அரசியல்வாதியின் இன்னொரு முகம் !

அரசியல்வாதியின் இன்னொரு முகம் !
Published on

அரசு நிறுவனங்கள் அசுர வேகத்தில் செயல்படும் காலங்களும் உண்டு. ஏர் இந்தியா நிறுவனம் இரண்டு வருடங்கள் விவாதித்து, மீண்டும்  விவாதித்து, 28 போயிங் ஆ 777  ரக விமானங்கள் வாங்க ஜனவரி 2004 ல் முடிவெடுக்கிறது. பின்னர் காட்சிகள் மாறுகின்றன. அடுத்த நான்கு மாதங்களில் 28 என்பது ஐம்பதாக அதிகரிக்கப்படுகிறது. 24டிசம்பர் 2005 ல் அமைச்சர்கள் குழு (eGOM) பிரதமருக்கு மேற்கூறப்பட்ட விமானங்களை வாங்க பரிந்துரைத்தது.

30 டிசம்பர் 2005 அன்று 68 விமானங்கள் வாங்க மத்திய விமானத்துறை அமைச்சகத்திற்கு பிரதம மந்திரியின் அலுவலகம்  அனுமதியளிக்கிறது. அமைச்சகத்திலிருந்து கட்டளை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு செல்ல, ஏர் இந்தியா, போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் நாற்பது ஆயிரம்கோடிகள்.

இதெல்லாம் நடந்தது ஒரே நாளில்..

ஒப்பந்தம் ஆகிவிட்டது. விமானம் வாங்கியாச்சு. ஏர் இந்தியா லாபத்தில் கொழிக்க வேண்டும் தானே. ஆனால் நடந்தது வேறு.

புதிதாக வாங்கப்பட்ட விமானங்கள் மைலேஜ் பிரச்னையால் வாங்கிய விலையில் 80 சதவீத டிஸ்கவுண்டில் எடிஹாட் ஏர்வேய்ஸுக்கு ( Etihad airways) விற்கப்படுகிறது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும்ஏர் இந்தியா என்னவாயிருக்கும் என்பது உங்கள் யூகத்திற்கு .

ஏர் இந்தியாவின் சுருக்கமான வரலாறு இங்கே. முதன் முதலில் ஜேஆர்டி டாடா, டாடா ஏர்மெயில் என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். 15 அக்டோபர் 1932 அன்று கராச்சிக்கும் மும்பைக்கும்இடையே பறக்கிறது.இந்த நிறுவனத்தின் முதல் வருட லாபம் அறுபதாயிரம். ஐந்து வருடம் கழித்து 1937 ல் லாபம் ஆறு லட்சம் ரூபாய். மத்திய அரசு ஆகஸ்ட் 1953 ல் டாடா ஏர்மெயிலை அரசுடைமையாக்கி ஏர் இந்தியா என்று நாமகரணம் சூட்டியது. அரசுடைமையான ஏர் இந்தியாதான் இப்படிச்  சிக்கிச் சின்னாபின்னமானது.

இது சமீபத்தில் வெளியான   ’Not just an accountant ’ என்று புத்தகத்தில் 20 பக்கங்களில்பதிவான விஷயம். நூலை எழுதியவர் இந்திய தலைமை கணக்கு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற வினோத் ராய். 2ஜி ஊழலை வெளிக்கொண்டுவந்த அதிகாரி.

1972 -ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்து தனது பணிகாலம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் வினோத் ராய். தன் பதவி காலத்தில் 2ஜி, நிலக்கரி , இயற்கை வாயு , காமன்வெல்த் போட்டிகள் , மத்திய விமானத்துறை மற்றும் பல பெரிய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வர காரணமாயிருந்தவர்.

நண்பர்களாக இருக்கும் உயர் அரசு அதிகாரிகளுடன் சாகவாசமாக பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் அரசியல்வாதிகளிடம் படும் பாட்டை சோகமாகவோ, சுவாரஸ்யமாகவோ கூறுவதுண்டு. வெளியே கூறிவிடக்கூடாதென்று உத்திரவாதம் வாங்கிக் கொண்டு சொல்லப்பட்ட அந்த அனுபவங்களை, எழுத முடியாது. இங்கோ நேர்மையும் துணிச்சலுமான வினோத் ராய் திரைமறைவு சம்பவங்களை பொதுப்பார்வைக்கு வைக்கிறார்.

2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்கள் பற்றிய தகவல்கள் பெருவாரியான இதழ்களில் வெளிவந்த போதிலும் , இந்த புத்தகத்தில் அந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆதாரங்களோடு விவரித்துள்ளார்.

ஏர் ஃபோர்சில் இணைச்செயலாளர் ஆக வினோத் ராய் பணி புரியும் போது நடந்த சுவாரசியமான விஷயம் இது. அப்போது மத்திய பாதுகாப்பு மந்திரியான முலாயம் சிங்  இவரை அழைத்து சார்ஜண்ட் (Sergent) நிலையிலுள்ள ஓர் அதிகாரியின்இடமாற்றத்தை ரத்து செய்ய பணித்தாராம்.

