உலகிலேயே அபாயகரமான கண்ணி வெடிகள் எங்கிருக்கின்றன என்று கூகுளினால் சோமாலியா, மொசம்பிக், போஸ்னியா என்று வரிசையாக நாடுகளின் லிஸ்ட் கொடுக்கிறது. ‘அட அதெல்லாம் தப்புங்க, எங்க ஆபீஸ்லதாங்க கண்ணிவெடிகளும் ஜாஸ்தி கன்னி வெடிகளும் ஜாஸ்தி’ என்பார்கள் அய்யனாவாரம் கம்பெனி முதல் ஐடி கம்பெனிவரை இருக்கும் ஊழியர்கள். இந்தக் கண்ணி வெடிகளை - கவனிக்க கன்னி வெடிகள் அல்ல - கடப்பது எப்படி என்பதற்கு இதோ ஒரு பயனீட்டாளர் பிரதி.
அடையாளம் காணுதல்:
இதுதான் அலுவலகத்தில் சேர்ந்ததும் செய்ய வேண்டிய முதல் பணி. அலுவலக கண்ணி வெடிகளை அடிப்படையில் நான்கு விதமாக பிரிக்கலாம்.
1. போகிற போக்கில் போட்டுத் தள்ளும் பொறாமை வெடிகள்:
இது கொஞ்சம் ஆபத்தான வெடி. ஏன் ஆபத்து என்றால் இது வெடி என்று அடையாளம் காணவே சில மாதங்கள் ஆகிவிடும். நீங்கள் மக்கு பிளாஸ்திரியாக இருந்தால் ஜென்மத்துக்கும் கண்டுப்பிடிக்க முடியாது. இந்த ஆசாமிகள் மிக சகஜமாக உங்களிடம் பழகுவார்கள். சிரித்துப் பேசுவார்கள். காபி குடிக்க அழைத்து காசு கூட கொடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் அப்படியே நம்பிவிடாதீர்கள். உஷார். அசோக் என்ற அக்கவுண்ட்ஸ் இளைஞனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பாருங்கள். அவன் நல்ல வேலைக்காரன். அதுவே அவன் பக்கத்து சீட்காரனுக்கு பொறாமை. ஒரு நாள் மேலதிகாரி ரவுண்ட்ஸ் வரும்போது, பக்கத்து சீட்காரன் அசோக் பற்றி இப்படி சொன்னான் ‘ அசோக் சூப்பர் சார். பிரமாதமா வேலைப் பார்க்கிறார். ரொம்ப சுறுசுறுப்பு’ இதைப் படிக்கும்போது நல்லாதானே சொல்லியிருக்கிறான் என்று நினைக்கத் தோணும்.ஆனால் அதற்கடுத்து வரும் வரிதான் முக்கியமானது. ‘ அதுவும் மத்தியானம் ஒரு அரை மணி நேரம் சீட்லேயே உக்காந்து தூங்கிட்டு அப்புறம் வேலை செய்வார் பாருங்க ஜெட் வேகம்’ என்றான். எல்லாம் பாராட்டுதான். நடுவில் வந்த அரை மணிநேர தூக்கத்தை தவிர. முதலாளி மனதில் எது நிற்கும்? இது தான் போகிற போக்கில் போட்டுத் தள்ளும் பொறாமை வெடி.
2. ஆதரவு கரம் நீட்டும் ஆப்பு வெடி:
இதுவும் அபாயகரமானதுதான். இந்த டைப் வெடிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பது போலவே இருப்பார்கள். அலுவலகத்தில் பணி புரியும் போது ஆயிரம் பிரச்சனைகள் வரும். அதற்கு யாரிடம் ஆறுதல் பெறுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் முலாயம் சிங் போல் சட்டென்று வந்து நிற்பார்கள். ஆனால் முலாயமை நம்பலாமா? அதே போல் இந்த ஆப்பு வெடிக்காரர்களையும் நம்பக்கூடாது. ‘ஒண்ணும் கவலைப்படாதிங்க, நான் பாஸ் கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்ணிடறேன். உங்க பிரச்சனை என்னனு சொல்லுங்க’ என்று தனியே அழைத்துச் சென்று பரிவுடன் விசாரிப்பார்கள். நீங்கள் சோல்லும் தகவல்கள் உங்களுக்கே எதிராக அமைந்து விடும். உதாரணமாக ஒருவருக்கு எதிராக நீங்கள் கருத்து சொல்லுகிறீர்கள் என்றால் அவரிடமே இந்த ஆப்பு ஆசாமி இதைச் சொல்லி இரண்டு பேருக்கும் இடையே பகையை வளர்த்துக் கொண்டிருப்பார். போதாதற்கு இந்தத் தகவல்களை பாஸுக்கும் சொல்லி இருவருக்குமே ஆப்பு வைத்துக் கொண்டிருப்பார்.
3. ஆளை அமுக்கும் அமைதி வெடி:
இ.பூ.பா.கு என்று இவர்களைச் சொல்லலாம். அதாவது இந்தப் பூனையும் பாலை குடிக்குமா என்ற வார்த்தைகளுக்கு பொருந்துபவர்கள் இவர்கள். மிக மிக அமைதியாக இருப்பார்கள். யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களிடம் எச்சரிக்கை என்கிறார்கள் அலுவலக ஆய்வாளர்கள். இவர்களில் பலர் மேலிடத்து ஒற்றர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல்கிறது ஒரு ஆய்வறிக்கை. அதனால் இவர்கள் இருக்கும்போது அதிகம் பேசாதீர்கள். முக்கியமாக மேலதிகாரிகளின் முட்டாள்தனத்தைப் பற்றி.
