இது நூறு மீட்டர் ஓட்டம் அல்ல, மாரத்தான்

இது நூறு மீட்டர் ஓட்டம் அல்ல, மாரத்தான்
Published on

டூ வோன் சாங் தென்கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு தன் 18 வயதில் பிழைப்புக்காக பெருங்கனவுகளுடன் வந்தவர். இன்று புலம் பெயர்ந்தவர்களின் வெற்றிக்கதைகளில் அவருடையது முதன்மையானதாக இருக்கிறது. வெற்றிகரமான பேஷன் ஆடை நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார். 15 நாடுகளில் 457 கடைகளுடன் 20,000த்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவரது நிறுவனத்தின் பெயர் ஃபாரெவர் 21. சுமார் 10,000 கோடிவரை ஆண்டு வர்த்தகம் நடக்கிறது.

1981-ல் கலிபோர்னியாவுக்கு கொரியாவிலிருந்து புலம்பெயர்ந்தார் டூ வோன் சாங். “என்ன தொழிலில் இறங்கலாம் என்று யோசித்தபோது பிஎம்.டபிள்யூ, மெர்சிடீஸ் போன்ற பளபளப்பான கார்களை வைத்திருந்த பெருமாலானோர் துணி வர்த்தகத்தில்தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் என்பதைக் கண்டேன். எனவே நானும் ஜவுளி தொடர்பான தொழிலில் குதித்தேன்” என்கிறார்.

லாஸ் ஏஞ்சல்சில் முதல்முதலில் ஒரு கடையை தன் மனைவி ஜின் சூக்குடன் சேர்ந்து தொடங்கினார். பேஷன் 21 என்றுதான் ஆரம்பத்தில் கடைக்குப்பெயர் வைத்தார். மெல்ல கடை அமெரிக்காவில் வாழ்ந்த கொரியர்களைத் தாண்டி வளர்ந்தது. கடைபெயரை ஃபாரெவர்21 என்று மாற்றினார். அமெரிக்காவிலும் இவர் பிறந்துவளர்ந்த சியோலிலும் கடைகளைத் திறந்தார்.

இன்றைக்கு பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும் நிர்வாகத்தைக் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார் சாங். இவரது ஒரு மகள் சந்தைப் படுத்துதலைக் கவனிக்கிறார். இன்னொரு மகள் நிறுவனத்தின் கிராபிக்ஸ் மற்றும் கடைகளின் வெளிப்புறத் தோற்ற வடிவமைப்பைக் கவனிக்கிறார். “அவங்க அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்” என்று பெருமைமிகு தந்தையாக பூரிக்கிறார் சாங்.

“வெறுங்கையுடன் அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு உந்துதல் தரும் விதத்தில் இந்த நிறுவனம் உள்ளது. இன்றும் அதுபோல் புலம் பெயர்ந்துவருபவர்களை எங்கள் நிறுவனத்தைப் பார்வையிட்டு தூண்டுதல் பெறுவதற்கு அனுமதிக்கிறேன். இது ஒரு சாதாரண கொரியனால் வெறும் கனவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட நிறுவனம் அல்லவா? ” என்கிற சாங், சில வெற்றிக்கான வழிமுறைகளைக் கூறுகிறார்:

“எந்த தொழில் தொடங்கினாலும் உடனே வெற்றி கிடைத்துவிடும் என்று கருதக்கூடாது. ஓர் ஆண்டில் ஈராண்டில் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணம் வேண்டாம். ஒரு நூறு மீட்டர் ஓட்டம் அல்ல. மாரத்தான். வேகம் முக்கியம்தான். அதைப்போலவே கடும் உழைப்பும் முக்கியமானது.” என்கிற சாங் கல்லூரியில் போய் படிக்காதவர். இன்று கல்லூரிப் படிப்பு முடித்த எத்தனையோ பேருக்கு வேலை தருகிறார்.

பணமொழி

மகிழ்ச்சியைப் போலவே செல்வத்தையும் நேரடியாகக் கோரிப் பெற இயலாது. பயனுள்ள சேவைகளை அளிப்பதன் உபபொருளாகவே செல்வம் சேரும்

- ஹென்றி போர்ட்

உலகின் விலை உயர்ந்த ஃப்ளாட்

உங்கள் படுக்கையறையிலிருந்து மத்திய தரைக்கடலைக் காணலாம். உங்கள் நடன தளத்திலிருந்து நீச்சல் குளத்துக்கு நீர்ச்சறுக்குப் பலகையில் செல்லலாம். இதெல்லாம் சாத்தியமா? 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 250 கோடி ரூபாய் நீங்கள் செலவழிக்க முடிந்தால் இதெல்லாம் கூடிய ஒரு வீடு உங்களுக்கு கிடைக்கும். ஃப்ரெஞ்சு ரிவேராவில் உள்ள மொனாகோவில்தான் இது. இங்கு வசிக்கும் மக்களில் மூவரில் ஒருவர் கோடீவரர் என்ற கணக்கு இருக்கிறது. பணக்காரர்களின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் ஊர் இது. மேலே சொன்ன அந்த வீடு உலகின் மிகவும் மதிப்புமிக்க குடியிருப்பு ஆகும். இந்த குடியிருப்பை இப்போதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் 3300 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பென்ட் ஹவுஸ் இது. ஒவ்வொரு வீடும் ஐந்து மாடிகள் கொண்டது. ஒவ்வொரு மாடிக்கும் ஒரு சமையலறை. அனைத்து சமையலறைக்கும் லிப்ட் வசதி. 2015-ல்தான் இந்த கட்டுமானம் முடிவுக்கு வருதாம். முடிஞ்சவங்க இதுல ஒண்ணை இப்பவே புக் பண்ணிக்கோங்க.. 250 கோடிதானே ஜுஜிபி...!

செப்டெம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com