இது ஒரு தொடர் நடவடிக்கை

Published on

பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தபின் நாடுமுழுக்க எல்லோரும் பல்வேறு விதங்களில் சலனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை. இது கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்கிறார் பிரதமர். இந்த விவகாரம் பற்றி முதலீட்டு ஆலோசகரும் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுபவருமான ஷ்யாம் சேகரிடம் பேசினோம்.

“பணத்தால் சமூகத்தில் என்ன விளைவுகள்? அது பணமாக இருக்கும்போது யாரிடம் இருக்கிறது என்பதும் தெரியாது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் தெரியாது. அதே ஒரு வங்கியில் இருக்கும்போது அரசுக்குத் தெரியும்.  அரசுக்குத் தெரிந்தாலும் அவர்கள் வந்து தொந்தரவு செய்வதில்லை. கறுப்புப்பணம் எப்படி சமூகத்தில் இருக்கிறது? ஒன்று, வரி ஏய்ப்பில் உருவாவது.  பலர் வரி கட்டாமல் தங்களை வளர்த்துக்கொள்ளவே நினைக்கிறார்கள். பெருவாரியான தொழில்கள் வரிகட்டி நடத்தும்போது 5-8 சதவீதம் நிகரலாபம் ஈட்டமுடியும். அரசுக்கு செலுத்தவேண்டியது நிகர வரி 15 சதவீதம் வரும். இதைக் கட்ட அவர்கள் தயாராக இல்லை. இன்னொன்று ஊழல் மூலம் சேர்த்த பணம். இவர்களும் வரி கட்டுவதில்லை. மூன்றாவது, சமூக விரோத செயல்கள் செய்கிறவர்களிடம் இருக்கும் பணம். இது கணிசமானது. இவர்கள் பணத்தை சமூகத்தில் புழக்கத்தில் விடும்போது சாமானியர்களுக்கு நன்மையை விட தீமையைத் தான் விளைவிக்கும். இன்று ரியல் எஸ்டேட் விலை இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால் கறுப்புப்பணம் வைத்திருக்கிறவர்களின் சூதாட்டத் தால்தான். சாமானியர்களுக்கு இது வாழ்க்கையில் ஒருமுறை செய்யும் முதலீடு. கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் அதிகப் பணம் கொடுத்து வாங்கும்போது இவர்களும் அதிக பணம் கொடுக்க வேண்டி உள்ளது.இது அவர்களுக்கு ஒரு மறைமுக வரி.  இப்போது லெஸ் கேஷ் ஆக்கினால் அதுபோன்ற ஆட்களின் ஆதிக்கம்குறையும். நீண்ட கால நோக்கில் சாமான்யர்களுக்கு இது உதவி செய்யும்.

சரியாக திட்டமிடாமல் இந்த நடவடிக்கையா என்றால் இல்லை. திட்டமிட்டு செய்திருந்தால் இந்த திட்டமே தோல்வி அடைந்திருக்கும். அதுதான் யதார்த்தமான உண்மை. இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதினைந்தரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்குள் வரவேண்டி இருக்கிறது. இதுவரை ஏழு லட்சம் கோடி வந்துள்ளது. 35,000 கோடி பணமாக மாற்றிஉள்ளார்கள். மீதி 8 லட்சம் கோடி வெளியே உள்ளது. அரசு இப்போது எவ்வளவு பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளது என்பதை இப்போது சொல்லவே இல்லை. கடைசியில்தான் சொல்வார்கள். பணத்தை ஏடிஎம்மில் நிரப்பிவிட்டால் அவர்கள் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

அரசின் நோக்கம் வங்கி அமைப்புக்குள் எல்லோரும் வரவேண்டும் என்பதுதான். பணம் மாற்றுவதும் ஒரு தொழில்முறையாக ஆனதைக் தவிர்க்கத்தான் மை வைக்கிறார்கள். இது பொதுமக்கள் வசதிக்காகத்தான். இந்த இடைஞ்சல்கள் இந்த திட்டத்துக்கு எதிரானவர்கள் தாங்களே உருவாக்கிக்கொள்வதுதான் என்று நான் நினைக்கிறேன்.

இந்த நடவடிக்கைகள் மூலம் மட்டும் கள்ளப்பணம் ஒழியாது. இதற்கு தொடர்ச்சியான நடவடிக்கை வேண்டும். தங்கள் பெயரில் உள்ள சொத்துகளை ஆதார், பேன் கார்டுடன் இணைக்கவேண்டும் என்று சட்டம் வரும். ஆனால் தனிமனித சுதந்திரத்தை காரணம் காட்டி இதற்கு உச்சநீதிமன்றமே எதிராக இருக்கிறது. இந்த சட்டம் வந்தால் சொத்துகள் எல்லாம் யார் பெயரில் இருக்கிறது என்று அரசுக்குத் தெரியும். மறைப்பது சிரமம்.

 ஏராளமான கறுப்புப்பணத்தை வெளிநாட்டில் கொண்டு வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதைத் திருப்பிக் கொண்டுவர அந்த நாடுகளுடன் பேசவேண்டும். அதைத்தான் இப்போது அரசு செய்துகொண்டிருக்கிறது. மூன்று விஷயங்களில் ஒரே நேரத்தில் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை செயல்படவேண்டும். ஒன்று உள் நாட்டில் உள்ள ரொக்கம், இரண்டாவது உள்நாட்டு சொத்து, மூன்றாவது வெளிநாட்டில் உள்ள ரொக்கம், சொத்துகள். மக்களுக்கு சிரமம் என்கிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன். இந்தியாவில் நாம் அனைவருமே பங்களித்து செயல்பட்ட திட்டம்  ஒன்று  இதுவரை உண்டா? நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டால்தான் ஒரு நாடாக வளரமுடியும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்த பணத்தாள்கள் செல்லாதது ஆக்கப்பட்ட விஷயம். ஏழை பணக்காரர் என்று யாரும் இதில் விதிவிலக்கு இல்லை!” என்கிறார் ஷியாம் சேகர்.

டிசம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com