4. வாயை அலப்பும் லூஸ் டாக் வெடி:
இவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களால் வாயை மூட முடியாது, பேசிக் கொண்டே இருப்பார்கள். எல்லா விஷயத்தையும் எல்லோரிடமும் பேசுவார்கள். ஜாலியாக பேசுகிறார்களே என்று நீங்களும் ஜாலியாக பேசி விட முடியாது. நீங்கள் பேசியது உடனடியாக மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நீங்கள் மற்றவர்களைப் பற்றி அடித்த கமெண்டுகள் உடனடியாக உங்களுக்கு எதிராக திரும்பும் அபாயம் இருக்கிறது. அதனால் இவர்களிடம் அளவோடு பழகி வளமோடு வாழுங்கள்.
எல்லோருமே இந்த நாலு விதத்தில் அடங்கிவிடுகிறார்களே அப்படியானால் அலுவலகத்தில் யாரிடம்தான் பழகுவது, பேசுவது என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அலுவலக அரசியலில் வெற்றிகரமாக நீந்துவதற்கு சில எளிய வழிகள் இருக்கின்றன.
1. உழைப்பு
இந்த வார்த்தைதான் நிலைத்து நிற்கும் எத்தனை பேர் உங்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் குறை கூறினாலும் உங்கள் உழைப்பால் நிறுவனத்துக்கு லாபம் வந்தால் நிறுவனத்தில் நீங்கள் வி.ஐ.பிதான். எனவே உழையுங்கள்.
2. தேவையில்லாமல் பேசாதீர்கள்
தேவையில்லாத பேச்சுக்கள்தான் பல நேரம் வம்புகளில் கொண்டு போய் விடுகிறது. அதனால் அலுவலகத்தை பற்றி பேசாமல் இந்த வாரம் முட்டை விலை என்ன போன்ற பயனுள்ள பேச்சுக்களில் ஈடுபடலாம்.
3. புலம்புவர்களைத் தள்ளி வையுங்கள்
புலம்புவது ஒரு தொற்று நோய். உடலுக்கும் மனதுக்கும் ஆகாது. பக்கத்திலிருப்பவர் புலம்ப ஆரம்பித்தால், காது வலி என்று காதுக்குள் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள்.
4. பிரச்சனைகளைப் பரப்பாதீர்கள்
அலுவலகங்களில் பிரச்சனைகள் வருவது இயல்பு. ஆனால் அந்தப் பிரச்சனையை சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்த்துக் கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அவரைவிட்டு விட்டு மற்றவர்களிடம் அதைப் பரப்பிக் கொண்டிருப்பது ஈழப் பிரச்சனையைத் தீர்க்க அரை மணி நேர உண்ணாவிரதம் போன்றது, பயன் தராது.
5. கிசுகிசுக்களைக் கிள்ளிப் போடுங்கள்!
‘அவ அவனோடு சினிமா போனாளாம், ரெண்டு பேரும் சினிமாவே பாக்கலையாம்...’ என்று யாராவது ஆரம்பிக்கும் போது கேட்க சுவராசியமாகத்தான் இருக்கும். ஆனால் வேண்டாம். கிசுகிசுக்கள் பின்னால் தாக்கும் அபாய கூடங்குளங்கள்.
6. கோஷ்டி சேர்க்காதீர்கள்!
அலுவலகப் பணியில் தலையாய மந்திரம் இது. கோஷ்டி சேர்த்தால் என்னவாகும்? என்று எதிர் கேள்விகள் கேட்பவர்கள் கொஞ்சம் தமிழக காங்கிரஸை நினைத்துக் கொள்ளுங்கள்.
7.கை கொடுங்கள்!
உங்கள் சக ஊழியர்களுக்கு உதவ நீங்கள் கை கொடுத்து உதவுங்கள்.அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். கை கொடுக்கிறேன் என்று மேஜைக்கு கீழ் கை நீட்டீவிடாதீர்கள்.அனுப்பிவிடுவார்கள்.
8. குறை பேசாதீர்கள்!
எல்லா அலுவலகத்திலும் அதிகாரிகளையும் அலுவலகத்தையும் குறை கூறும் ஊழியர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுடன் சேர்ந்து கும்பலோடு கோவிந்தா போடலாம் என்று நினைக்காதீர்கள். ஒரு கட்டத்தில் எல்லோர் குரலும் அடங்கிவிடும் உங்கள் குரல் மட்டும் பலி ஆடு போல் தனித்து ஒலிக்கும்.
இந்த எட்டு பழக்கங்கள் போதும்....கண்ணி வெடிகளை கடந்து விடலாம்.
என்னய்யா இது, இதை செய்யாதே அதை செய்யாதேன்னுட்டு ஆபீஸ் போனா அப்போ என்னதான் செய்யறதுனு கேக்குறீங்களா அதற்கு ஒரே பதில்.......
ஒழுங்காக வேலையை செய்யுங்கள். அது போதும்.
அக்டோபர், 2012.