அடைபட்ட கதவு

சொதப்பல் பக்கம்
ஓவியம்
ஓவியம்மணிவர்மா
Published on

என் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன... கண்களில் என்னையுமறியாமல் நீர் தாரை தாரையாய்... இனியும் வாசிக்க முடியாது இதை. இது வெறும் எழுத்துக்களல்ல. ஒரு மனுசியின் இதயம். சகல திசைகளிலும் ஆறுதலை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போன இதயம். படிக்கத் திராணியற்று அப்புத்தகத்தை மூடி வைக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை... இப்போதைய ஒரே ஆசுவாசம் சிகரெட்தான். பற்றவைக்கிறேன்.

“அடைபட்ட கதவுகளின் முன்னால்...” இதுதான் ஓரிரு வாரங்களாக என்னை உலுக்கிக் கொண்டிருக்கும் நூலின் பெயர். வாங்கிவந்து மாதங்கள் சிலவாயிற்று. ஆனால் வாசிக்கத்தான் தெம்பில்லை. இருபத்தி மூன்றாண்டுகளாய் சிறையில் சின்னாபட்டுக் கொண்டிருக்கும் நம் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது எண்ணக் குமுறல்களை கொட்டித் தீர்த்திருக்கிற இந்தப் புத்தகத்தை வெறும் வார்த்தைகளாகவும்... வரிகளாகவும்... பத்திகளாகவும்.. பக்கங்களாகவும்... கடந்து போய்விடமுடியாது நாம்.

ஒவ்வொரு வரிக்குப் பின்னும் வலி மிகுந்த வரலாறு ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது. அற்புதம்மாள் என்கிற அந்த அற்புதத்தாயின் எளிய ஏக்கங்களை... கனவு சுமந்த எதிர்பார்ப்புகளை... ஏமாற்றங்களால் ஏற்பட்ட ரணங்களை... அப்படியே மலையாளத்தில் பதிவு செய்திருக்கிறார் அனுசிறீ என்கிற மானுடத்தை நேசிக் கும் ஒரு மகத்தான பெண். அதுதான் தமிழில் “அடைபட்ட கதவுகளின் முன்னால்...” என்கிற நூலாய் மலர்ந்திருக்கிறது.

இந்த நூலை மலையாளத்தில் எழுதி அனுசிறீ செழுமை சேர்த்தினார் என்றால் அதைத் தமிழால் தழுவி வலிமை சேர்த்திருக்கிறார் தோழன் யூமா வாசுகி. இது வெறும் மொழிபெயர்ப்பல்ல. இதயத்தால் ஊடுருவி அற்புதம்மாளின் எண்ணங்களுக்கு வண்ணம் கோர்த்துக் கொடுத்திருக்கிற மகத்தான மனிதநேயப் பணி. இதயத்தைப் புரட்டிப்போட்ட வரிகள் தந்த வலியில்... அவரோடு கதைத்து கணநாளாயிற்றே என்று அழைக்கிறேன் அலைபேசியில்...

மகிழ்ச்சி மேலிட “பேசிப் பத்து வருசம் ஆச்சே” என்கிறார் யூமா வாசுகி.

அவ்வப்போது நினைப்பேன். ஆனாலும் என் உடன்பிறந்த சோம்பேறித்தனம் என்னைப்  பேசாமல் தடுத்து விடும் என்ன செய்ய?

சிரிக்கிறார்.

இப்போதுதான் வாசித்து முடித்தேன் நம் அற்புதம்மாள் குறித்து நீங்கள் மொழிபெயர்த்த “அடைபட்ட கதவுகளின் முன்னால்” நூலினை. அற்புதம் தோழா.

“இப்போதுதான் வாசித்தீர்களா?” என்கிறார் யூமா வாசுகி.

ஆம். 2009க்குப் பிற்பாடு கொடும் இரவுகளில் இருந்து என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இதைப் போன்ற புத்தகங்களைப் படித்துவிட்டுப் படுத்தால்... இரவுகளில் வரும் நந்திக்கடலும்... முள்ளிவாய்க்கால் ஓலங்களும்.. நெடிதுயர்ந்த சிறைச் சுவர்களும்... விடிய விடிய என் இரவுகளைக் காவு கொண்டு விடுகின்றன. இப்போதெல்லாம் முத்து காமிக்ஸ்... ராணி காமிக்ஸ்... மாதிரி ஏதாவதுதான் படித்துவிட்டுப் படுக்கிறேன்... அதுதான் தோழா தாமதத்திற்குக் காரணம் என்கிறேன்.

மறுமுனையில் மௌனம்.

