இணையக் குற்றம்

அந்த படங்களை அழிக்கலாம் அஞ்சாதே!
Published on

அன்புள்ள தங்கைக்கு,

பொள்ளாச்சி விவகாரத்தில் ஈடுபட்ட வெறிநாய்களைப் போல் ஏதாவதொன்று உன்னை மிரட்டுமெனில் அஞ்சாதே. நீ அன்பில் நெகிழ்ந்த ஒரு வேளையில் உன்னைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு அவமானப்படுத்துவேன் என்று மிரட்டுபவனின் முகத்தில் உமிழ்ந்து உரக்கச் சொல். இணையத்தில் பதிவேற்றப்படும் படங்களை தூக்கிவிட முடியும் என்று. ஆமாம். நிச்சயமாக முடியும். எல்லா இணைய தளங்களையும்  சற்று கவனம் செலுத்தி அணுகினால், இதுபோன்ற காழ்ப்புள்ள படங்களையும் காட்சிகளையும் எடுத்துவிடுமாறு செய்துவிட முடியும். வேண்டுமானால் வெறிநாய்கள் தங்கள் கணினியில் உன் படத்தை தரவிறக்கி வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம். உனக்கு இன்னும் கொஞ்சம் துணிச்சல் இருந்தால், அந்தப் படங்களை வைத்திருப்பதற்காகவே அவனை தெருவில் இழுத்துவிடலாம். உனக்குத் தேவை, உன் உடல் உறுப்புகள்தான் பிறரிடமும் உள்ளன. இதில் கலங்குவதற்கு எதுவும் இல்லை என்கிற நேர்கொண்ட நோக்கு.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களைத் தூக்கச் செய்வது எப்படி என்று சொல்கிறேன் தங்கையே. கவனி. இது ஒன்றும் ராக்கெட் விடும் அறிவியலோ பன்னிரெண்டாம் வகுப்பு அல்ஜீப்ராவோ அல்ல. எளிது மிக எளிது.

பேஸ்புக்

நீயே ஏற்றிய படங்கள் எனில் நீயே டெலீட் பட்டனை அழுத்திவிடலாம். உன்னை மிரட்டுவதற்காக ஒரு வெறிநாய் ஏற்றி இருக்கிறது என்றால், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை ரிப்போர்ட் செய்யும் ஆப்ஷன் அதிலேயே இருக்கிறது. அதைப் பயன்படுத்தி புகார் அளி. ஏன் இந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்ற ஆப்ஷனும் அதிலேயே வரும். அதைக் குறிப்பாகச் சுட்டிப் புகார் அளித்தால் பேஸ்புக் அப்படத்தை எடுத்துவிடும்.

இன்ஸ்டாகிராம்

இப்போது இன்ஸ்டாகிராமும் பிரபலமாகிவிட்டதால் உன்னை அவமானப்படுத்த அங்கும் உன் போட்டோவை அவன் வலையேற்றினால் அதைத் தூக்க ஆப்ஷன்கள் உள்ளன. அந்தக் குறிப்பிட்ட புகைப்படத்தைத் மவுசால் தட்டி, அதன் ஆப்ஷன்களைப் பிடித்து ரிப்போர்ட் செய். ஏன் எடுக்கவேண்டும் என்று கேட்டால் எனக்குப் பிடிக்கவில்லை என்று மட்டும் குறிப்பிட்டால் அந்த ஆளை ப்ளாக் செய்துவிடுங்கள் என்று ஆலோசனைதான் வரும். அதில் இருக்கும் பிற ஆப்ஷன்களான நிர்வாணப் படம், வெறுப்பூட்டும் பேச்சு, குற்றச்செயல் போன்றவற்றை செலக்ட் செய்தால் இன்ஸ்டாகிராமும் உதவிக்குவந்து அந்தப் படங்களை எடுத்துவிடும்.

ட்விட்டர்

இதிலும் புகைப்படங்களை ரிப்போர்ட் செய்யலாம். ட்விட்டர் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதை புகார் அளிக்கலாம். உன்னைத் தொடர்ந்து அவதூறு செய்தால் அதன் சான்றுகளுடன் நேராடியாக புகார் அளி. அவனை ப்ளாக் செய்துவிட்டால் உன்னைப் பின் தொடரவோ டேக் செய்யவோ முடியாது.

