ஆண்களுக்கான சமத்துவம் இருப்பதாக நம்மை நம்ப வைத்துக்கொண்டிருக்கின்ற அமெரிக்காவில் உள்ள சினிமாத் துறையில்கூட பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவுதான். தமிழ்சினிமாவை மட்டும் எடுத்துக்கொண்டால் ஒரு நான்கைந்து பிரிவுகளில் மட்டுமே பெண்கள் வேலை பார்க்கிறார்கள். நடிப்பு, சிகை அலங்காரம், ஆடை வடிவமைப்பு, நடனம் போன்றவற்றில் இருக்கிறார்கள். இதை தவிர்த்து டைரக்ஷனில் இப்போது நிறைய பெண் உதவி இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் ஆண் இயக்குநர்கள்கூட ஒரு பெண் உதவி இயக்குநர் இருந்தால் அவர்களை நம்பி பொறுப்பாக சில விஷயங்களை விடலாம். செயல்படுவார்கள் என்று கருதுகிறார்கள். நடனத்துறையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் இருக்கிறார்கள் எனலாம்.
சரி... இப்போது உதவி இயக்குநர்களாக இருக்கும் பெண்கள் எல்லோரும் இயக்குநர்களாக ஆகிறார்களா என்றால் இல்லை. அவர்களுக்கு அந்த மாதிரி குறிக்கோள் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. ஒரு சிலபேர்தான் நான் கதை பண்ணியிருக்கேன். படம் எடுக் கணும். கேளுங்க என்று வருகிறார்கள்.. நிறைய பேருக்கு திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டு விலகிவிடுகிறார்கள். திரும்பவும் சிலர் வந்தாலும் வேறு தயாரிப்பு பிரிவுகளில் வருகிறார்கள். ஆனால் இப்போதிருக்கும் நிலைமை பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட எவ்வளவோ முன்னேறியிருக்கிறது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். முன்பிருந்த விலக்கம், தயக்கம் இல்லை. நிறைய குடும்பங்கள் திரைப்படத்துறைக்கு பெண்களை அனுப்பத் தயங்குவது குறைந்துள்ளது.
எடிட்டிங், சவுண்ட் எஞ்சினியரிங் ஆகியவற்றில் பெண்கள் குறைவே. டைரக்ஷன் மீது இருக்கும் கவர்ச்சி, மற்ற துறைகளில் இல்லை. காரணம் அங்கீகாரம்தான். இதனால்தான் அவர்கள் டைரக்ஷன் என்கிற துறையைத் தெரிவு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். பணம் மட்டும்தான் தேவை என்றால் டைரக்ஷன் பக்கம் வரத் தேவை இல்லை. டைரக்டராக மிகப்பெரிய அளவில் பணம் செய்யமுடியும் என்று நிருபித்தவர்கள் பராக்கான், அஞ்சலிமேனன் போன்ற வெகு சிலர்தான். பெரும்பாலானவர்கள் தன்னுடைய படம் பேசப்படணும் என்று நினைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். புகழா பணமா என்றால் பெண்கள் புகழைத் தேர்வு செய்கிறார்கள், இங்கேயே அவர்கள் என்ன மாதிரியான படங்களை எடுப்பார்கள் என்பது தீர்மானமாகி விடுகிறது.
பெண்ணுக்கு குடும்பச் சுமை என்ற ஒன்று உள்ளது. இதைச் சமாளித்து வேலைக்கு வரவேண்டும். எல்லாத்துறைக்கும் உள்ள நிலைதான் இது. கல்யாணம் ஆகிறவரைக்கும் தான் பெண்ணுக்கு ஓய்வு. திருமணம் ஆகிவிட்டால் அவளுக்கு வேலைகள் அதிகரித்துவிடுகின்றன. ஒரு இயக்குநராக, படைப்பாளியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு தேவையான விஷயங்கள் அவரே வலிய போய் தேடினால் ஒழிய கிடைக்காது. அதுவும் பொருளாதார ரீதியாக வலிமையான அடித் தளம் இல்லாத பெண்ணுக்கு அவர்கள் டைரக்ஷன் செய்யும் நிலையை எட்டுவது மிகவும் தள்ளிப்போகிறது. இதுவும் பெண் இயக்குநர்கள் எண்ணிக்கை குறைய காரணம்.