மனிதநேயமிக்க மகத்தான பணியை மலையாளத்தில் செய்திருக்கிற அனுசிறீக்கு மறவாமல் எங்கள் அன்பைச் சொல்லுங்கள். கோவை வரும்போது அழையுங்கள். உள்ள உணர்வுகளை உள்ளவாறே தமிழால் தாங்கி எங்களுக்குத் தந்திருக்கிற உங்கள் கரங்களுக்கு எம் முத்தங்களைத் தரவேண்டும்... என்றவாறு அலைபேசியை அணைக்கிறேன்.

ச்சே... என்ன புத்தி இது? வெறும் பார்வையாளனாய் இருக்கிற எனக்கே இவைகளை வாசிக்க இத்தனை துயரம் என்றால்...  அரசுகளால் மூர்க்கத்தோடு வேட்டையாடப்பட்ட உயிர்களுக்கு எத்தனை எத்தனை துயரம் இருக்கும்? வாசிப்பதே துயரம் என்றால்... துயரமே வாழ்வாகிப்போன அற்புதம்மாளைப் போன்றவர்கள் எங்கே ஓடுவது? எங்கே ஒளிவது? ச்சே... என்ன புத்தி இது? கீழே வைத்த புத்தகத்தை மீண்டும் கையில் எடுக்கிறேன்.

வேலூரில் எளிமையான ஒரு குடும்பத்தில் பிறந்ததாக அற்புதம்மாள் சொல்வதில் தொடங்குகிறது இப்புத்தகம். சிறுமியாய் இருக்கும்போது சமூக அக்கறை மிக்க தந்தையால் ஊட்டப்பட்ட பகுத்தறிவின் ஊடே அழைத்துச் செல்லப்பட்ட கூட்டங்கள்.. அவ்வேளையில் சந்தித்த பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்... இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்த காலத்தில் மக்களை நேசிக்கும் ஒரு நெஞ்சமே தன் மகளுக்குத் துணைவராக வேண்டும் என்கிற அப்பாவின் எதிர்பார்ப்பு... அதன்படியே வந்து நின்ற குயில்தாசன் என்கிற சுயமரியாதைக்காரரோடு கரம்கோர்த்த நாட்கள்.. வந்து வாய்த்தவரும் சமூக அர்ப்பணிப்பில் தன் தந்தைக்குச் சளைத்தவரல்ல என்கிற பெருமிதத்தில் கரைந்த பொழுதுகள் என நகர்கிறது நூல்.

சோலையார்பேட்டை என்கிற கூட்டில் குயில்தாசனும் அற்புதம்மாளும் வசித்தபோது  பிறந்தவர்கள்தான்  அன்புமணி...பேரறிவாளன்... அருள்செல்வி  மூவரும். மூடநம்பிக்கைகளை ஓட ஓட விரட்டிய பெரியார்தான் மூத்தவள் அன்புமணிக்குப் பெயர் சூட்டியவர்.

அருள்செல்வி இதில் கடைக்குட்டி.

உலகில் யாருக்கும் இல்லாத பெயரைச் சூட்டவேண்டும் என்று தன் மகனுக்கு பேரறிவாளன் என்று சூட்டினார் குயில்தாசன்.  ஆம் யாருக்கும் இல்லாத பெயர்.

அதைப்போல பத்தொன்பது வயதிலேயே யாருக்கும் இல்லாத துயர்.

மனிதநேயமும்... மக்களுக்கான அர்ப்பணிப்பு மிக்க பணிகளுமாய்... சமூகத்தை நேசித்தவாறே வலம் வந்த அந்த குடும்பத்திற்குத் தெரியாது மே 21 க்குப் பிற்பாடு சூறாவளி யொன்று திசைமாறித் தாக்கப் போகிறது என்று.

ஆம் மே 21 அன்று நிகழ்ந்த ராஜீவின் மரணமும் அதையொட்டி உருவான விசாரணையும் நீண்டபோது பேரறிவாளன் உட்பட எவருக்கும் தெரியாது தான் இதில் அநியாயமாய் பலிகடா ஆக்கப்படுவோம் என்று. எல்லோரையும் போலவே அறிவின் குடும்பமும் ஈழமக்களின் துயர்துடைக்க உழைத்தது. ஈழ விடுதலையை நேசித்தது. பல பங்களிப்புகளைப் பகிர்ந்து கொண்டது.

இடைச்செறுகலாய் ஒரு முன்கதைச் சுருக்கம்:

இது போதாதா? போதாக்குறைக்கு பேரறிவாளன் வேறு மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டயப்படிப்பு முடித்திருக்கிறார்.

போடு வழக்கு. “பெல்ட் பாமுக்கான பேட்டரியே அறிவுதான் ஏற்பாடு” என்று. பொம்மைகளுக்குப் போடும் அந்த 9 வோல்ட் பேட்டரி ஐரோப்பா.. அமெரிக்கா... ஆப்பிரிக்கா... ஐக்கிய அரேபிய நாடுகள் என பலபக்கம் அலைந்தும் எங்கும் சிவராசனுக்குக் கிடைக்காமல்... கடைசியாக அறிவிடம் வந்து அடைக்கலமாகி எப்படியாவது வாங்கிக்கொடு என்று மன்றாடி... பேரறிவாளன் பக்கத்தில் உள்ள பெட்டிக்கடைக்குப் போய் வாங்கி வந்து தந்திருக்கிறார். அதுவும் “பில்”லோடு.

