ஆக்டோபஸ் ஆசிரியை

இணையத்தில் என்ன பார்க்கலாம்?  
ஆக்டோபஸ் ஆசிரியை
Published on

நாய், பூனை, குதிரை, யானை,டால்பின் என்று எண்ணற்ற உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பிணைப்பை கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் சிங்கம், புலிகள் கூட அரிதாக மனிதர்களுடன் பழகும் காட்சிகள் உண்டு. ஆனால் கடலில் வாழும் ஆக்டோபஸ், அதனுடைய உலகத்திற்குள் மனிதன் ஒருவனை அனுமதித்து அவனுடன் தொட்டு விளையாடும் நிகழ்வுகள், இதுவரை கேள்விப்படாதவை.

அப்படிப்பட்ட நிகழ்வு ஓர் அழகான காதல் கதையைப்போல, ‘மை ஆக்டோபஸ் டீச்சர்'  என்ற பெயரில் ஆவணப் படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படம், சென்ற ஆண்டிற்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கடைக்கோடியில் ராட்சத அலையடிக்கும் கடலைப் பார்த்தமாதிரியான வீடு, கிரெக் பாஸ்டர் என்பவருடையது. சிறுவயதில் கடலில் மூழ்கி விளையாடும் கிரெக், பின்னாட்களில் அதை மறந்தும் விடுகிறார். நடுத்தர வயதில் வேலை, குடும்பச்சுமைகளின் அழுத்தம் தாங்காமல் மன விடுதலைக்காக மீண்டும் கடலில் இறங்குகிறார். அவருடைய வீட்டை ஒட்டியுள்ள கடலில், கெல்ப் காடு என்றழைக்கப்படும் ஓர் அழகான கடல் பகுதியிருக்கிறது. கடலுக்குள் மரங்களும் செடிகளும் வளர்ந்து, நீச்சலடிப்பதை காட்டின் மேல் பறப்பதைப் போல உணரச் செய்கிறது. கடல் வாழ் உயிரினங்களும் செடி கொடிகளும் சூழ்ந்த அந்த கடல்பகுதி, பத்து டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலை கொண்ட குளிரானது; ஆபத்தானதும் கூட. மீண்டும் இந்தக் கடலில் இறங்குவதன் மூலம், தன்னுடைய மனதை திசை திருப்பிக் கொள்கிறார், கிரெக்.

தினமும் கடலுக்குள் சென்று அங்கிருக்கும் மீன்கள், நண்டுகள், ஜெல்லிகள் என்று பார்த்துவருபவருக்கு, ஒருநாள், இதுவரை பார்த்திராத வித்தியாசமான சங்குகளால் சுற்றப்பட்ட உருண்டையான ஓர் உருவம் தென்படுகிறது. அருகில் நெருங்கவும், சட்டென  சங்குகளை உதறிவிட்டு தலை தெறிக்க ஓடுகிறது, பெண் ஆக்டோபஸ். மிகவும் எச்சரிக்கையாக, ஆபத்து ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன், தன்னுடைய வளைக்குள் சென்று பதுங்கிக் கொள்கிறது.

இந்த ஆக்டோபஸின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு தினமும் அதே கடல்பகுதிக்கு அதனைக் காணச் செல்கிறார், கிரெக். ஏறக்குறைய ஒரு மாதம்சென்ற பிறகு, மெதுவாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்குகிறது, அந்த ஆக்டோபஸ். இந்த மனிதனால் தனக்கு ஆபத்தில்லை என்ற முழுமையான நம்பிக்கைக்குப் பிறகு, மெதுவாகத் தன்னுடைய கைகளை நீட்டி கிரெக்கைத் தொடுகிறது. ‘என்னப்பா, இன்னிக்கும் வந்துட்டியா? வா.. இந்த பக்கம் போகலாம்!' என்பதுபோல கிரெக்குடன் நட்புறவைக் கொள்கிறது.

பைஜாமா சுறாக்கள் எனப்படும் சிறிய வகை சுறாக்களும் அந்தப் பகுதியில் நிறைய இருக்கின்றன. அவை ஆக்டோபஸ்களை வேட்டையாடக் கூடியவை. இந்த வகை சுறாக்களுக்கு, பார்வைத் திறன் இல்லை. வாசனையை முகர்ந்தே வேட்டையாடுகின்றன. அப்படி ஒரு முறை சுறா துரத்தும்போது, இந்த ஆக்டோபஸ் இலைகளால் தன்னை மூடிக் கொள்கிறது. சில சமயங்களில் சங்கு, சிப்பிகளால் உடலை மூடிக்கொண்டு முதன் முறை கிரெக் பார்த்ததைப்போல உருண்டையாகத் தன்னைக் கல் போல சுருட்டிக் கொள்கிறது. இருந்தும், வளைக்குள்ளிருக்கும் ஆக்டோபஸின் கரங்களில் ஒன்றை சுறா கடித்துப் பிய்த்துத் தின்பதை, கிரெக் பார்க்கிறார்.

