அறுபது வயதிலும் ஆகாயம் தொடலாம்

உலகம் உன்னுடையது
அறுபது வயதிலும் ஆகாயம் தொடலாம்
Published on

அமெரிக்காவிலுள்ள மெக்சிகன் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிக்குப் பார்வையாளராக சென்றிருந்த டாக்டர் வேங்கிடசாமிக்கு (சுருக்கமாக டாக்டர் வி ) , அங்கிருந்த சூசன் கில்பர்ட், மருத்துவக்கல்லூரியை சுற்றிக் காண்பிக்கிறார். வானளாவிய கட்டிடங்கள், அதி நவீன மருத்துவ இயந்திரங்கள், பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் எல்லாவற்றையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கவனிக்கிறார் டாக்டர் வி. பின் விடைபெறும் தருவாயில்சூசனிடம் சொல்கிறார் ‘ ஒரு நாள் இது போன்ற மருத்துவமனையை நான் உருவாக்குவேன் ’.

ஒரு மெலிதான புன்னகையோடு டாக்டர் வியின் கனவு வார்த்தைகளைக் கேட்டு தலையசைத்த சூசன் மனதிற்குள்ளோ, ‘ இந்தியாவில் சின்னஞ்சிறிய பதினோரு படுக்கை மருத்துவமனையை வைத்திருக்கும் இவர் எப்படி இவ்வளவு பெரிய மருத்துவமனையை கட்ட முடியும் ?’ என்ற கேள்வி.

 இந்தச் சம்பவம் 1978 ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது டாக்டர் வேங்கிடசாமியின் வயது அறுபது .  அவருடைய ஆசையை அப்போது யார் கேட்டிருந்தாலும் அவர்களுக்கு அது வெற்று வார்த்தைகள் என்று தான் தோன்றியிருக்கும். ஆனால் அடுத்த 28 ஆண்டுகளில் அந்த வார்த்தைகள் உயிர்பெற்றன.

உலகப் பிரசித்தி பெற்ற அரவிந்த் மருத்துவமனையின் பிதாமகனான டாக்டர் வியின் கனவு மிக வலிமையானது. ஆனால் அவரது கனவு கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது அல்ல.

வடமலாபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்த டாக்டர் வியின் பக்கத்து வீட்டுப் பெண் தனது இருபதாவது வயதில் பிள்ளை பேறின் போது தகுந்த மருத்துவ வசதி இல்லாமல் இறந்து விடுகிறார்.  மருத்துவரோ மருத்துவ வசதிகளோ இல்லாத தனது கிராமத்தில் பிரியமான நண்பர்களும் உறவினர்களும் இளம் வயதில் மரணமடைந்தது டாக்டர் வியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மகப்பேறு மருத்துவராக விரும்பினார்.மிகுந்த போராட்டத்திற்கு பின் 1944 இல் மருத்துவக்கல்லூரிப் படிப்பை முடித்து இராணுவப் பணியில் சேர்ந்தார். படிக்கிற காலத்தில் தந்தையை இழந்ததால் மூத்த மகனாக குடும்பத்தைக் காப்பாற்றுகிற பொறுப்பு.

டாக்டர் வியின் வாழ்க்கை சீரான கோட்டில் நான்கு ஆண்டுகள் நகர்ந்தது. விரும்பியபடி மகப்பேறு பற்றிய மேல்படிப்பிற்கு  அவர் சேருவதற்கான ஏற்பாடுகள் முடிந்திருந்தன.  திருமணத்திற்கான முஸ்தீபுகள் நடந்து  நிச்சயதார்த்தமும் முடிந்திருந்தது.

அப்போது டாக்டர் வியின் உடம்பில் உள்ள எல்லா மூட்டுகளிலும்  வீக்கம். அவரால் நிற்கவோ, நடக்கவோ அல்லது படுக்கவோ முடியாத நிலை. அவர்  ஆர்த்தரைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையான அவரை கவனிக்க கடைக்குட்டி தங்கை நாச்சியார் கிராமத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டார். தனது கனவுகளையும் உடலையும் உருக்குலையச் செய்த நோய் நாட்களைப் பற்றி , ‘அது மிகவும் கொடுமையான காலம் தான். ஆனால் நாம் அதற்கு அப்பால் நகரத்தானே வேண்டும் ’என்று பின்னர் அவர் குறிப்பிட்டார்.

