அந்த மூன்று திருநங்கைகள்

Published on

சிறைக் குடியிருப்பு’ பல முறை மேற்கொண்டாலும் புழல் சிறையில் 23 நாட்கள் குடியிருந்தது சற்று வித்தியாசமாகத்தானிருந்தது.

தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள மதுக்கடை ஒன்றை முற்றுகையிட்டு அதை அழித்தொழித்த வழக்கில் நான் உட்பட 23 சிறுத்தைகள் (அதில் இரண்டு தோழர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்) கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம்.

இதற்கு முன்னிருந்த சிறைவாசத்தை விடப் புழல் சிறைவாசம் பல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது. ‘மாடர்ன் டெக்னாலஜி’ என்று சொல்லுவார்களே அதைப்போல குற்றவாளிகள் நாம் நினைத்துப்பார்க்காத வகையில் விதவிதமாக குற்றங்கள் செய்து சிறைக்கு வருவதை, அவர்கள் நேரடி அனுபவத்திலிருந்து சொல்வதைக் கேட்கும்போதே தலை சுற்றுகிறது.

குறிப்பாகப் படிக்கிற மாணவர்கள் செல்ஃபோன் மோகத்தில் அதுவும் ஐ-ஃபோன் மோகத்தில் அவர்கள் கொள்ளையடிக்கிற வழிகளை அவர்களே சொல்லும் போது நமக்குப் பெரும் அச்சத்தை உருவாக்குகிறது. சாலைகளில் பேசிக்கொண்டு போகிறவர்களைத்தான் குறிவைத்து செல்ஃபோன் வேட்டையாடுகிறார்கள். இளைய தலைமுறையினரின் போக்கு ‘போக்கற்றதாக’ மாறியிருப்பது வேதனை அளிக்கிறது.

இப்படியான சூழலில் மிக மோசமான அனுபவத்துக்குள் நுழைந்தது இன்னமும் வலியை உருவாக்குகிறது. அங்கே மூன்று திருநங்கைகளைப் பார்க்க நேர்ந்தது. மற்றவர்களுக்குத் தண்ணீர் எடுத்துத் தருவது போன்ற சில வேலைகளை அவர்கள் அங்கே செய்து வந்தார்கள். அவர்களின்  பெயர்களைக்கேட்டு, சிறைக்குள் வந்த கதையைக் கேட்டதுமே காவல்துறையின் செயல்பாடுகள் எவ்வளவு வக்கிரமாக மாறிவிட்டது என்பதை உணர முடிந்தது.

ஏதோ திருட்டு வழக்கில் அந்த மூன்று திருநங்கைகளைச் சூளைமேடு, வியாசர்பாடி, கோடம்பாக்கம் என்று சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை விசாரணையும் அந்தப் பிள்ளைகளையும் நடத்தியவிதமும் மிக மோசமாக இருந்ததாக அவர்களே சொல் லும்போது நமக்கும் கண்ணீர் வந்தது.

என்ன திருடினார்கள்? எதற்குத் திருடினார்கள் என்று விசாரிக்கலாம் அல்லது  திருடினார்களா என்றாவது விசாரிக்கலாம். ஆனால் அதெயெல்லாம் விட்டு விட்டு அவர்கள் திருநங்கைகளா இல்லையா என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். ஆடைகளைக் கழற்றச் சொல்லி அடித்து அவமானப்படுத்தியுள்ளார்கள். நிர்வாணப்படுத்தி அவர்களை ஏளனம் செய்து   அதை செல்போனில் வீடியோ எடுத்துச் சித்ரவதைப்படுத்தியுள்ளார்கள். எப்படி ஆபரேஷன் செய்வீர்கள் என்று கேட்டுத் தொல்லைப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் இன்னமும் அறுவை சிகிச்சை  செய்யவில்லை. திருநங்கைக்குரிய அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லையாம், அதைக் கண்டுபிடித்து விட்டார்களாம் போலீசார். திருநங்கைக்குரிய அறுவை சிகிச்சை செய்யாமல் திருநங்கை என்று பொய் சொல்லிவிட்டார்களாம். இது மிகப்பெரியக் குற்றமாம். பல மணி நேரம் நிர்வாண நிலையிலேயே காவல் நிலையத்தில் அமர வைத்து சித்ரவதைக்குள்ளாக்கியுள்ளார்கள். போவோர் வருவோர் பார்த்துக் கிண்டலடித்துச் சென்றுள்ளனர். “இப்ப நினைச்சாலும் செத்துப்போயிடலாம்னு இருக்குதுண்ணா”  என்று அந்த மூன்று சகோதரிகளும் சொல்லும்போதே அந்த வலி நமக்கானதாக மாறி அதிகார வர்க்கத்தின் மீது கோபம் கொள்ள வைக்கிறது.

எங்களுக்கு முன்பாகவே அந்த மூன்று திருநங்கைச் சகோதரிகளும் பிணையில் வெளியே சென்றார்கள். வெளியே போகும்போது என்னைத்தேடி வந்து “அண்ணா இந்தச் சிறையில் எல்லோரும் கிண்டலடித்துக்கொண்டிருந்த போது நீங்கள் மட்டுமே வாஞ்சையாக ஆறுதலாகப் பேசுனீங்க.இதே போல இந்தச் சமூகமும் எங்களுக்கு ஆறுதலாக இருக்க மாட்டாங்களா?” என்று கேட்ட கேள்வி இந்த நாகரீகச் சமூகத்தின் மீது எழுப்பப்பட்டதா? அல்லது இது நாகரீகச் சமூகம்தானா? என்றுதான் எண்ண வைத்தது.

ஜூலை, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com