ஆல்பர் காமுவின் ஆவி

ஆல்பர் காமுவின் ஆவி

Published on

எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாம் என்பது மேற்குலகின் ஒரு நீண்டகால நடைமுறை. அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஹட்சனில் செயல்படும் Ledig House என்னும் உறைவிட முகாமில் கடந்த ஆண்டு தங்கிப் பணிபுரிவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அங்கே தங்கியிருந்தபோதுதான் எனது முதல் நாவலான நிழலின் தனிமையை எழுதினேன். அந்த முகாமில் அறிமுகமான எழுத்தாளர்களில் ஒருவர் பாஸ்கேல் கிராமர் (Pascale Kramer). பாரிசில் வாழும் சுவிட்சர்லாந்து பெண் எழுத்தாளர். பிரஞ்சில் இதுவரை 11 நாவல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் இரண்டு ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது.

சமகாலப் பிரஞ்சு எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் பாஸ்கேல் கிராமர் என்னுடைய நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகக் கடந்த ஜனவரியில் சென்னை வந்தார். அவருடன் வந்திருந்த காத்தரீன் போன்ட் என்னும் மற்றொரு பிரஞ்சு எழுத்தாளருடன் கிட்டத்தட்ட 10 நாள்கள் தமிழகத்தின் சில பகுதிகளுக்குச் சென்று வந்தேன். தமிழ் இலக்கியச் சூழல் குறித்து அறிந்த பாஸ்கேல் என்னை சுவிட்சர்லாந்தில் செயல்படும் எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாமொன்றில் கலந்துகொள்வதற்கு அழைத்தார். எனக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட பாஸ்கேல் கிராமருடன் கிட்டத்தட்ட ஒருவாரம்வரை பாரிசில் தங்கியிருந்தேன். மியூசியங்கள், கேலரிகள், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுடனான சந்திப்பு தவிர நின்று நிதானமாகப் பாரிசில் சுற்றக் கிடைத்த வாய்ப்பும் உறைவிட முகாமின்  இறுதியில்  மூன்று நாள்கள் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் சஞ்சாரம் செய்ததும் இப்போதும் ஒரு கனவு போலத்தான் தோன்றுகிறது.

பாஸ்கேலின் வீடு பாரிஸின் மையப் பகுதியில் St.German CA இல்  உள்ளது.  சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஷேன் நதி, 14ஆம் லூயி கட்டிய லூ அரண்மனை, எழுத்தாளர் எமிலி ஜோலா, சார்த்தர், சி மோன் த பூவா நினைவிடங்கள், ழான் ஜெனே வசித்த வீடு, வான்கோவின் ஓவியங்கள் உள்ள கேலரி, மொனே ஆர்ட் கேலரி, ஈபிள் கோபுரம் என புகழ்பெற்றவர்களின் சுவாசம் அலையும் தெருக்கள்.

ஒரு வாரத்திற்குள் பாரிஸ் முழுவதையும் ஒரு சுற்றுச் சுற்றிவந்துவிட வேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டேன். என் பயணத் திட்டத்தை பாஸ்கேல் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்ததால் அதில் குறுக்கிட விரும்பாமல் எனக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பதில் அக்கறை காட்டினேன். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். பாஸ்கேல் 11 மணிக்குத்தான் தயாராவார். அதற்குள் பாரிசை ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிடுவேன்.

கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தால் போதும் பாரிசில் கால்நடையாகவே எங்கும் சுற்றி வரலாம். அவ்வளவு எளிமையான நகர அமைப்பு. எல்லாச் சாலைகளிலும் நடைபாதைவாசிகளுக்கென்று தனியாகப் பிளாட்பாரங்கள் இருக்கின்றன. அனைத்துக் குறுக்குச் சாலைகளிலும் சிக்னல்கள் இருப்பதால் சாலைகளைக் கடப்பது மிக எளிது. மெட்ரோ ரயில் சர்வீசும் நகரப் பேருந்துகளும் பயணத்தை மிகச் சுலபமாக்கிவிடுகின்றன.  பஸ், ரயில் எல்லாவற்றுக்கும் ஒரே பயணச் சீட்டுத்தான். ஒரு பயணச் சீட்டைக்கொண்டு நாள் முழுவதும் பயணம் செய்ய முடிகிறது. டாக்சிகள் மிகக் குறைவு. மாநகர நிர்வாகம் டாக்சிகளை சாலையோரங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கிறது. எலக்ட்ரானிக் பூட்டுப்போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உரிய ஓட்டுனர் உரிமம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துக்கொண்டு போகலாம். மிகக் குறைந்த வாடகை. ஒரு வருடத்திற்கே 38 யூரோக்கள்தாம். எரிபொருள் செலவு தனி. பயணம் முடிந்த பிறகு அருகிலுள்ள எந்தவொரு பார்க்கிங் ஏரியாவில் வேண்டுமானாலும் நிறுத்திவிட்டுப் போய்விடலாம். சுவிட்சர்லாந்திலும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வசதிகள் இருப்பதால் தனியார் கார்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன. சுவிஸில் சாலைவிதிகள் பெரும்பாலும் நடைபாதைவாசிகளுக்குச் சாதகமானவை. வெள்ளைக்கோடுகளின் வழியே எப்போது வேண்டுமானாலும் சாலையைக் கடக்கலாம்.

சிக்னல்கள் இல்லை. விபத்து நடந்தால் அதற்கு ஓட்டுனரே பொறுப்பேற்க ண்டுமென்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கிறார்கள்.

ஐரோப்பியர்கள் காபிப் பிரியர்கள். நாளொன்றுக்கு ஆறேழு காபியாவது குடிக்கிறார்கள். சாலையோர பிளாட்பாரங்களில் சராசரியாக இருபதடிக்கு ஒரு காபிக்கடை இருக்கிறது. பிளாட்பாரங்களிலேயே டேபிள், சேர் போட்டு வைத்திருக்கிறார்கள். காபி, ரொட்டி, குக்கீஸ் வகையறாக்களைச் சாப்பிடுகிறார்கள், ஓயாமல் புகைபிடிக்கிறார்கள், சளைக்காமல் பேசுகிறார்கள். குடி நோயாளிகள் அதிகம் தென்படவில்லை. பாஸ்கேல் தான் பணிபுரியும் வீடற்றவர்களின் இல்லமொன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்தவர்களில் ஓரிருவர் குடிநோய் காரணமாகத் தெருவுக்கு வந்துவிட்டவர்கள். தொண்டு நிறுவனங்கள் அவர்களை மீட்டு இல்லங்களில் தங்க வைத்து குடிநோய்க்கு சிகிச்சை தருகின்றன. அத்தகையவர்களுக்கு அரசு மாதமொன்றுக்கு 300 யூரோவரை உதவித்தொகை வழங்குகிறது. அங்கே ஒரு அற்புதமான மொசைக் ஆர்ட்டிஸ்ட்டைச் சந்தித்தேன். ழான் மிச்சல் என்பது அவர் பெயர். தன் படைப்புக்களை எனக்குக் காட்டினார்.  அவர் சில காலம் தமிழகத்தில் தங்கியிருந்து ஒரு தனியார் பள்ளியில் பிரஞ்சு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருந்தாராம். என்னைப் பார்த்ததும் வணக்கம் எனத் தமிழில் சொன்னார். தமிழகத்திலிருந்து தான் எடுத்துச் சென்ற கைலியைப் பத்திரமாக வைத்திருந்தார். என்னைப் பார்த்ததும் ஓடோடிச் சென்று உடுத்துக்கொண்டு வந்தார். பாஸ்கேலுக்கு ஈபிள் கோபுரம் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட விருப்பம் இல்லை. தமிழகத்தில் ஈபிள் கோபுரம் எவ்வளவு புகழ் பெற்றது என்பதையும் பாரிஸ் வந்துவிட்டு அதைப் பார்க்காமல் போவது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது என்றதும் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டார். ஈபிள் கோபுரம் பகுதியில் சற்றிக்கொண்டிருந்த டூரிஸ்ட்டுகளிடையே சில தமிழர்களையும் சந்திக்க முடிந்தது. அதே போல வெர்சேய்ல்ஸ் அரண்மனையிலும் சில தமிழ் குடும்பங்களைச் சந்திக்க முடிந்தது.

