அவசரக் கால கடவுள்

சிலிக்கான் சிந்தனைகள்
அவசரக் கால கடவுள்
Published on

எவ்வளவு உக்கிரம்? எவ்வளவு வேகம்? இமயமலையின் சரிவில் கீழிறங்கி பாய்ந்துசென்ற வெள்ள நீரைக் காணும்போதெல்லாம் இயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதசக்தி எல்லாம் வெறும் தூசு என்று தோன்றுகிறது. அலக்நந்தாவும் மந்தாகினியும் சீறியதில் ஊர்கள், சாலைகள், பாலங்கள் காணாமல் போனதோடு உத்தர்கண்ட் மாநிலத்தில் பல்லாயிரம் உயிர்கள் காணாமல் போயிருக்கின்றன. இந்த பேரழிவை உயரமான சிவபெருமான் சிலை கழுத்தளவு பாய்ந்து செல்லும் ஆக்ரோஷமான நீரில் மூழ்கி இருக்கும் காட்சியுடனான ஒரு படம் தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டது.

ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் ஐடி என்று எழுதிக் கொண்டிருக்கிறாயே.. இந்த பேரழிவை உங்கள் ஐடி நுட்பத்தால் குறைத்திருக்கலாமே என்று நண்பர்கள் கேட்டார்கள். காடு மலையெங்கும் அணைகளும் கட்டடங்களும் கட்டி இயற்கையை அழித்தால் அது சீறுவதை  தகவல் தொழில்நுட்பம் என்ன செய்து தடுக்கும்?

ஆனால் இது வெறும் தகவல் தொழில்நுட்பம்தானே.. அதன் வேலையை ஒழுங்காகச் செய்திருக்க முடியும். ஒரு அணை உடைந்துவிட்டது; அல்லது ஒரு காட்டாறு சீறுகிறது என்றால் அது தொடங்கும் உயரமான பகுதிகளில் சென்சார்கள் பொருத்தியிருந்தால் கீழே வசிக்கும் மக்களுக்கு தப்பி ஓட பல நிமிடங்கள் முன்பே அபாய எச்சரிக்கை கொடுத்திருக்க முடியும்.  இதுபோன்ற பேரிடர்களில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். அவசரகால எச்சரிக்கைக்கு ஐடி தொழில்நுட்பம் மிக அருமையான ஒரு வழி. உதாரணத்துக்கு சின்னதாக ஒரு எஸ்.எம்.எஸ்! இமெயில், வாய்ஸ் போன்றவற்றின் மூலம் ஏராளமான பேரை குறுகிய நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும்.

பேரழிவுகளை நம்மால் முன்கூட்டியே கணிக்கமுடியாது. ஆனால் பேரழிவு நடக்கும்போது அதை உடனே கண்டுபிடித்துவிடும் தொழில்நுட்பங்களே இருக்கின்றன. அதன் பிரம்மாண்டம் எவ்வளவு, வேகம் எவ்வளவு, எந்த திசையில் செல்கிறது போன்றவற்றைக் கணித்துவிட முடியும்.  விரைவில் அபாய எச்சரிக்கை அளித்தால் இழப்பைக் குறைக்கலாம்.

இஸ்ரோவில்  பேரிடர் நிர்வாக உதவித் திட்டம் இருக்கிறது. விண்ணில் உள்ள சாட்டிலைட்கள் மூலம் படங்கள் எடுத்தல், தகவல் தொடர்பு தருதல் போன்றவற்றின் மூலம் அது உதவி செய்கிறது. உத்தரகாண்ட் பேரழிவிலும் வனங்களில் ஏற்பட்டிருக்கும் பேரழிவைக் கணிக்க செயற்கைக் கோளைத் தான் நாடவேண்டியிருக்கும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் எங்கெங்கு நிலச்சரிவு, எங்கெங்கு மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கூகுளில் ஒரு மேப்பாகப் போட்டிருக்கிறார்கள். எங்கே மக்களுக்கு மீட்பு முகாம் இருக்கிறது? எங்கே சாலை உடைந்துள்ளது? எங்கே சரி செய்துள்ளார்கள் எல்லாவற்றையும் கிளிக்கித் தெரிந்து கொள்ளலாம். யாரை மீட்பு முகாமில் தொடர்பு கொள்ளலாம் என்பதற்கு ஏதுவுவாக தொலைபேசி எண் வரைக்கும் போட்டிருக்கிறார்கள்.