சில தினங்களுக்கு வளைக்குள்ளேயே பதுங்கியிருக்கும் ஆக்டோபஸ், மெதுவாக வெளிவரத் துவங்குகிறது. காயம்பட்ட கரங்கள் வளரத் துவங்கியிருப்பதை பார்க்கிறார் கிரெக். ஆக்டோபஸ்கள் இரவில்தான் வேட்டியாடும் என்பதைப் படித்து அறிந்து கொள்பவர், இரவு நேரங்களில் கடலடிக்குச் செல்கிறார். மீன்களை புத்திசாலித்தனமாக வேட்டையாடும் ஆக்டோபஸ், நத்தை, நண்டு போன்றவற்றை, அதன் மிருதுவான பகுதியில் கச்சிதமாகத் துளையிட்டு உணவாக்குவதை ஆச்சர்யத்துடன் கவனிக்கிறார்.

மற்றொரு நாள் கிரெக் அந்த ஆக்டோபஸை காணச் செல்லும்போது மீண்டும் பைஜாமா சுறாக்கள் வருவதை கவனிக்கிறார். இந்த முறை எப்படித் தப்பிக்கப்போகிறது, அல்லது மாட்டிக்கொள்ளுமா? என்ற பதட்டத்துடன் அவர் கவனிக்கையில், துள்ளிப் பறந்து சென்று அந்த சுறாவின் முதுகில் அமர்ந்து கொள்கிறது, அந்த புத்திசாலி ஆக்டோபஸ். இதைவிட பாதுகாப்பான இடம் உண்டா என்ன? சுறா வளைந்து நெளிந்தும் பயனில்லை. தன்னுடைய வளையை நெருங்கும் ஒரு கணத்தில் மின்னலெனப் பாய்ந்து வளைக்குள் தன்னைச் சுருட்டிக் கொள்கிறது. சூழ்நிலைகளிலிருந்து விரைவாகப் பாடம் கற்றுக் கொள்ளும் அந்த ஆக்டோபஸை ஆச்சர்யத்துடன் கவனிக்கிறார், கிரெக்.

ஆக்டோபஸின் வாழ்நாள், ஏறக்குறைய ஓராண்டுகாலம் தான். இப்படி தினமும் அந்த ஆக்டோபஸைக் கண்டு அதனுடன் பழகிவரும் இவர், ஒரு முறை அபூர்வமாக இந்த ஆக்டோபஸ் உடன் இன்னொரு ஆக்டோபஸ் இணைந்திருப்பதைப் பார்க்கிறார். தொந்தரவு செய்யாமல் மனச்சோர்வுடன் திரும்பிவிடும் கிரெக், இதன் முடிவை அறிந்திருக்கிறார். இனப்பெருக்கத்தில் ஏராளமான முட்டையிடும் அந்த ஆக்டோபஸ், தன்னுடைய முழு சக்தியையும் முட்டைக்கும் அதன் பாதுகாப்பிற்குமே செலவழிக்கிறது.அதனால் சில நாட்களில் வெளிறி நைந்துபோய் காணப்படுகிறது. அடுத்த முறை சுறா வரும்போது ஓடி ஒளியவோ, தப்பிக்கவோ முயற்சி செய்யாமல், தன்னை அப்படியே ஒப்புக் கொடுக்கிறது. மிக எளிதாகக் கவ்விக் கொண்டு சுறா வளைந்தோடுகிறது. ஆக்டோபஸ் பற்றி இணையத்தில் தேடினால், இனப்பெருக்கத்திற்குப் பிறகு பெண் மட்டுமல்ல ஆணுமே இறந்துவிடும் என்று தான் தகவல் சொல்கிறது.

தன்னுடைய மகன் டாமுடன் அடுத்து வரும் காலங்களில் கடலுக்குச் செல்லும் கிரெக் மிகச் சிறிய, குட்டி ஆக்டோபஸ் ஒன்றினை காண்கிறார்கள். இது அந்த ஆக்டோபஸின் குட்டியாக இருக்கலாம். இதுவும் வளர்ந்து ஓராண்டில் தன்னுடைய வாழ்க்கைச் சுழற்சியை முடிக்கும்.

கடல் உயிரியுடன் மனிதனின் உறவை, அழகாகப் பதிவு செய்திருக்கும் இந்த ஆவணப் படத்தை பிப்பா எர்லிச்சும், ஜேம்ஸ் ரீடும் இயக்கியிருக்கிறார்கள். 2010இல் தொடங்கி பத்தாண்டுகள் படம் பிடித்திருக்கிறார்கள். கணவர் கிரெக்குடன் இணைந்து தயாரித்திருப்பவர், சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சூழலியல் பத்திரிகையாளர், சுவாதி தியாகராஜன் என்பது கூடுதல் தகவல். ஆஸ்கர் விருதுகளில் இன்னொரு தமிழ் பெயர்!

ஜூலை, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com