எடிட்டிங், சவுண்ட் எஞ்சினியரிங், ஒளிப்பதிவு போன்ற துறைகளில் பெண்கள் அதிகம் வராததற்குக் காரணம் வேலை நேரம் நீளமாக இருப்பதே. பவுசியா, ப்ரீத்தி போன்ற அபூர்வமான திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களும் அரும்பெரும் பங்களிப்பு எதுவும் செய்யவில்லை. எல்லோரும் செய்திருப்பதற்குச் சமமாகத்தான் இவங்களும் செய்திருக்கிறார்கள். இதை மீறி செய்ய அவர்களுக்கு வாய்ப்புகள் தேவை. பிசி ஸ்ரீராம் சாரைப் பார்த்தா தெரியும். அவர் ஒரு பித்து நிலையில் பணி புரிவார். படப்பிடிப்பின் போது அவர் தனக்குத் தேவையான கோணத்தை, காட்சியைப் படம்பிடிக்க ரொம்ப மெனக்கெடுவார். அதுபோல் தன்னையொரு பித்து நிலையில் தள்ளிக்கொள்ள எந்த பெண் ஒளிப்பதிவாளரும் விரும்புவதாக எனக்குத் தெரியவில்லை. பாலுமகேந்திரா சாரும் அப்படித்தான். ஒரு மூவ்மெண்டுக்காக, கோணத்துக்காக கடுமையாக உழைப்பார். அதுதான் அவர்கள் பிரகாசிக்க காரணம். அந்த சிரமத்தை ஏற்க எந்த பெண் ஒளிப்பதிவாளரும் தயாராக இல்லை. அத்தோடு பெண்களுக்குக் கிடைக்கும் படங்கள் சின்ன பட்ஜெட்டாக இருக்கும்.
சின்ன பட்ஜெட் என்பதால் ஒளிப்பதிவாளர்கள் டைம் எடுத்துக்கவும் முடியாது. குறிப்பிட்ட நாட்களுக்குள், பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பார்கள். இந்த விஷயமும் மாறணும் என்று நினைக்கிறேன். ஓவியத்துறையில் எவ்வளவோ பெண்கள் ஆண்களைவிட சிறப்பாக பிரகாசிக் கிறார்கள். அதே அளவு ஒளிப்பதிவுத்துறையிலும் பெண்கள் வர சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் பட்ஜெட் என்ற அம்சத்தில் கையைக்கட்டி வெச்சிருக்கோம். அத்துடன் நான் நானாகவே இருப்பேன் என்று இருக்கக்கூடிய சுதந்தரம் படப்பிடிப்பின்போது பெண்ணுக்கு இருப்பதில்லை. ஓவியருக்கும் பாடகிக்கும் கிடைக்கும் சுதந்தர உணர்வு கிடைப்பதில்லை. இது கிடைத்தால் ஒரு ராஜா சார் மாதிரி, ஒரு பிசி சார் மாதிரி கலைஞர்கள் பெண்களிடமிருந்தும் வருவாங்க.
எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் இரு பெண்பாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். வழக்கு எண் படத்தில் வரும் எல்லா பாத்திரங்களும் நல்ல புரிதலுடன் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றவையாகவே எனக்குப் பட்டன. அந்த வேலைக்கார பெண்ணின் அம்மா, கோபம் தெரியும் முகத்துடன் இருப்பாங்க. தனியாக வாழும் அம்மாவின் பதைப்பு முகத்தில் இருக்கும். அவ்ளோ ஏழ்மையிலும் நேர்மையாக இருக்கத் துடிக்கும் பாத்திரம். அந்த மாதிரி நிறைய பெண் பாத்திரங்களை உண்மைத் தன்மையுடன் சித்திரிக்கும் வாய்ப்பு சமீபகாலமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சி. இது இலக்கியத்தின் தாக்கம் என்று கருதுகிறேன். 70, 80களில் ஒரு சிலரைத் தவிர யாருக்கும் இலக்கியத் தொடர்பு இல்லை. அத்துடன் அவங்க மேற்கத்திய, வடக்கத்திய படங்களைத்தான் காப்பி அடித்தனர். அதனால்தான் நம் கதாநாயகிகளுக்கு பழக்கமே இல்லாத குட்டைப்பாவாடைகள் வந்தன. பாபி படத்தில் டிம்பிள் கபாடியா போட்டிருந்த குட்டைப்பாவாடையை நான் இங்கேயும் உடனே பார்த்தேன். ஆக அப்படி சினிமாவைப் பார்த்து சினிமா எடுத்த காலம் போய், இலக்கியத்தைப் பார்த்து, என்னுடைய வாழ்க்கையைப் பார்த்து நான் சினிமா எடுப்பேன்னு வந்திருக்கும் ஒரு தலைமுறை இங்கே இருக்கிறது. இது ஏற்கெனவே மலையாளம், வங்கத்தில் இருந்தது. இந்தியில் ஒரு சாரார் பண்ணிட்டு இருந்தாங்க. நமக்கு மிகவும் விரல்விட்டு எண்ணகூடியவர்கள்தான் இருந்தார்கள்.
