இதுக்கு எத்தனை Like?

சிலிக்கான் சிந்தனைகள்
இதுக்கு எத்தனை Like?
Published on

அடுத்த ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தேசிய அளவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? யார் எந்தத் தொகுதியில் வெல்வார்கள்? எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்வார்கள்? இனி இதெல்லாம் பத்திரிகைகளில் வர ஆரம்பிக்கும். என்னைப் பொருத்தவரையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இணையமும் அதில் உள்ள சமூக வலைத்தளங்களும் ஒரு வேட்பாளருக்கு, கட்சிக்கான ஆதரவு அலையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் என்று கருதுகிறேன். சினிமா இயக்குநர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும். படம் வெளியாகி முதல்காட்சி இடைவேளையிலேயே நம்மாட்கள் முழு படத்துக்கும் விமர்சனம் எழுதி முகநூலிலும் ட்விட்டரிலும் போட்டு வெளுத்து வாங்கி விடுகிறார்கள்.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் முன்னிலையில் இருக்கும் அரசியவாதிகள் என்றால் நரேந்திரமோடியும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும்தான். மோடியின் முகநூல் பக்கத்தில் 459,445 லைக்குகள் இருக்கின்றன. ராகுலின் முகநூல் பக்கத்தை 147,000 பேர் விரும்பியிருக்கிறார்கள்; பிரியங்கா வதேராவின் முகநூல் பக்கத்தில் 1,31,000 லைக்குகள்; சோனியா காந்தியின் பக்கத்தில் 77,381 லைக்குகள். இது அல்லாமல் இவர்களின் ட்விட்டர் கணக்குக்கு பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை தனிக்கணக்கு. மோடியின் முகநூல் பக்கத்தில் அவர் உள்ளிடும் கருத்துக் கள் மீதான அவரது ரசிகர்கள், இணைய தளவாசிகளின் எதிர்வினைகள் அதிக எண்ணிக்கையிலும் சிறப்பாகவும் இருக்கின்றன. இணைய உலகைப் பொருத்தவரையில் மோடி பிராண்ட் வெற்றி பெற்றிருக்கிறது. மிலிந்த் தியோரா, அகிலேஷ் யாதவ், சுஷ்மா ஸ்வராஜ், ஓமர் அப்துல்லா போன்ற தேசிய அளவிலான புள்ளிகளும் அட்டகாசமாகச் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு இணையம் மூலமாக தங்கள் பிராண்ட் மதிப்பைக் கூட்டிக்கொள்ளும் வழி  தெரிந்திருக்கிறது அல்லது தங்கள் தொண்டர்களிடம் உடனே தொடர்பு கொள்ள இணையத்தைப் பயன்படுத்துவதை அறிந்து வைத்திருக்கிறார்கள். இப்போது திமுக தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்களின் அறிக்கைகள் அவர்களின் முகநூல் பக்கங்களில் உடனே வெளியாகின்றன. குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர் முக நூலில் பட்டையைக் கிளப்புகிறார்.

நல்லது.. விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார்.

அரசியலில் போட்டியிட விரும்புவோர் இப்போதே இணையத்தைப் பயன்படுத்தி தங்களுக்கான ஆதரவை , அறிமுகத்தைப் பெற ஆரம்பித்து விடுவது நல்லது. முன்கூட்டியே நுழைவதுதான் தேர்தல் சமயத்தில் உதவி செய்யும். ஏனெனில் இணையத்தில் நீங்கள் புதியவரெனில் உங்களுக்கென்று ஆதரவாளர் கூட்டம் சேர கொஞ்சம் காலம் பிடிக்கும்.  வென்றாலும் இது உதவும்; தோற்றாலும் உதவும். ஓர் அமெரிக்க உதாரணத்தைப் பார்க்கலாம்.

புகழ் பெற்ற ஒரு வேட்பாளரை எதிர்த்து நிற்கிறார் ராபர்ட்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). முதல் முறையாக அவர் தேர்தலுக்கு வருகிறார். அவருக்கு பெரிய ஆதரவு பலம் எதுவும் இல்லை. ராபர்ட் இதற்காகத் திட்டமிட்டு ஓராண்டு முன்கூட்டியே பிரச்சார இணைய தளத்தை ஆரம்பிக்கிறார். சமூக வலைத் தளங்களுடன் தன் தளத்தை இணைக்கிறார். எல்லா விஷயங்களிலும் கருத்துக் கூறுகிறார்; விமர்சிக்கிறார்; தொடர்புகொள்கிறார்.

தேடு பொறிகளில் தான் போட்டியிடும் பதவி, அல்லது தன் பெயரைப் போட்டால்  முதல் வரிசையில் வந்து நிற்கும் அளவுக்கு இணையத்தில் அவர் பிரபலமடைகிறார். இணையத்துக்கு வெளியே வழக்கமான அவரது பிரச்சாரத்-துக்கு இது பெரிதும் கை கொடுக்கிறது. அவர் தான் எதிர்பார்க்காத அளவுக்குப் பிரபலம் அடைகிறார்.

