அந்த 27 சினிமாக்கள்

ஜெ. - எம்ஜிஆர்
அந்த 27 சினிமாக்கள்
Published on

வெண்ணிற ஆடை படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து வந்த ஸ்ரீதர் படம். எல்லோரும் புது முகங்கள். காணாததற்கு, மர்மயோகி வந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழில் இரண்டாவதாக வரும் ‘வயது வந்தவர்களுக்கு’ மட்டும் என்று முத்திரையிடப்பட்ட படம். வெளிவருவதற்கு முன் தினம் நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்த, ஜெயலலிதா அருவியில் குளிக்கும் பரணியின் சுவரொட்டி ஏகத்திற்கும் கிளுகிளுப்பு யூகங்களைக் கிளப்பி இருந்தது. தியேட்டரில் வேறு, 18 வயதிற்குட்பட்டவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தட்டி போர்டு எழுதி வைத்திருந்தார்கள். முதல் மாட்னிக் காட்சிக்கு ‘டிரவுசர் பார்ட்டிகளை’ அனுமதிக்கவில்லை. படம் கூவி விட்டது. ஆறு மணிக்காட்சிக்கு நான் மூணரை முழம் வேட்டி கட்டிக் கொண்டு சைக்கிள் டிக்கெட்டில் போய் நின்றேன். தரை டிக்கெட் தீர்ந்து விட்டது. மறுநாள் காலைக் காட்சிக்கு எல்லா ‘டவுசர் பார்ட்டிகளும்’ டவுசருடன் போனோம். வாங்க வாங்க என்று மரியாதையாக அழைத்தார்கள்.

எனக்குப் படம் பிடித்திருந்தது. குறிப்பாக ஜெயலலிதா. படத்தில் ‘அ’ சர்ட்டிஃபிகேட்டுக்கான காட்சி ஒன்று கூட இல்லை. ஜெயலலிதாவும் இன்னொரு புதுமுகமான, நகைச்சுவை நடிகை ஆஷாவும் (பின்னால் சைலஸ்ரீ என்று பெயரை மாற்றிக் கொண்டார்) ஸ்லீவ்லெஸ் உடைகள் அணிந்திருந்தனர். தினத்தந்தி குருவியார்  சினிமா கேள்வி பதிலில் ‘அக்குள் அழகிகள்’ என்று கேலி செய்திருந்தார். எங்களுக்கு ‘வாத்தியாருக்கு நல்ல நாயகி’ கிடைத்து விட்டதாக  மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு. எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி ஜோடி அலுத்துப் போயிருந்த நேரம். எங்க வீட்டுப் பிள்ளை அப்போதும் நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் சரோஜாதேவி நடித்து வரவேண்டிய படங்களும் நிறைய இருந்தன. ஆயிரத்தில் ஒருவன், பந்துலு  சிவாஜியை விட்டு விலகி எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த படம். விரைவாகத் தயாரான படம். ஜெயலலிதா இரண்டாவது படமான இதிலும் புதிய நடிகை போல இல்லாமல் முதிர்ச்சியாக நடித்திருந்தார். ஒரே ஒரு லவ் டூயட், அதுவும் கடைசியாக வரும். ஆனால் அருமையான லவ் டூயட். தங்கப்பன் மாஸ்டரின் அழகிய மூவ்மெண்டுகளை  ஜெயலலிதா அநாயசமாகப் பண்ணியிருந்தார். படம் பிரம்மாண்டமாகவும் நன்றாகவும் எடுக்கப் பட்டிருந்தது. கோவா கார்வார் பகுதியில் 41 நாட்கள் படம் பிடித்த படச்சுருளின் நீளம் மட்டும் 45000 அடி. பேசும்படம் அந்தப் படப்பிடிப்பு பற்றிய கட்டுரைக்கு 41 நாட்களில் 45 ஆயிரம் அடிகள் என்று தலைப்பிட்டிருந்தது. இவ்வளவு ஃபிலிமில் மூன்று படம் எடுத்து விடலாம். நிறைய நகரங்களில் 100 நாட்கள் ஓடியது. வெள்ளி விழா ஓடவில்லை. எங்க வீட்டுப் பிள்ளையின் மாயையிலிருந்து  ரசிகர்கள் விடுபடாததும் ஒரு காரணம். படம் 1965 ஜூலை 9ஆம் தேதி வெளியானது. 2014ல் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட்டு 190 நாட்கள் சென்னையில் ஓடியது. எம்.ஜி.ஆர் படங்களில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டு வசூலைக் குவித்த படம் இதுதான்.