http://www.google.org/crisissresponse என்றொரு இணைய தளத்தில் உலகில் எந்த பேரழிவு ஏற்பட்டாலும் அதைத் தொகுத்து உடனுக்குடன் பொதுமக்கள் உதவியுடன் தகவல்களைப் பார்க்கமுடியும். http://idisaster.wordpress.com/about/  என்கிற இந்த இணைய தளத்தில் பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் இணையம், சமூக வலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய தகவல்கள் கொடுக்கப் பட்டுள்ளன. கிம் ஸ்டீபன்ஸ் என்ற பெண்மணி இத்தளத்தில் எழுதுவதுடன் உ லகம் முழுக்க இது பற்றி உரைகளும் ஆற்றுகிறார்.

உத்தரகாண்டில் நடந்தது என்ன?

மலைகளுக்கிடையில் சிக்கிய மேகம் நகராமல் இறுகிப் போய் நீராக உடைந்து கொட்டும் ‘கிளவுட் பர்ஸ்ட்’ என்ற நிகழ்ச்சிதான். இஸ்ரோ செயற்கைக் கோள் போன்றவற்றை வைத்து இதையெல்லாம் சற்று முன்பாக எதிர்பார்த்திருக்கலாம். எச்சரிக்கை விடுத்திருக்கலாம்தான். இது பற்றி இன்னும் கூடுதலாக நிர்வாகத்தினர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இமயமலைப் பகுதியில் பயன்படுத்த வேண்டி ஒரு சென்சார் அமைப்பை ஆந்திராவில் கோதாவரி அறிவுப்பூங்காவில் உருவாக்கி வருகிறார்கள். ஆறுகளில் இந்த சூரிய ஒளியால் இயங்கும் சென்சார்களைப் பொருத்திவிட்டால் அவை சிக்னல்களை அனுப்பும். வெள்ள நிலவரத்தை

எல்சிடி மானிட்டர்களில் பார்த்துக் கொள்ளலாம். இதைப் பொருத்தும் திட்டம் உத்தரகாண்டில் செயல்படுத்தப் படும் நிலையில்தான் இந்த பேரழிவு.

சரி தமிழ்நாட்டுக்கு வருவோம். நம்மிடம் ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் தனிப்பட்ட பொதுமக்கள் தொடர்புசாதனமோ அல்லது இணைய தளமோ இருக்கிறதா? இல்லை. ஏதாவது பிரச்னை என்றால் பொதுமக்கள் கையில் இருக்கும்

செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப வசதி இருக்கிறதா?

இதற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு நமது செல்லில் இருந்து செய்தி அனுப்பி பதிவு செய்துகொண்டு அந்த  ஒரே எண் மூலம் ஏதாவது பேரழிவு என்றால் மக்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி உருவாக்கவேண்டும். இப்போதைக்கு அது முக்கியம் என்று நினைக்கிறேன். இத்துடன் பேரழிவுகள் பற்றிய தகவல்களைத் தர ஒரு முழுநேர இணையதளமும் தேவை. சுனாமி வந்தபின்னர் கிராமங்களில் பொது அறிவுப்பு மையங்கள் இருக்கின்றன. அதற்கான அமைப்பை நன்றாக உருவாக்கி வைத்துள்ளனர். அதே போல் வேறு எதாவது ஏற்பட்டால் தகவல்களை எல்லோருக்கும் சில நிமிடங்களில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

மக்களும் இணைய தளம், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்து தொடர்பில் இருப்பதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். அவசரமான நேரத்தில் அதுதான் இனி உதவப்போகிறது. மழை, புயல் இரண்டும் தான் நமக்குத் தெரிந்த பேரிடர். இது இல்லாமல் வேறு ஏதேனும் வந்தாலும் தயாராக இருக்கவேண்டும் அல்லவா?

ஜூலை, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com