பெல்ட் பாமை செய்தவர்கள் யார் என்று 1998 இல் போடப்பட்ட பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவால் இந்த நொடிவரைகூட கண்டுபிடிக்கப் படாமல் இருக்கும்போது பெட்டிக்கடையில் வாங்கிக் கொடுத்தவன் தூக்கிலேற வேண்டுமாம்.

இதுதானய்யா முன்கதைச் சுருக்கம்.

“நாளையே கொண்டுவந்து விட்டுவிடுவோம்” என்று போலீசால் 11.6.1991 அன்று கூட்டிச் செல்லப்பட்ட கள்ளம்கபடமற்ற தன் பத்தொன்பது வயது மகனுக்காக அந்தத் தாய் ஏறாத படிகளில்லை. இரைஞ்சாத நெஞ்சங்க ளில்லை. நாளை வருவான்... நாளை வருவான்... என்று காத்திருந்த அந்தத் தாய் ரத்தவாடை வீசும் “மல்லிகை” சித்ரவதைகூடம் தொடங்கி... செங்கற்பட்டு சிறை... பூந்தமல்லி சிறை... சேலம் சிறை... வேலூர் சிறை... தடா

நீதிமன்றத்தின் தூக்கு. உச்ச நீதிமன்றத்தின் தூக்கு உறுதி... கருணை மனு…. கருணை மனு மீதான நெடிய காலதாமதம்... கருணை மனு நிராகரிப்பு... உயர்நீதிமன்றத் தடை... சீராய்வு மனு.. உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவு... என்று அலையாய் அலைந்து கொண்டிருக்கும் வாழ்க்கைதான் இந்நூல் முழுவதும்.

இடையில் ஓடிவிட்ட நெடிய 23 ஆண்டுகளில் அந்தத் தாய் அற்புதம்மாள் பட்ட அவமானங்கள்... எதிர்கொண்ட ஏளனங்கள்.. புறக்கணிப்புகள்... என எல்லாவற்றையும் உணர்த்திவிடக்கூடிய சக்தி எழுத்துக்களுக்கு இருக்கிறதா? என எண்ணிப்பார்க்கிறேன்.

அந்த அவமானங்களும், புறக்கணிப்புகளும்தான் அந்தத் தாயை சிலவேளைகளில் சீறவும் வைக்கிறது. அது ஏமாற்றங்களால் ஏற்பட்ட வலி. அந்தத் தாயை பேரறிவாளனின் தாயாக மட்டுமல்லாமல் நமது தாயாகவும் உணர்ந்தால் அந்தச் சீற்றம் நம்மை சாந்தப்படுத்தும்.

இந்த வேளையில் இப்படி அலையக்கூட சொந்தங்களற்ற முருகனையும், சாந்தனையும் எண்ணிப்பார்க்கிறேன்.

சதிச்செயல் செய்தவர்களெல்லாம் எங்கோ உல்லாசமாய் உலவிக் கொண்டிருக்க தொப்புள்கொடி உறவாய் நம்பி வந்த மண்ணில் நெடிய சிறைச் சுவர்களை மட்டுமே தரிசித்துக் கொண்டிருக்கும் அவர்களும் எம் பிள்ளைகள்தான்.

அற்புதம்மாளை எண்ணும் வேளையிலெல்லாம் மாக்ஸிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. அதில் வரும் பாவெல்லும் அவனது தாயுமாகவே எனக்கு அறிவும் அற்புதம்மாளும் முன் நிற்கிறார்கள். ஏன் அவர்களைக் காட்டிலும் நம் கண் முன் வாழும் முன்னுதாரணங்களாகவே இவர்கள் படுகிறார்கள். இவர்கள் வாழ்வுதான் இலக்கியம். இதுவே இந்நூற்றாண்டுக்கானது. இலக்கியம் என்பது ஆயிரம் ரெண்டாயிரம் பக்கங்களில் விரியும் தலையணை அளவு புத்தகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்நூலைப் போல அது 115 பக்கங்களிலும் இருக்கலாம். இந்த 115 பக்க இலக்கியம் உங்கள் பக்கம் வர நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

அது:94430 58565 என்கிற எண்ணுக்கு ஒரு அழைப்பை விடுப்பதுதான்.

அழையுங்கள்... காயமுற்ற ஒரு மானுடத்திற்கு அளிக்கும் ஒரு ஆறுதலாகக் கூட அமையலாம் அது.

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com