‘இந்த ஸ்டூடியோவிலயும் நீதான் எஞ்சினியரா?‘
‘ஆமா சார்''
‘மியூசிக் டைரக்டர் வந்துட்டாரா?'
‘வந்தாச்சு சார்.'
‘கூப்பிடு‘
‘நாந்தான் சார்'
சேரில் உட்கார்ந்திருந்த அவர் தன் கழுத்தை சாய்த்தபடி நின்றுகொண்டிருந்த என்னை மேல்நோக்கி பார்த்தார்.
‘அப்ப சவுண்ட் எஞ்சினியர் வேலைய விட்டுட்டியா?'
‘இல்ல சார் அதோட சேர்த்து இதுவும்...‘
நான் கொடுத்த ஆல்பம் பாடல் தாளை பவ்யமான பாவனையுடன் என்னிடமே திரும்பக் கொடுத்து
‘நான் எப்படிப் பாடணும்னு எனக்குப் பாடிக் காட்றீங்களா?'
‘சார்..track singer பாட வச்சது கேசட்ல இருக்கு‘
ஆடியோ கேசட்டை கொடுத்தேன்.
‘முதல்ல நீ பாடிக் காட்டு அப்புறம் அதக் கேக்றேன்‘
நான் பாடும் போது ஸ்ருதி தாறுமாறாக எகிறுவதை
ரசித்துக் கொண்டே முழுவதும் கேட்டுவிட்டு
‘உன் அளவுக்கு கால் ஸ்வரத்தில் முக்கால் ஸ்வரத்தில் பாடற திறமையெல்லாம் எனக்கு இல்ல, நீ திருப்தி ஆகிற வரைக்கும் நான் பாடுறேன் ரெக்கார்ட் பண்ணிக்கோ.'
என்று மைக் முன்னாடி போய் நின்று பாடத் தயாரானார் எஸ்.பி.பி.
-இது சவுண்ட் எஞ்சினியர் மனோகரன் கூறும் அனுபவம்.
பாடகர் டி.எம்.எஸ். மார்க்கெட் போன பின் ரொம்ப விரக்தியில் இருந்தார். புலம்ப ஆரம்பித்து விட்டார். மார்க்கெட் போய் ரொம்ப காலமான பின்னும் புலம்பல் நிற்கவில்லை.பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தன்னை யாரும் பாட அழைப்பதில்லை. பாட வாய்ப்பு தருவதில்லை என்று ஆவலாதி சொல்லிக் கொண்டே இருந்தார். எஸ்.பி.பி. சௌந்தர்ராஜன் வீட்டுக்குப் போய் அவரை சந்தித்தார்.
‘நீங்க நெறய்ய சாதிச்சிட்டீங்க. ரொம்ப பெரிய பின்னணி பாடகர் அண்ணே நீங்க. ஒங்க பாட்டு எல்லாமே சாகா வரம் பெற்றவை. உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். வெளி நாட்டுல கச்சேரி செய்யப் போகும் போதெல்லாம் நானும் என் மகன் சரணும் இணைந்து ஒங்களோட 'பெண் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை, என்னென்று நான் சொல்லலாகுமா?' பாடலைப் பாடி கைத்தட்டு வாங்குவோம்.
எதைப்பற்றியும் கவலைப்படாம நீங்க சந்தோஷமா இருங்கண்ணே.
‘நீங்க எவ்வளவு பெரிய ஆளு' என டி.எம்.எஸ்ஸை உற்சாகப்படுத்தி யிருக்கிறார்.
இது R.P..ராஜநாயஹம் பதிவு செய்த சம்பவம்.
