ஒரு திரைப்படம் வெளிவருவதற்குள் கோடம்பாக்கக்காரர்கள் கொடுக்கிற பில்டப்புகள்... அலட்டிக் கொள்கிற அலட்டல்கள்... யப்பா போதும்டா சாமி! என்றாகிவிடுகிறது. சுட்டகதைகளைத் தாண்டி சுடாத கதைகளுக்காக ரூம் போட்டு யோசித்து... இதுவரையில் எதிலும் வராத கிளைமாக்ஸ் என்கிற பீடிகையோடு வெளிவரும் படங்கள் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. கடந்த சில பத்தாண்டுகளாய் நாம் ஆண்டுதோறும் கேட்டு... கவலையுற்று... ஆத்திரப்பட்ட விஷயம்தான் படமாகி இருக்கிறது. அதுதான் நீர்ப்பறவை. இலங்கை கப்பற்படையினரால் ஆண்டுதோறும் கொன்றழிக்கப்படும் மீனவர்கள் வாழ்வின் சிறுபகுதி படமாக வந்திருக்கிறது. இரண்டு “நட்பு”(?) நாடுகளுக்கு இடையில் உள்ள கடற்புரமும் அதன் கரையோரங்களும்தான் களம் என்பதால் கவனத்தோடு எடுத்திருப்பது புரிகிறது. இல்லாவிட்டால் சென்னை சென்சார் தாண்டி ராணுவ சென்சார் வரை பயணித்து படம் வெளிவருவதற்குள் இன்னும் முன்னூறு பேர் பலியாகி இருப்பார்கள் என்பது நிச்சயம். தமிழ்சினிமாவைப் பற்றி ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னர் “தீராநதியில்”:
“சுற்றிவளைக்காமல் சுருக்கமாகச் சொன்னால் இன்றைய தமிழ் சினிமா : இந்து சினிமா. அதுவும் மேல் சாதி இந்துக்களின் சினிமா. மொத்தத்தில்... இட ஒதுக்கீட்டைப் பற்றி மயிரளவும் புரியாத.. பெண்ணினத்தை அணுவளவும் மதிக்காத..
சிறுபான்மையினரும் கதையின் நாயகர்கள்தான் என்பதை உணராத... தலித்துகளும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்பதை நிராகரிக்கிற... தூய... இந்து மேல்சாதி ஆண்களின் சினிமா.” என்று எழுதி இருந்தேன்.
இந்த ஆதங்கத்தை அவ்வப்போது சில படங்-கள் ஆற்றுதல்படுத்தி வந்திருந்தாலும் “நீர்ப்பறவை” ஒரு படி கூடுதலாகவே ஆறுதல் அளித்தபடம். அதிலும் கரையோரத்து மீனவர்களின் வாழ்வு, இஸ்லாமியராக வரும் சமுத்திரக்கனியின் நெத்தியடி கதாபாத்திரம்... என மனதை வருடியவை ஏராளம். இதில் குறைகள் இருக்கின்றதா எனில் இல்லாமலில்லை. ஏதிலிகளாக வந்து இறங்கும் ஆண்டைச் சொல்வதில் தொடங்கி இறுதிக்காட்சியில் கோர்ட்டு முடிந்தவுடன் ”என்னை மன்னிச்சிரும்மா” என மகன் பேசும் டயலாக் வரைக்கும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கிறது. மணிரத்னம் கிராமத்தையே கேமிராவில் காட்டிவிட்டு ”மாங்குடி கிராமம்” என சப்டைட்டில் போட்டதையே பொறுத்துக் கொண்டவர்கள் நாம். இதையும் பொறுக்கலாம்.
நாம் இதுவரையிலும் செய்தித்தாள்களில் படித்தவற்றை...
அதற்காக ஓரிரண்டு ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டவற்றை.. நண்பர்களோடு துயரம் மேலிட அங்கலாய்த்துக் கொண்டவற்றை...
ஒரு படமாக இயக்கித் தந்திருக்கிற இயக்குநர் சீனு ராம
சாமியின் மனித நேயம்தான் எல்லாவற்றுக்கும் மேலாக முன் நிற்கிறது.
இதையும் சொல்லுங்க..
ரமணா விஜகாந்த் பாணியில் மருத்துவர் ராமதாஸ் ஒரு புள்ளி விவரத்தை அள்ளி வீசியிருக்கிறார். அது “நாடகக் காதல் திருமணங்களால்” பிரிந்த ஜோடிகள் எவ்வளவு? சொத்தை இழந்தவர்கள் எவ்வளவு பேர்? தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர்? என மாபெரும் புள்ளி விவரம் ஒன்றை அளித்துவிட்டு... இதற்காக ஓய்வுபெற்ற ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும் என்று தமிழகத்தின் தலை போகிற கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தமிழகமே இருளில் மூழ்கி... தொழில் நசுங்கி... தொழிலாளர் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் இது மிக மிகத் தலையாய பிரச்சனைதான்.(அவருக்கு).
ஆனாலும் அவர் சொல்வதில் ஒரு சின்ன சிக்கல் இருப்பதாக எனக்குப் படுகிறது. சரி ஓய்வுபெற்ற நீதிபதியையே நியமிப்பதாக வைத்துக் கொள்வோம். அவரை எப்படித் தேர்வு செய்வது என்பதில்தான் சிக்கலே. அவர் காதல் திருமணம் செய்த நீதிபதியாக இருந்தால்? வீட்டில் பெற்றோர் பார்த்த துணையையே தட்டாமல் திருமணம் செய்து கொண்டவர் என்றால்? ஒருவேளை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நீதிபதி பிற்பாடு படும் பாட்டை வைத்து அதற்கு எதிராக தீர்ப்பு எழுதலாம். அல்லது வீட்டில் சொன்ன துணையைத் தேர்ந்தெடுத்த நீதிபதி தினமும் அனுபவிக்கும் குடுமிபிடியை மனதில் வைத்து காதலுக்கு சார்பாக தீர்ப்பு எழுதலாம். இதில் யாரை நம்புவது?
இதையும் சொல்லி விட்டால் நோ அப்ஜெக்சன் யுவர் ஹானர்!
இதுவரைக்கும் ஆலோசனை சொன்ன எனக்கே ஆலோசனை தேவையா இருக்கு... ஏன்னா அந்தளவுக்கு நான் கொளம்பிக் கிடக்கிறேன். ஒரே ஒரு ஐடியா சொல்லுங்கப்பா... இந்த கரண்ட் வந்த கேப்ல கட்டுரை எழுதுவது எப்படி?
(சென்னையில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் குடிமக்கள் பதில் சொல்வதைத் தவிர்க்கவும். ஏன்னா.. உங்குளுக்கு ரெண்டு மணி நேரம் கரண்ட் போகுது. எங்குளுக்கு ரெண்டு மணி நேரம்தான் கரண்ட்டே வருது.)
ஜனவரி,