அதிசய ராகம்

அதிசய ராகம்

Published on

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி வரையறைகளுக்குள் அடக்கிவிட முடியாதவர். முறையாக சங்கீதத்தை கற்காதவர். சங்கீதத்தை முறையாக கற்றுக் கொள்வதால் மட்டுமே இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது. இசையமைப்பாளர் சுயம்புவாகத்தான் இருக்க முடியும்.

சொல்லிக்கொடுத்து வரமுடியாதது சங்கீதம் என்பதற்கு உதாரணமாக ‘மலர்ந்தும் மலராத’ பாடலையே சொல்லலாம். அந்த பாடலுக்கு இசை அமைத்த பிறகு அந்த இசையிலிருந்து வார்த்தையையோ அல்லது வார்த்தையிலிருந்து அந்த இசையையோ பிரிக்க முடியாததாகி விடுகிறது. அந்த பாடல் ஒரு அண்ணன் பாடியது என்று மட்டுமே நாம் நினைவில் கொள்கிறோம். அங்கே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி மறைந்து விடுகிறார். அந்த பாடல் மட்டுமே தனித்து நிற்கிறது.

 அவர் இசையில் கல்யாணி அல்லது காம்போதி, கரகரப்பிரியா அல்லது பந்துவராளி இது எல்லாமே அதுவாக வரும். அவரைப் பொறுத்தவரை என்னுடைய இசையில் இந்த நோட்ஸ் வந்தது... ஓ..இதுதான் பந்துவராளியா?... இருந்துட்டு போகட்டும் என்று சொல்லக்கூடியவர்.

அவர் விருப்பப்பட்டு ராகத்தை தேர்ந்தெடுத்து இசையமைத்த பாடல்களும் உண்டு. ராகங்கள் ஒரு ரூபமாக இருக்க வேண்டுமென்றால் குறைந்தது ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும் என்பது முன்னோர்கள் எழுதி வைத்த நியதி. கர்நாடக இசைக் கலைஞர் பால முரளி கிருஷ்ணா இதை உடைத்து நான்கே ஸ்வரங்களில் மஹதி என்ற ராகத்தை கண்டுபிடித்தார்.  அபூர்வ ராகங்கள் படத்திற்காக நான்கே ஸ்வரங்களில் அமைந்த மஹதி ராகத்தைக் கொண்டு அற்புதமாக எம்.எஸ்.வி உருவாக்கிய பாடல் ‘அதிசய ராகம், ஆனந்த ராகம்’ பாடல். நான்கு ஸ்வரங்களில் பாடல் உருவாக்குவது என்பது திறமையான நடனக் கலைஞனின் கைகளை கட்டிவிட்டு அற்புத நடனத்தை ஆடச்சொல்வது போன்றது. அதில் அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தியதோடு, மிகப் பெரிய ஹிட் பாடலாகவும் மாற்றிக்காட்டிய ஜீனியஸ் எம்.எஸ்.வி. இன்று வரை அது ஒரு அதிசய ராகம் தான்.

Word Painting என்றொரு வகை உள்ளது. மேல் நாட்டில் அதிகம்  உபயோகப்படுத்தப்படும் ஒன்று. இந்திய இசையிலும் இருக்கிறது. வார்த்தைகள் என்ன சொல்கிறதோ அந்த அர்த்தத்திற்கு ஏற்றவாறே இசையமைத்தல். ‘மேலிருந்து கீழிறங்கி’ என்றொரு வரி அமைந்தால் அதில் மேலிருந்துவை உச்ச ஸ்தாயியில் தொடங்கி கீழிறங்கி வரும் போது கீழ் ஸ்தாயியில் பாடுவது. இதைத்தான் Word Painting என்கிறார்கள். இதை கேட்பவர்களுக்கே தெரியாமல் செய்வதுதான் சிறந்த கலை. இந்த முறையை சிறப்பாக கையாண்டவர் எம்.எஸ்.வி.‘புதிய வானம்..புதிய பூமி’ பாடலில் வானமும் பூமியும் நீண்டு வரும். ஏனென்றால் வானம், பூமி மிகப் பெரியது. அதைக் குறிக்கும் வகையில் வானம், பூமி நீண்டு வருகிறது. அதற்கடுத்த வரியான ‘எங்கும் பனிமழை பொழிகிறது’ என்று ஸ்வரங்கள் அவரோகணத்தில் படிப்படியாக கீழிறங்கி வரும். வானத்திலிருந்து பனிமழை கீழிறங்கி வருகிறது. பாடலைக் கேட்கும் போதே நமக்கும் அந்த உணர்வு வந்து விடும். ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்’ பாடலில் சந்தித்தால் என்ற வரிக்கு அடுத்து சின்ன இடை வெளி ஒன்று வரும். அந்த இடத்தில் சந்தித்தால் என்ன நடக்கும் என்று ரசிகர்களை யோசிக்க விடுகிறார்.