நோயின் வீச்சு குறைந்த பின் விரும்பியபடி மகப்பேறு மருத்துவம் படிக்க முடியாத நிலை . சீனியர்களின் அறிவுரைப்படி கண் மருத்துவம் படித்தார். கண் அறுவைச் சிகிச்சை செய்பவர்களுக்கு விரல்கள் நுணுக்கமாக , துரிதமாக, நளினமாக இயங்க வேண்டும். நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட டாக்டர் வி தனது விரல்களை கண் அறுவைச் சிகிச்சையின் தேவைக்கேற்ப பழக்க மிகவும் சிரமப்பட்டார். ஆனால் விடாமுயற்சியால் தேவைக்கு மீறிய தேர்ச்சியடைந்தார். டாக்டர் வி கண் மருத்துவ நிபுணரானது இப்படித்தான்.

கண் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்த பின் டாக்டர் வி தனது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார். திருமணம் செய்து கொள்ளாதது பற்றி , ‘தாங்கமுடியாத வலிதான் எனது துணை.  அது என்னை எப்போதும் தொடர்கிறது ’ என்றார்.

அரசாங்க மருத்துவராக பணியைத் தொடர்ந்த டாக்டர் வி , அறுபதுகளில் தமிழக அரசு ஆரம்பித்த நடமாடும் கண் சிகிச்சை முகாம்களில் அதிக ஆர்வம் காட்டினார். அந்த காலகட்டத்தில் அரசு ஒரு முகாமிற்கு 750 ரூபாய் ஒதுக்கும் . அந்தச் சொற்பத் தொகையில் அவர் அற்புதங்களை நிகழ்த்தினார்.

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடங்களில் முகாம் நடத்திய டாக்டர் வி வகுப்பறைகளை ஆபரேஷன் தியேட்டர்களாக்கினார். ஒவ்வொரு முகாமிலும் சுமார் 300 cataract அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்தன. அரசின் பணம் போதாத காலங்களில் தன் சொந்த பணத்தை செலவழித்தார். முகாம்கள் பிரபலமடைய உள்ளூர் பிரபலங்கள் தாராளமாக உதவினர்.  தன்னலமில்லாமல் செயல்பட்ட அவரது முகாம் அனுபவங்கள் தாம் அரவிந்த்  நிறுவனத்தின் அடித்தளம்.

தனிப்பட்ட முறையில் லட்சத்திற்கு மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகளை செய்து முடிந்திருந்த அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்தது. அரசு வேலையில் தீவிரமாக செயல்பட்ட டாக்டர் வி பல்வேறு பதவிகளை வகித்து விட்டு மதுரை மருத்துவக்கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

நேற்றைய சாதனைகளை அசைபோட்டுக் கொண்டு ஓய்வு பெற விரும்பாமல், பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறனுக்குள் உயர் தர கண் சிகிச்சை அளிப்பது பற்றி யோசித்தார்.

அவருடைய குடும்பத்திலும் பல கண் மருத்துவர்கள் உருவாகியிருந்தனர். தனது கனவை உடன்பிறந்தவர்கள் மற்றும் சகோதரி  நாச்சியாரின் கணவர் டாக்டர் நம் பெருமாள்சாமி, டாக்டர் நம்மின் சகோதரி விஜயலட்சுமி  விஜயலட்சுமியின் கணவர் டாக்டர் சீனிவாசன்  ஆகியோரிடம் விவரித்தார்.