பாரிசிலிருந்து எழுத்தாளர் முகாமுக்காக சுவிட்சர்லாந்திற்கு ரயில் பயணம். 600 கிலோ மீட்டரை நான்கு மணி நேரத்தில் கடந்தோம். சராசரியாக 200 கி.மீ. வேகம். உள்ளே உட்கார்ந்திருந்தபோது ரயில் அசைந்ததாகவே தெரியவில்லை. திடுதிப்பென்று லூசானே வந்து சேர்ந்துவிட்டோம்.  

எழுத்தாளர் முகாமில் டின்னர் டைம் மாலை 7.00 முதல் இரவு 11.00 மணிவரை நீடிக்கிறது. பகல் முழுவதும் எழுத்தாளர்கள் அவரவர் அறைகளில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள்.  டின்னரின்போது  விவாதங்கள் நடக்கும். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புக்கூட அந்தச் சமயத்தில்தான் கிடைக்கிறது. இந்த முகாமில் என்னோடு தங்கியிருந்தவர்களில் மூன்று பேர் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள். மூன்று பேருமே பெண்கள். (Mஞுடூடூடிண்ண்ச் கணூடிtஞிடச்ணூஞீ-க்கு, ஃடிணஞீச் இணூச்டுணஞுடூ-குஞிணிtடூச்ணஞீ, ஙூச்டிண அஞத -Nடிஞ்ஞுணூடிச்) நான்காமவர் (ஃச்ணூண் ஏதண்தட்) ஒரு டேனிஷ் நாவலாசிரியர். தமிழ் பற்றியோ, தமிழ் இலக்கியம் பற்றியோ அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.  தமிழுக்கு வந்துள்ள உலக இலக்கியம் பற்றி சொன்னபோது எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள்.

எனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் கதவில்   ஆல்பெர் காமுவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. பக்கத்து அறையின் கதவில் ஹெமிங்வேயின் பெயர். அந்த அறையில் உண்மையாகவே காமு தங்கியிருந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது எனக்குச் சில்லிட்டுவிட்டது. வரவேற்பறையில் பிக்கா

சோவின் அசல் ஓவியம். அதற்குக் கீழே சில பீங்கான் ஜாடிகள். அவற்றில் இருந்த ஓவியங்களைத் தீட்டியவர் பிக்காசோ என அறிந்தபோது எனக்குக் கை, கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. என்னுடன் இருந்த அமெரிக்கப் பெண் எழுத்தாளருக்கு ஜோதிடம், ஜாதகம், கடவுள், பேய் எல்லாவற்றின் மீதும் அதீத நம்பிக்கை. நான் நள்ளிரவில் எழுந்து சமையல்கூடத்திற்குப் போய் கொஞ்சம் காபி போட்டுக் குடித்துவிட்டு எழுதத் தொடங்குவேன். என் அறையிலிருந்து சமையல்கூடம் சுமார் ஐம்பதடி தூரம். தரையும் படிக்கட்டுகளும் ஓக் மரத்தால் இழைக்கப்பட்டிருந்தன. நடக்கும்போது தட்தட் எனச் சத்தம் வரும். நள்ளிரவில் நான் சமையல்கூடத்திற்கு நடக்கும்போது எழுந்த சத்தத்தைக் கேட்டு அந்த அமெரிக்க எழுத்தாளர் பயந்துபோய்விட்டார். 250 வருடப் பழமைகொண்ட அந்தக் கட்டடத்தில் ஆவிகளின் நடமாட்டம் இருக்கும் என அவர் நம்பினார். அன்றைய டின்னரின்போது அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம்.

