கவியரசு கண்ணதாசனின் ‘மாலையிட்ட மங்கை‘ படத்துக்கான பாடல் பதிவு. டி.ஆர். மகாலிங்கம் - ஏ. பி. கோமளா இணைவில் ஒரு டூயட் பாடல். தற்செயலாக அந்தப் பக்கம் வந்த இசைச் சக்கரவர்த்தி ஜி. ராமநாதன் பாடல் பதிவைக் காண நேர்ந்தது. திகைப்பால் அதிர்ந்து போனார் அவர். காரணம்?
சாதாரணமாக ‘ஹை-பிட்சில்‘ அனாயாசமாக புரளும் டி.ஆர். மகாலிங்கத்தின் குரல் மிகவும் மிதமான மந்தரஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
‘என்னடா பண்ணறீங்க? மகாலிங்கத்தோட சாரீரமே உச்சஸ்தாயி சாரீரம். அவனைப் போய் இப்படி லோ பேஸ்லே பாடவைக்கறேளே? இது எடுபடுமா?’ தன்னை மறந்து கத்தி விட்டார் ஜி. ராமநாதன்.
‘எல்லாம் ஒரு மாறுதலுக்காகத்தான் பண்ணறோம்’ என்று அவரை சமாதானப் படுத்திவிட்டு பாடல் பதிவைத் தொடர்ந்தார் விஸ்வநாதன்.
‘நான் அன்றி யார் வருவார்‘ - ஆபோகி ராகத்தில் மயிலறகால் வருடுவதுபோல மென்மையாக மகாலிங்கத்தின் குரல் வருடியது. பாடலின் அமைப்பைக் கண்டதும் - பாடல் பதிவு முடிந்ததும் அசந்தே போனார் ஜி. ராமநாதன்.
‘மகாலிங்கத்தோட தலை எழுத்தையே மாத்திடீங்கடா’ என்று மனமார அந்த இரட்டையர்களைப் பாராட்டிவிட்டு நகர்ந்தார் அந்த இசைச் சக்கரவர்த்தி.
இயக்குனர் பீம்சிங்கின் ‘ப‘ வரிசைப் படங்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையர்கள் தந்த இசை இவர்களை வெற்றியின் உச்சாணிக் கொம்புக்கு உயர்த்தியது.
குலேபகாவலி, பணம் படைத்தவன், பெரிய இடத்துப் பெண், படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றிப்படங்களுக்கு இவர்கள் அமைத்த இசையை வெல்ல வேறு ஒருவர்தான் பிறந்து வரவேண்டும்.
இயக்குனர் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை என்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப் படங்களுக்கு இவர்கள் அமைத்த பாடல்கள் செந்தேனாக இனித்தன.
‘காத்திருந்த கண்கள்’ படத்துக்காக ஒரு துந்தனா, புல்லாங்குழல், வயலின் ஆகிய மூன்றே மூன்று வாத்தியங்களைப் பயன்படுத்தி சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலை மட்டுமே நம்பி இவர்கள் அமைத்த ‘ஓடம் நதியினிலே‘ பாடல் ஒரு சாதனைப் பாடல்.
‘கற்பகம்‘ படத்தில் அனைத்துப்பாடல்களையுமே பி. சுசீலா மட்டுமே பாடி இருப்பார்.
‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு‘ என்று வாலியின் ஒரு பாடல்.
இந்தப் பாடலின் சரணங்களில் இவர்கள் அமைத்திருக்கும் நகாசு வேலைகள் நம்மை அந்த உணர்வுகளை துல்லியமாக உணரவைக்கும்.
‘வயதில் வருவது ஏக்கம். அது வந்தால் வராது. ஊஹும்..... ‘ இந்த இடத்தில் அந்த ‘ஊஹும்‘ என்ற வார்த்தையை இவர்கள் அமைத்திருக்கும் அழகு ஒரு பெண்ணின் நாண உணர்வை நம்மை உணரச் செய்துவிடும்.
இப்படி ‘பணம்‘ படத்தில் தொடங்கிய இவர்கள் இணைவுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத் தது ‘சர்வர் சுந்தரம்‘.இருவரும் தனித்து இயங்கத் தொடங்கி விட்டனர்.
