அமெரிக்க தேர்தல் விசித்திரங்கள்

அமெரிக்க தேர்தல் விசித்திரங்கள்
Published on

டொனால்ட் ட்ரம்ப் அவுட் ஆவாரா? அல்லது தொடர்ந்து ஆடுவாரா? என்ற கேள்வி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இதுவரை கண்டிராத அளவில் மக்களிடம் ஆர்வம் நிலவ காரணம் அதுதான்.

அமெரிக்க ஊடகங்களில் ட்ரம்புக்கு ஆதரவு மிக மிகக்குறைவு. கடந்த தேர்தலின்போதும் அப்படிதான் இருந்தது. ஆனால் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அப்போது ஊடகத்தின் எதிர்ப்பு உக்கிரமாக வெளிப்படவில்லை. ஹில்லரி க்ளின்டன்தான் அதிபராக பதவி ஏற்பார் என்று ஊடகர்களும் ஏனைய அறிவுஜீவிகளும் நம்பினர்.

பொதுமக்களின் வாக்குகளும் ஹில்லரிக்கு அதிகமாக கிடைத்தன. ட்ரம்பைக் காட்டிலும் 29 லட்சம் வாக்குகள் அவர் கூடுதலாக பெற்றார். மொத்த வாக்குகளில் அது 2 புள்ளி 1 சதவீதம் வித்தியாசம். ஆனால் அவருக்கு பதிலாக ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றார்.

ட்ரம்புக்கு கை கொடுத்தது எலக்டொரல் வோட்ஸ் என்று சொல்லப்படும் பிரதிநிதித்துவ வாக்குகள். அதன் மொத்த எண்ணிக்கை 538. அதில் சரிபாதி 269. அதைவிட ஒரு வாக்கு அதிகம் கிடைத்தாலும் வெற்றி. ட்ரம்பை விட கூடுதலாக 29 லட்சம் அமெரிக்கர்களின் வாக்குகளை பெற்ற ஹில்லரியால் 227 பிரதிநிதித்துவ வாக்குகளைப் மட்டுமே பெற முடிந்தது. ட்ரம்புக்கு 304 வாக்குகள் கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் ஆதரவைப் பெற்றவர் தோல்வி அடைவதும், மக்கள் ஆதரவை குறைவாக பெற்றவர் வெற்றி பெறுவதும் முரண்பாடாக தெரிகிறது என்கிறீர்களா? ஆமாம், அப்பட்டமான முரண்பாடுதான். என்றாலும், அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேதைகள் நீண்ட விவாதத்துக்கு பிறகே இந்தத் தேர்தல் முறையைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

நாட்டு மக்கள் வாக்களித்து அதிபரை தேர்ந்து எடுக்கும் நேரடித் தேர்தல்; பொதுமக்களின் பிரதிநிதிகளாக நாடெங்கிலும் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து அதிபரைத் தேர்ந்து எடுக்கும் மறைமுக தேர்தல் முறை ஆகிய இரண்டிலும் உள்ள சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, இரண்டின் அம்சங்களும் அடங்கிய மூன்றாவது முறை ஒன்றை வடிவமைத்தார்கள். எலக்டொரல் காலேஜ் என்கிற அந்த முறைதான் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

ட்ரம்ப் மட்டும் அல்ல, அவருக்கு முன்னால் நான்கு பேர் இந்த எலக்டொரல் காலேஜ் சிஸ்டத்தின் நற்பலனை அனுபவித்து இருக்கிறார்கள். அதாவது, ஹில்லரியை போல மேலும் நான்கு பேர் மக்கள் ஆதரவு கிடைத்தும் இந்த சிஸ்டத்தால் அதிபர் வாய்ப்பைப் பறி கொடுத்து இருக்கிறார்கள். 1824, 1876, 1888 தேர்தல்களில் அவ்வாறு நடந்தது. நாம் பார்த்த சமீப தேர்தல்களில் 2016 ல் ட்ரம்ப், அதற்கு 16 ஆண்டுகள் முன்பு ஜார்ஜ் டபிள்யு புஷ் அதிர்ஷ்டக் கார அதிபர் ஆனார்கள்.

என்ன காரணத்தால் மற்ற இரண்டு தேர்தல் முறைகளையும் அரசியல் சாசன படைப்பாளிகள் புறக்கணித்தார்கள் என்பதை பார்த்தால், எலக்டொரல் காலேஜ் சிஸ்டம் ஏன் முன்னுரிமை பெற்றது என்பது விளங்கும்.

அமெரிக்காவின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு 237 ஆண்டுகள் ஆகிறது. அன்று நிலவிய சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு விதியையும் வகுத்திருக்கிறார்கள். பொதுமக்கள் போதுமான அரசியல் அறிவு பெற்றவர்கள் அல்ல என்பதால், அதிபரை தேர்வு செய்யும் முழு உரிமையையும் அவர்கள் கையில் ஒப்படைக்க முடியாது என்பது மேதைகளின்பிரதான கணிப்பு.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் அங்கே தேர்தல் காலத்தில் ஒரு மாதம் சுற்றிவந்துபலதரப்பட்ட மக்களிடம் பேசியபோது, பாதி பேருக்கு இன்னமும் தேர்தல் முறை குறித்த புரிதல் இல்லாததை உணர முடிந்தது. அந்த வகையில் இது ஒரு தீர்க்க தரிசனமான கணிப்புதான்.

