அப்பழுக்கில்லா அழகின் மெளன மொழி!

ஶ்ரீதேவி
ஶ்ரீதேவி
ஶ்ரீதேவி
Published on

எம். ஜி.ஆராகவும் சிவாஜியாகவும் 1980களில் இருந்தது போதும். இனிமேல் ரஜினியாக அல்லது கமலாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது ஸ்ரீதேவிக்காகத்தான். பள்ளிப்பருவத்தில் அவர் அழகைக் கண்டு வியந்து காய்ச்சல் கொண்டு அலைந்திருக்கிறோம்.

மும்பையில் நான்காம் வகுப்பில் தேறி ஐந்தாம் வகுப்புக்கு அரை மணி நேர தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு மாற்றலாகிப் போனதற்குப் பின்னர் பஸ்களிலும், லோக்கல் மின் ரயில்களிலும் பயணம் செய்யும் தைரியம் வந்த காலம்.

நடந்து அடையும் தொலைவில் இருந்த கோரேகான் ஃபிலிம் சிட்டிக்கு படப்பிடிப்புகள் காண சீனியர் அண்ணன்களுடன் பள்ளிச் சீருடையில் போய் ஷூட்டிங் பார்த்தோம். ‘‘மிஸ்டர் இந்தியா'' என்ற திரைப்படப் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி அவர்களை முதன் முதலில் நேரில் பார்த்தது. வீட்டிற்கு வந்து சேரும் முன் அவர் மீதான காதலின் உச்சத்தில் இருந்தோம்.

எங்களுக்கு முந்தைய தலைமுறை ஆண்கள் தாங்கள் விருப்பப்படும் பெண் ஸ்ரீதேவியைப் போல் இருக்க வேண்டும், உடுத்த வேண்டும், மழலையாய் கொஞ்சிப் பேச வேண்டும், குறும்பு செய்ய வேண்டும் என விருப்பப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அப்படியே வாழ வேண்டுமென விரும்பி இருக்கிறார்கள்.  

போக்கிரி ராஜா திரைப்படத்தில் ரஜினிக்கு தேநீர் கொடுக்க வரும் காட்சியில் மாடர்ன் உடையில் மூக்குத்திப் போட்ட அழகைக் கண்டு உடல் நடுங்கியிருக்கிறது. அந்த நடுக்கத்திற்காக அடிக்கடி வீடியோ தியேட்டர்களில் அந்தப் படத்தை பலமுறை பார்த்திருக்கிறோம்.

பத்மா வீடியோ, வினோஸ் வீடியோ, மகேஷ் வீடியோ, கலா வீடியோ என்று அகன்ற திரை கொண்ட டிவிகளை வைத்து கேசட்களில் படம் போடுவார்கள். சிறுவர்களுக்கு 50 பைசா தான் டிக்கெட். அப்புறம் ஒரு ரூபாய் ஆனது. படத்தில் எங்கள் விருப்பம்,  நாயகர்களை விட நடிகை ஸ்ரீதேவியாக இருக்க வேண்டும் என்பதே.

ஶ்ரீதேவி
ஶ்ரீதேவி

புஷ்பா வீடியோ தியேட்டரில் ஸ்ரீதேவி நடித்த அனைத்துப் பாடல்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பாடல் கேசட் தயார் செய்திருந்தார்கள். சனிக்கிழமை பள்ளிக்கு அரை நாள் தான். நாங்கள் பத்து பதினைந்து பேர் போய் 11 மணி காட்சி எதுவாக இருந்தாலும் சரி பத்து மணிக்கே போய் டிக்கெட் எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஸ்ரீதேவி நடித்த பாடல்களைப் பார்த்திருக்கிறோம். அந்த கேசட்டை நூறு ரூபாய் கொடுத்து எங்கள் குருப்பில் பணக்காரப் பையன் ராஜேந்திரன் வாங்கினான் என்பது வேறு கதை.