சென்னையின் ஜூனியர் செஸ் சாம்பியன் டீம் (Chennai Colts) ஐ.ஐ.டி. மும்பையில் நேஷனல் டீம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். டீமை மும்பைக்கு அனுப்ப மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் செஸ் அசோசியேஷனில் (MDCA) போதுமான பணம் இல்லை. இந்த தகவலை தெலுங்கு கவிஞர் ஆருத்ரா எஸ்.பி.பி - யிடம் கூற உடனே ஒரு ப்ளாங்க் செக்கை தருகிறார் அவர். மும்பையில் சென்னையின் ஜூனியர் செஸ் சாம்பியன் டீமின் பதின்மூன்று வயதான சிறுவன் ஒன்பது முறை நேஷனல் சாம்பியனான மானுவேல் ஆரோனை வெல்கிறான். அந்த சிறுவனின் பெயர் விஸ்வநாதன் ஆனந்த்!
எஸ்.பி.பி. மறைவையொட்டி இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து நெகிழ்ந்திருந்தார் விஸ்வநாதன் ஆனந்த்!
அந்திமழையின் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க தொண்ணூறுகளில் மூன்று முறை எஸ்.பி.பி.யை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறேன். தேதி ஒத்துவராததால் அவரால் மூன்றுமுறையும் விழாவிற்கு வரமுடியவில்லை.
‘‘Genius in one Percent inspiration; 99 percent perspiration" என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டு இவரது வாழ்க்கை.
ஒரு மனிதன் சராசரியாக வருடத்திற்கு 2080 முதல் 2496 மணிநேரம் வேலை பார்க்கிறான். இது பிரான்ஸில் மிகக் குறைவு.
எஸ்.பி.பி. 50 வருடங்களில் சுமார் 41500 பாடல்கள் பாடியுள்ளார், 75 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். படங்களில் நடித்துள்ளார். பல படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார். இது போக எத்தனை எத்தனையோ இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்..
வருடத்திற்கு 2496 மணி நேரம் என்று எடுத்துக் கொண்டால் கூட 50 வருடங்களில் 1,24,800 மணி நேரம் அவர் வேலை செய்திருக்க முடியும்.
ஆனால் இவர் பாடல்கள் பாடுவதற்கும், படங்களுக்கு இசை அமைப்பதற்கும் மட்டும் குறைந்த பட்சம் 1,33,500 மணிநேரம் செலவழித்திருக்கக்கூடும். அப்படியானால் மற்ற செயல்பாடுகளுக்கு...
தனது வாழ்வை எவ்வளவு விரிக்கமுடியுமோ அவ்வளவு விஸ்தாரமாக்கிய மனிதன் இவர்.
எஸ்.பி.பி.யை பற்றி விரிவாக எழுத எவ்வளவோ இருக்கிறது, ஆனால் கடந்த முப்பது வருடங்களில் பல்வேறு தருணங்களில் இவர் பதிவு செய்த வார்த்தைகளை அப்படியே தொகுத்துத் தருவது சரி எனப் படுகிறது.
இனி பாடும் நிலா:
‘நான் பிறந்தது ஆந்திரா மாநிலம். ஆனா ஒரு சின்ன சந்தோஷம் என்னவென்றால் நான் பிறந்த இடம் இப்போது தமிழ்நாட்டில் இருக்கு. இசை என்ற மொழி தான் என்னுடைய தாய் மொழி. நான் இந்த உலகத்திற்கே சொந்தமானவன்.
பின்னணிப் பாடகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. நான் எஞ்ஜினியர் ஆகணும் என்பது தான் என் அப்பாவின் கனவு. எனக்கும் அந்தக் கனவு இருந்தது. ஒருமுறை ஜானகி அம்மா என் குரலைக் கேட்டுவிட்டு சினிமாவுக்கு முயற்சி செய்யச் சொன்னார். அப்போது கூட எனக்கு ஒண்ணுமே தெரியாது. ச, ப, ச கூடத் தெரியாது. எனக்கு எதுக்கு சினிமா என்றேன். எனக்கும் தெரியாதுய்யா, நான் பாடலையா என்றாங்க, அவங்க. அவர்கள் சும்மா ஜோக்கிற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன்.
