அந்திமழை விழா

அந்திமழை விழா
Published on

அந்திமழை ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா உற்சாகமாகத் தொடங்கி உச்சகட்ட அனுபவ மற்றும் அறிவுப்பரிமாறல் கொண்டாட்டமாக நிறைவடைந்தது.

அக்டோபர் 28 சனிக்கிழமை  மாலை அந்திமழை புதிய வெளியீடுகளான ஆத்மார்த்தி எழுதிய புலன்மயக்கம் நூலின் இரு பாகங்கள், நீ பாதி நான் பாதி- மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள், கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை, மனசுக்கு நெருக்கமான 40 படங்கள் ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. ஆத்மார்த்தியின் புலன் மயக்கம் தொடர்பான தங்கள் வாசிப்பனுவங்களை லதா அருணாச்சலம், தென்றல் சிவகுமார் ஆகிய இருவரும்  பகிர்ந்துகொள்ள விழா இனிமையாகத் தொடங்கியது. விழா நடந்துகொண்டிருக்கும் போதே  இனிய நிகழ்வாக நடிகர் இளவரசு, ரோகிணி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக மேடையேறி நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தனர்.

அந்திமழை நிறுவிய ஆசிரியர் அந்திமழை இளங்கோவன் பேசுகையில், “ இந்த நிகழ்வில் வெளியிடப்படும் நூல்களில் பெருமளவுக்கு வாழ்க்கை அனுபவங்கள் பகிரப்பட்டுள்ளன. திரைப்படக் கலைஞர்களின் வாழ்க்கையே ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு கதைகள் நிரம்பியதாக இருக்கிறது” என்று சொல்லி கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை என்ற நூலில் வெளியான தம்பி ராமையாவின் நேர்காணலைப் பற்றி பகிர்ந்துகொண்டார். ஆத்மார்த்தியின் புலன்மயக்கம் தொடர் நூல் வடிவம் பெறுவது, நவீன கால தம்பதிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உதவுகிற நீ பாதி நான் பாதி நூல், மற்றும் தமிழர் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் அழகான படங்களைப் பதிவு செய்திருக்கும் மனசுக்கு நெருக்கமான 40 படங்கள் நூல் என இவற்றை விரிவாக அறிமுகம் செய்தார்.

தான் சின்னவயதில் பெண்கள் ஆண்கள் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்ட அரங்குகளில் திரைப்படம் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் ஆர்.ரவிக்குமார், மனசுக்கு நெருக்கமான 40 படங்கள் நூல் எல்லா காட்சி ஊடகக்கலை மாணவர்களாலும் படிக்கப்படவேண்டிய புத்தகம் என்று குறிப்பிட்டார்.

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், நூல்களுக்கும்  தனக்குமான உறவைக் குறிப்பிட்டார். கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை நூலை ஐந்து மணி நேரம் வாசித்ததாகவும் அந்த ஐந்து மணி நேரங்களும் ஐந்து  மணித்துளிகளாகக் கரைந்தன என்றார். அந்திமழையில் வந்த தனது நேர்காணல், தொகுப்பு நூலிலும் வந்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட நடிகர் இளவரசு, அந்த நேர்காணல் ஒரு திரைப்படக் கல்லூரிக்கு தான் சென்றிருந்தபோது அங்கு வாசிக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்தார். எழுத்தாளர் ஆத்மார்த்தி என்ற பெயரை முகநூலில்  ஆதார் கார்டு என்றே வாசித்து வந்ததாகக் கிண்டலாகக் குறிப்பிட்டபோது அரங்கத்தில் பெரும் சிரிப்பலை. நடிகை ரோகிணி பேசுகையில் ஆத்மார்த்தியின் புலன்மயக்கம் நூலை வாசித்தவுடனே உடனடியாக அவரை அழைத்துப்பேசத் தூண்டும் விதத்தில் அந்த நூல் சிறப்பான விதத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இயக்குநர் வசந்த் எஸ் சாய் பேசும்போது ஏராளமான செய்திகளைத் தன் திரை உலக அனுபவத்தில் இருந்து பகிர்ந்துகொண்டார். “கேளடி கண்மணி படத்தில் எஸ்பிபியிடம் மூச்சுவிடாமல் பாடவேண்டும் என்றேன். அப்படியானால் படத்தை யாரை வைத்து முடிப்பீங்க என்று பதிலுக்குக் கேட்டார். மூச்சுவிடாமல் பாடுவது என்பது அவ்வளவு

