தண்ணீர் இல்லை.. நெல் விவசாயம் பொய்த்துவிட்டது.. அதையடுத்து அரிசிவிலை உயர்வு... என அடுக்கடுக்கான தகவல்கள் மக்களின் மனதில் வேதனையை விதைத்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே நெல் உற்பத்தி குறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 28 முதல் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்பு 23 முதல் 25 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல் உற்பத்தி குறைவால் அரிசிவிலை கிடுகிடுவென உயர்கிறது.
இந்த ஆண்டு குறுவை பொய்த்ததால் எதிர்பார்த்த அளவு நெல் கொள்முதல் ஆகவில்லை. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை தஞ்சை மாவட்டத்தில் 2,580 மெ.டன் நெல் மட்டுமே கொள்முதல் ஆகியுள்ளதாம்.. ஆனால், கடந்த ஆண்டு இதே நாளில் மாவட்டத்தில் 2.02 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது என்கிறார் வேளாண்துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர். இப்படி நெல் உற்பத்தி குறைவதும் கருகிய பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கோருவதும்.. வழக்கமான ஒன்றாகிவிட்டது. அரிசி அரசியலால் ஆட்சிகள் கூட மாறியதும் தமிழகம் அறிந்த ஒன்று தான். இந்த நெல் உற்பத்தியைத் தாண்டி, ஏன் மாற்று தானியங்கள் குறித்து யாரும் சிந்திக்கவில்லை..?
உணவுக்காக நெல்லரிசி இருந்த காலத்தில் வேறு சில தானியங்களும் நம் உணவுப் பண்பாட்டில் மிகப் பெரிய இடம் பெற்றிருந்ததை நாம் மறந்துவிட்டோம். அதனை யோசித்துப் பார்க்கவும் தவறிவிட்டோம். முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் புஞ்சைத் தானியங்களை அடிப்படையாக வைத்தே மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் இருந்தன. பசுமைப்புரட்சிக்குப் பின்னர் ‘நான் உஜாலாவுக்கு மாறுகிறேன்‘ என்பது போல பலர் அரிசியை உண்ணத் தொடங்கினர். அதுமட்டுமில்லாமல் அரிசி சாப்பிடுகிறவர்கள் மேன்மை மிக்கவர்கள் என்ற கருத்துருவாக்கம் உருவானது. இதையடுத்து சிறுதானியப் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இது சொந்தச் செலவில் சூனியம் வைத்தது போல இப்போது முடிந்திருக்கிறது.
பண்டைக்காலத்தில் நிலவிய சிறு தானிய பயன்பாடு குறித்து தானம் அறக்கட்டளையின் ஊடக ஒருங்கிணைப்பாளரான இரா. சிவக்குமாரிடம் பேசியபோது,“பண்டைய உணவுப் பண்பாட்டில் தானியங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தன. வரகரிசிச்சோறு முதன்மையான இடம் பெற்றுத் திகழ்ந்ததை ஔவையின் தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்ற ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்’ என்று ஆரம்பிக்கும் பாடல் குறிப்பிடுகிறது (கத்தரிக்காயை வழுதுணங்காய் என்றுதான் தென் தமிழகத்தில் இன்றும் சொல்வார்கள்). நெல் என்ற பசுமைப்புரட்சியின் ஒற்றைச் சிந்தனையிலிருந்து விடுபட்டு, கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு, காடைக் கண்ணி, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பன்மய புஞ்சை தவசங்களுக்கு திரும்பியாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
நெல்லரிசியில் இருக்கின்ற நுண்ணூட்டங்களைக் காட்டிலும், மிக அதிக அளவில் புரதம், நார், தாதுஉப்புகள், இரும்பு, சுண்ணாம்பு போன்ற மனித உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துக்களும் சிறு தானியங்களிலே நிறைந்துள்ளன(அட்டவணையைப் பார்க்கவும்).