நீங்க சிங்கார வேலனெல்லாம் பாடியிருக்கீங்க. என்னால் எப்படி முடியும்னு சொன்னேன். இல்ல பாலு, பயிற்சி பண்ணி யார்கிட்டயும் போய்ப் பாடினது கிடையாது. Some people are meant for something..நீங்க இதை நழுவ விடாதீங்கன்னு சொன்னாங்க. அதனாலதான் முயற்சி பண்ணினேன். அப்போது எனக்கு 18 வயது இருக்கும். யாருமே எனக்கு வாய்ப்பு தரவில்லை. நிறைய இசையமைப்பாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் நீ நல்லா பாடறே, குரல் பக்குவப்படணும்னு சொன்னாங்க. இரண்டு வருஷம் முயற்சி செய்துவிட்டு, அப்பா கஷ்டப்பட்டு பணம் அனுப்பிட்டிருக்காரு. நல்லபடியா படிச்சா போதும்னு நினைச்சேன். அப்புறம் கோதண்டபாணி சார்தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வாங்கித் தந்து என்னை எல்லோரும் அறியும்படிச் செய்தார். அவர் இல்லை என்றால் பாலசுப்ரமணியம் இல்லை.
முதன் முதலாக தமிழில் வாய்ப்பு கொடுத்தது மெல்லிசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அதுக்குமட்டுமல்ல நான் அவர்கிட்ட ஒரு தமிழ்ப்பாட்டு பாடி வாய்ப்பு கேட்டபோது, ‘நல்லா பாடுறே, ஆனால் தமிழை நீ இப்படி உச்சரித்தால் தமிழ்நாட்டில் உன்னையும் என்னையும் கல்லால் அடிப்பாங்க,' என்று சொன்னார். உண்மையான வார்த்தை அவர் சொன்னது. இரண்டு வருஷம் தமிழை நன்றாகப் படித்து, அவர்கிட்ட போனபிறகு வாய்ப்பு கொடுத்தார்.
தமிழில் முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட என்னுடைய பாடல் இடம்பெற்ற படம் ‘ஹோட்டல் ரம்பா'. இசை எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பாடியது. ஆனால் படம் வெளிவரவே இல்லை. அதன் பிறகு ஒலிப்பதிவு செய்யப்பட்டதுதான் ‘இயற்கையென்னும் இளைய கன்னி'. அதற்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்தாவது பாடல் தான் ‘ஆயிரம் நிலவே வா'.
தெலுங்கில் என் முதல் பாடலை நான் பாடின பிறகு அப்பாவிடம் போய் விஷயத்தை சொன்னேன். ‘யாரோ தயவு பண்ணி உனக்கு படத்துல பாட சான்ஸ் கொடுத்திருக்காங்கடா...! கண்டசாலா முன்னால நீ எல்லாம் ஒரு எலி. அவர் ஒரு ஐராவதம் மாதிரி இருக்கார். எதோ வாய்ப்பு கிடைச்சிருக்கு பவ்யமா இரு. தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சா நல்லா ப்ராக்டீஸ் பண்ணி மேல வா. ஆனா படிப்பை மட்டும் விட்டுடாத' என்றார்.
நான் என் என்ஜினியரிங்கை தொடர்ந்து படிச்சுகிட்டே தான் பாடிகிட்டும் இருந்தேன். ஒரு கட்டத்துல காலேஜுக்கே போக முடியாத அளவுக்கு நான் மியூஸிக்ல பிஸி ஆன பிறகு, காலேஜில் அட்டென்டன்ஸ் பிரச்னை எல்லாம் வந்தது. மியூசிக்கா, படிப்பான்னு முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அப்பாகிட்டயே போய் ஐடியா கேட்போம்னு முடிவு பண்ணினேன். ஒருவேளை அப்பா, ‘போய் படிக்கிறதை பாருடா'னு சொன்னா, மியூசிக்கை ஏறக் கட்டிட்டு என்ஜினியரிங்கை தொடரலாம் என்பது தான் என் ஐடியா. அவர் அப்படித் தான் சொல்லுவார் என்றும் எதிர்பார்த்துப் போனேன்.