எம்.ஜி.ஆருடன் மளமளவென்று ஜெயலலிதாவுக்கு படங்கள் ஒப்பந்தமாகி எம்.ஜி.ஆர் முகாமின் நாயகியாகினார். அவரது அம்மா சந்தியா சிவாஜி முகாமைச் சேர்ந்த நடிகை என்பது ஒரு முரண். இரண்டாவதாக வெளியான படம், தேவர் ஃபிலிம்ஸ் கன்னித்தாய். ஒரு வேடிக்கை, தமிழில் ஜெயலலிதா வுக்கு முதல் கருப்பு வெள்ளைப் படம் இதுதான்.  “கருப்பு வெள்ளையில் அவரைப் பார்க்க வேண்டும்லே அப்பத்தான் இயற்கையான அழகு தெரியும்,” என்று ஒரு நண்பன் சொல்லிக் கொண்டே இருப்பான். படம் முழுக்க பாவாடை தாவணியில் வருவார். கொஞ்சம் தேவர் படங்களுக்கேயான கண்டாங்கிச் சேலையிலும் வருவார். அவருக்கு எல்லாமே பொருந்தும். படத்தில் நடிகைகள் பெயர் போடும்போது கே.ஆர்.விஜயா பெயருக்கு அப்புறமே ஜெயலலிதா பெயர் வரும். கே.ஆர் விஜயா அவரை விட இரண்டு வருடம் சீனியர். ஆனால், தாய்க்குத் தலை மகன், ஒளிவிளக்கு படத்தில் சௌகார் ஜானகி பெயர் பின்னாலேயே வரும் ஜெயலலிதா பெயரே முதலில் வரும். கன்னித் தாய் படத்தில் மாயவனாதன் எழுதிய பாடலான

“ என்றும் பதினாறு வயது பதினாறு...” பாட்டு மட்டுமே நினைவில் நிற்கிறது. அதுவும் உண்மையிலேயே 16 வயதுப் பெண் வாத்தியாரைப் பார்த்து என்றும் பதினாறு என்று அழைத்துப் பாடுவதைக் கேட்டு தியேட்டரில் விசில் பறக்கும்.

ஜெயலலிதா வருகைக்குப் பின்னும் சரோஜாதேவி இரண்டு ஆண்டுகள் வரை நடித்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை அடுத்து பந்துலு எடுத்த ‘நாடோடி’ படத்தில் சரோஜாதேவியையே நடிக்க வைத்ததை ரசிகர்கள் ரசிக்கவில்லை. படமும் ஓடவில்லை. இன்னொரு ஆச்சர்யம். அவர் அடுத்து எடுத்த ரகசியபோலீஸ் 115 படத்தில் சரோஜாதேவியே முதலில் நடித்தார். அவர் நடித்து “பால் தமிழ்ப்பால்”, என்னும் பாடல்காட்சி படமாக்கப் பட்டது. அதனுடைய ஃபிலிம் ஒரு பத்து அடி வாக்கில் என்னிடம்  நீண்ட நாட்களாக இருந்தது.  எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே திட்டமிடப்பட்ட படம். மீண்டும் ஆரம்பிக்கையில் சரோஜாதேவிக்கு திருமணம் ஆகி விட்டது. ஜெயலலிதா நடித்தார். இதே போல ‘ஒரு தாய் மக்கள்’ படமும் எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், சரோஜாதேவி ஆகியோருடன் ஆரம்பிக்கப்பட்டது.  இயக்கம் கே.சங்கர். ஆயி மிலன் கி பேலா இந்திப்படத்தின் தழுவலான இதை எம்.ஜி.ஆர்- ஜெய்சங்கர் இணைக்காக மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றிரண்டு காட்சிகள் கூட எடுக்கப்படவில்லை. அவருக்குப் பதில் முத்துராமன், சரோஜாதேவிக்குப் பதில் ஜெயலலிதா நடிக்க சங்கருக்குப் பதில் ப.நீலகண்டன் இயக்கினார். தாமதமான தயாரிப்பினால் படம் ஓடவில்லை.