ஹெமிங்வே, காப்கா, காமு, நபக்கோவ், ரில்கே எனப் புகழ் பெற்ற பல எழுத்தாளர்களின் ஆவிகள் அங்கேதான் நடமாடிக்கொண்டிருக்க வேண்டுமென்றார் அவர். டின்னர் முடிந்து என் அறைக்குத் திரும்பியபோது அது ஞாபகம் வந்தது. காமு இங்கேதான் இருப்பாரோ? ஒரு வகையில் அது பெரும் பேறுதான் அல்லவா? ஆனால் என்னதான் புகழ் பெற்ற ஆவியாக இருந்தாலும் ஆவி ஆவிதானே என்றும் தோன்றியது. நள்ளிரவு நேரங்களில் சமையல் கூடத்தில் தனி ஆளாக நின்று காபி போட்டுக்கொண்டிருக்கும்போது பின் கழுத்தில் காப்காவின் மூச்சுக் காற்றுப் படுவதுபோல் ஒரு கற்பனை தோன்றியதும் பயந்துவிட்டேன். பதற்றத்துடன் அறைக்குத் திரும்பினால் கட்டிலின் மீது சுருண்டு கிடக்கும் கனத்த போர்வை காப்காவாகத் தெரிகிறது என்ன செய்ய? 

அந்த உறைவிட முகாமை உருவாக்கியவர் புகழ் பெற்ற பதிப்பாளர். காமு, ஹெமிங்வேயின் புத்தகங்களைப் பதிப்பித்தவர். அவரது தாயார் புகழ் பெற்ற நாடக நடிகை. அவரது காலத்தில் அந்த மாளிகை கலைஞர்கள், எழுத்தாளர்கள் சங்கமிக்கும் இடமாக இருந்திருக்கிறது. உண்மையில் அது ஒரு சிறிய அரண்மனை(ஞிச்ண்tடூஞு). ஒவ்வொரு வருடமும் நான்கு பருவங்களில் சுமார் 40 எழுத்தாளர்கள் அங்கு வந்து தங்கிச் செல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய எழுத்தாளர்கள்தாம். உஷா ராஜகோபாலன் என்ற தமிழ் எழுத்தாளர் சென்ற வருடம் அந்த முகாமில் தங்கி பாரதி கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார். அந்தப் புத்தகம் அங்கே உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்ட அந்தப் புத்தகத்தை எடுத்து சக எழுத்தாளர்களிடம் காண்பித்தேன். எல்லோருக்கும் தாளமுடியாத ஆச்சரியம். தமிழ் இலக்கியச் சூழலைப்பற்றித் தெரிந்துகொள்வதில் அதற்குப் பிறகு அதிக அக்கறை காட்டினார்கள். முகாமில் இருந்தபோது மோர்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு சர்வதேசப் புத்தகச் சந்தைக்கும் இலக்கிய விழாவுக்கும் சென்றோம். சென்னைப் புத்தகச் சந்தையைவிட 50 மடங்கு சிறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய எழுத்தாளர்களைச் சந்திக்க அது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. பெரும்பாலானவர்கள் பிரஞ்சு எழுத்தாளர்கள். பிரஞ்சில் இத்தனை எழுத்தாளர்களா என்று கேட்டேன். அதற்கு ஒரு இளம் பிரஞ்சு எழுத்தாளர் “ஒரு காலத்தில் பாரிசில் குறைந்தபட்சம் நாற்பது உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவது இருப்பார்கள். இப்போது 20 பேர் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கையூட்டும் விதத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் குறைந்தபட்சம் 200 பேர்” என்றார்.  தமிழில் இதைவிட அதிகமானோர் இருக்கக்கூடும் எனத் தோன்றியது.

எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கொண்டாடும் நாடு பிரான்ஸ். டால்ஸ்டாய், தாஸ்த்தயேவ்ஸ்கி என நாம் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்கள் பாரிசுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் அடிக்கடி வந்து போயிருக்கிறார்கள். மோர்ஸில் ஒரு காசினோவைக் காட்டி அங்கு தாஸ்த்தயேவ்ஸ்கி பல முறை வந்திருப்பதாகவும் அதில் ரூலெட் ஆடியிருப்பதாகவும் சொன்னார்கள். நபக்கோவ் வாழ்ந்த வீட்டுக்குப் போனோம். டால்ஸ்டாய், தாஸ்த்தயேவ்ஸ்கி போன்றோர் அங்கு தங்கிச் சென்ற வீடு அது என்றார்கள். உடனடியாக என் ஷூவைக் கழட்டிவிட்டு வெறும் கால்களால் அந்த மண்ணைத் தீண்டினேன். வேறென்ன செய்ய?

நவம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com