அந்த காகம் தானா இது?

அந்த காகம் தானா இது?
Published on

வாடகை வீடு சிறப்பிதழ் படித்து முடித்தவுடன் சந்தோஷமும் துயரமும் சேர்ந்தே எழுந்தது. அரசு வேலை கிடைத்து எனது சொந்த ஊரான திருவண்ணாமலையில் இருந்து காஞ்சிபுரத்தில் வேலையில் சேர்ந்தபோது ஒரு வீட்டு மாடியில் சிறிய அறையில் தங்கினேன். பணி முடிந்து மாலை வந்தவுடன் என் ரூமைச் சுற்றி உள்ள மா, தென்னை மரங்கள் மூலமாக காற்று ஜன்னல் வழியே வந்து என் களைப்பை நீக்கும். இரவில் ஒரு நீண்ட வாசிப்பை அமைதியாக நடத்த அந்த அறை உதவியது. ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கைவரப்பெற்றது அந்த அறையில்தான். திருமணம் முடிந்து மனைவியுடன் தனிக் குடித்தனம் ஆரம்பித்தபோது பொருளாதார நிலை காரணமாக நிறைய குடித்தனங்கள் உள்ள வீட்டில் ஒரு சிறிய போர்ஷனில் இடம்பெயர்ந்தேன். இந்த வீட்டில் இயற்கைக் காற்றுக்கு வழியே இல்லை. வானம் நிலா நட்சத்திரம் பார்க்க வாய்ப்பே இல்லை. வீட்டிற்கு எப்போதாவது ஒரு முறை வருகைதரும் உறவுகளும் வீடு வாஸ்துப்படி சரியில்லை என முகம் சுளித்தனர். வாடகை வீட்டிலும் வாஸ்து பார்க்கும் அவர்களின் மனநிலை பற்றி என்ன சொல்வது? சிறிது காலத்திற்குப் பிறகு வீட்டு ஓனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். இந்தப் புதிய வீட்டில் கீழே வீட்டு ஓனர். முதல் மாடியில் நான்கு போர்ஷன். அதில் கடைசியாக இருந்த அறையில் நானும் என மனைவியும். மற்ற மூன்று அறை மனிதர்கள் சகஜமாகப் பழகினாலும் மனம் ஒன்றி இருக்க முடியவில்லை.

இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. பக்கத்து போர்ஷன் பெண்மணி, நான் அனைவருக்கும் பொதுவான வராண்டாவில் ஓரமாக அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தவுடன் தன் வீட்டுக் கதவை விசாலமாக திறந்து வைத்து தொலைக்காட்சியை முழு சத்தத்தில் அலறவிட்டு எனக்கு இடையூறு ஏற்படுத்தி அதில் சந்தோஷப்படுவாள். ஆனால் அந்தப் பெண்மணிக்கு ஒரு விஷயம் தெரியாது. நான் வாசிக்க அமர்ந்துவிட்டால் புற உலக சத்தங்கள் என் காதில் விழாது என்று. அந்த வீட்டில் மா, தென்னை, முருங்கை, மரங்கள் சூழ்ந்து இருந்ததால் நிறைய பறவைகள், அணில்கள், சிட்டுக்குருவிகள், காக்கைகள் வருகை புரியும். உணவுப் பொருட்கள், எல்லாவற்றையும் அவைகளுடன் பகிர்ந்துகொள்வோம். பசி எடுத்தால் வீட்டிற்கு உள்ளேயே வந்து குரல்கொடுத்து உணவு கேட்கும் உரிமையை அவை பெற்றிருந்தன. அண்டை வீட்டார் அன்பாக அமையாவிட்டாலும் எங்களுக்கு ஆறுதல் இவை தான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வு காரணமாக சேலத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறிய அறைக்கு குடிபெயர்ந்து வந்தோம். இங்கே 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் இங்கே மனிதர்கள் தனித் தனித் தீவுகளாக வசிக்கிறார்கள். எதிரே வேறு வழியில்லாமல் பார்க்க நேர்ந்தால் சிரமத்துடன் புன்னகைக்கிறார்கள். அமைதியான குடியிருப்பு, செக்யூரிட்டி தவிர வேறு அறிமுகம் இல்லாதது, தனிமை இவற்றால் வாழ்க்கை கடினமாக உள்ளது. எப்போதாவது காகம் வந்து, பின் பால்கனி சுவரில் அமர்ந்து கதவு வழியாகக் குரல்கொடுக்கும்போது அதே காஞ்சிபுரம் காக்கைதானா இது? எனத் தோன்றுகிறது.

ஜூன், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com