1966 இல் அன்பே வா படத்தில் சரோஜாதேவியே நடித்தார். அது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வருகைக்குப் பின் எடுத்த படம். இந்தப் படத்தில் ஜெயலலிதா நடிச்சிருக்கணும்டா, இதுவும், போன பொங்கலுக்கு வந்த எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி வெள்ளி விழா ஓடிருக்கும்டா என்று ரசிகக் கண்மணிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆசையைத் தீர்க்கும் விதமாக முகராசி வந்தது. அன்பே வா வந்து ஒரு மாத இடைவெளியில் அன்பே வா 14.1.1966 பொங்கல் ரிலீஸ் என்றால் முகராசி 18.2.1966 அன்று வந்தது. எம்.ஜி.ஆர் ஜெமினி இணைந்து நடித்த முதல்படம். தெளிவான கதை சொல்லல், எம்.ஏ திருமுகத்தின் கச்சிதமான எடிட்டிங், இயக்கம். நாகேஷ் ஜெயந்தி காமெடி.ஷார்ட்ஸ் அணிந்து ஜெயலலிதா சிலம்பம் பயிலும் காட்சி என்று படம் படு ஹிட்டானது. அன்பே வா படத்தை விட அதிகம் ஓடியது திருநெல்வேலியில். ஜெயலலிதாவுக்கு ரசிகர்கள் கூடினர். கனவுக்கன்னி ஆனார். முகராசி வந்த அன்று எங்கள் 11 வது வட்ட தி.மு.க உட்கிளையாக எம்.ஜி.ஆர் மன்றத்தை எங்கள் தெருவில் ஆரம்பித்தோம். அதனால் அந்தப் படத்தை முதல் நாள் பார்க்கவில்லை. படம் பார்த்து விட்டு வந்து ஜெயலலிதாவுக்கு  நடிப்பைப் பாராட்டி (!) கடிதம் எழுதிப் போட்டேன்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து அழகான, கையெழுத்திட்ட படத்துடன் நன்றிக் கடிதம் வந்தது. அன்றுதான் 27.5.1966 சந்திரோதயம் ரிலீஸ். படம் பார்க்க கடிதத்துடனேயே போனேன். ஒவ்வொருத்தரும் வாங்கிப் பார்த்து விட்டுத் தரும் வரை பரபரப்பாக இருக்கும். சந்திரோதயம் சுமாராக ஓடியது. அப்போது எம்.ஜி.ஆருக்கும் தினத்தந்தி பத்திரிகைக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம். எம்.ஜி.ஆர் செய்திகளோ விளம்பரமோ தந்தியில் வராது. தந்தியில் பணி புரிந்து விலகிய ஏ.கே. வில்வம் என்பவர்  சந்திரோதயம் படத்திற்கு வசனம். பத்திரிகை நிருபராக எம்.ஜிஆர் வருவார். எம்.ஆர். ராதா முதலாளி . அப்புறம் கதையை ஊகிப்பது உங்களுக்கு கடினமில்லையே. அந்தப் படம் வெளி வந்த சமயம் தந்தியில் ஒரு கதை வந்தது. அதன் ஆரம்பத்தில் ஒருவர்  தன் நாய்க் குட்டியுடன் உலா வருவார். எதிரே வருபவர், “ நாய்க்குட்டிக்கு என்ன பேர் வச்சிருக்கீங்க”? “வில்வம் !” ”ஏங்க நன்றி இல்லாதவங்க பேரையெல்லாம் நாய்க்குட்டிக்கு வைக்கறீங்க...” இப்படி ஆரம்பிக்கும் கதை. ஆனால் எம்.ஜி.ஆர் குண்டடி பட்டதும் கதையே மாறிவிட்டது. எல்லாரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். தி.மு.க கூட்டணியில் ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியும் இணைந்தது.

தேவர் எப்போதும் வருடத்திற்கு இரண்டு படம் வெளியிடுவார். அதாவது ஜனவரி- பிப்ரவரியில் ஒரு படம் ஆகஸ்ட் - செப்டம்பரில் ஒரு படம். 1966 செப்டம்பர் 16 அன்று தனிப்பிறவி வந்தது. கதை மதுரை திருமாறன். முதல் பாதியில் படம் தேவர் ஃபார்முலாப்படி நகர்ந்து கொண்டிருந்தது. முதல் பத்து நிமிடங்களுக்குள் எம்.ஜி.ஆர் தனிப்பாடலுடன் ஆரம்பம். நாயகி தனிப்பாடலுடன்  மூன்றாவது  ரீல், அதாவது நாற்பது நிமிட வாக்கில் ஆரம்பம். அப்புறம் அங்கங்கே மூன்று டூயட். நாலு சண்டை இப்படி இடைவேளை வரை நகர்ந்து விட்டது. ஏலே படம் ஒப்பேறாது, பேசாம ஜெயலலிதாவைப் பார்த்துட்டுப் போவோம்..” என்று எப்போதும் போல நானே முதலில் சொல்லி, ஏச்சு வாங்கிக் கொண்டேன். இடை வேளைக்கு அப்புறம் சட் சட்டென்று  திருப்பங்கள் ஏற்பட்டு படம் விறு விறுப்பாகப் போய் எதிர்பாராத சஸ்பென்ஸ் கிளைமேக்ஸ், சண்டைக் காட்சிகளுடன் முடிந்தது. படம் ஹிட் ஆகி விட்டது. திருநெல்வேலியில் அதிக நாள், 63 நாள், மாட்னிக்காட்சி ஓடிய  கருப்பு வெள்ளைப் படம் என்று புதிய சாதனை படைத்தது.