சரி விசாரித்து விட்டு வருகிறேன் என்று வினோத் பதிலளிக்க, ஏன் உடனே செய்ய முடியாதா என்று முலாயம் சிங் எதிர் கேள்வி கேட்டு விட்டு வேலையில் ஆழ்ந்துவிடுகிறார். குறிப்பிட்ட சார்ஜண்ட் நீண்டகாலமாக தில்லியிலேயே தொடர்ந்து பணிபுரிபவர். எப்போது இடம் மாற்றம் செய்தாலும் யாரையாவது பிடித்து மாற்றத்தை ரத்துசெய்து விட்டு தில்லியிலேயே  தொடர்ந்து பணிபுரிபவர். இந்த முறை அவரை தில்லியை விட்டு தூக்கியே தீருவது என்ற முடிவில் ஏர் போர்ஸ் அதிகாரிகள் இருந்தனர்.

முலாயமிடம் வினோத் , ‘சார்  அவர் நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த முறையும் அவரது இடமாற்றத்தை ரத்து செய்தால் அது ஒழுங்கீனத்திற்கு உதவியது போலாகும்’ என்றார்.

முலாயம் ,‘ என்ன? Airforce ல் நான் இந்த இடம் மாற்றத்தை கூட ரத்து செய்யச் சொல்லக்கூடாதா?’

வினோத் : ‘ ஆமா சார்’

முலாயம் : ‘ மாநில முதல்வராக இருக்கும்போது மூணு ஸ்டார் டிஜிபியையே நொடியில் மாற்றுவேன். இங்கே ஒரு சார்ஜண்ட்டை  கூட மாற்ற முடியல, என்ன மினிஸ்டரய்யா நான்’ என்றாராம். அமைச்சரிடம் மறுப்பு சொல்வதற்கு ஒரு தில் வேண்டும் தான்.

வினோத்தின் மற்றொரு அனுபவம் சுவாரஸ்யமானது. வடகிழக்கு பகுதியிலிருக்கும் அருணாச்சல பிரதேசத் தின் நிலப்பரப்பு பயணத்திற்கு சவாலானது. அந்த பகுதியிலுள்ள இந்திய விமனாப்படையின்  ஹெலிகாப்டர்கள் அந்த மாநில முதல்வர்களின் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட மணிநேரம் அனுமதிக்கப்படும். ஒரு முறை அம்மாநில முதல்வரான ஜியோகாங் அபாங்கின் பயணத்திற்காக ஹெலிகாப்டர்  தயாராக இருந்தது. பரிவாரங்களோடு  வந்த முதல்வரின் பொருட்கள் ஏற்றப்பட்டன. மொத்த நபர்கள் + பொருட்களின் எடைஅனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகம். பயந்து போன பைலட் ‘ சார் கொஞ்சம் பொருட்களை இறக்கி விடலாமா அல்லது ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கலாமா? ’என்றார்.

‘ அதெல்லாம் பரவாயில்லை, ஹெலிகாப்டரை எடு..  நான் கூடுதலான எடையுடன் பலமுறை பறந்திருக்கிறேன்’ என்றார். கெஞ்சலாக மீண்டும் மீண்டும் பைலட்சொன்னதையே திரும்பச்

சொல்லியிருக்கிறார். ‘ ஹெலிகாப்டரை எடு இல்லைன்னா நடக்கிறதே வேறு’ என்று முதல்வர் மிரட்ட, பைலட் மீண்டும் கெஞ்சலாக மறுக்கிறார். கோபத்துடன் கீழிறங்கும் முதல்வர் பைலட்டை கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிடுகிறார்.

இந்திய விமானப்படை கொந்தளிக்கிறது. விஷயம் பாதுகாப்பு அமைச்சரை எட்டுகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சரின் தொலைபேசி அழைப்பிற்கு பேச மறுக்கிறார் முதல்வர். தகவல்மத்திய உள்துறை அமைச்சருக்கு செல்கிறது. அவரிடம் பேசுகிறார் முதல்வர். ஆனால் விமானியை விடுவிக்கவில்லை. கோபமான தில்லி மறுநாள் அதிகாலையில் வினோத்தை அருணாசலபிரதேசத் துக்கு அனுப்புகிறது. இங்கு வந்த வினோத்திற்கு அடுத்த அதிர்ச்சி. முதல்வர் இருக்குமிடம் யாருக்கும் தெரியவில்லை. ஹெலிகாப்டரில் ஊர் ஊராக சுற்றிய பின் ஒரு பயணியர் விடுதியிலேயே முதல்வரை சந்திக்கிறார். கோபத்தில் எகிறிய முதல்வர் சில மணி நேரத்திற்கு பின் சகஜ நிலைக்கு வருகிறார். ‘ ஒரு சாதாரண விமானிக்காக மத்திய உள்துறை அமைச்சர் பேசுகிறார்’ என்று எக்காளத்துடன் சொல்ல வினோத் பொறுமை காக்கிறார். நீண்ட விவாதத்திற்கு பின் முதல்வர் விமானியை விடுதலை செய்கிறார். என்ன ஒருஅடாவடித்தனம்!

வினோத் ராயின் புத்தகம் முழுவதும் நமது அரசியல்வாதிகளின் சுயம் கோரமாக சிரிக்கிறது.

வாசித்துப் பாருங்கள்.

செப்டெம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com