இந்த வரி சரியா?

Published on

ஜீன் மாத கடைசி நாள் நள்ளிரவில் நடந்த கோலாகலமான விழாவில் நாடுமுழுக்க ஒரே தேசம் ஒரே வரி என்று ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டுவந்துவிட்டது மத்திய அரசு. மிக முக்கியமான வரி சீர்திருத்த நடவடிக்கைதான். ஆனால் இந்த வரி பலசிறு குறு தொழில் முனைவோருக்கு உடனடியாகசிரமம் தருவதை உணரமுடிகிறது.

ஒன்றரைக் கோடி ரூபாய்  விற்பனை வரை இத்தொழில்களுக்கு வரிவிலக்கு (கலால் வரி) அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அது இருபது லட்சத்துக்கு மேல் என்றாலே வரி என்று ஆகிவிட்டது. இது குறிப்பாக தமிழகத்துக்கு பெரும் சிரமம்தான். ஏனென்றால் இந்தியாவிலேயே சிறுகுறு தொழிலதிபர்கள் அதிகமாக இருக்கும் இரண்டாம் மாநிலம் இது!   இதனால் நிறைய தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. அது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களிலும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். குறிப்பாக தீப்பெட்டித்தொழில், வெட்கிரைண்டர்கள், பட்டாசுத்தொழில், கடலைமிட்டாய், ஊதுவர்த்தி போன்ற தொழில்களுக்கெல்லாம் முன்பிருந்த வரிச்சலுகை நீக்கப்பட்டுவிட்டதால் இத்தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. விசைத்தறியாளர்களுக்கு இருந்த வரிச்சலுகைகளும் நீக்கப்பட்டுவிட்டன. அவர்களுக்கு ஐந்துசதவீத ஜிஎஸ்டி, பள்ளிப் பாடநோட்டுகளுக்கு 5% ஜிஎஸ்டி என்று விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிதான்.

இன்று டிஜிட்டல் பொருளாதாரம் என்கிறோம். இதில் பணப்பரிவர்த்தனைக்காக நிதிநிறுவனங்கள் ஒரு கட்டணம் வசூலிக்கின்றன. அதற்கே மூக்கால் அழுகிறோம். ஆனால் அந்த வசூலிக்கும் கட்டணத்துக்கும் ஜிஎஸ்டி உண்டு என்றால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பதாக இது அமையவில்லையே என்ற கேள்வி எழுகிறது.

அரிசி வாங்கினால் அதிலும் பிராண்டட் அரிசிக்கு 5% வரி. புடவை வாங்கினால் 500-1500 ரூ வரை 5% வரி என்றும் 1500 ரூபாய்க்கு மேல் போனால் 12% ஜிஎஸ்டி என்றும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. காலணிகள் வாங்கு வதற்கும் 500 ரூபாய்க்கு மேலே போனால் வரி உண்டு. இனி இவற்றையெல்லாம் வாங்கும்போது வரியையும் கவனித்தே வாங்கவேண்டும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெருநிறுவனங்களுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் இல்லை. அவர்களிடம் ஒவ்வொரு பொருளின் விற்பனை, மூலப்பொருள் வாங்குதல் போன்றவற்றைக் கவனிக்க ஆட்கள் உண்டு.

சிறுநிறுவனங்களுக்குச் சிரமம் அதிகம். உதாரணத்துக்கு மளிகைக்கடை. முன்பு மொத்தமாக விற்பனைக்கு ஏற்ப வரிகட்டினால் போதும். ஆனால் இப்போது விற்பனையாகும் பொருட்களின் ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு மாதிரி வரி கட்டவேண்டும் என்பதால் இதற்கான வேலை அதிகம்.

மத்திய அரசின் வரிவருமானம் எட்டு லட்சம் கோடிகளாக இருப்பது இந்த ஜிஎஸ்டி மூலமாக 25 லட்சம் கோடிகளாக அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு பாதி அளிக்கப்படும். வரி வருவாயை அதிகரிக்கவும் நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறையைக் கொண்டுவரவும் இது செய்யப்படுகிறது என்று அரசுவிளக்கம் அளித்தாலும் 5%, 12 %, 18%, 28% என்று நான்கு வரைமுறைகள் வைத்து நிறையபேரை விழி பிதுங்க வைத்துள்ளனர்.

அதே சமயம் பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி இல்லை; மது வகைகளுக்கு ஜிஎஸ்டி இல்லை என்ற அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி என்றால் விலை குறையும். மத்திய அரசின் லாபம் குறையும். மதுவகைகளுக்கு ஜிஎஸ்டி என்றால் மாநில அரசுகளின் வருவாய் குறையும் என்று அவர்களும் இதை அனுமதிக்கவில்லை. ஆனால் குறு சிறு தொழிலதிபர்களின் சார்பில் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்? மோசமாகப் பாதிப்படைந்தவர்கள்,  ஜிஎஸ்டி கவுன்சிலில் முறைப்படி பேசி வரிகளைக் குறைக்க போராடவேண்டிய நிலை இப்போது இருக்கிறது. இன்னும் சிலமாதங்களில் இந்த

பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று நம்புவோம்.

இதுபோல் ஒரே வரி அமலில் உள்ள பல வெளிநாடுகள் மக்களுக்குக் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாகவே அளிக்கின்றன. இந்தியாவில் அந்த நிலை எப்போது வரும்?

( ரவிசங்கர், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர்)

ஆகஸ்ட், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com