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தமிழகத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 42 லட்சம் எனவும், அந்நோய்க்குரிய அறிகுறிகளுடன் 30 இலட்சம்பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.. அதுமட்டுமன்றி உயர் ரத்த அழுத்தம், தாழ்அழுத்தம், இதயநோய்கள், சிறுநீரக நோய்கள், மன அழுத்தம் போன்ற அனைத்திற்கும் காரணமாகச் சொல்லப்படுவது நமது தற்போதைய உணவுப் பழக்கவழக்கமே. கிடைப்பதைத் தின்பது என்று நமது உணவுப் பழக்கம் மாறிவிட்டதால், சத்தான உணவு என்பது நமக்கு வெகுதூரமாகிவிட்டது.
‘ஊட்டச்சத்து பற்றாக்குறை இந்தியாவின் தேசிய அவமானம்’ என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கே அறிவிக்கின்ற அளவிற்கு, இங்கு நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு நம் எதிர்காலத் தலைமுறையினர் மீதான சாபம்.
தண்ணீர்ப் பற்றாக்குறை, வறட்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை எதிர்காலங்களில் நாம் சந்திக்கவேண்டிய பிரச்னைகள். இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டுமெனில் சிறுதானிய விளைவிப்பில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உலகத்தின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தால் நெல், கோதுமை போன்ற பயிர்களின் விளைச்சலில் சுணக்கம் ஏற்படும். ஆனால், சிறுதானியங்கள் அது போன்ற சூழலுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும். எப்படிப்பட்ட வறட்சியையும் தாங்கிக்கொள்ளும்.
நம் ஊர்களிலுள்ள கோவில் கோபுர கலசங்களில் சிறுதானியங்களைப் பாதுகாத்து வைத்து வருவதை அந்தக்காலத்திலிருந்தே நம் முன்னோர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனை வெறும் ஆன்மீகமாக நாம் பார்க்கிறோம். ஆனால் அதில் பொதிந்து கிடக்கும் அறிவியலை பார்க்கவேண்டும். ஊரின் மிக உயரமான இடமாய்த் திகழும் கோபுரம் இயற்கைப் பேரிடரால் அழிவதற்கு வாய்ப்பில்லை. அதனால் சேஃப்டி லாக்கரில் தங்கத்தை வைப்பது போல தானியங்களை கோபுரக் கலசங்களில் கொண்டு போய் வைப்பதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டனர். செம்பு, தங்கம், வெள்ளி மற்றும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட இக்கலசங்களில் வைக்கப்படும் தானியங்கள் இடி, மின்னலைத் தாங்கும் வல்லமை பெற்றவை. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழாவும் கூட, அறிவியல் சார்ந்தது தான். கலசங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள அத்தானியங்களின் முளை திறன் பன்னிரெண்டு ஆண்டுகள் வரையே இருக்கும். அதற்குப் பிறகு அவை திறனிழக்கத் தொடங்கும். இதன் பொருட்டே பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு என்ற பெயரில், அத்தானியங்களை கலசங்களில் புதிதாய்க் கொட்டி வருகின்றனர். “தினை மாதிரி புரதச்சத்து உள்ள தானியமே கிடையாது. இன்றைய குழந்தைங்க அதைக் கண்ணாலயாவது பார்த்திருப்பாங்களா? உணவுப் பழக்கம்கிறது வெறும் சாப்பாட்டோட முடியுறது இல்லை. அது பொருளாதாரத்தோட சம்பந்தப்பட்டது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட்டுக் கிடைக்குற