏக்கம்.

இவங்க இப்படி டிரைவ் பண்ண, பக்கத்துல நான் மட்டும் உட்கார்ந்து போயி எவ்வளவு நாளாச்சுங்கிற எண்ணங்களும் ஏக்கங்களும் வந்து மோத...

‘ஏங்க.. இப்பிடியே நாம எங்காவது போயிடலாமான்னு நான் என்னையுமறியாமல் பயங்கர எமோஷனலாகிக் கேட்டுட்டேன்...

மார்ச், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com