அன்பெனும் தனி ஊசல்!

நினைவின் மடியில்
அன்பெனும் தனி ஊசல்!
Published on

நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்' கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக் கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதை கட்டுரைகளாக நீண்டு கொண்டிருந்தன. தட்டச்சு செய்வது ஞாயிற்றுக் கிழமை விடுமுறையின் மதியத்தில் ஆரம்பித்து நடு இரவு வரை நீளும். திங்கட் கிழமை அந்திமழை இணைய இதழில் வெளிவரும்.

ஒருநாள் அதிகாலையில் தொலைபேசி அழைத்தது. ''வணக்கம் கோபால், நான் கல்யாணி அண்ணன் பேசறேன். நான் நாற்பது வருடமாக எழுதியதை நீ ஒரே கதையில் காலி பண்ணிட்டே, எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தெரியலைப்பா,'' என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். தூக்கக் கலக்கத்தில் எதைக் குறித்துச் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. நேற்று எழுதினதைப் படித்திருப்பாரோ என்று அவசர அவசரமாக இணையத்தைத் திறந்து பார்த்தேன். ஆம் கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார்கள். அவரின் வார்த்தைகளின் ரீங்காரம் அடங்கவில்லை. என்ன இது. அவரது கதைகள் எங்கே. இது எங்கே. மனம் சந்தோஷமடைந்தாலும், சமாதானமாகவில்லை. ஆனால் அவர் எப்போதும் அப்படித்தான். பாராட்டுவதென்றால் மனதாரப் பாராட்டி விடுவார். சமயத்தில் வீடு தேடி வந்து கூடப் பாராட்டி இருக்கிறார். குறைகளை, 'இப்படி இருந்தா இன்னும் நல்லாருக்கும்' என்கிற மாதிரியில், சொல்லி விடுவார். ஆனால் இப்படி உணர்வு மீதூற, 'நான் அர்த்தப் படுத்திக் கொண்டதே, நான் சொன்னது' என்ற பாணியில் சொன்னதில்லை. காதில் அவரது வார்த்தைகள் ஒலிக்க, மனதில் முகம் நிழலாட, நினைவு பின்னோக்கிப் போனது. அவரது 'அன்பகம்' வீட்டு மாடி, நினைவில் அதன் வளமையான வெளிச்சத்துடன் விரிந்தது. நான்கு ஐந்து சன்னல்கள், நடுவில் அகல ஊஞ்சல், அழகான பாவூர்ச் செங்கல் பாவிய தரை என உயிர்ப்புடன் இருக்கும் விசாலமான மாடி.

 நன்றாக நினைவிருக்கிறது, எனக்கு பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். பொருட் காட்சியில், திராவகம் வீசப்பட்ட சிவாஜி கணேசன் முகத்தில் கட்டுப் போட்ட பாவ மன்னிப்பு கட் அவுட் வைத்திருந்தார்கள். பேண்டேஜ் துணியில் செருகியிருக்கும் சேஃப்டி பின் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து என்னப்பா 'ஊக்கு' அவ்வளவு அழகா வந்திருக்கேன்னு பாக்கியா என்று ஒரு கரம் தோளைத் தொட்டது. கல்யாணி அண்ணன். ஆமாண்ணேன்,ரொம்ப நேச்சரலா இருக்கு என்றேன். எங்களுக்கு விளையாட்டு மடமான, தெருவின் பிள்ளையன் கட்டளை ஆபீஸ் சுவரில், அவர் கரியால் வரைந்திருந்த 'எல்லோரும் கொண்டாடுவோம்' பாவ மன்னிப்பு சிவாஜியும், ஸ்கூல் நோட்டுத் தாளில் பென்சில் ஸ்கெட்சாக, துப்பாக்கியை வைத்து திரண்டு வரும் கண்ணீரைத் துடைக்கும் பாசமலர் சிவாஜியும், இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்கள்.

அடிப்படையில் அவர் ஒரு கவிஞர் என்று என் அபிப்ராயம். ஓவியப் பார்வையும், கவி வரிகளும்தான் அவரின் கதைகளைத் தனித்துவம் மிக்கதாக்கி இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் அவரிடம் விளையாட்டாகச் சொல்வேன், எனக்கு ஓவியத்தைக் கற்றுத் தராமல் விட்டு விட்டீர்களே என்று. ஏன், படித்துக் கொள்ள வயசா இல்லை என்பார்.