எப்போதுமே சினிமாவில் ஜனரஞ்சக படம், சிந்திக்கக் கூடிய மக்களுக்கான படங்கள் என்று இரண்டும் இருக்கின்றன. வெற்றி பெற்ற ஜனரஞ்சகப் படங்களில் இருக்கும் பெண் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். கஜினியில் அசின், தனி ஒருவனில் நயன்தாரா செய்த பாத்திரங்கள் போன்றவை மிகவும் வலிமையானவை. மக்கள் அதிகம் ஆதரிக்கும் குட்டைப்பாவாடை போடும் ஹீரோயின்கூட நல்ல பாத்திரமாக இருந்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பாகுபலி ஒரு முழுமையான வணிகப்படம். ஆனால் அதில் இருக்கும் பெண் பாத்திரங்கள் எல்லாமே மிக வலிமையானவை. ஆண் பாத்திரங்களை விட வலுவானவை. வணிகப்படம் பண்ணும் இயக்குநர்கள்கூட பெண்ணுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என புரிந்துகொண்டிருக்கிறார்கள். இது புரியாத இயக்குநர்கள் அந்த அளவுக்கு சோபிக்கறதில்லை.
பெண்னை காட்சிப்பொருளாகத்தான் நம் சமூகம் பார்க்கிறது. பெண் வெறும் உடல் மட்டும் அல்ல என்று புரியவைக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு என்னால் மிக நன்றாக நடிக்க முடியும்.ஆனால் என்னை மையப்பாத்திரமாக வைத்துப் படம் பண்ணும் இயக்குநர்கள் இல்லை. அவங்க புதிய, இளம் நடிகைகளை மையப்பாத்திரமாக வைத்துப் படம் பண்ணினால்தான் மக்கள் பார்ப்பாங்கன்னும் நினைக்கிறாங்க. நயன்தாராவுக்கு நிறைய படங்கள் கிடைக்கறதுக்குக் காரணம் அவங்க நல்லா நடிக்கிறாங்க என்பது நாற்பது சதவீதக் காரணமே. அவர் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார் என்பதுதான் முதல் காரணம். அதே சமயம் நித்யா மேனன் அவங்களைவிட நல்லா நடிக்கிறவங்க. ஆனால் தான் சைஸ் சீரோவில் இருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. ஒரு இயக்குநர் நீங்க குண்டா இருக்கீங்க. கொஞ்சம் உடம்பைக் குறைத்தால் நல்லது என்று கேட்டபோது அவர், நான் இப்படித்தான் இருப்பேன். நீங்க வேண்டுமானால் ஒல்லியாக இருக்கும் ஒரு நாயகியைப் பயன்படுத்தலாமே என்று சொல்லிவிட்டார். ஏன் இப்படி பூசினாற்போல் உடலுடன் பெண் இல்லையா என்று அவர் கேட்கிறார்.
இந்த இடத்தில் அழகான, சைஸ் ஜீரோ பெண் இருந்தால்தான் நாம் போட்டிருக்கிற கோடிக்கணக்கான பணம் திரும்பவரும் என்று நினைப்பதால்தான் இந்த நிலை.
பொதுவாகவே பெண் இயக்குநருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம். என்னால் கூட வணிகத்திரைப்படம் பண்ண முடியும். ஆனால் என்னுடைய வாழ்நாளில் இந்திய திரைப்படத்தில் மாறுதல் கொண்டுவர என்ன செய்யமுடியும் என்று நினைத்து அதற்கான இயக்கத்தில் இருக்கிறேன். இப்போது பிராந்திய படங்களுக்கு சர்வதேச சந்தை இருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த சந்தையில் எந்த மாதிரியான திரைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் நான் இயக்கும் படங்கள் அமைகின்றன. அங்கே அஞ்சான், ஜில்லா ஓடாது.
அங்கே காக்காமுட்டையும், குற்றம் கடிதலும் விசாரணையும் நான் இயக்கும் அப்பாவின் மீசையும் ஓடும்.
ஒரு நடிகையாக மைண்ட்லெஸ் கிளாமர் பாத்திரம் பண்றதுக்குப் பதிலா வீட்டில் சும்மா இருக்கலாம் அல்லது டப்பிங் பேசலாம் என்று முடிவெடுக்கக்கூடிய சுதந்திரம் எனக்கு இருந்தது.
திரையுலகில்பெண்கள்தங்கள்கருத்தைநிறுவவேண்டுமெனில்குரல்உயர்த்தவேண்டிஉள்ளது. ஆண்கள்உழைப்பைவிடபெண்களின்உழைப்பு 100 மடங்குஅதிகமாகஇருந்தால்தான்வெற்றிபெறமுடியும். இதுஓட்டப்பந்தயத்தில்காலில்இரும்புக்குண்டுகட்டிவிட்டுஓடச்சொல்றமாதிரி. இதில்இரும்புக்குண்டுஎன்பதுகுடும்பச்சுமை. அதேசமயம்ஆண்களுக்குக்கிடைக்கும்பயிற்சியில்பாதிதான்கிடைக்கிறது. இதில்ஓடிஜெயிங்க, பார்க்கலாம்என்றுஎங்களைப்பார்த்துச்சொல்லப்படுகிறது. அந்தநிலையில்தான்பெண்களாகியநாங்கள்இருக்கிறோம்.(நமதுசெய்தியாளரிடம்கூறியதில்இருந்து)
மார்ச், 2016.