உலகின் செல்வாக்கு மிக்க நூறு பேரில் ஒருவராக டைம் இதழால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர். நம்பெருமாள்சாமி. உலகின் மிகப்பெரிய கண் சிகிச்சை மையமாக வியந்து பார்க்கப்பட்டு பல மேலாண்மை நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட்டு வரும் பெருமைக்குரிய அரவிந்த் மருத்துவமனையின் தலைவர். அவரை மதுரையில் அந்திமழைக்காக சந்தித்தோம்.
டாக்டர் நம்பெருமாள் சாமியின் மேஜையில் இருந்த கணினி திரையில் வள்ளுவர் படத்துடன் குறள் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து வரும் போன் அழைப்புகளிடையே நம்மிடம் உற்சாகமாகப் பேசினார். இவருக்கு சொந்த ஊர் தேனி அருகே உள்ள அம்பாசமுத்திரம்.
“டாக்டர் வேங்கிடசாமி அரசு பணியிலிருந்து 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றவுடன் ‘இனிமே தான் நமக்கு நிறைய வேலை இருக்கிறது..’ என்றார். அப்போது அரசு டாக்டர்களாக இருந்த நானும் நாச்சியாரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேங்கிடசாமியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். எங்களுடன் டாக்டர்களான என் சகோதரி விஜயலட்சுமியும் அவர் கணவர் சீனிவாசனும் இணைந்து கொண்டனர். 1976-ம் ஆண்டு மதுரை அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் பதினோரு படுக்கை கொண்ட ‘அரவிந்த் ஐ கிளினிக்’ கைத் தொடங்கினோம்.
டாக்டர் வேங்கிடசாமி தலைமையில் சீனியர் டாக்டர்கள் நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். ஆனால் நர்ஸ்கள் வேண்டுமே? பயிற்சி பெற்ற நர்ஸ் நியமிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு டாக்டர்கள் சம்பளத்தில் எழுபத்தைந்து சதவீதம் தரவேண்டும். என்ன செய்வது என யோசித் தோம். கிராமப்புறங்களில் பிளஸ் 2 முடித்து மருத்துவச்
சேவை செய்ய ஆர்வமாக இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சியளித்தோம். பயிற்சியின் போது அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் அவர்களை நியமித்தோம்” என்று ஆரம்பகட்டத்தை விவரித்தார் நம்பெருமாள்சாமி.
“நர்ஸ்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ப-தால் கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களிடம் பரிவுடன் நடந்து கொண்டார்கள். இயல்-பாகப் பழகினார்கள். இது சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நிறைவைத் தந்தது. சிகிச்சையில் திருப்தி-யடைந்த நோயாளிகள் மருத்துவமனையின் சிறப்பை வெளியே சொன்னதன் விளைவாக மக்கள் எங்களைத் தேடி வர ஆரம்பித்தார்கள்” என்கிறார்.
அரவிந்த்மருத்துவமனையின் முக்கியமான சேவை குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் கண் அறுவை சிகிச்சை செய்வதுதான். இது எப்படி?
'கண் சிகிச்சைக்காக வருபவர்களில் 80 சதவீதம் பேர் கண்புரை நோய் அறுவைச் சிகிச்சைக்காக வருபவர்கள். அந்த அறுவைச் சிகிச்சை செய்தபின்னர் கண்ணுக்குள் வைக்கும் ‘இன்ட்ராகுலர் லென்ஸ்‘ அப்போது நூறு டாலருக்கு விற்றது. ஏழைகளால் நினைத்துக் கூட பார்க்கமுடியாத விலை அது.. அந்த லென்ஸை குறைந்த விலையில் நாம் தயாரித்தால் என்ன என்று யோசித்--தோம். அதே மெட்டீரியல், அதே தரத்துடன் உலகத் தரச்சான்றோடு அந்த லென்ஸை மூன்று டாலருக்கு 1992-ல் தயாரித்தோம். இது இந்தியாவில் கண் மருத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது” என்கிறார் டாக்டர் நம்பெருமாள் சாமி.
இன்றைக்கு இருபது ஏக்கர் பரப்பளவில் ‘ஆரோ லேப்’ என்ற பெயரில் இந்த லென்ஸ் தயாரிப்புத் தொழிற்சாலை மதுரை அருகே செயல்பட்டு வருகிறது. பல்வேறு உலக நாடுகளுக்கு இந்த லென்ஸ் ஏற்றுமதி ஆகிறது. உலக அளவில் இந்த லென்ஸை பயன்படுத்துவோர் பத்து சதவீதம் பேர். சுமார் ஒரு கோடி பேர் ‘ஆரோ லென்ஸ்’ மூலம் உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்!
“தற்போதும் ஆண்டுக்கு இரண்டாயிரம் கண் மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம். தினமும் ஏழாயிரம் பேர் எங்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்.” என்று தகவல் தரும் இவர், “ எங்கள் பயணம் இன்னும் வெகுதூரம் இருக்கிறது. தமிழகத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களில் ஏழு சதவீதம் பேர் தான் சிகிச்சைக்கு தங்களை உட்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பணி இருக்கிறது” என்கிறார்.
இதற்காக ஐம்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமங்களில் சிறிய அளவிலான சிகிச்சை மையத்தை தொடங்கி இருக்கிறார்கள். அங்கு பயிற்சி பெற்ற நர்சுகள் இருப்பார்கள். சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அவர்கள் அடிப்படை மருத்துவ பரிசோதனைகளைச் செய்வார்கள். பின்னர் அந்த ரிப்போர்ட்டை வைத்து இங்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கேட்பார்கள்.
ஆண்டிப்பட்டியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுவதை நம்மிடம் காண்பித்து விளக்குகிறார் நம்பெருமாள்சாமி. “ இதனால் நோயாளிகள் இங்கு வருவதற்கான போக்குவரத்துச் செலவு, அலைச்சல் எல்லாம் மிச்சம். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த முறையைத் தொடங்கியது நாங்கள்தான். இன்றைக்கு இதுபோல நாற்பத்தோரு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டாண்டுகளில் சென்னையிலும் எங்கள் சேவையை தொடங்கவுள்ளோம்” என்கிறார் பெருமையாக.
கடந்தாண்டு (ஏப்ரல் 2011-மார்ச் 2012) 3 லட்சத்து 49 ஆயிரத்து 274 பேருக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்துள்ளது அரவிந்த் மருத்துவமனை. அதாவது இவ்வளவு பேருக்கு பார்வையைத் திருப்பித் தந்திருக்கிறார்கள்! இதில் ஒருலட்சத்து எழுபத்தொன்பதாயிரம் அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டவை!
“தற்போது ஆண்டுக்கு சுமார் மூன்றரை லட்சம் அறுவைச் சிகிச்சைகள் செய்கிறோம். ஆண்டுக்கு பத்து லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. பார்வை நிறைந்த இந்தியா எங்கள் கனவு.” என்று நிறைவாகச் சொல்கிறார் டாக்டர் நம்பெருமாள் சாமி!.
அக்டோபர், 2012.