அறையென்று அழைக்கப்பட்டாலும் அது அறையல்ல. ஐந்தாறு அறைகள். அதற்காக வீடென்றும் அழைக்க முடியாது. வீட்டிற்கான அடையாளங்கள் எதுவும் அங்கிருக்காது. வேண்டுமானால் கூடென்று சொல்லலாம். கூட்டிற்கான பிரதான நிபந்தனைகளில் ஒன்று அங்கு எங்கும் நாட்காட்டியோ... கடிகாரமோ இருக்கக்கூடாது. பிழைத்தலின் நிமித்தம் வேலைக்குப் போன பறவைகள் அந்தி சாயும் நேரத்தில் கூடு நோக்கி வரும். வேலைக்கு டிமிக்கி கொடுத்த பறவைகள் சில அறைகளில் உலவும்.. “உழைப்பை ஒழிப்போம்” என்கிற உன்னத தத்துவத்தை உயர்த்திப் பிடித்த ஓரிரு பறவைகள் கையில் கிடைத்த புத்தகங்களோடு மூலைகளில் முடங்கிக் கிடக்கும். பறந்த பறவைகள் ஒவ்வொன்றாக வர... ஐந்து ஐந்தரைக்கு மேல் சூடுபிடிக்கும் கூடு. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை டீ... சிகரெட் என பத்து மணி வரை நீளும் பேச்சு. சில வேளைகளில் பேச்சு விவாதங்களாகி பொறி பறக்கும்.
தேசிய இனப் பிரச்சனை தொடங்கி தெற்கு சூடான் வரைக்கும்...
ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கி இங்கிலாந்தின் இன்றைய நிலைப்பாடு வரைக்கும்..
பெரியார்... நீட்ஷே... அனுஷ்கா.. சமந்தா..
அம்பேத்கர்.. வள்ளலார்... நலன்... ரஞ்சித்...
ஹமாஸ்... எட்வேர்ட் செயித்...
நீயா நானா?.... அக்னிப்பார்வை...
மகாத்மா பூலே... ஓஷோ..
நயன்தாரா... ஜெயமோகன்..
விக்ரமாதித்யன்... கல்யாண்ஜி..
சாரு நிவேதிதா... சேலம் சிவராஜ் சித்த வைத்தியர்..
என எதுவும் மிச்சம் இருக்காது. மணி பத்தைத் தொடும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு உள்ளது நினைவுக்கு வரும்.
“அய்யய்யோ மாவு வாங்கீட்டுப் போகணும் மறந்துட்டேன்” எனக் கிளம்பும் ஒன்று.
“நாளைக்குக் காலைல எட்டு மணிக்கே செமினார்... கௌம்பறேன்” எனப் புறப்படும் மற்றொன்று.
“பஸ்ஸுக்கு பத்து ரூபா குடுங்க” என்றபடி ஜூட் விடும் வேறொன்று.
வாரத்தில் ஓரிரு நாட்கள் தமிழக மக்களது வளர்ச்சித் திட்டங்களை மனதில் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாடிக்கையாளராவதும் உண்டு. அந்த இரவுகள் மட்டும் சற்று நீளும். உறங்கும்வரை உடனிருப்பார் பண்ணைப்புரத்துக்காரர்.
இத்தனை ஜென்மங்களுக்கும் சேர்த்து யார் வீடு கொடுப்பார்கள்?
வீடு கேட்டுப் போகும்போதே அவன் வீட்டு
வாடகைக்கு ஆள் பிடிக்கிறானா அல்லது அவன் பெண்ணுக்கு மாப்பிளை பிடிக்கிறானா? என்கிற அளவுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொல்வார்கள். சாதி கேட்ட ஒரு வீட்டுக்காரனிடம் ஏன் உன் தங்கச்சியக் கட்டி வைக்கப் போறியா? என்று கேட்டது தப்பாம்.
ஆனால் அப்படிக் கேட்காத தெய்வப்பிறவிகளும் உண்டு. அதில் ஒன்றுதான் தங்க முருகன். எழுத்தாளர் என்று சொன்னதுமே மகிழ்ச்சி ஆகிவிட்டார் மனிதர்.