நாங்கள் 1967 ம் வருடத்தை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். பிப்ரவரியில்  சட்டமன்றத் தேர்தல். புதிய கொடிக்கம்பம் நடுவதற்காக பெரிய மரக்கம்பம் வாங்கி வந்து, தெருவில் நீளமாகப் போட்டு பட்டை உரித்து, வரி வரியாய் கருப்பு  சிகப்பு பெயிண்ட் அடித்து, வேலைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன. சபாபதி, ரதவீதியிலிருந்து ஓடி வந்தான். “எம்.ஜி.ஆர் சுடப்பட்டார், எம்.ஆர் ராதா சுட்டாராம்...”  என்று சத்தமிட்டுக் கொண்டே ஓடி வந்தான். கொடிக் கம்பத்தை விட்டு விட்டு பஜாருக்கு ஓடினோம். அங்கங்கே குழுக்களாகக் கூடி கண்ணீரும் கம்பலையுமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று பூரவும் மாலை முரசு தந்தி அலுவலகங்களின் முன் சிவராத்திரி தான். செய்திகளுக்கு, வானொலியும் தினசரிகளையுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஏதோ நம்பிக்கையான செய்திகளைச் சொன்னார்கள்.  விடிந்தால் 13.1.1967, தாய்க்கு தலைமகன் படம் ரிலீஸ். காலையில் பல்லைத் தேய்க்கத்தான் வீட்டுக்கு வந்தோம். எதையோ சாப்பாடு என்று பேர் பண்ணி விட்டு படத்திற்குப் போனோம். அடிபிடியாய்க் கிடக்கிற தியேட்டரில் ஆளே இல்லை. தரை டிக்கெட் கூட திறந்து கிடந்தது. படம் போடும் முன் , மக்கள் திலகம் குணமடைந்து வருகிறார் என்று ஸ்லைடு போட்டு விட்டே படம் ஆரம்பித்தார்கள். பெற்றால்தான் பிள்ளையாவில் எம்.ஜி.ஆர், தன் இயல்பை மீறி பிரமாதமாக நடித்திருந்தார். அதே நடிப்பை இதிலும் காட்ட கதையில் இடமிருந்தது. நடித்தும் இருந்தார். இரண்டே இரண்டு டூயட் என்றாலும், பாடல் இல்லாத எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா, புதுக்கணவன் மனைவி  கொஞ்சல் காட்சிகள் மிகவும் கிளுகிளுப்பாக, இளமையாக வந்திருந்தது. அதை ரசிக்கும் மனநிலை அன்று இல்லை. படத்தில் ஒரு கட்டத்தில் குழந்தை ஷகிலாவை ஹாஸ்டலில் விட்டு விட்டு,‘சித்தப்பா உனக்கு பொம்மை வாங்கி வருகிறேன்,’ என்று  சொல்லுவார். ஷகிலா, ‘சித்தப்பா துப்பாக்கி வாங்கிட்டு வா,’ என்று சொன்னதும் , தியேட்டரே, ‘வேண்டாம் தலைவரே வேண்டாம் துப்பாக்கி வேண்டாம்,’ என்று அலறியது. எம்.ஜி.ஆர் குணமாவது குறித்தே ரசிகர் களும் மக்களும் கவலையில் இருந்ததாலும் பிப்ரவரி 5 இல் பொதுத்தேர்தல் தொடங்கி விட்டதாலும் படம் அவ்வளவாக ஓடவில்லை.

அடுத்து தி.மு.க ஆட்சி அமைந்து விட்ட பின் ஏற்கெனவே முடிவடையும் தருவாயிலிருந்த அரச கட்டளை, காவல்காரன் படங்களை முடிக்கும் வேலைகள் நடந்தன. அரச கட்டளை படத்தில் வசனம் இல்லாத ஒரு சண்டைக்காட்சியும் முடி சூட்டும் காட்சியும் எடுக்கப்பட்டது. காவல்காரன் படத்தில்  ஒரு பாடல் காட்சி எடுக்கப் பட்டது. எம்.ஜி.ஆர்  சத்யா ஸ்டுடியோவின் அரங்கிற்குள் நுழைந்ததுமே     “ நினைத்தேன் வந்தாய் நூறு வயது” பாடல் ஒலித்தது. சூழலுக்கு ஏற்ப வாலி எழுதிய நல்ல பாடல் அந்தப் பாடல் காட்சிதான் படம் ஆக்கவும் பட்டது. இவ்வளவு செய்திகளையும் முந்தித் தந்தது ‘தந்திப் பேப்பர்’தான். அரசகட்டளை மே மாதம் 19 இல் வந்தது. சரோஜா தேவி எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப்படம். அதில் அவர் இறந்து விடுவார். ஜெயலலிதா எம்.ஜி.ஆர் கரம் பற்றுவார். நாடோடி மன்னன் படத்தில் பானுமதி இறக்க சரோஜாதேவி கரம் பற்றினார். அவரது யுகம் ஆரம்பித்தது. இதிலிருந்து ஜெயலலிதா யுகம் ஆரம்பித்தது. “முகத்தைப் பார்த்ததில்லை, அன்பு மொழியைக் கேட்டதில்லை..” ஜெயலலிதா ராஜா ராணி பாணியில் ஸ்லீவ்லெஸ் உடையில் வருவார். அரச கட்டளை படத்தின் டைட்டிலில் ‘கவர்ச்சிக் கன்னி’ ஜெயலலிதா என்று போடுவார்கள். படம் மிக நீண்ட தயாரிப்பு. அதனாலும் ஓடவில்லை. இவ்வளவுக்கும் எம்.ஜி.சக்கரபாணி டைரக்‌ஷன் என்றெல்லாம் இருந்தது.