ஸ்ரீதேவி மற்றும் கமல் இடையேயான நட்பு பற்றி அண்ணன்கள் பேசுகையில் கோபம் மிகும். ஆனால் அமைதியாக கோபத்தைக் கொன்றுவிட்டு காதலில் இன்னும் ஊறிப் போயிருக்கிறோம்.

சந்திரிக்கா சோப்புக் கட்டி பட்டர் பேப்பரில் சுற்றி பேக் செய்யப்பட்டிருக்கும். எங்கள் வீட்டில் லைஃப்பாய் தான் வாங்கப்படும் என்றாலும் அக்கம்பக்கத்தில் வயதுக்கு வந்த அக்காகள் எல்லாம் சந்திரிக்கா சோப்பு தான் வாங்குவார்கள். அந்த பட்டர் பேப்பரை எடுத்து மடித்த துணிகளுக்கு இடையில் வைக்க வாசனைமிக்கதாக இருக்கும் ஆனால் நான் பயந்தரில் ஸ்டீல் கம்பெனிகளில் வேலை செய்யும் அண்ணன்களின் பொழுது போக்கிற்காக வாங்கும் சினிமா பத்திரிக்கைகளிலிருந்து கிழித்த ஸ்ரீதேயின் புகைப்படங்களை சந்திரிகா சோப்பு காகிதத்தில் சேர்த்து பாடப் புத்தகங்களின் பக்கங்களில் வைத்துக் கொள்வது வழக்கம். பள்ளி இடைவேளைகளில் நோட்டு முழுவதும் வாசனை மிகு பட்டர் பேப்பருடன் சேர்த்து ஒட்டப் பட்ட புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.

ஒருமுறை சயின்ஸ் பிராக்டிகல் நோட்டு முழுவதும் பக்கத்திற்கொரு புகைப்படம் என்று வைத்துப் பார்த்து வாழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த பொறாமைப்பட்ட நண்பர்கள் டீச்சரிடம் போட்டுக் கொடுக்க, உஷா டீச்சருக்கும் எனக்குமான காதலில் விரிசல் வந்து காதலும் முறிந்து போன கதையெல்லாம் வேறு.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைபர் சிட்டி பல்லங்காடிக் கடையில் பழங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது அருகில் எக்ஸ்கியூஸ்மி என்று நகர்ந்த அந்த அதிசயப் பெண் ஸ்ரீதேவி என்று தங்கை சத்தமிட, ‘‘நல்லா இருக்கீங்களா ?'' என்று பேசத் துவங்கினார். ஹைபர் சிட்டியே எங்களை வாய்ப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது. ‘‘எங்க அண்ண, உங்கள லவ் பண்ணுது'' என்று தங்கை காட்டிக் கொடுக்க ‘‘தேங்க்ஸ்'' என்று சிரித்து தோளில் தொட்டார். அந்த விஷயத்தை சில ஆண்டுகள் கழித்து அவரிடம் எடுத்துச் சொல்லவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

அது இங்கிலிஷ் விங்லிஷ் திரைப்படத்தின் டப்பிங்கின் போது. இந்த முறை  பதினோரு நாட்கள் தினமும் நான்கு மணி நேரம் ஸ்ரீதேவியுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. டப்பிங் ஸ்டுடியோவில் ‘உட்கார்ந்து' டப்பிங் பேசாமல் நின்று கொண்டு பேசுவதை விரும்புவார். நடித்த காட்சிகளைத் தன் குரலால் இன்னும் மெருகேற்றுவார்.

டப்பிங் வந்த முதல் நாளில் தேநீர் இடைவேளையில் அவர் கொண்டு வந்திருந்த பட்டர் பிஸ்கெட்டுகளைப் பகிர்ந்தார். அவர் வாங்கி வந்த பிஸ்கெட்டுகளின் சுவை பற்றி எல்லோரும் சிலாகித்துச் சொல்லவே அவர் தினமும் அப்படி நிறைய வாங்கிக் கொண்டு வந்தார்.