கூகுள்

கூகுள் ஒரு சர்ச் எந்திரம். தேடுபொறி. என்பதால் அதற்கான அணுகுமுறை சற்று மாறுபடும். கூகுளின் புகைப்படத் தேடலில் உன் படத்தை தேடு. அது எந்த இணையதளத்தில் உள்ளது என்று கண்டுபிடித்து அவர்களுக்கு நேரடியாக எழுது. அந்த இணையதள உரிமையாளரை (வெப்மாஸ்டர்) இந்தப் படத்தை டெலீட் செய்ய வற்புறுத்துவது எளிய வழி. பெரும்பாலும் ஒப்புக்கொள்வார்கள். கூகுளின் தேடுதல் முடிவுகளில் இருந்து இப்படத்தை நீக்கச் சொல்லி எழுதுவது இன்னொரு வழி. ஆனால் கூகுள் நீக்கினாலும் பிற தேடுபொறிகளின் முடிவுகளில் இப்படம் வரக்கூடும். அதற்குச் சிறந்த வழி எந்த தளத்தில் படம் ஏற்றப்பட்டிருக்கிறதோ அந்த தளத்திலிருந்து நீக்கச் செய்வதே. ஒரு  தளத்தில் பணியாளர் மறுத்தால் வேறு ஆளைத் தொடர்பு கொள். முடிந்தால் அந்நிறுவனத் தலைவரையே பிடி. டிஜிட்டல் உலகில் இதெல்லாம் சாத்தியமே.

யூ ட்யூப்

இதிலும் ரிப்போர்ட் ஆப்ஷன் இருக்கிறது. ரிப்போர்ட் செய்தால் அவமானப்படுத்தும் காணொலிகள் அகற்றப்பட்டுவிடும்.

தங்கையே... சைபர் கிரைமில் இது தொடர்பாகப் பணியாற்றும் காவல்துறை அலுவலர் ஒருவரிடமும் பேசினேன். ‘சமூக வலைதளங்களில், குறிப்பாக Facebook, Twitter, Youtube  போன்றவற்றில் ஆபாசமான, அல்லது விரும்பத்தகாத புகைப்படங்கள், காணொளிகள் இருக்குமானால், சம்பந்தப்பட்டவர்கள் அவர்களாகவே குறிப்பிட்ட சேவை வழங்குபவர்களின் நிர்வாகத்திடம் புகாரளிக்கலாம். இத்தகைய பதிவுகளை Facebook அதிக கவனம் செலுத்தி நீக்கி வருகிறது. கூகுள்தான் சற்று சிரமமான இடம். ஆனால் கவனம் செலுத்தி புகார் அளித்தால் நீக்கப்பட்டுவிடும்,'' என்கிற அவர் மேலும் சொன்னார்.

‘பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இயங்கும் காவல் நிலையத்திடம் புகார் அளிக்கவேண்டும். குறிப்பிட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, அல்லது வழக்குப் பதிவு செய்யவில்லையென்றால், பாதிக்கப்பட்டவர்கள் அதோடு நிற்காமல்,  மேலதிகாரிகளிடம் அளிக்கலாம். டி.ஜி.பி, கலெக்டர் அலுவலகம் என்று அவர்கள் தங்கள் புகாரை எங்கும் எடுத்துச் செல்லத் தயங்கவேண்டியதில்லை. குறிப்பாக இதுபோன்ற இணையதள மிரட்டல்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதற்கென இயங்கும் பிரத்யேக சைபர் செல் இருக்கிறது,'' என்று சொன்னார் அவர்.

இது ஆன்லைனில் புகார் அளிக்க உதவும் லிங்க்: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0.

 இது இல்லாமல் காவலன் எஸ்.ஓ.எஸ்(kavalan SOS)  என்ற ஒரு செயலி மகளிருக்கு அவசரப் பிரச்னைகளில் உதவி செய்வதற்காக காவல்துறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பொள்ளாச்சி பிரச்சனையில், புகார் அளித்தவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி அவருக்கு ஆபத்து ஏற்படும் வண்ணம் காவல்துறை நடந்துகொண்டது உண்மைதான் தங்கையே.  இத்தகைய குற்றங்களில் குற்றம் இழைத்தவரைவிடவும், பாதிக்கப்பட்டவரைக் குற்றவாளியாக்கும் போக்கு நம் சமூகத்தில் உள்ளது. சென்னை உயர் நீதி மன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் எஸ். மீனாட்சியிடம் பேசினேன். ‘சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை மறைப்பது மட்டுமல்ல, அவர்களுக்கான பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும். இது தொடர்பான காவல்துறையின் அணுகுமுறையும் தலைகீழாக மாறினால்தான் முன்னேற்றம் ஏற்படும்'' என்றார் அவர். எல்லாம் சரி. ஆனால் உன்னை அசந்த நேரத்தில் படம் எடுத்தவனை புகார் செய்ய மறவாதே. இணைய தளத்தில் அவன் ஏற்றியதை அழிப்பது தொழில்நுட்பரீதியிலான போராட்டம் என்றால், இவனை முளையிலேயே அழிப்பது இன்னொரு பெண்ணுக்கு தொல்லை தராமல் காப்பது!      

(தகவல்கள் உதவி: விலாசினி)   

ஏப்ரல், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com