வாடகை? நாம் சொன்னதுதான்.
அட்வான்ஸ்? திருப்பிக் குடுக்கறதுதானே எவ்வளவு வேணும்ன்னாலும் குடுங்க என்றார். அப்போது அவருக்குத் தெரியாது வேலியோரமாய்ப் போய்க்கொண்டிருக்கிற டைனோசருக்கு அழைப்பு விடுக்கிறோம் என்பது.
அது ஒரு மே மாதக் காலைப் பொழுது. உச்சகட்டமாக நம் ஈழத்து மக்களைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த துயர் தலைவிரித்தாடிய நேரம். விபத்தொன்றில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுத்திருக்கும் என்னைப் பார்க்க அறைக்கு வருகிறார் தோழர் கொளத்தூர் மணி. மனமும் உடலும் ஒருசேர காயப்பட்டிருந்த எமக்கு ஒத்தடமாய் அமைகிறது அவரது வருகை. அறையில் அவரது பேச்சைக் கேட்டபடி ஏறக்குறைய இருபத்தி ஐந்து பேர்.
யாரும் எதிர்பாராமல் அந்த வேளையில் திடீரென வந்து நிற்கிறார் வீட்டின் “உரிமையாளர்”. கொளத்தூர் மணி தோழரை அறிமுகப்படுத்தி வைக்கிறோம். அமர்கிறார்...
சுற்றும் முற்றும் பார்க்கிறார்...
என்னடா நம்ம வீட்டில் இத்தனை பேர்.. அதுவும் சம்மணம் போட்டு அமர்ந்தபடி.. பொட்டலச் சோற்றை உண்டபடி... அப்போது இருந்தது அறையிலேயே ஓரிரு நாற்காலிதான். கொஞ்ச நேரம் பேசுவதைக் கேட்டிருந்துவிட்டு எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு என விடுவிடெனக் கிளம்பிப் போய்விடுகிறார்.
போச்சுடா.. இனி அடுத்த வீடு பார்க்க வேண்டீதுதான்... என எண்ணியபடி தோழர்களைப் பார்க்கிறேன்... அவர்களும் நமட்டுச் சிரிப்பை உதிர்க்கிறார்கள்... தோழரோடு தொடர்கிறது உரையாடல்.
தோழர் கொளத்தூர் மணி புறப்பட்டுச் சென்று அரை மணி நேரம் ஆகியிருக்கும். அறை வாயிலில் வந்து நிற்கிறது ஒரு மெட்டோடார். அதிலிருந்து இருவர் பத்து புத்தம் புதுச் சேர்கள்.. ஒரு கட்டில் என பல பொருட்களை இறக்குகிறார்கள். புரியாமல் பார்க்கிறோம்.
“வீட்டு ஓனர் தங்கமுருகன் இதை உங்களுக்கு இறக்கி வெச்சுட்டு வரச் சொன்னாருங்க..” என்கிறார் வண்டி ஓட்டி வந்தவர். இப்படித்தான் தொடங்கியது எங்களுக்கும் அவருக்குமான தோழமை. அதன் பிற்பாடு தொ.ப.வைப் பார்க்க திருநெல்வேலியா..? “உழைத்த களைப்பைப் போக்க” மூணாறா..? எங்கு
சென்றாலும் அவரும் எங்களுடன். அல்லது அவருடன் நாங்கள்.
நாங்கள் முதலில் குடிபுகும்போது அறையின் வாசலெங்கும் நத்தைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். கொஞ்சம் தேள்கள்... ஒரே ஒரு ஏழரை அடி பாம்பு. நத்தைகளும் தேள்களும் “இவனுக மத்தீல பொழைக்க முடியாதுடா சாமி” என வேறிடம் பார்த்துப் போக.. பாம்பு மட்டும் வழக்கமான அதனது வழித் தடத்தில். அதுவும் எங்களைக் கண்டு கொண்டதில்லை. நாங்களும் அவ்விதமே. அறையின் முன்புறம் முட்செடிகளோடு பத்துப் பதினைந்து செண்ட் காலியிடம். ஓரிரு மரங்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் தேன் சிட்டுகளின் கொஞ்சல் களும்.. அணில்களது குதூகலமும். மைனாக்களின் மயக்கும் குரல்களும் ஆரம்பித்து விடும். செம்பூத்தும், ரெட்டை வால் குருவியும் அவ்வப்போது வந்து போகும். சில நேரங்களில் மயில்களும். எழுந்து பார்த்து ரசித்துவிட்டு ஒண்ணுக்கூற்றிய கையோடு உறங்கப்போய் விடுவோம். அப்படித்தான் எங்கிருந்தோ வந்து சேர்ந்தது இரண்டு நாய்களும். ஒன்று விருமாண்டி... மற்றொன்று கருமாண்டி.. இந்த ரெண்டும் சைவத்தை மோந்துகூட பார்க்காது.
