இது என்னுடைய குழந்தை!

 இது என்னுடைய குழந்தை!
Published on

பொதுவாக பள்ளிப் பிராயத்தில் எல்லோருக்குமே டாக்டராவது, எஞ்சினியராவது, கலெக்டராவது என்றே எதிர்காலக் கனவுகள் விரிந்திருக்கும்.

ஆனால், வானதியின் கனவு நன்கு படித்து வேலைக்குச் சென்று, பிறகு படிக்க வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்பதே. அதைத் தனியொரு பெண்ணாக நின்று நிறைவேற்றியிருக்கிறார் அவர்.

ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் முந்நூறு குழந்தைகள் இன்று அவரால் பயனடைந்து இருக்கின்றனர். ‘‘எட்டாவது படிக்கும் போது மனசுக்குள்ள ஏற்பட்ட வைராக்யம். இப்ப நிறைவேத்திகிட்டு இருக்கேன்'' என உற்சாகமாகப் பேசும் வானதி இதற்காகவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஓர் அறக்கட்டளையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

‘‘என்னோட சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை. பொறந்து வளர்ந்து படிச்சதெல்லாம் கோயமுத்தூர். நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அடுத்து, ரெண்டு தம்பிங்க. அப்பா, அம்மா குடும்பத்தினர் எல்லோரும் கிராமத்தைச் சேர்ந்தவங்க. இதுல அம்மா குடும்பம் ரொம்ப பெரிசு. நான், ஸ்கூல்ல படிக்கும் போதே அவங்க ‘படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வச்சிடு'னு சொல்லிட்டே இருந்தாங்க. எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. பள்ளிப் படிப்போடு நிறுத்திடுவாங்களோனு பயந்தேன். ஆனா, அப்பா நிறைய சப்போர்ட் பண்ணினார். அவர் காய்கறி கமிஷன் கடை நடத்தி எங்கள படிக்க வைச்சார். அப்பதான் என்ன மாதிரி எவ்வளவோ பேர் இருப்பாங்களேனு தோணுச்சு. இதுதவிர, வேறு வேறு காரணங்களால படிக்க முடியாம பாதியில நிக்கிறவங்களும் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஏதாவது செய்யணும்னு யோசிச்சேன். படிப்பு ரொம்ப முக்கியம். படிச்சிட்டா முன்னுக்கு வந்திரலாம்னு நினைச்சேன். அதனால, முதல்ல நான் படிச்சு மேல வரணும். பிறகு, படிக்க வசதியற்றவங்களுக்கு உதவணும்னு குறிக்கோளை செட் பண்ணி ஓட ஆரம்பிச்சேன். இருபத்தி மூன்று வருஷங்களுக்குப் பிறகு என்னோட கனவு நிறைவேறியிருக்கு'' என்றவர், மகிழ்ச்சியோடு தொடர்ந்தார்.

‘‘பிளஸ் டூ முடிச்சதும் பி.இ. பாஸானேன். அப்புறம், எம்.டெக் முடிச்சிட்டு ஒரு கல்லூரியில பேராசிரியரா ஆனேன். பிறகு என்னோட துறையை ஐ.டிக்கு மாற்றினேன். கணவர் பாலசுப்ரமணியனும் சாப்ட்வேர் எஞ்சினியர். ரெண்டு குழந்தைங்க பொறந்தாங்க. இருந்தும், என்னோட கனவு என்னைத் துரத்திட்டே இருந்துச்சு. பிறகு, GTS ஆலோசகர் பணி கிடைச்சது. அதாவது, குளோபல் டிரேட் சர்வீஸ்னு சொல்வாங்க.

இந்த துறையில் பெண்களே கிடையாது. இதுல இருந்ததால பின்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன்னு நிறைய வெளிநாடுகளுக்குப் போகிற வாய்ப்பு அமைஞ்சது. கடைசியா, ஸ்வீடன்ல இருந்தேன். அங்க நண்பர் கிருஷ்ணா அறிமுகம் கிடைச்சது. நாங்க இருவருமே கல்விக்காக ஏதாவது பண்ணணும்னு விரும்பினோம். அதேமாதிரி என்னோட சித்தி பையன் அசோக்கிற்கும்

இதே எண்ணம். இவங்க ரெண்டு பேரும் என்னோட கனவுக்கு ஆதரவு தந்தாங்க. இந்தியா வந்ததும் பொறுத்தது போதும்டி வானதினு வேலையை ராஜினாமா செய்திட்டேன். என் கணவரும்

உற்சாகப்படுத்தினார். 2015 ஜனவரியில இது என்னுடைய குழந்தைனு அர்த்தத்துல Thatsmychild' ஓர் அறக்கட்டளையைத் துவக்கினேன்'' என்கிற வானதி தனது கனவுத் திட்டத்தை விவரித்தார்.