தனி நபரோ அல்லது குழுவாக சிலர் சேர்ந்தோ பொதுமக்களை மயக்க பல வழிகள் இருந்ததை அன்றைய அரசியல் அறிஞர்கள் விரிவாக விவாதித்தனர். மாறாக, ஒரு மாநிலத்தில் அபார செல்வாக்குடன் திகழும் தலைவரின் சிந்தனைகள், செயல்பாடுகளை மற்ற மாநிலங்களின் மக்கள் அறியாமல் இருப்பதற்கான சாத்தியங்களையும் அலசினார்கள். அப்போது கட்சிகள் இல்லை, கட்டமைப்பு இல்லை, தகவல் பரிமாற்றம் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் நிகழ்ந்தது, இடம் பெயர்தலும் போக்குவரத்தும் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தன. ஆகவே தேசிய பார்வையுடன் முடிவு எடுக்கும் ஆற்றல் சராசரி அமெரிக்கருக்கு கைவந்திருக்காது என்பதை அவர்கள் சரியாகவே தீர்மானித்தனர்.

அப்படியானால் மறைமுக தேர்தலை அங்கீகரித்து, அதிபரை தேர்வு செய்யும் அதிகாரத்தை நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்திருக்கலாமே? என்ற கேள்வி எழும். அவ்வாறு செய்தால், அவர்கள் தங்கள் நலனை முன்னிறுத்தி சில சமரசங்கள் செய்து ரகசிய கூட்டணி அமைத்து பொதுமக்களின் எண்ணத்துக்கு எதிராக வாக்களித்தால் என்ன செய்வது? என்ற கவலை அவர்களை வதைத்திருக்கிறது. இவை யாவும் ஊகங்கள் அல்ல. அரசியல் சாசன தயாரிப்பு பணியில் பங்கேற்ற ஒவ்வொரு அறிஞரும் எடுத்துரைத்த கருத்துக்கள் அனைத்தும் எழுத்து விடாமல் பதிவு செய்யப்பட்டு இன்றும் விலை மதிப்பற்ற ஆவணங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

இப்படியாக இரண்டு வலுவான தேர்தல் முறைகளை ஒதுக்கிவிட்டு எலக்டொரல் காலேஜ் சிஸ்டத்தை அறிஞர்கள் சுவீகரித்தனர். இன்னும் கூர்மையாக பார்த்தால் மற்றொரு உண்மை துலங்கும். அதாவது, நாட்டின் அதிபரை தேர்ந்து எடுக்கும் அதிகாரத்தை நாட்டு மக்களிடமும் ஒப்படைக் காமல், அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அளிக்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பிரித்து கொடுத்துள் ளது அமெரிக்க அரசியல் சாசனம். ஆமாம், மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற வார்த்தைகளுக்கு முழுமையாக உயிரூட்டும் வகையில் அறிஞர்கள் இந்த ஏற்பட்டை செய்திருக்கிறார்கள். அளவிலும் வளத்திலும் ஜனத்தொகையிலும் மாநிலங்களுக்கு இடையே இயற்கையாக காணப்படும் வேறுபாடுகள்கூட மாநிலங்களின் அதிபர் தேர்தல் உரிமையை சேதப்படுத்தி விடக்கூடாது என்று அவர்கள் உண்மையான அக்கறையுடன் விதிகளை செதுக்கி இருக்கிறார்கள்.

உதாரணம் சொல்லி விவரித்தால் வியப்பில் மூழ்குவீர்கள்.

இந்தியா போலவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள். நாம் லோக்சபா என்று குறிப்பிடும் மக்களவையை அங்கே பிரதிநிதிகள்  சபை என்பார்கள். ஏணிதண்ஞு ணிஞூ கீஞுணீணூஞுண்ஞுணtச்tடிதிஞுண் பலம் 435. நமது ராஜ்ய சபா அங்கே செனட். குஞுணச்tஞு உறுப்பினர்கள் 100. இரண்டும் சேர்ந்த நாடாளுமன்றத்தின் பெயர் காங்கிரஸ். இணிணஞ்ணூஞுண்ண். இரு அவைகளிலுமாக ஒரு மாநிலத்துக்கு எத்தனை எம்.பி.க்கள் இருக்கிறார்களோ அத்தனை எலக்டொரல் வாக்குகள் அந்த மாநிலத்துக்கு உண்டு. அந்த அடிப்படையில் கலிஃபோர்னியா மாநிலம் அதிகபட்சமாக 55 எலக்டொரல் வாக்குகளை பெற்றிருக்கிறது. குறைந்தபட்சமான மூன்று எலக்டொரல் வாக்குகளைப் பெற்றுள்ளவை வயோமிங், அலாஸ்கா, நார்த் டக்கோட்டா ஆகியவை. தலைநகர் வாஷிங்டன் டி.சி.க்கும் மூன்று உண்டு.