அறைத் தோழனின் திருமண வரவேற்பு.. அவர்களது மழலைகளின் பிறந்தநாள் விழாக்கள்... எல்லாமே அறையில் தூள் கிளப்பும்.
பொங்கல் வந்துவிட்டால் போதும்.. பட்டம்... கோலிகுண்டு... பம்பரம் என அந்த ஏரியாவே அல்லோலகல்லோலப் படும். போனமுறை ஜமாப் வேறு. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது எல்லோரது குடும்பங்களும் அறையில் ஒன்று கூடும். அப்போதெல்லாம் மதிவதனி, இலக்கியா, சூர்யா, தமிழினி, ஹர்ஷவர்த்னி, தமிழ்த்தென்றல், கோதை, கயல் நித்திலன், தமிழோவியா, சொற்கோ, யாழினி ஆதிரா என எண்ணற்ற சிறுவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் அறையை.
இடையில் விருந்தினர்கள் வருகையும் உண்டு. அப்படி யாராவது வரவேண்டும் என்று காத்திருப்போம் நாங்கள். அப்போதுதான் அறை கொஞ்சமாவது சுத்தமாகும். தோழர் மணிவண்ணனது விமானம் கோவையில் தரை இறங்கிய நாற்பத்தி ஐந்தாவது நிமிடம் அவரது வாகனம் எங்கள் வாசலில் வந்து நிற்கும். எப்போதாவது இயக்குநர் மகேந்திரன் அய்யா, சத்யராஜ், பாலா, முத்துக்குமார், அஜயன்பாலா என எம் நட்பு வட்டத்தினர் வந்து போவர்.
காம்ரேடுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலெக்ஸ் பால் மேனன் தொடங்கி கூடுதலாய் எம்மை நேசிக்கும் கூடுதல் பதிவாளர் செந்தமிழ்ச் செல்வன்..
உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கர், குமாரதேவன் தொடங்கி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் பிரபு, பாரி, கேரளத்தைச் சேர்ந்த நளினி ஜமீலா எனப் பலரின் பாதம் பட்டிருக்கிறது இந்த அறையில்.
சி.மோகன், யூமா வாசுகி, சிறீபதி பத்மநாபா, ஒடியன் லட்சுமணன் போன்ற இலக்கியவாதிகளிடமும் இந்த அறையில் இளைப்பாறுவோம்.
ஈழத்து உறவுகளான கருணாகரனுக்கும், காண்டீபனுக்கும் இது இன்னொரு தாய்வீடு. அமெரிக்காவில் அல்லல்பட்டாலும் தோழன் உலகனுக்கு இது உற்ற கூடு.
அறை என்பதைவிடவும் எங்கள் கம்யூன் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்க முடியும். வாடகையா? எல்லோரையும் காசு போடச் சொல்லி துண்டேந்திவிடுவோம். விழாக்களுக்கான செலவா? எல்லோருடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். ஒவ்வொருவரும் “சொந்த” வீட்டிற்காகத்தான் மெனக்கெடுவார்கள். ஆனால் இது தோழர்களுக்கென்றே ஒரு வீடு.. அதன் திருவிழாக்கள்... அதன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள்... என உணர்வுகளால் கட்டப்பட்ட கம்யூன் இது.