ஆனால் அவரோ, ‘நீ நல்ல பையன். நல்லா படிச்ச. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. வருங்காலத்துல உனக்கு எது சாப்பாடு போடும்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனா ஒண்ணு. ஒரே சமயத்துல ரெண்டு குதிரையில சவாரி செய்யணும்னு மட்டும் எப்பவும் நினைக்காதே. உனக்கு எது பிடிக்குதோ அதுல மனசு வச்சு நல்லா உழைச்சு மேல வா. நீ இதை தான் செய்யணும்னு நான் சொல்லமாட்டேன்' என்று தெளிவாக சொல்லிவிட்டார்.
சரி... ரெண்டு வருஷம் பார்ப்போம். மியூசிக் சரியா வர்லனா திரும்ப பையை தூக்கிட்டு காலேஜுக்கே போயிடலாம் என்ற முடிவோட தான் இசைத்துறைக்கு வந்தேன். ஆனா அப்புறம் திரும்பிப் பார்க்கக் கூட கடவுள் எனக்கு நேரம் கொடுக்கல.
ஒரு பாடகர் ஆனப்புறமாவது ஒரு குருகிட்ட போய் சங்கீதம் கத்துகிட்டு இருக்கலாம். முடியல.
சினிமாவில் நான் பாட ஆரம்பித்த பிறகு, நான் முறையா சாஸ்திரிய சங்கீதம் பயின்று கச்சேரி பண்றதை பார்க்கணும் என்று அப்பா ரொம்பவே ஆசைப்பட்டார். கண்டிப்பா பண்றேன்னு சொல்லி இருந்தேன். ஆனா மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் ஒரு நாளுக்கு ஆறேழு ரிக்கார்டிங்கெல்லாம் பாடிட்டு இருந்ததால, அவரோட அந்த ஆசையை மட்டும் கடைசி வரை நிறைவேற்ற முடியாமலேயே போச்சு.
இப்ப வரைக்குமே சாஸ்திரிய சங்கீதம் கற்றுக்கொள்ள முயற்சி செஞ்சுகிட்டே தான் இருக்கேன். நேரம் கிடைக்கும்போது, ‘எனக்கு ஆதார ஸ்ருதியில இருந்து சங்கீதம் கற்றுக் கொடுங்க'னு யார்கிட்டயாவது போய் கேட்டா, ‘விளையாடாதீங்க சார். உங்களுக்கு தெரியாத சங்கீதமா'னு கேட்டு திருப்பி அனுப்பிடறாங்க. நான் என்ன செய்யுறது சொல்லுங்க? பிஸியா இருக்குறதுனால கத்துக்க முடியலனு சொல்றது எனக்கு நானே துரோகம் பண்ணிக்கிறேனோனும் தோணுது. இனிமே கத்துக்க முடியுமோ முடியாதோ? அதை காலத்துகிட்டயே விட்டுட்டேன். சிலநாள் தினமும் 13, 14 பாட்டுக்கூடப் பதிவாகும். அவ்வளவு பிஸி. என்னுடைய குடும்ப வாழ்க்கையைக் கவனிக்க முடியாத அளவுக்கு பிஸி. குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது.
ஒரு பாட்டு கொடுத்தால் கஷ்டப்பட்டு உழைப்பேன். முடியாத பாட்டுகள் எத்தனையோ நான் ரெகார்டிங் தியேட்டருக்குப் போய் எனக்கு இது தெரியாது, என்னால முடியாது; நான் மாட்டேன்னு சொல்லியிருக்கேன்.
வயசுலயும், வித்தையிலயும் இளையராஜா சீனியர்.
சினிமாவில் எனக்கு ஜூனியர். இளையராஜாவுக்கு முன்னாலயே பாரதிராஜா தான் எனக்கு ஃப்ரெண்ட். அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பார்க்கும்போது தற்செயலா எனக்கு அறிமுகமானான். அவன் நாடகத்துக்கு போய் நான் லைவ்வா பாட்டுப் பாடுவேன். எனக்கு கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்க வரும். அதனால அவன் நாடகத்துக்கு வாசிச்சிருக்கேன். இப்படி நாங்க நண்பர்களானோம்.