அசோக்
அசோக்

‘‘அறக்கட்டளை ஆரம்பிச்சதும் முதல்ல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் உதவணும்னு முடிவெடுத்தோம். குறிப்பா, 9 - 12 வரை படிக்கிற குழந்தைகளுக்கு உதவுறது எங்க நோக்கம். அடுத்து, இதுல யாருக்கு முன்னுரிமை கொடுக்குறதுனு கேள்வி எழுந்துச்சு. இதை நான்கு பிரிவா பிரிச்சோம். முதல்ல, அனாதைக் குழந்தைகள், அப்புறம், அம்மா அல்லது அப்பா மட்டும் இருக்குற சிங்கிள் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ற குழந்தைகள், பிறகு பெண் குழந்தைகள், கடைசியா ஆண் குழந்தைகள்னு வச்சோம்.

இதுக்குப் பிறகுதான் சோதனையே. காரணம், பள்ளிகளை எப்படி அணுகுறதுனு தெரியல. நிறைய நடைமுறை சிக்கல் வந்துச்சு. அதனால, நண்பர்கள் வழியா முன்னாள் மாணவர்கள் என்ற வகையில் பள்ளிகள்ல பேசினோம். முதல் வருஷம் வெறும் ஐந்து குழந்தைகளுக்கு மட்டுமே உதவ முடிஞ்சது. நன்கொடையாக நண்பர்களும் நிதி தந்து உதவினாங்க. இதுக்குக் ‘கனவைத் தொடு'னு பெயர் வச்சோம். இந்த நாலு வருஷத்துல எட்டு பள்ளிகள்ல படிக்கிற குழந்தைகளுக்கு பணம் கொடுத்து உதவி இருக்குறோம். இதுல, மதுரை, திருச்சியில இலங்கை அகதி முகாம்கள்ல இருந்த குழந்தைகளும் இருக்காங்க. அவங்கப் படிப்பை பாதியில நிறுத்தியிருந்தாங்க. பிறகு, பேசி பள்ளிகள்ல படிக்க வச்சோம். இதற்குப் பிறகு இந்தக் குழந்தைகளுக்கு அறிவியல் கற்றுத் தர முடிவு பண்ணினோம். அதனால, மாதம் ரெண்டு முறை அந்தப் பள்ளிகளுக்கேப் போய் ஆய்வகப் பயிற்சி மூலம் அறிவியல் சொல்லிக் கொடுத்தோம். இதுக்கு ‘விண்ணைத் தொடு'னு பெயர் சூட்டினோம். அடுத்து, வெளிச்சத்தை நோக்கினு ஒரு திட்டத்தை தயார் பண்ணி அவங்க எதிர்காலத்தைப் பற்றி பேசினோம். அதாவது, என்ன படிக்கலாம்? அவங்க குடும்ப நிலைக்கேற்ப எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்குறதுனு நிறைய விஷயங்கள் இதுல அடங்கும்.

இந்நேரம் சில பள்ளிகள்ல காலையிலிருந்து இரவு வரை இருந்து படிக்கிற குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் கொடுத்தா நல்லாயிருக்கும்னு கோரிக்கை வந்துச்சு. உடனே, அதுக்கும் பண உதவி செய்தோம். தொடர்ந்து ‘சிறகுகள் இன்றி பறக்கலாம்'னு ஒரு திட்டம் ரெடி பண்ணி அவங்க ஆர்வத்தைக் கேட்டு ஓவியம் வரையிறது, பாடுறதுனு என்ன திறமை இருக்குதோ அதைக் கற்றுக் கொடுத்தோம். இப்படியே நிறைய திட்டங்கள் அவங்களுக்காக செய்திட்டு வர்றோம். தவிர, பள்ளி முடிச்சதும் அடுத்து கல்லூரி படிப்புக்கு உதவுகிற அறக்கட்டளைகள் பற்றியும் அவங்களுக்குத் தெரியப்படுத்துறோம். இப்ப தன்னார்வலர்களாக நாற்பது பேர் இருக்காங்க'' என பெருமையோடு குறிப்பிட்டவர், தன்னுடைய அடுத்த இலக்கையும் பகிர்ந்தார்.

‘‘இப்ப திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, சென்னை, பொள்ளாச்சினு ஒரு சில ஊர்கள்ல மட்டும் எங்க கனவு விரிஞ்சிருக்கு. இதை இன்னும் விரிவுபடுத்த வேண்டியிருக்கு. இருந்தும் என்னோட மனசுல இருக்குற ஆசை, இப்படி உதவுவதற்காக ஒரு உறைவிட வீட்டை உருவாக்கணும் என்பது. அதாவது விடுதி மாதிரி அங்கேயே தங்கவச்சு உணவுல இருந்து எல்லாமே இலவச கொடுத்து வசதியற்ற இந்தக் குழந்தைகள சந்தோஷமா படிக்க வைக்கணும். அதுக் கான முயற்சிகள்ல இறங்கியிருக்கேன். சீக்கிரமே அந்தக் கனவும் நனவாகும்'' என  நம்பிக்கையுடன் முடித்தார் வானதி!

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com