தேர்தல் வந்தது. ராபர்ட் தோற்கிறார். அந்த புகழ்பெற்ற எதிரணி வேட்பாளர்தான் வென்றார். ஆனால் இதுவரை அவரை எதிர்த்து நின்றவர்களை விட அதிகமான வாக்குகளை ராபர்ட் பெற்றார். ராபர்ட்டுக்குக் கிடைத்தது புகழ்; தன் பெயருக்கான பிராண்ட்  மதிப்பு; பொதுவாழ்க்கைக்குத் தேவையான பிரபலம். இது அவருக்கு அடுத்த தேர்தலில் உதவி செய்யும். தோல்வி கிடைத்தாலும் கூட தன் பிரச்சார இணைய தளத்தை வழக்கம் போல தொடர்கிறார் அவர்.

அரசியல்வாதிகள் இணையத்தில் என்ன செய்யலாம்?

ஆன்லைனில் பிரசாரத்துக்கான நிதி திரட்டலாம்; தொண்டர்படைக்கு ஆள் சேர்க்கலாம்; உங்கள் தளத்தின் கட்சியின் வரலாறு, உங்கள் திட்டங்களைப் பிரசுரிக்கலாம்; ஏராளமான பேருக்கு உங்கள் கொள்கைகளை மின்னஞ்சல் அனுப்பலாம்; உங்கள் நடவடிக்கைகள், பிரச்சாரங்களை புகைப்படமாகவோ வீடியோவாகவோ பதிவேற்றலாம்; பூத் ஸ்லிப், உறுப்பினர் அட்டை கொடுக்கலாம்; உங்கள் தேர்தல் அறிக்கை பற்றி கருத்துக் கணிப்பு எடுக்கலாம்; மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறலாம்; அவர்களிடம் உரையாடலாம். கட்சிக்காரர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்; இன்னும் என்னென்ன மேம்பாட்டுக்காக செய்யலாம் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவும் செய்யலாம்.  உங்களுக்கு இது ஒரு பிராண்ட் உருவாக்கமாகவும் பயன்படும். கொகோ கோலாவையும் அமுல் பிராண்டையும் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் அவர்கள் ஆண்டு முழுக்க விளம்பரம் செய்யவில்லையா? இணையம், ஆன்லைன் என்றாலே எதற்கெடுத்தாலும் அமெரிக்காவுக்குத் தானே போக வேண்டும்? ஆகவே ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருப்பதற்கு எந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினார் என்று பார்க்கலாமா?

2102-ல் தேர்தலின் போது ஒபாமாவின் முகநூல் பக்கத்துக்கு 32 மில்லியன் லைக்குகள் விழுந்திருந்தன. எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியின் பக்கத்துக்கு 12 மில்லியன் லைக்குகள்தான். இப்போதெல்லாம் சராசரியாக முகநூலில் ஒபாமா ஏதாவது நிலைத் தகவல் போட்டால் அதற்கு விழும் சராசரி லைக்குகள் 5 லட்சம்! இரண்டாவது முறையாக அவர் அதிபராகிப் போட்ட முதல் நிலைத் தகவலுக்கு எத்தனை லைக்குகள் விழுந்தன தெரியுமா? முப்பது லட்சம்!

ட்விட்டருக்கு வருவோம். ஒபாமாவை எவ்வளவு பேர் இதில் பின்தொடர்கிறார்கள் தெரியுமா? 22 மில்லியன். மிட் ரோம்னி? 1.7 மில்லியன் தான் (அய்யோ பாவம்!) ஒபாமா ஒரு நாளைக்கு 50 ட்வீட்டுகள் போடுகிறார்! இதெல்லாம் அவர்தான் போடுகிறார் என்றில்லை அவருக்கு ஒரு பிரமாதமான குழு இருக்கிறது! இவரது யூட்யூப் சானலுக்கும் கூட2,63,000 சந்தாதாரர்கள் உள்ளனர். அரசியல்வாதி யாரும் இவர் கிட்டே கூட இல்லை! இத்தனைக்கும் அமெரிக்காவில் 30 கோடிப்-பேர்தான் மக்கள் தொகை!

ஆகவே வேட்டி கட்டிய, சேலை உடுத்திய தமிழக அரசியல்வாதிகளே இணையம் மிகப்பெரிய வாயிலைத் திறந்து வைத்திருக்கிறது! ஆனால் ஒன்று வெறுமனே முகநூலில் பக்கம் திறந்து வைத்து அதை பாலைவனம் மாதிரி வைத்திருந்தால் எதுவும் நடக்காது! அதை சுவாரசியமாகக் கையாளவும் தெரிந்திருக்க வேண்டும்! இப்படி இணையதளத்தை வேட்பாளர்கள் நடத்தினால் அதன்மூலம் ஐ.டி. படித்த இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்த விரும்பும் அரசியல்வாதிகளுக்கு பயனளிக்கும் விதத்தில் சுமார் 250 இளம் ஐடி பட்டதாரிகளுக்கு ஓபன் சோர்ஸ் தொழில்நுட்பத்தில் என் நிறுவனம் மூலமாகப் பயிற்சி அளிக்கலாம் என்பதே அது! எந்த  அரசியல் கட்சியாக இருந்தாலும் வெல்கம்! 2014-ஐ இணையத் தேர்தலாக ஆக்குவோம்!

மார்ச், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com