அப்ப நான் ஒரு சின்ன கார் வாங்கி இருந்தேன். நானே தான் டிரைவிங். கச்சேரிக்காக எங்க வெளியில போனாலும் பாரதிராஜா என் கூடவே இருப்பான். நிறைய கதைகள் சொல்லுவான். எல்லாமே ரொம்ப அட்வான்ஸ்டு திங்கிங்கா இருக்கும். அவனோட 16 வயதினிலே கதையை நானும் அவனுமே சேர்ந்து தயாரிக்கிறதா முடிவு பண்ணினோம். அப்ப எந்த மொழிப் படமா இருந்தாலும் பெங்களூர்ல ஷூட்டிங் நடத்துனா மானியம் கொடுத்துட்டு இருந்தாங்க.
அதுக்காக பெங்களூர்ல ஒரு கம்பெனி ஆரம்பிச்சு வேலை பார்த்தோம். ஆனா ஆரம்பகட்ட ஷூட்டிங் நடத்தக்கூட எங்களால காசு புரட்ட முடியல. அப்புறம் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் அவனுக்கு சான்ஸ் கிடைச்சது.
இதுக்கு இடையில நான் நிறைய மேடை கச்சேரிகள்ல பாடிகிட்டு இருந்தேன். அனிருத்தா என்கிறவர் தான் எங்க டீம் லீடர். அவர் தான் முதல் முதலா எனக்கு மேடையில பாடுற வாய்ப்பு தந்தவர். அவர் ஒரு ஹார்மோனியம் ப்ளேயர். கார்பரேஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்தார்.
எங்க வீட்டுல நாங்க ஒருநாள் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தப்ப ‘நாங்க பாராதிராஜா ஊர்க்காரங்க. அண்ணன் தான் உங்கள பார்த்துட்டு வரச் சொல்லி அனுப்பினாருனு மூணு பசங்க வந்தாங்க. ‘யார் யார் என்னென்ன இன்ஸ்ட்ரூமென்ட் வாசிப்பீங்க'னு கேட்டதும், ‘தம்பி ராசய்யா ஹார்மோனியம் வாசிப்பான்' என்றார் பாஸ்கர். வாசிக்கச் சொன்னேன்.
ரெண்டு கையிலயும் பெல்லோஸ் போட்டு ரெண்டு கையாலயும், டாக்டர் ஷிவாகோ படத்துல வர்ற லாராஸ் மெலடி தீம் வாசிச்சான்... அசந்துட்டேன் நான். ‘எங்க மியூசிக் படிச்சீங்க'னு கேட்டேன். ‘எங்கயும் படிக்கல' என்றான். ‘அப்புறம் எப்படி வெஸ்டர்ன் வாசிக்கிறீங்க'னு கேட்டதும், ‘என்னை அறியாமயே வாசிக்கிறேன் சார். எனக்கு மியூசிக் தெரியாது' என்றான். அடடா இந்த பையனை விட்டுடக் கூடாதுனு மனசு அடிச்சுகிட்டது. ஆனா ஹார்மோனியத்துக்கு ஏற்கெனவே அனிருத்தா இருக்காரேனு சொன்னதும், ‘நான் கிடார் கூட வாசிப்பேன்' என்றார். அதிலிருந்து எங்கள் குழுவின் கிடார் ப்ளேயர் ஆனார் ராஜா.