அவ்வப்போது, பத்துப் பதினைந்து நாள் இடை வெளியில் என் கவிதை நோட்டைக் கொண்டு போய் அவரிடம் கொடுப்பேன். சில திருத்தங்கள் சொல்லுவார். சில சமயம், மேஜை மேல் வைத்து விடு, அப்புறமாகப் படிக்கிறேன் என்பார். அடுத்த முறை போகையில் அதில் அவருக்குப் பிடித்த வரிகளை ஓரத்தில் கோடு போட்டு வைத்திருப்பார்.ஒரு முறை கொண்டு போயிருந்த போது ஊஞ்சலில் படுத்துக் கொண்டே படிக்க ஆரம்பித்தார். படித்து விட்டு ஒன்றுமே பேசாமல் இருந்தார்.என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க என்று தயக்கத்துடன் கேட்டேன். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, எப்படி திடீர்ன்னு இப்படி எழுத ஆரம்பிச்சிட்டே, கணபதியண்ணன் சொன்ன மாதிரி தூக்க மாத்திரை சாப்பிட்ட விளைவோ என்று லேசான கேலியுடனும் சொன்னார். கணபதி அண்ணன் என் சில கவிதைகளைப் படித்து விட்டு, ''இந்தப் பாவியின் தலையில் எந்த மின்னல் வந்து கவிதையின் தலைப்புகளைச் சொருகிப் போகிறது, அவன் சாப்பிட்ட தூக்க மாத்திரைகளா?'' என்று அவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதை என்னிடமும் காண்பித்தார்.

அவருக்கு வரும் சில கடிதங்களை என்னிடம் காண்பிப்பார். நானாகவும் வண்ண நிலவன், வல்லிக்கண்ணன், போன்ற இலக்கிய அன்பர்கள் நண்பர்களின் கடிதங்களை எடுத்துப் படிப்பேன். ஒன்றும் சொல்ல மாட்டார். அப்படியெல்லாம்தான் என்னை வளர்த்தெடுத்தார் வண்ணதாசன். அவருடைய கதை கவிதைகளைப் போலவே, அவருடைய கடிதங்கள் அற்புதமானவை. நாமே நிர்ணயித்த ஒரு சட்டகத்திற்குள் நின்று கதை எழுதுவது கொஞ்சம் சுதந்திரக் குறைவானதுதான். அதை விட கடிதம் எழுதுவது, ஒரு வகையில் சுதந்திரமானது. அப்படி உரிமையும், சுதந்திரமும், அன்பும் போட்டியிடும் அவரது கடிதங்களையெல்லாம் அதிகமாகப் படிக்க வாய்த்தது எங்களுடைய பெரும் பேறு.

சமயத்தில் என் வாழ்க்கை கொஞ்சம் தடம் புரண்டு விட நேர்கிற நேரத்தில் ஏதோ ஒரு சக்தி, ஒரு சிறிய ராக்கெட்டைச் செலுத்தி என்னை என் சுற்று வட்டப்பாதையில் மீண்டும் வைத்து விடுவதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். அப்படி ஒரு மகாப் பெரிய சக்தி கல்யாணி அண்ணன். நான் எம்.ஜி.ஆர் மன்றங்களின் பின்னால் அலைந்து, தியேட்டர்களில் காத்துக் கிடந்து, வசூல் நோட்டீஸ்கள் அடித்து தமிழகமெங்கும் உள்ள மற்ற மன்றங்களுக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து வாங்கி, ஒரு வகையான தேக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது, நாலு வீடு தள்ளி இருக்கிற கல்யாணி அண்ணன் கடிதம் எழுதியிருந்தார். 'உன் அப்பாவின் மனோகரமான நம்பிக்கைகள் உன் மீது கவிந்திருக்கையில் நீ அவற்றைச் சிதற அடித்து விடாதே. ரசிகனாய் இருப்பது வேறு... இப்படி நோட்டுப் போட்டு வசூல் குறித்துக் கொண்டிருப்பது வேறு..' என்று எழுதியிருந்தார். அப்போது அதைக் கேட்டுக் கொள்கிற மனநிலையையும் நான் அவளால் பெற்றிருந்தேன். ஆக, ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இப்படிப் பல சந்தர்ப்பங்களில் ஆசானான அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். என் அக வாழ்க்கையின் சில சிக்கல்களுக்குக் கூட அவரிடம் தீர்வு பெற்றிருக்கிறேன். நான் என்றில்லை எத்தனையோ பேருக்கு அவர், நல்லாசான், நல்லமைச்சன், நல்ல நண்பன்.

வண்ணதாசனைப் பொறுத்து அவர் தன்னுடன் பழகுகிற எல்லோருக்கும் தனிப்பெரும் அன்புடன் நெருக்கமானவர். அன்பான தனி ஊசல் ஒன்று அவருக்கும் ஒவ்வொருவருக்கும் இடையே நிற்காமல் ஆடிக் கொண்டே இருக்கும். ஆனால் அதன் அலைவுகள் நிர்ணயிக்கும் 'நேரம்' என்பதோ யாவருக்குமானது. தமிழ் இலக்கியத்திற்கானது.

இன்று 73 முடிந்து நாளை 74 தொடப்போகும்
கல்யாணி அண்ணனுக்கு இனிய வாழ்த்துகள்!

(முகநூலில் கவிஞர் கலாப்ரியா, வண்ணதாசனுக்கு எழுதியிருந்த வாழ்த்துக் கட்டுரையின் சில பகுதிகள்)

logo
Andhimazhai
www.andhimazhai.com