அடுத்து வந்த காவல்காரன், சத்யா மூவிஸின் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் மகத்தான தோல்விக்குப் பின் எடுத்தது. நீண்ட நாளுக்குப் பின் ப.நீலகண்டன் இயக்கம். படம் தெளிவாகக் கையாளப் பட்டிருந்தது. சிம்பிளான புரொடக்ஷன். ஜெயலலிதா மிக நெருக்கமாக, இயல்பாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் பேச முடியாமல் வசனம் பேசுவார், “பாத்தென் சுசிலா பாத்தென்” என்று, தியேட்டர் பூராவும் விசும்பல்கள் அலறல்கள், “தலைவா நீங்க பேசவே வேண்டாம், நாங்க பாக்கோம்..” என்று. “காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்..” பாடல் பெண்களுக்கே அதிகம் பிடித்தது. படம் பிரமாதமாகப் போயிற்று. முதலில் படத்தை எடுக்கப் பயந்த விநியோகஸ்தர் ஒருவர், அப்போதைய விநியோகஸ்தர்களை சென்னையிலேயே பார்த்துப் பேசி இரண்டாம் நாளே, முதலில் தவிர்த்த விநியோக உரிமையை வாங்கி விட்டார். அவருக்கு இரண்டு மடங்கு லாபம் வந்தது.

1968 பொங்கலுக்கு வந்த ‘ரகசிய போலீஸ் 115’ ஜெயலலிதாவை மீண்டும் வண்ணத்தில் பார்க்க வாய்ப்பளித்தது. (இடையில் ‘நான்’ படம் வந்திருந்தது.) படம் பந்துலுவின் பிரம்மாண்டப் படமாக இல்லை. ‘நான்’ படம் கிட்டத்தட்ட இதே கதை, காட்சி அமைப்புடன் இருந்தது. ஆனால் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. சில படங்கள் இப்படித்தான். பெரிய எதிர் பார்ப்புகளுடன் போவோம் ஏமாற்றமாக இருக்கும். ஆனால் இரண்டாம் முறை பார்க்கிற போது, கதை சம்பவம் எல்லாம் தெரிந்து விடுவதால் பாட்டு,   சண்டை, செட்டிங்ஸ், அவுட்டோர் என்று மற்றவை கவரத் தொடங்கி விடும். அப்படி இதிலும் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என்று ரிப்பீட்டட் ஆடியன்ஸுக்கு விஷயம் இருந்தது. ஒளி விளக்கும் இதே போலத்தான் பார்க்கப் பார்க்கப் பிடித்தது பலருக்கும். அது எம்.ஜி.ஆரின் நூறாவது படம். பூல் அவுர் பத்தர் இந்திப் படத்தின் நேரடித் தழுவல். இதில் ஜெயலலிதாவுக்கு கனமான பாத்திரம் கிடையாது.  சௌகார் ஜானகிக்குத்தான் முக்கியப் பாத்திரம். இதற்கு இடையில் வந்த குடியிருந்த கோயில் இரு துருவம் என்ற பெயரில் படமாக்கப்பட்டு வந்தது. திடீரென்று குடியிருந்த கோயில் என்று மாற்றிவிட்டார்கள். ஜெயலலிதா மிக அழகாக இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