தந்தை ஸ்தானத்திலுள்ள டாக்டர் வியின் கனவின் கை பிடித்து பயணிக்க எல்லாரும் சம்மதித்தனர். இவர்கள் தான் அரவிந்த் குழுமத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள். டாக்டர் வேங்கிடசாமியின் பெற்றோர் பெயரைச் சுருக்கி GOVEL டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பித்த பின் நாட்கள் சுலபமாக நகரவில்லை. மக்கள் சேவையை முன்னிறுத்தி  செயல்படும் போது பணத்திற்குச் சிரமம் தான். டாக்டர் நம் மற்றும் டாக்டர் நாச்சியாரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர்கள். வேறு மருத்துவமனைகளில் வேலை  பார்த்திருந்தால் செல்வச்செழிப்போடு இருந்திருக்கலாம். ‘அந்த காலகட்டத்தில் எங்களுடன் படித்தவர்கள் காரில் செல்லும் போது நாங்கள் பஸ்ஸிற்காக நிறுத்தத்தில் காத்திருந்திருக்கிறோம். ஆனாலும் அது பற்றி கவலைப்படாமல் சேவை செய்தோம். நாங்கள் கிராமத்திலிருந்து  வந்ததால் கிராமத்திலிருந்து வரும் நோயாளிகளிடம் இயல்பாக பேசி நன்றாக சிகிச்சை அளித்தோம். எங்கள் மருத்துவமனைக்கு நாங்கள் விளம்பரம் செய்வதில்லை. சிகிச்சை பெற்றுச் சென்றவர்களே அரவிந்த் மருத்துவமனையின் விளம்பரதார ராக செயல்பட்டார்கள்’ என்று கூறும் டாக்டர் நம்பெருமாள் சாமி ‘அரவிந்த்’ குழுமத்தின் தற்போதைய தலைவர். 2010 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை உலகின் முக்கியமான 100 நபர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

( டாக்டர் நம்மின் பேட்டி தனியாக).

ஆரம்ப கட்டத்தில் டாக்டர் வியின் வங்கிக் கடன் விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டது. நன்கொடை கேட்ட போதும் கசப்பான அனுபவம் தான். இனி நன்கொடை கேட்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

அரவிந்த் மருத்துவமனையின் முதல் ஐந்து மாடி கட்டிடம் ஒவ்வொரு தளமாக கட்டப்பட்டது. கட்டி முடிக்க ஐந்து வருடங்களுக்கு மேல் ஆனது. டாக்டர் நாச்சியார் உட்பட வீட்டு பெண்களின் நகைகள் பலமுறை அடகுகடைக்கு விஜயம் செய்தன.

அரவிந்த் மருத்துவமனையில் 1981 ஆம் ஆண்டில் 10,000 க்கும் மேற்பட்ட கண் அறுவைச் சிகிச்சைகள் நிகழ்ந்தன. 1991 எண்ணிக்கை 50,000 யும் , 96 ல் ஒரு லட்சத்தையும், 2003 ல் இரண்டு லட்சத்தையும் , 2009 ல் மூன்று லட்சத்தையும்  தாண்டியது. எண்ணிக்கை முக்கியமல்ல . மொத்த அறுவைச் சிகிச்சைகளில் 47 சதவீதத்தினரிடமிருந்துதான் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது, 26 சதவீதத்தினருக்கு சலுகை கட்டணத்திலும் 27 சதவீதத்தினருக்கு இலவசமாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இப்படி செய்யும் போது நிறுவனத்தை சரிவர நடத்த முடியுமா என்ற கேள்வி பலருக்கு உண்டு. ஆனால் பிரசித்தி பெற்ற வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ்  அரவிந்த் குழுமத்தின்  நிர்வாக மற்றும் லாபமீட்டும் திறன் உலகின் சிறந்த வர்த்தக நிறுவனங்களுக்கு இணையானது என்று கூறுகிறது.

 கூகுளின் நிறுவனர்களின் ஒருவரான லாரி பேஜ், அரவிந்த்  நிறுவனம் பற்றி கேள்விப்பட்ட போது ஆச்சர்யப்பட்டார். உடனே தன்   சொந்த விமானத்தில் நிறுவனத்தைப் பார்வையிட மதுரைக்கு கிளம்பி வந்துவிட்டார். நினைத்ததைச் சாதித்துவிட்ட திருப்தியில் டாக்டர் வி 2006 இல் காலமானாலும் ,  அவரது கனவை குடும்பத்தினரும் அரவிந்த் குழும உறுப்பினர்களும் உயிரோட்டத்தோடு வைத்துள்ளனர் . டாக்டர்  வியின்  அரவிந்த் மருத்துவமனை  என்றைக்கும் நமக்கு ஒன்றை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும். அது: ‘கனவு காண்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் வயதோ, பணமோ பிற எந்த விஷயமும் தடையாக இருக்கமுடியாது’.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்.

செப்டெம்பர், 2013 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com