தென்னிந்திய திரைப்பட அனுபவங்கள் குறித்து அதிகம் பேச விரும்பாதவராக இருந்தார். அது குறித்து கேள்விகள் கேட்கையில் சில கேள்விகளுக்கு பதில்களும் பல கேள்விகளைக்கு ஆழமான புன்னகையும் பதிலாக கொடுக்கையில் அவர் கண்கள் கோடி வரிகளை கத்திச் சொல்வது போலிருக்கும்.

யஷ் சோப்ரா இயக்கத்தில் சாந்தினி (1989) திரைப்படம் அவரை இந்தியா முழுவதும் கொண்டாடச் செய்தது. கனவுக்கன்னி என்பதையும் விட அவர் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் அங்கத்தினர் போல் ஆகி விட்டார். உடையலங்காரமும் நடனமும் என அவரைப் பின்பற்றத் துவங்கி இருந்தது பெண்கள் சமூகம்.

பின் போனி கபூருடன் திருமணத்திற்கு பின் அமைதியானவர் ஒரு தாயாகவே வலம் வந்தார். ஸ்டுடியோக்களில் பார்க்கும் போதெல்லாம் எழுந்து நிற்கும் எங்களுக்கு நிதானமான ஒரு புன்னகையை மட்டுமே கொடுத்துப் போவார். அவர் இன்னும் பழைய குறும்புக்காரிதான் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் அவர் நிறையவே மாறியிருந்தார். ஒரு பெரும் அமைதி அவருக்குள் குடி கொண்டது.

அவரைக் கனவுக்கன்னியாக காதலியாக நினைத்த எங்களுக்கெல்லாம் அத்தனை காதலும் மரியாதையாக மாறியிருந்தது. இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தைத் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு வரத் தொடங்கினார். ‘‘மாம்'' திரைப்படத்தில் அவர் நடிப்பு போற்றுதலுக்குரியது. இரண்டு இளம் பெண்களுக்கு தாய் என்பதைக் காட்டிலும் அவருடைய இளமைப்பருவ அனுபவங்கள் அவரை மாம் திரைப்படத்தில் அந்தப் பாத்திரத்தை முழுமையாக்கித் தர முடிந்திருந்தது.

சமீப காலமாக அவருக்குள் அதீத அமைதி நிரம்பிக் கொண்டிருந்தது. அது அவர் வாழ நினைத்த வாழ்க்கை கிடைக்காமல் போனதாலோ இல்லை வேறு காரணங்களாக இருக்கலாமோ என்று சந்தேகங்களும் பேச்சுகளும் ஸ்டுடியோக்களில் ஒலித்துக் கொண்டிருக்கத்தான் செய்தது.

அவருடைய புற அழகு பற்றியே பேசும் பலருக்கு அவருடைய மனசு பற்றி தெரியாமல் இருக்கலாம். அது பதின் வயதுகளிலேயே வளராமல் நின்று விட்டது. ஸ்ரீதேவி தன்னிலை மறந்து பேசும் போது அது வெளிப்படவே செய்தது. தான் அதிகம் பேசிவிட்டோமோ என்று அவர் அமைதிக்குள் பிரவேசிக்கையில் தான் நமக்குப் பல விஷயங்கள் விளங்கும்.

உலக அளவில் புகழ்பெற்றிருக்க வேண்டிய நடிப்புத் திறன் இருந்தும் இந்தியத் திரைப்படங்களைத் தாண்டாமல் போனதற்கான காரணங்களை அவருடைய மவுனமொழி காலாகாலத்துக்கும் பேசிக் கொண்டிருக்கும். அவருடைய அப்பழுக்கில்லா அழகைப் பற்றி நாமும் பேசிக் கொண்டிருக்கலாம்.

 (மதியழகன் சுப்பையா, மும்பையில் வளர்ந்தவர். இந்தி, தமிழ் திரையுலகில் பணிபுரிபவர்)

மார்ச், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com