ஏலக்டொரல் வாக்குகளில் 53 சதவீதம் கலிஃபோர்னியா உள்ளிட்ட 12 பெரிய மாநிலங்களில் விரவி கிடக்கின்றன. அதாவது இந்த மாநிலங்களின் முழு ஆதரவு கிடைத்தால் ஒருவர் அதிபர் ஆக தேவையான 270 வாக்குகளுக்கு மேலாகவே பெற்றுவிட முடியும். மற்ற 38 மாநில மக்களில் ஒரே ஒருவரின் ஆதரவுகூட தேவை இல்லை. ஆனால், அப்படி நடக்க சாத்தியம் இல்லாமல் செய்கிறது எலக்டொரல் வாக்கு. கலிஃபோர்னியாவின் 55 வாக்குகளை அதன் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், ஏழே கால் லட்சம் பேருக்கு ஒரு வாக்குவிகிதம் வரும். அதே சமயம், சிறு மாநிலமான வயோமிங்கின் மூன்று வாக்குகளை அதன் ஜனத்தொகையுடன் ஒப்பிட்டால் ஒன்றே முக்கால் லட்சம் பேருக்கு ஒரு வாக்கு விகிதம் கிடைக்கும். துல்லியமாகக் கணக்கிட்டால், பெரிய மாநிலங்களைவிட சிறிய மாநிலங்களின் கை அதிபர் தேர்தலில் ஓங்கி இருப்பது தெரியும்.

இந்த சிக்கலால் விளைகிற நன்மை என்ன என்றால், அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தனக்கு சாதகமான சில பெரிய மாநிலங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஏனைய மாநிலங்களையும் அவற்றின் பிரச்னைகளையும் உதாசீனம் செய்துவிட்டு கடந்துபோக முடியாது. நகர மக்களுக்கு கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கி விட்டு, கிராம மக்களை கண்டுகொள்ளாமல் நகர முடியாது. மாநிலங்களுக்கு இடையேவேறு எத்தனை வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அதிபர் தேர்தலைப் பொருத்தவரை சமநிலையை இந்த ஏற்பாடு உறுதி செய்கிறது.

மாநில அரசில் ஒவ்வொரு முக்கிய பதவியாளரும் நேரடித் தேர்தல் வாயிலாக மக்களால் தேர்வு செய்யப்படுவதால், அதிபர் தேர்தலின்போது மாநிலங்களுக்குக் கிடைக்கும் இந்த சமநிலையை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் அதிகாரமாக எடுத்துக் கொள்ளலாம். எனவேதான், பாப்புலர் வோட் எனப்படும் மக்கள் வாக்குகள் கூடுதலாக கிடைத்தும் எலக்டொரல் வாக்குகள் மூலமாக அதிபர் ஆனவர்களுக்கு எதிராக வெகுஜன கிளர்ச்சிகள் உருவாகவில்லை.

எலக்டொரல் வாக்குகளை பதிவு செய்பவர் எலக்டர். அவர்களை அந்தந்த மாநில அரசு நியமிக்கும். வாக்களிப்பதுடன் எலக்டர்களின் காலம் முடிந்து விடும். மக்களின் வாக்குகள் எந்த கட்சிக்கு ஆதரவாக பதிவாகி இருக்கிறதோ, அந்த கட்சிக்கே வாக்குகளை அளிப்பதுதான் எலக்டர்களின் கடமை. ஆனால் சட்டப்படி அது கட்டாயம் அல்ல. அவர்கள் பொதுமக்களின்

விருப்பத்துக்கு எதிராக வாக்களிக்கவும் சுதந்திரம் கொடுத்திருக்கிறது அரசியல் சாசனம். அப்படி செய்தால் அவருக்கு சூட்டப்படும் பெயர் என்ன தெரியுமா? ‘நன்றி கெட்ட எலக்டர்‘.

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளை தவிர சில உதிரிக் கட்சிகள் இருக்கின்றன. எலக்டொரல் வாக்குகளை அவர்களுக்கும் பங்கு பிரித்து கொடுக்க சட்டம் இயற்றியுள்ளன இரண்டு மாநிலங்கள். அந்த விவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் விடுவது ஆரோக்யத்துக்கு நல்லது என்பதால் கடந்து போவோம்.

எந்த தேர்தல் அமைப்பாக இருந்தாலும் அதில் அறவே குறைகள் இல்லாதிருப்பது அரிது. அந்த அடிப்படையில் அமெரிக்க தேர்தலை சீர்படுத்த முயற்சிகள் தொடரும். ட்ரம்ப் & பைடன் பலப்பரீட்சை அமெரிக்க தேர்தலில் இதுவரை காணாத வெப்பத்தை உருவாக்கி இருக்கிறது. தேர்தலின் முடிவு புதிய சவால்களுக்குக் கதவு திறக்க வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்)

நவம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com