அந்த நேரத்தில் இவர்கள் பாசறையில் பயின்று வந்த இரு நண்பர்கள் இவர்களைப் போலவே இரட்டையர்களாக திரை உலகில் தங்கள் கால்களைப் பதிக்க ஆரம்பித்தனர். அவர்கள் ‘சங்கர் - கணேஷ்’.
பாலும் பழமும், ஆலயமணி, கர்ணன் ஆகிய படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் உதவியாளர்களாக இவர்கள் பணிபுரிந்தார்கள். இவர்களில் சங்கர் - மறைந்த இசை மேதை சி.ஆர். சுப்பராமனின் சொந்தத் தம்பி. கணேஷ் - ஜி. கே. வெங்கடேஷால் விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் வந்து சேர்ந்தவர்.
‘இந்தப் பசங்க கிட்டே ஏதோ பொறி இருக்கு’ என்று கணித்து அவர்களை அழைத்துச் சென்று சாண்டோ சின்னப்பா தேவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் கவியரசு கண்ணதாசன். அவர்களுக்கு தேவர் தனது தயாரிப்பான ‘மகராசி(1964)‘ படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்தப் படத்தில் இவர்கள் இசையில் பி.சுசீலா பாட கவியரசு கண்ணதாசனின் ‘ஆண் தொடாத கன்னிப்பெண்ணை நீர் தொடும்போது’ என்ற பாடல் ஹிட் பாடலானது.
‘அக்கா தங்கை’ ‘மாணவன்’, பெண் தெய்வம், கோமாதா என் குலமாதா, வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய தேவரின் படங்களில் இவர்கள் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்களின் நெஞ்சங்களை நிறைத்தன.
தேவரின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படத்தின் வெற்றி இவர்களைப் புகழேணியின் உச்சிக்கு கொண்டு சென்றது.
கிராமியப் பின்னணியில் இவர்கள் அமைத்த ‘பருத்தி எடுக்கையிலே’ பாடல் பெற்ற வெற்றி அபாரம்.‘பட்டிக்காட்டு ராஜா’ என்று ஒரு படம். சிவகுமார், ஜெயசுதா, கமலஹாசன், படாபட் ஜெயலட்சுமி நடித்த படம். இந்தப் படத்தில் இவர்கள் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்’ என்ற பாடலில் இவர்கள் கையாண்ட மேற்கத்திய இசைப்பாணி துள்ளல் ராகம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ பாடத்தில் இடம் பெற்ற ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’, ‘உனது விழியில் எனது பார்வை’ ஆகிய பாடல்களும் இணைப்பிசையும் குறிப்பிடத்தக்கவை. ‘இதயவீணை’ படத்தின் ‘பொன் அந்தி மாலைப்பொழுதை’யும், ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்’ பாடலையும் என்றுமே மறக்க முடியாதே. ‘பாலைவனச்சோலை’ படத்தின் ‘மேகமே மேகமே’ என்ற வாணி ஜெயராமின் பாடல் பெற்ற வெற்றி இன்றுவரை ஈடுசொல்ல முடியாத ஒன்று. இந்த இரட்டையர்களை திடீரென்று நேர்ந்த சங்கரின் மரணத்தால் மட்டுமே பிரிக்க முடிந்தது.
சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ராஜலட்சுமி திரை உலகில் வலம் வந்தார். இவர்கள் இசை அமைப்பில் வெளிவந்த ‘தரிசனம்’ படத்தில் இடம் பெற்ற டி.எம்.எஸ் - எல்.ஆர். ஈஸ்வரி பாடிய ‘இது மாலை நேரத்து மயக்கம்‘ பாடல் இன்றளவும் இவர்கள் பெயர் சொல்லும் பாடல். மேற்கொண்டு ஒன்றிரண்டு படங்களுடன் படவுலகுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கர்நாடக இசை மேடைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர் இவர்கள்.
(பி.ஜி.எஸ். மணியன் திரை இசை ஆய்வாளர்)
ஏப்ரல், 2015.