இட்லி டாக்டர்

உலகம் உன்னுடையது
இட்லி டாக்டர்
Published on

இட்லி ஏன் ஒரே வடிவத்தில் இருக்க வேண்டும். சதுரமாகவோ, நட்சத்திர வடிவிலோ இட்லி இருந்தால் என்ன? இட்லியில் வேறு சுவையையோ ஊட்டச்சத்தையோ ஏன் சேர்க்கக் கூடாது? சாதாரணமான கேள்விதான். ஆனால் இது நாள் வரை வேறு யாரும் ஏன் கேட்கவில்லை? இந்த கேள்வியும் அதற்கான முயற்சியும் தான் எட்டாம் வகுப்பு வரை படித்த கோவை இனியவனை டாக்டர் இனியவனாக மாற்றியிருக்கிறது.வட சென்னை எம்கேபி நகரிலுள்ள மல்லிப்பூ இட்லி அலுவலகத்திற்கு அந்திமழைக்காக இனியவனை சந்திக்க சென்ற போது விலாசம் கண்டுபிடிக்க கொஞ்சம் தடுமாறித்தான் போனோம். ஆனால் மல்லிப்பூ இட்லி என்றவுடன் அனைவரும் தெளிவாக வழி சொன்னார்கள். மேடை பேச்சாளரின் லாவகத்தோடு கணீரென்று உற்சாகமாக கோவை தமிழில் பேசத் தொடங்கினார் இனியவன்.

கோயமுத்தூரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த போதே இனியவன் பிரபலம் தான். சாய் பாபா காலனி ஆட்டோ ஸ்டேண்டில் இனியவனைத் தேடி வருபவர்கள் அதிகம். சரியான வாடகை, இனிமையான குணம் இவரது அடையாளம். ஆட்டோ சவாரிக்காக கையில் மாவு பாத்திரத்துடன் இவரின் ஆட்டோவில் ஒரு நாள் பயணித்தவர் தான் சந்திரா அம்மா. கோவையில் சிறிய அளவில் இட்லி வியாபாரம் செய்து வந்தவர். ஆட்டோவிலிருந்து இறங்கிய பின்னரும் அங்கேயே நின்று கொண்டிருந்தவரை ஏன் என்று விசாரித்திருக்கிறார் இனியவன். ‘இந்த பாத்திரத்தை முதல் மாடிக்கு கொண்டு போகணும். துணைக்கு ஆள் இல்லை, உதவ முடியுமா ?’ இவ்வளவுதானே, ஏன் யோசிக்கிறீங்க என்று பாத்திரத்தை கையில் தூக்கிய இனியவனுக்கு அன்று தெரியாது அவருடைய வாழ்கையின் முக்கியமான தருணம் அது என்று.ஏன், சந்திரா அம்மாவுக்கும் தெரியாது. சில எதிர்பாராத சந்திப்புகள் நம்மை எங்கெல்லாம் அழைத்துச் செல்லும் என்று யாரும் சொல்லி விட முடியாது தானே.

அன்றிலிருந்து தினமும் இட்லி மாவு அரைக்க கொண்டு போகவும், இட்லி சப்ளை செய்யவும் வாடிக்கையாளராகிப் போனார் இனியவன்.‘ சில நாட்கள்ல அரிசி களைய கொஞ்சம் லேட்டாகும். எனக்கு அடுத்த சவாரிக்கு லேட்டாயிடிச்சின்னு நானே அரிசி களைஞ்சி கொடுப்பேன். பிறகு நானே அவர்கள் சொல்லும் இடத்திற்கு சென்று அரைக்க கொடுத்துவிட்டு பின்னர் சவாரி முடித்து திரும்பி வரும்போது வாங்கி வந்து கொடுப்பேன். இப்படி அவர்களுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு எனக்கு நானே உதவிக்கொண்டேன். அன்னைக்கு அந்த வேலையை செய்யலைன்னா இந்த தொழில் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது இல்லியா?’ வறுமையான சூழ் நிலையில் வளர்ந்து எப்படியாவது நம்முடைய வாழ்கையில் வறுமையை விரட்ட வேண்டும் என்று முயன்று கொண்டிருந்த இவர், இட்லி தொழிலில் ஒரு அங்கமாக மாறிப்போனது ஆச்சரியமில்லைதான்.