அடுத்து புதிய பூமி, கண்ணன் என் காதலன் என வந்த படங்களில் கண்ணன் என் காதலன் படத்தில் ஜெயலலிதாவுக்கு கனமான பாத்திரம் அருமையாகச் செய்திருந்தார். எம்.ஜி.ஆர். படங்களிலேயே கதை அம்சம் நன்றாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று.  கணவன் படமும் இடையே வந்து நன்றாக ஓடியது. இதன் கதை, எம்.ஜி.ஆர் என்று விளம்பரத்திலும் படத்திலும் போடுவார்கள். ஆனால் ஏற்கெனவே ஒரு நாடக நூல் வந்திருந்து அதை நாங்கள் எல்லாம் படித்திருக்கிறோம். ஜெயலலிதாவுக்கு தான் நடித்த பாத்திரங்களில் இந்த ராணி பாத்திரம் மிகவும் பிடிக்கும். அந்த வருடம் தீபாவளிக்கு வந்த படம் தேவர் பிலிம்ஸ் காதல் வாகனம். ஏற்கெனவே ஆண்டு ஆரம்பத்தில் பிப்ரவரியில் வந்த தேவரின் தேர்த்திருவிழாவும் அடி வாங்கியிருந்தது. இதுவும் பலத்த அடி வாங்கி தேவர் - எம்.ஜி.ஆர் கூட்டணி பிரிந்தது. மீண்டும் நல்ல நேரம் படத்தில் ஒன்றுசேர்ந்தது, நான்கு வருடங்களுக்குப் பின். இரண்டிலும் ஜெயலலிதாவுக்கு சும்மா வந்து போகிற பாத்திரங்கள்தான். சுலபமாகச் செய்திருப்பார்.

1969 இல் எம்.ஜிஆருக்கு இரண்டே படங்கள்தான். மே தினத்திற்கு வெளிவந்த பிரம்மாண்டப் படைப்பான அடிமைப்பெண் மற்றும் தீபாவளிக்கு வந்த நம் நாடு. அடிமைப்பெண் படத்தில் முதலில் சரோஜாதேவி, ரத்னா, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா ஆகியோர் நடிப்பதாக இருந்து சில காட்சிகள் எடுக்கப் பட்டன. அண்ணாவின் காஞ்சி பத்திரிகையின் ஆண்டு மலரில் முன் பக்க உள்ளட்டையில் விளம்பரம் வந்தது. சரோஜாதேவி -ஜெயலலிதா இணைந்திருக்கும் படங்கள் கூட வந்தது. ஆனால் படம் வெளி வரும்போது கதை பல மாறுதல்களாகி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்தார். கே.ஆர் விஜயாவுக்குப் பதிலாக ராஜ்ஸ்ரீ நடித்தார். ஜெயலலிதா நன்றாக நடித்தார். ஒக்கேனக்கல்  அருவியின் முழங்கால் அளவு நீரோட்டத்தில் கத்திச் சண்டை சொல்லித் தருவதிலிருந்து எல்லாமே சூப்பராக இருக்கும். இதில்தான் ஜெயலலிதாவை  முதன் முதலாக சொந்தக் குரலில் பாடவைத்தார் எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் பாலைவனத்தில் இரவுப் பின்னணியில் ஜெயலலிதாவின் முரசு நடனம் அழகாக இருக்கும். வெள்ளி விழாப் படம்.

அதே ஆண்டு ‘நம்நாடு’ வந்தது படத்தில் முதல் பாதி எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் மற்ற ரசிகர்கள் பிற்பகுதியைத்தான் ரசித்தார்கள். படத்தில் ஜெயலலிதாவின் பெயர் ‘ அம்மு’. எம்.ஜி.ஆர் பெயர்  துரை. அண்ணாதுரையின் சுருக்கம்டா என்று ஒரு ரசிகக் கண்மணி சொல்லுவார். படத்திற்கு முதலில் காமிரா ‘கர்ணன்’ தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆடை முழுதும் நனைய நனைய.. என்ற பாடல் அப்பொழுது சூப்பர் ஹிட். எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய அரசியல் படம். அ.தி.மு.கவின் அவ்வப்போதைய  வெற்றிக்கு இந்தப் படம் ஒரு காரணம். வாங்கய்யா வாத்தியாரய்யா பாடலில் அம்முவின் நடனம் சூப்பர். படம் பார்த்து விட்டு வந்து பலரும் அம்மு என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதுவரை எடிட்டராக இருந்த  சி.பி. ஜம்புலிங்கம் பிரமாதமாக படத்தை இயக்கியிருந்தார்.

1970 பொங்கலுக்கு மாட்டுக்கார வேலன். மீண்டும் ஒரு வெள்ளிவிழாப் படம். ஜெயலலிதா படம் முழுக்க, நவீன உடை அணியாமல் சேலை அணிந்து வருவார். ரொம்ப அழகாக இருப்பார். அவருக்காகவே படம் ஓடியது என்று கூடச் சொல்லலாம். ஜிக்ரி தோஸ்த் படத்தை தமிழில் சரியாக எடுத்திருந்தார்  ப. நீலகண்டன்.  ஒரு வேடிக்கை இந்தக் கதையை எழுதியவர் ஏ.கே.வேலன். அவர் எம்.ஜி.ஆருக்குச் சொல்லி அவர் இதை நிராகரித்து இந்திக்குப் போய் தமிழுக்கு மீண்டது. ஏ.எல்.நாராயணனின் வசனம் நன்றாக இருக்கும்.