அதன்பிறகு அனிருத்தா வேலை காரணமாக எல்லா கச்சேரிக்கும் வரமுடியாமல் போனதால் ராஜா ஹார்மோனிய ப்ளேயர் ஆனார். அமர் சிங் என்ற கங்கை அமரன் கிடாரிலும், பாஸ்கர் ட்ரிபிள் காங்கோவிலும் அமர்ந்தனர். குழு பெயர் ‘பாவலர் சகோதரர்கள்.ஆயிரக்கணக்கான கச்சேரிகள் பண்ணோம். கல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். ஆரம்ப கால கட்டங்களில் மிகவும் கடினமான பயணங்களை மேற்கொண்டுள்ளோம். பஸ், ரயில், சில நேரங்களில் முன்பதிவு செய்யப்படாத ரயில், ஆடு, கோழி, மாடுகளோடு பயணம் செய்திருக்கிறோம். அந்தக்காலத்தில் சென்னையில் ஒரு கல்யாண கச்சேரிக்கு ரூ. 250 கிடைக்கும். எனக்கு அதில் ரூ. 15 கிடைக்கும். தன்ராஜ் மாஸ்டரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார் இளையராஜா. என்னுடைய ஸ்கூட்டரில் அவரை கூட்டிக்கிட்டு கச்சேரிக்கு போவோம்.
அதுக்கு அப்புறம் தான் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட கிடாரிஸ்டா
சேர்ந்தார். அப்ப ராஜா கம்போஸ் பண்ணின நிறைய பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் பேரில் வந்தது. அப்பவே ரொம்ப டிசிப்ளினா இருப்பார். அந்த நோட் சரியா
வாசிக்கலனு ரிக்கார்டிங்ல யாராவது சொன்னா, ‘திரும்ப போட்டு கேளுங்க. நான் சரியா தான் வாசிச்சிருக்கேன்'னு போல்டா பேசுவார். அவர் இசை மேல அவருக்கு அப்படியொரு நம்பிக்கை எப்போதுமே உண்டு. அவருடைய Attitude அப்படி. இப்போது கூட ராஜாவை சில நேரங்களில் தவறாக சிலர் நினைப்பதற்கு அந்த Attitude தான் காரணம்.
காலேஜ் படிக்கும்போது ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சேன். அந்தப் பழக்கத்தை விட முடியாம 30 வருடங்கள் தவிச்சேன். கடைசியில என் பொண்ணு தான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வச்சா. ஒரு நாள் எனக்கு ஏதாவது பிராமிஸ் பண்ணிக் கொடுங்கப்பா என்று கேட்டாள். என்ன வேணும்டானு கேட்டேன். நாளையில இருந்து
சிகரெட் பிடிக்கக் கூடாது என்றாள். சரிடானு கையில் அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தேன். அவ்வளவு தான். அன்னியோட அந்தப் பழக்கத்தை விட்டுட்டேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் சேர்த்து 70 படங்களுக்கு மேல இசையமைச்சுட்டேன். எந்தப் படத்துலயும் எனக்கு திருப்தி இல்லாத வேலையை செய்யவே இல்ல. சிகரம் முடிச்சதும் அழகன் பண்ண சொன்னார் கே.பி. சார். ஒரே சிட்டிங், 15 நாள்ல பாட்டு ரெக்கார்ட் பண்ணி வேணும்னு கேட்டார். என்னால முடியாதுன்னு சொல்லி நானே அறிமுகப்படுத்தி வச்சவர்தான் மரகதமணி.
அஜித் என் மகன் சரணுடைய வகுப்பு நண்பன். ஒருமுறை ஏதோ விளம்பர படப்பிடிப்பு நிகழ்ச்சிக்கு போக நல்ல சட்டை வேண்டுமென சரணுடன் வீட்டுக்கு வந்தார். பார்த்தபோதே அவரது தோற்றம், அணுகுமுறை பிடித்தது. பிறகுதான் தெலுங்கில் நண்பர் ஒருவரது மகன் இயக்கும் படத்திற்கு அஜித்தை பரிந்துரைத்தேன்.
என்னோட ஸ்பெஷல் குவாலிட்டியா எல்லோரும் சொல்றது ஐ யம் எ வெரி குட் எக்ஸ்பிரசிவ் சிங்கர். அதனால இயல்பாவே எனக்குள்ள ஒரு நடிகன் எப்பவும் இருக்கான். ரிக்கார்டிங்ல பாடும்போது நான் மைக் முன்னால எப்பவுமே நடிக்கத் தான் செய்வேன்.