சர்க்கரை இனிப்பைக் காட்டிலும் பத்து மடங்கு இனிப்பைத் தரும் ஒரு ஏக்கர் பனை. சர்க்கரை உடம்புக்குக் கெடுதின்னு சொல்லாத வைத்தியமே இல்லை. பனையோ சத்து. ஆனா, நம்மளோட அறியாமையால், தண்ணீரே தேவைப்படாத பனையை வெட்டிட்டு, தண்ணீரைக் குடிக்கிற கரும்பைச் சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கோம். மண்ணுக்கு ஏத்த உணவுப் பழக்கம் மனுஷ உடம்புக்கு மட்டும் இல்லை; விவசாயத்துக்கும் வளர்ச்சியைத் தரும். இதை புரிஞ்சிகிடணும். விதவிதமா சமைச்சுக் கொடுத்தா குழந்தைங்களும் மாறிடுவாங்க” என்கிறார் வேளாண்மை நிபுணர் பாமயன் “
பல்வேறு வகையிலும் உடல் வலு என்பது கேழ்வரகு, கம்பு, தினை, சாமை போன்றவற்றை சாப்பிடுவதில்தான் உள்ளது. கேப்பைக்கூழில் அரிசிச்சோற்றைக் கலந்து, நீராகாரம் அல்லது மோர் ஊற்றி சின்ன வெங்காயமோ, பச்சை மிளகாயோ கடித்துக் கொண்டு அந்தக் கூழைக் குடித்ததெல்லாம் ஒரு காலம். அப்போதெல்லாம் காலையில் சாப்பிட்டோமென்றால், வயற்காட்டில் உழைத்துக் களைத்து மாலையில் வீடு திரும்புவோம். இரவு சமைத்து உண்டுவிட்டு தூங்கச் சென்றால், அப்படியொரு தூக்கம் வரும். இரண்டு வேளை மட்டுமே உணவு உண்டு வாழ்ந்த காலத்தில் எந்தவிதமான நோயோ, நொடியோ இல்லை. ஆனால் இன்றைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வேண்டாத நோய்களையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறோம்” என அநியாயத்துக்கு கவலைப்பட்டார் களஞ்சிய இயக்கத் தலைவியான சின்னப்பிள்ளை.
சிறுதானியங்களை பயன்பாட்டில் கொண்டுவருவது எப்படி என நாம் யோசிக்க வேண்டிய தருணமிது. ஏதேனும் ஒரு வேளை உணவை சிறுதானியங்களாக உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பிற பயிர்களிலும், சிறுதானியங்களிலும் உள்ள நுண்ணூட்டங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆண்டிற்கொரு முறை சிறுதானியங்கள் மூலமாக வகை வகையான உணவுகளைச் செய்ய ‘உணவுத் திருவிழா’ நடத்த வேண்டும்.
சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுக்கு பெரும் பங்கும் உள்ளது. பொது வழங்கல் முறையில் (ரேஷனில்) சிறுதானியங்களை வழங்கவேண்டும். அரசு சார்ந்த விழாக்களில் சிறுதானிய உணவுகளை ஊக்குவிப்பதுடன், சத்துணவுத்திட்டம், இரத்தசோகை ஒழிப்பு சார்ந்த திட்டங்களிலும் சிறுதானிய உணவுகளுக்கு முதன்மை இடமளிக்க வேண்டும். வேளாண் துறைக்கென்று தனி வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வதோடு, அதில் சிறுதானிய உழவர்களுக்கும் முக்கிய பங்களிப்பது அவசியம்.
இன்றைக்கு தமிழகத்திலுள்ள நான்காயிரம் கண்மாய்களைக் காணவில்லை என்கிறது ஒரு அதிர்ச்சி அறிக்கை.
தண்ணீருக்காக கேரளத்தையும் கர்நாடகத்தையும் ஆந்திரத்-தையும் நம்பி கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் மாற்று சிந்தனைக்கு நம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். நெல் விவசாயத்தை மட்டுமே நம்பியதன் விளைவு, இன்றைக்கு நம் மண் சார்ந்த சிறுதானியப் பயிர்களின் உணவு பயன்பாடு குறைந்து விட்டது.
சிறுதானியங்கள்நமதுமண்ணின்வரம். எப்படிப்பட்டவறட்சியையும்தாங்கிவளரக்கூடியவை. அவற்றுக்குஆதரவுஅளிப்பதுஅவசியம்.
மார்ச், 2013.