1970இல் அடுத்து என் அண்ணன் வந்தது. வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடிக்கும் முதல் படம். ஜெயலலிதா புல்லுக்கட்டு விற்பவராக நடிப்பார்.அவருக்குப் பிடித்த பாத்திரங்களில் இதுவும் ஒன்று என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா கண்டாங்கி சேலை கட்டி ஆடும் நடனங்களும் நடிப்பும் நன்றாக இருந்தது. வழக்கமான அண்ணன் தங்கை கதையில் எம்.ஜி.ஆர் மசாலா  கொஞ்சம் சேர்ந்து இருந்தது. 100 நாட்கள் ஓடியது. தேடி வந்த மாப்பிள்ளை சின்ன பட்ஜெட் படம் போல எளிமையாய் இருந்தது. சபாஷ் மாப்பிள்ளே போலவே எம்.ஜி.ஆர் காமெடி ரோல் கொஞ்சம் செய்வார். ஜெயலலிதா மினிஸ்கர்ட்டுடன் பாடி ஆடும்,‘ இடம் சுகமானது ஜோடியோ பதமானது’ பாடல் ரசிகர்களுக்கு விருந்து. ரொம்ப எதிர் பார்க்காமல் வந்த படம். நன்றாகவே ஓடியது. எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா மைசூர் மகாராஜா -ராணி உடையில்   காதலிக்கும் ‘மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன’ பாடலுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தது ஜெயலலிதா என்று ஒரு கிசுகிசு  உலவியது.

1970 அக்டோபரில் வெளிவந்த ‘எங்கள் தங்கம்’ ஒரு அரசியல் கூட்டணி எனலாம். கலைஞர் முதல்வரான பின் மறுபடி மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்தார். மேகலா ஏந்தி வரும் கலைத்தீபம், எண்ணக் கருவூலம் வண்ணக் காவியம் என்றெல்லாம் கலைஞரின் முத்திரை வாக்கியங்களுடன் விளம்பரம் வந்து எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருந்தது. “எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ” என்று டைட்டிலில் போட்ட படம் இது ஒன்றுதான் என நினைவு. மூன்று முதல் அமைச்சர்களும் முரசொலி மாறன் எம்.பி, சோ எம்.பி யும் இணைந்து பணியாற்றிய படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். இவ்வளவு இருந்தும் படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. வழக்கமான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா படமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் குடுமித்தலையுடன் கதா காலட்சேபம் செய்யும் காட்சி பெரிய கலகலப்பு. சிறு சேமிப்பு திட்டத் துணைத்தலைவராக நிஜ எம்.ஜி.ஆர் வருவார்.  100 நாட்கள் ஓடியது. ரசிகர்கள் பெரிதாக விரும்பவில்லை என்பதில் ஒரு அரசியல் இருந்ததை நாங்கள் உணர்ந்தோம். அடுத்தாற் போல ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வந்த போது அது உறுதியானது.இதிலெல்லாம் எனது நண்பன் லாலா மணி மிகவும் சூட்டிகையானவன்.

1971 குடியரசு தினத்திற்கு வெளிவந்த ‘குமரிக்கோட்டம்’ அண்ணா கதை ஒன்றின் தலைப்பு. இதில் ஜெயலலிதா இரட்டை வேடம். நன்றாகச் செய்திருப்பார். எம்.ஜி.ஆருக்கு ஒரு படம் அல்லது கதை பிடித்திருக்கிறது என்றால் அதில் அவர் பெயர் ‘கோபால்’ என்று வைத்துக் கொள்வார். இதைச் சுட்டிக் காட்டியது ஒரு பாமரமான ரசிகர்தான், “ வே இது ஒம்ம பேருன்னு நெனைக்காதீரும், வாத்தியாரோட அப்பா பேருவே, படம் நல்லா ஓடும் பாரும்,” என்று படம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே  சொன்னார். அது போலவே ஓடியது. அடுத்து வந்த ‘ராமன் தேடிய சீதை’ படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு. 1971இல் கலைஞர் சட்டசபையைக் கலைத்து விட்டு பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து இந்திராகாந்தி கூட்டணியுடன் போட்டியிட்டார். 1967 தேர்தலில் பிரச்சாரம் செய்யமுடியாமல் இருந்த எம்.ஜி.ஆர் இதில் பம்பரமாகச் சுழன்று பிரச்சாரம் செய்தார். தி.மு.க 184 இடங்களைப் பிடித்து அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. எம்.ஜி.ஆர் பிரச்சார அலுப்புத் தீர ராமன் தேடிய சீதை படப்பிடிப்புக்காக காட்மாண்ட், சிம்லா  என்று போனார். அது தமிழ் நாட்டு அரசியலில் பல மாற்றங்களை உண்டு பண்ணப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தில் ஜெயலலிதா உண்மையிலேயே ராமன் தேடிய சீதையின்  மையக் கதைக்கேற்ப நடித்திருப்பார். இருவருக்குமிடையேயான  ரசாயனம் உச்சத்தைத் தொட்டதாக ரசிகர்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் ஓடியது.