பாட்டைப்பற்றி என்ன அறிவுரை சொல்வது? ஸ்ருதில பாடுங்க. தாளத்துல பாடுங்க. அனுபவிச்சுப் பாடுங்க. இதெல்லாம் பொதுவாகச் சொல்வதுதான். இதை மீறி என்ன அறிவுரை சொல்ல முடியும்? நல்லா பயிற்சி பண்ணுங்க. இதை ஒரு வேலையைப் போல நேசித்துச் செய்யுங்கள்.
பாலமுரளி சாரிலிருந்து பாலசுப்ரமணியம் வரை ஒவ்வொரு நாளும் பயிற்சிதான்.நேற்று நீங்க பாடினதுக்கும் இன்று பாடுவதற்கும் 0.001% ஆவது வித்தியாசம் இருக்கணும், இல்லைன்னா உங்க பயிற்சியினால பிரயோஜனமே இல்லை. இதையெல்லாம் விட, உச்சரிப்பு சுத்தம் முக்கியத்துவம் பற்றித் தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன்.
சிலர் பாடுகின்றனர், அதில் ல, ள, ழ வித்தியாசமே கிடையாது. கொல்லு, கொள்ளு... இந்த வேறுபாடு கூடத் தெரியவில்லை. எவ்வளவு பொருள் மாறிப்போய் விடுகிறது. இப்பொழுது மொழிக்கு யாருமே முக்கியத்துவம் தருவதில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கூடச் சரியாக உச்சரிப்பதில்லை என்பது வருத்ததற்குரியது. மன்னிக்க முடியாதது. பாவம் கவிஞர்கள்.
வைரமுத்து சார் ஒலிப்பதிவுக்கு வந்தால் எத்தனையோ டேக்ஸ் அவருக்காகப் பாடியிருக்கிறோம். அவருக்கு க்,ச்,ப் எல்லாம் கூட சுத்தமாக இருக்கணும். அதே போல ராஜா சார், விஸ்வநாதன் சார் எல்லோருமே மொழியில், அதன் உச்சரிப்பில் மிகவும் அக்கறை கொண்டிருப்பார்கள். இப்போது பாடலாசிரியர்கள் இதுபோன்று ஏதாவது சொல்கின்றனர் என்பதால் ஒலிப்பதிவுக்கு அவர்கள் அழைக்கப்படுவதில்லை.ஸ்ருதி, தாளம் உட்பட எல்லாம் பெரிய வித்வான்களிடம் போய் கற்றுக்கொள்ளலாம். ஆனால் உச்சரிப்பு நீங்களாகவே தான் சரி செஞ்சுக்கணும். இது கர்நாடிக் பாடுறவங்க கிட்டயும் இருக்கு.
என் இசையை கேட்டு என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல இந்த ஒரு ஜென்மம் போதாது. இன்னொரு ஜென்மம் வேண்டும். ஒரு பாடகனாகவே இன்னும் ஒரு ஜென்மம் வேண்டும். திரும்ப திரும்ப நல்லபடியாக பாட்டுக்கள் பாடி உங்களுக்கு சந்தோசத்தை கொடுக் கணும்.
ஆயுள் கம்மியாகிட்டே இருக்கறதைக் குறித்து கவலைப்படக்கூடாது. ராத்திரி கண் மூடி தூங்கறோம். காலையில் கண்விழிச்சா உயிரோட இருக்கிறோம். இவ்வளவுதான் வாழ்க்கை. வாழுற காலத்துல யாரையும் துன்பப்படுத்தாம வாழணும்.''
(பல்வேறு தொலைக்காட்சி நேர்காணல்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவே பேசியது, விருது விழாக்களில் பேசியது, தென்றல் இணைய இதழ், குமுதம் இதழ் ஆகியவற்றில் இருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளது)
அக்டோபர், 2020.