‘1995 ல் 250 இட்லிகளை ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார்கள். இதை எப்படி அதிகப்படுத்துவது என்று யோசித்தேன். இட்லி சப்ளை செய்யப்போகும் வழியில் உள்ள ஹோட்டல்களுக்கு இரண்டு இரண்டு இட்லியாக சாம்பிள் கொடுத்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழி. இப்படி முயற்சி செய்ததில் நல்ல பலன் இருந்தது. ஒரே வருடத்தில் 250 இட்லி மூவாயிரமானது. அடுத்து திருமண நிகழ்சிகளுக்கு ஆர்டர் பிடிக்க ஆரம்பித்தோம். கோவை திருமண நிகழ்சிக்கு வந்திருந்த

அர்ச்சனா ஸ்வீட்ஸ் ஓனருக்கு எங்களுடைய இட்லி பிடித்துப் போய் எங்களை அழைத்தார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில் அப்போது அமையவுள்ள அவருடைய கேண்டீனுக்கு இட்லி சப்ளை செய்யச் சொல்லிக் கேட்டார்.கோவையிலிருந்து சென்னைக்கு அனுப்ப முடியாது. அதனால் சந்திரா அம்மா என்னை சென்னைக்கு சென்று கவனித்துக்கொள்ளுமாறு சொன்னார். சரின்னு சென்னை புறப்பட்டு வந்துட்டேன். இரண்டு வருடத்தில்  அந்த ஒப்பந்தம் முடிந்துபோனது. திரும்பவும் கோவைக்கு போனால் அங்கு எனக்கு வேலை எதுவுமில்லை. சந்திரா அம்மாவே, ஏன் நீ சென்னையில் தனியாக இதே போல வியாபாரம் செய்ய முடியாது? முயற்சி செய்து பார்க்கிறாயா என்று கேட்டார். திரும்பவும் 97 ல் 600 ரூபாயோடு சென்னை வந்து இறங்கினேன்.

சென்னை எழில் நகரில் முதன் முதலாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு அடுத்த நாள் இட்லி சாம்பிள் கொடுக்கும் வேலையை தொடங்கும் கனவில் உறங்கினேன். நல்ல மழை பெய்து கொண்டிருந்த அக்டோபர் இரவு. நடு இரவில் உடம்பின் குளிர்ச்சியை உணர்ந்து எழுந்து பார்க்கும் போது குடிசையில் பாதி தண்ணீர் நிறைந்திருந்தது. காலைக்குள் மாவு, பாத்திரம் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து போய்விட்டது.கையில் 300 ரூபாயுடன் பிளாட்பாரத்திற்கு வந்துவிட்டேன். வெள்ளம் வடியும் வரை 10 நாளாக பிளாட்பார வாசம் தான். கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. வெள்ளம் வடிந்த பிறகு கடைசி கையிருப்பில் திரும்பவும் இட்லி தயாரித்து ஹோட்டல்களுக்கு சாம்பிள் கொடுத்தேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபவனில் முதன் முதலாக 15 செட் இட்லி ஆர்டர் கிடைத்தது. எழில் நகரிலிருந்து இட்லி தயாரித்து 30 இட்லியை பஸ்ஸில் சென்று நுங்கம்பாக்கத்தில் சப்ளை செய்வதால் எதுவுமே மிஞ்சாது. ஆனால் 30 இட்லி 300 ஆகும் என்று எனக்கு தைரியமிருந்தது. அப்படியே நடக்கவும் செய்தது.

அடுத்து திருமண மண்டபங்களுக்கு ஆர்டர் பிடிக்க முயற்சி செய்தேன். சென்னையில் அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை. மொத்த கேட்டரிங் விடுபவர்களுக்கு தனியாக இட்லியை மட்டும் வாங்குவதா என்ற தயக்கம் இருந்தது. அதே மாதிரி அவர்களை சந்திக்கச் செல்லும் போது அவர்கள் வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால் சரியாக பேச முடியவில்லை. அதனால் இட்லி சேம்பிள்களை மட்டும் கொடுத்துவிட்டு விசிட்டிங் கார்ட் வாங்கி வந்து விடுவேன். பிறகு அஞ்சலட்டையில் என்னுடைய இட்லியை பற்றி குறிப்பு எழுதி தொடர்பு எண்ணை கொடுத்து அனுப்பத் தொடங்கினேன். நான் சந்திக்க விரும்பிய ஆட்கள் என்னை தொடர்பு கொள்ளத் தொடங்கினார்கள்.