சிரமமானது. அந்த பாடல் எல்லா அரங்கங்களிலும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பாடலின் புகழையே நான் சிலுவையைப் போல் சுமந்தேன். எல்லா படங்களிலும் வித்தியாசமான  பாடல்களை என்னிடம் எதிர்பார்த்தார்கள். கேளடி கண்மணி,  படத்துக்கு மாலன் விமர்சனம் எழுதியபோது என் மீது உள்ள கரிசனத்தால் குட்டி பாலசந்தர் உருவாகிவிட்டார் என்று எழுதிவிட்டார். எங்கள் டைரக்டர் அதைப் படித்துவிட்டு மூன்று நாட்கள் பேசவே இல்லை.ஆனால் எனக்கு அந்த வரி மிகவும் பிடித்திருந்தது,” இந்த ரீதியில் நக்கலும் நையாண்டியுமாக  வசந்த் பேசிக்கொண்டே போக அரங்கம் சிரிப்பில் குலுங்கியது.

மாலன் பேசுகையில்,  “எந்த  நூல் வெளியீட்டு விழாக்களுக்கும் நூல்களைப் படிக்காமல் நான் வருவதில்லை, அதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். இந்த ஐந்து நூல்களில் நான்கை எனக்கு அனுப்பியிருந்தனர் அவற்றை வாசித்தேன்.  அருமையான அனுபவங்களின் தொகுப்பாக இவை அமைந்துள்ளன.  நீ பாதி நான் பாதி நூலில் பாரதிமணி எழுதியிருக்கும் கட்டுரை, சாலமன் பாப்பையாவின் துணைவியாரைப் பற்றி அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஆகியவை நெகிழ்ச்சியானவை. ‘கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை’ புத்தகம் முழுக்க சினிமாவைவிட  அழகான வாழ்க்கை பதிவாகி உள்ளது.  நண்பர் பாலுமகேந்திராவைப் பற்றி இரு கட்டுரைகள் உள்ளன. அவற்றைப் படிக்கையில் பாலு பற்றிய ஞாபகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இலக்கியம் படித்து சினிமா எடுத்துக்கொண்டிருந்த ஒரு தலைமுறை இங்கே இருந்திருக்கிறது. பாண்டியராஜன் தன் குருவான பாக்கியராஜைப் பற்றி எழுதியிருக்கிறார். பாண்டியராஜன் க்ளாப் அடிக்கும் காட்சிகளைப் பார்த்து அனைத்திலும் ஒரே சட்டையை அணிந்திருக்கிறார் என்பதை பார்த்து உன்னிடம் எத்தனை சட்டை இருக்கிறது என்று கேட்டு புதுச்சட்டைகள் வாங்கித்தருகிறார். பாக்கியராஜ் பற்றி புதிய பிம்பத்தை இது தருகிறது.  சுரேஷ் சங்கையா என்ற இளம் இயக்குநர்  கல்லூரியில் படிக்கையில் இரண்டாம் ஆண்டில் 18 அரியர். அவரது துறைத்தலைவர் உனக்கு பிரியமான விஷயங்களைப் படி என்கிறார். அப்போது அவர் வாரப்பத்திரிகைகளைப் படிக்கிறார். அவற்றுடன் அவர் கி.ராவைப் படிக்கிறார். அடுத்த ஆண்டிலேயே அவர் 18 அரியர்களையும் தூக்கினேன் என்கிறார். கி.ராவைப் படித்து அரியர்களைப் பாஸ் செய்த இந்த அனுபவம் வேறு யாருக்கும் வாய்த்திருக்குமா தெரியவில்லை...” என்றார். இதுபோன்ற பல வாசிப்பனுவங்களை அவர் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஆத்மார்த்தி ஏற்புரை ஆற்றினார்.

நவம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com