அறையின் முன்புறம் உள்ள வீடு தோழர் மகிமைநாதனுடையது. அவர் அந்தக் காலத்திலேயே தம் மகன்களுக்கு லெனின், இங்கர்சால், ரூசோ, சாரு மஜூம்தார் எனப் பெயர் சூட்டியவர். அவரது துணைவியோ அதற்கும் மேல். எந்த நேரம் எமக்கு எது தேவையென்றாலும் தயங்காமல் உதவி செய்வார். “தோழர்... நீங்க இருக்குறதுனால இங்க திருட்டு பயமே இல்லை.. ஏன்னா நீங்க விடிஞ்சாத்தானே தூங்கவே போறீங்க” என்பார் அந்த அறுபத்தி ஐந்து வயது அம்மா. வயதில் அவ்வளவு மூத்தவர் எம்மைத் “தோழர்” என்றழைப்பது மற்றவர்களது புருவங்களை ஆச்சர் யத்தில் உயர வைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாய் அறையின் அடித்தளமாக இருந்தது தோழர் பெத்து என்றழைக்கப்படும் சுரேஷின் உறவுதான். செடிகளைச் சுத்தம் செய்ய வேண்டுமா? ஜமாப் சொல்ல வேண்டுமா? மரம் நட வேண்டுமா? சீரியல் லைட் போட வேண்டுமா? உணவு தயாரிக்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டுமா? எதுவாயினும் தோழர் பெத்துவின் படை வந்து இறங்கிவிடும்.
இப்படி சீரும் சிறப்புமாய் சிலாகித்த அறையைக் காலி செய்ய வேண்டிய காலமும் வந்தது.
சென்னையில் இருந்தோ ஐதராபாத்தில் இருந்தோ தோழர் மணிவண்ணன் அழைக்கும் போதெல்லாம் அவர் கேட்கும் முதல் கேள்வி “தோழர் எங்க முல்லைத் தீவுலயா இருக்கீங்க?” என்பதுதான். எங்கள் கோவை முல்லை நகர் அறைக்கு அவர் வைத்திருந்த பெயர்தான் முல்லைத் தீவு. முல்லை நகரைக் கூட முல்லைத் தீவாய் நேசித் தவரை தீயின் நாக்குகளுக்கு தின்னக் கொடுத்த சில வாரங்களுக்குப் பின் ஒரு தொலைபேசி அழைப்பு. தோழரின் மகள் ஜோதிதான் அழைத்தார்.
”சொல்லுமா ஜோதி” என்றேன்.
“அங்கிள். அப்பாவோட புக்ஸ் எல்லாம் உங்களுக்கு அனுப்பி வைக்கலாம்ன்னுட்டு இருக்கோம்.. அவுரோட புக்ஸ் எல்லாம் உங்க ரூமோட ஒரு மூலைல இருந்தாக்கூட அப்பா ரொம்ப சந்தோசப்படுவாரு அங்கிள்”
அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றேன்.
சொன்னபடியே புத்தகங்களும் லாரியில் வந்து சேர்ந்தது. இப்போது அடுத்த பிரச்சனை. இத்தனை புத்தகங்களையும் எங்கே வைப்பது? இருக்கிற இடம் பத்தாது. தோழர் மணிவண்ணன் நூலகத்திற்கென தனி வீடும்... தோழர்கள் ஒன்றுகூட தனி வீடும்... என சமாளிப்பதற்கு எவரிடம் வசதி இருக்கிறது? ஒரே வழி இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள வேறு வீடு பார்ப்பதுதான்.
பார்த்தோம். பெரிதினும் பெரிதாய் மற்றொரு வீடு.
அதற்கான அட்வான்ஸையும் தங்கமுருகனே கொடுத்துக் குடியேற்றினார். பெரிய வீடு. புத்தகங்களை வசதியாக வைக்கலாம்.
வாடகைக்கு மாதம் ஒரு தோழரிடம் பிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
வசதியோ வசதி. வசதிக்கு என்ன குறைச்சல்?
ஆனால்...
வழக்கமாய் வரும் அந்த அணில்களையும்.
தேன் சிட்டுக்களையும்...
மைனாக்களையும்...
விருமாண்டி-கருமாண்டியையும்..
இது வரைக்கும் எங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காத அந்த ஏழரை அடி பாம்பையும் என்ன சொல்லி இங்கே அழைத்து வருவது?
செப்டெம்பர், 2014.