‘நான் ஆணையிட்டால்’ பாடல் எம்.ஜி.ஆர் பாடும்போது அதற்கு வேறு வேறு அர்த்தங்கள் வந்துவிடுகிறது. அதை தெரிந்து சரியாக பயன்படுத்தியவர் எம்.எஸ்.வி. படத்தில் பாடலை பாடும் கதாபாத்திரம் எப்படிப்பட்டது, நிஜ வாழ்க்கையில் மக்களின் மனதில் அந்த கதா நாயகனின் பிம்பம் எப்படியானது என்ற எல்லா விஷயங்களையும் கணக்கில் கொண்டே அவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்களுக்கு இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் பாடல்களுக்கு கண்ணதாசன், வாலி வரிகள் எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே அளவில் எம்.எஸ்.வி இசையும் முக்கியமானது. எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு இவர் இசை மகத்தான பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது.

1984 ல் முதல் முறையாக எம்.எஸ்.வியுடன் ஒரே மேடையில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத் தது. என்னுடைய நண்பர் பாடல் எழுத நான் இசையமைப்பேன். அவர் இறந்து விட்டார். அவருடைய நினைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.வியை அழைத்திருந்தோம். வருவாரா என்ற சந்தேகமும் இருந்தது. அடை மழை அன்று. எம்.எஸ்.வி நிகழ்சிக்கு வந்ததோடில்லாமல் ‘அரைச்ச மாவையே அரைக்கும் இசை உலகத்தில் புதிதாக முயற்சிக்கும் இந்த பையன் நல்லா வருவான்’ என்று வாழ்த்தி தனக்கிட்ட மாலையை எனக்கு அணிவித்து ஆசீர்வதித்தார்.

அதன் பிறகு அவ்வப்போது சந்தித்தாலும் 1994 ல் விழா ஒன்றிற்காக அழைக்கப் போயிருந்தேன். தாடி, மீசையுடன் எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தேன். எம்.எஸ்.விக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. என்னுடைய கச்சேரி நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினேன். ‘அந்த பையனா நீ...இம்ப்ரூவ் பண்ணியிருக்கியா’ என்றார். நல்லா இருக்கியா என்று கேட்டிருந்தால் இன்று வரை அதை ஞாபகம் வைத்திருக்க மாட்டேன். அவர் கேட்டது என்னுடைய இசை வளர்ச்சியைப்பற்றி. நெகிழவைத்த சம்பவம் அது. அவர் அப்படித்தான்.

ராகங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த திரை இசையை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தவர் எம்.எஸ்.வி. புராண படங்களிலிருந்து தமிழ் சினிமா சமூக படங்களை நோக்கி நகர்ந்த காலகட்டம். அந்த மாற்றத்திற்கான காலத்தில் வந்தவர் எம்.எஸ்.வி. அதை சரியாக உள் வாங்கி புது விதமான இசையை மக்களுக்கு கொடுத்தார்.

எங்கே நிம்மதி பாடலின் ஆர்கஸ்ட்ரேஷன், மணமேடை பாடலில் வரும் பியானோ, என்ன என்ன வார்த்தைகளோ பாடலில் வரும் விப்ரா டோனின் சன்னமான துள்ளல், மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடல், பூ முடித்தாள் ஒரு பூங்குழலி கல்யாணப் பாடலில் மெல்லிய சோகத்தை நுழைத்தது, ஒரு ராஜா ராணியிடம் என்ற பல பல்லவிகள் சேர்ந்த பாடல், உலகம் சுற்றும் வாலிபனில் பன்சாயி பாடல் இப்படி அவருடைய இசை மேதமையை சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு சிகரமாக எம்.எஸ்.வி போல யாராலும் பாட முடியாது என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். முகமது பின் துக்ளக் படத்தில் வரும் அல்லா அல்லா பாடலை எம்.எஸ்.வியை போல் வேறு யாராலும் பாட முடியாது.

எம்.எஸ்.வி அவர்களுடன் ஒரே மேடையில் விருது பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது, ‘எம்.எஸ்.வி விருது பெற்ற இடத்தில் எனக்கும் விருதா என்று தவறாக நினைக்க வேண்டாம். அவருக்கு கிடைத்தது அவார்ட்(award), எனக்கு  கிடைத்தது எ வார்ட் (a ward– சிறுவன்). அவர் முன்னால் நான் சிறுவன் என்பதை  நினைவுறுத்துவதற்காக தரப்பட்டது’ என்றேன். நான் மட்டுமல்ல தமிழ் இசை உலகமே அவருக்கு முன்னால் சிறுவர்கள் தாம். (நமது நிருபரிடம் கூறியதிலிருந்து)

ஆகஸ்ட், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com