நீரும் நெருப்பும் படத்திற்கும் ஏக எதிர்பார்ப்பு.  நீண்ட நாட்களுக்குப் பின் சரித்திரப் பின்னணியில் வரும் படம். இரட்டை வேடம். விஜயபுரி வீரன் ஆனந்தனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரமாதமான வாள்சண்டைகள் இருக்கும் என்றெல்லாம் பேசினார்கள். விநியோகஸ்தர்களிடையே பெரிய போட்டி இருந்ததாகச் சொல்வார்கள்.ஆனால் திருநெல்வேலியின் பழம் தின்று கொட்டை போட்ட விநியோகஸ்தர் அதைத் தீண்டவே இல்லை. அப்போதே சொன்னேன் படம் அப்படி ஒன்னும் இருக்காதுடே என்று. அடிக்க வந்து விட்டார்கள். இரண்டு எம்.ஜி.ஆர் படங்களில் ஜெயலலிதா வுக்குப் பெரிய ரோல் ஒன்றும் இருக்காது. இதிலும். அடுத்து வந்த ஒரு தாய் மக்கள் படம் ஓடவில்லை. நீண்ட காலத் தயாரிப்பில் இருந்தது. என்.எஸ்.கே குடும்பத்தைச் சேர்ந்த திரவியம் தயாரித்த படம். பாடல்கள் அற்புதமாக இருந்தது. படத்தைப் பார்த்து விட்டு ‘என்னடா கண்ணன் என் காதலன் மாதிரியே இருக்கு’ என்றார்கள் கண்மணிகள்.

அடுத்து வந்த ‘அன்னமிட்ட கை’ படமும் நீண்ட காலத் தயாரிப்புத்தான். முதலில் பழம் பெரும் வசனகர்த்தா எஸ்.டி. சுந்தரம் வசனம் எழுதுவதாக இருந்தது. ஆனால் ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார். நன்றாக இருந்தது. படம் நீண்ட நாள் (ஆறு வருடம்) தயாரிப்பில் இருந்ததால், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன்னுடைய படம் ஒன்றிற்கு அன்னமிட்ட கை என்று பெயர் வைத்து விட்டார். அப்புறம் பிரச்னை ஏற்படவே, எம்.ஜி.ஆர் டைட்டிலை விட்டுக் கொடுப்பதாகச்  சொல்லியும் பெயரை, கண் கண்ட தெய்வம் என்று மாற்றினார். படம் பல வகைகளில் கடைசிப் படமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் கடைசி கருப்பு வெள்ளைப்படம்.15.9.1972 அன்று வெளி வந்த போது எம்.ஜி.ஆர் தி.மு.கவில் கணக்குக் கேட்டுக் கொண்டு இருந்தார். படம் நன்றாக ஓடியது அவருக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது. அடுத்து  இதயவீணை 20.10.1972 இல் வரும்போது எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து நீக்கப் பட்டிருந்தார். ஜெயலலிதா நீண்ட காலத்திற்குப் பின் கருப்பு வெள்ளையில் அழகாக இருந்தார். கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்பு இருந்தது.

அடுத்து வந்த ’பட்டிக்காட்டுப் பொன்னையா’ எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த கடைசிப்படம். எம்.ஜி.ஆரின் மோசமான படங்களில் அதுவும் ஒன்று. ரசிகர்களுக்கு அரசியல் வேலைகள் இருந்தது தவிரவும் மஞ்சுளா சகாப்தம் முளை விடத் தொடங்கி விட்டது. ஜெயலலிதாவின் பொதுவான சினிமா சந்தர்ப்பங்களும் குறையத் தொடங்கி விட்டது. இதய வீணைக்குப் பின் எம்.ஜி.ஆருக்கு 15 படங்களே வந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா சகாப்தம் முடிவடையத் தொடங்கியது. அரசியல் சகாப்தம் பிரமாதமாக விடியத் தொடங்கியது. ஜெயலலிதாவின் சோதனை மிக்க வாழ்வின் கட்டங்கள் இவை.  எல்லாவற்றையும் இரும்பு மனுஷியாகக் கடந்து தமிழகத்தின் முதல்வரானார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அமைந்த பாத்திரப் படைப்புகள் போல, ஜெயலலிதாவின்  பாத்திரங்களில் ஒன்று கூட அதைச் சுட்டிக் காட்டியிருக்கவில்லை என்பது ஒரு பெரிய முரண்.

ஜனவரி, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com