இட்லியை ஒரு இடத்தில் தயாரித்து அதை மற்றொரு இடத்திற்கு சப்ளை செய்யும்போது ஆறிவிடுகிறது. திரும்பவும் ஆவியில் வைத்தால் சுவை குறைகிறது. அதனால் விசேஷம் நடக்கும் இடங்களுக்கே சென்று இட்லி தயாரிக்க முடிவு செய்தோம். முதல் முறை செய்யும்போது பதட்டமாக இருந்தது. ஒரு வாரம் அதற்கான தயாரிப்பு வேலைகளை செய்தோம். எந்த சின்ன பொருளை விட்டுச் சென்றாலும் பிரச்னைதான். ஆனால் இன்று ஒரு முகூர்த்த தினத்தில் 40 திருமண மண்டபங்களில் இட்லி தயாரித்து தருகிறோம். வருடத்திற்கு 1500 முதல் 2000 திருமண மற்றும் விஷேச நிகழ்ச்சிகள்.

எல்லாரும் இட்லி தருகிறார்கள். நம்முடைய இட்லி நன்றாக இருக்கிறது. சரி. அதற்கடுத்து?

மருத்துவர்கள் எந்த வித பிரச்சனைக்கும் பிரச்னைக்கு தக்கவாறு மருந்து கொடுப்பார்கள். ஆனால் உணவு மட்டும் மாறாது. இட்லிதான் முதலில். அப்படிப்பட்ட இட்லியை சத்துக்கள் நிறைந்ததாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. முதலில் இள நீர் இட்லியை அறிமுகப்படுத்தினேன். நல்ல வரவேற்பு. மதுரையில் மு.க.அழகிரி மகன் திருமணத்தில் கலைஞர் அதை சாப்பிட்டுவிட்டு பாராட்டியதாக சொன்னார்கள். மகிழ்ச்சி. பிரசன்னா- சினேகா, சிபிசத்யராஜ், பாண்டியராஜன் மகன் திருமணம் என்று அத்தனை பிரபலங்களின் விசேஷ நிகழ்சிகளுக்கும் இட்லி கொடுத்துள்ளோம்.

என்னுடைய குழந்தைக்கு பார்வையில் பிரச்னை என்று மருத்துவரை பார்க்க சென்றோம். கண்களுக்கு தேவையான காய்கறி உணவை அதிகமாக கொடுக்கச் சொன்னார்கள். ஆனால் அதை தனியாக கொடுத் தால் விரும்பிச் சாப்பிடவில்லை. அப்போது பீட்சா பிரபலமான நேரம். காய்கறிகளை இட்லியில் சேர்த்து கொடுத்தால் என்ன என்று யோசித்து பீட்சா இட்லியை தயாரித்தேன். இட்லி ஒரே வடிவத்தில் இருப்பதால் தான் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறது. அதனால் பல வடிவங்களில் பல சுவைகளில் இட்லி தயாரிக்க ஆரம்பித்தேன். என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். மற்றவர்களும் அப்படித்தானே.

இட்லிக்கான இவரது சேவையை பாராட்டி கிறிஸ்டியன் யுனிவர்சிட்டி 2013 ல் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துள்ளது. பத்திரிகைகளில் இவருடைய வெற்றிக் கதையை படித்த அண்ணா நகர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் இவரை பேச அழைத்திருக்கிறார்கள்.‘எட்டாவது வரை பள்ளி சென்றவன் நான். படித்தேன் என்று கூட சொல்ல முடியாது. அப்போதெல்லாம் பள்ளிக்குச் செல்வதே மதிய உணவிற்காகத்தான். அப்படிப்பட்ட என்னை கல்லூரியில் படித்த பெண்களுக்கு மத்தியில் பேச அழைத்த போது தயக்கமும், பயமும் இருந்தது. அங்கு நான் கடந்து வந்த பாதையை தயக்கமின்றி பேசினேன். உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இப்போது தன்னம்பிக்கை பேச்சாளராக பல இடங்களில் பேசுகிறேன்’ என்கிறார் இனியவன்.

இனியவன் கடந்த மார்ச் மாதம் 120 கிலோ ஒற்றை இட்லியை தயாரித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது உணவுத்திருவிழாவில் 1328 வகையான இட்லிகளைப் பார்த்து பாராட்டாதவர்களே கிடையாது. அதே உணவு விழாவில் இனியவனின் பிறந்த தினமான மார்ச் 30 ஐ உலக இட்லி தினமாகவும் அறிவித்துள்ளார்கள்.

இனி இட்லியை பற்றி நினைக்கும் போது இனியவனின் நினைவு வருவது தவிர்க்க முடியாதது.

மே, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com