அடுமனை

அடுமனை

Published on

ருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்குப் புலம் பெயர்ந்த போது, கொங்கு நாட்டின் வழக்குமொழி வசீகரமாக இருந்தது. அது கோவை சரளா பேசியதோ, சின்னக் கவுண்டர் படத்தில் மனோரமா ஆச்சி பேசியதோ மட்டுமேயல்ல. எனது இந்தக் கட்டுரை அது பற்றியதன்று.

அன்று கோவையில் குண்டு வெடிப்பு நடந்திருக்கவில்லை. நூற்பாலைகளும் நெசவாலைகளும் மிகச் செழிப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. மூன்று ஷிப்ட்களிலும் வேலை செய்வோர் அருகிருக்கும் தமது வீடுகளுக்கு நடந்தோ சைக்கிளிலோ போய்க்கொண்டிருப்பார்கள். இடைவேளைகளில் சாலைக்கு வந்து பீடி, சிகரெட், வெற்றிலை, ஊட்டி வர்க்கி, தேநீர், என வாங்குவார்கள். எந்த நள்ளிரவிலும் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடலாம். சிறு தொழிற்கூடங்களின், பட்டறைகளின், பஞ்சாலை களின் தொழிலாளர்களுக்கு என நகர் முழுக்க முக்கிய சந்திப்புக்களில் இரவெல்லாம் டீக்கடைகள் நிறைந்திருக்கும்.

இன்றும் நகர் முழுக்க ஆயிரம் டீக்கடையாவது இருக்கும். இந்தியாவின் வேறெந்த நகரிலும் மக்கட்தொகை விகிதத்தின்படி, இத்தனை டீக்கடைகள் இருப்பது அபூர்வம்தான். என்னை ஆச்சர்யப்படுத்திய விடயம் அதுவும் அல்ல. கோவை முழுக்க, பல டீக்கடை, காப்பிக்கடை,  சாயாக்கடைகளுக்கு பேக்கரி எனும் நாமம் இருந்தது. அதாவது BAKERY. சில பேக்கரிகளுக்கு தமிழில் ‘அடுமனை’ என்று பெயர் இருந்தது. எடுத்துக் காட்டுக்கு ஈஞுதிடி Devi Bakery என ஆங்கிலத்திலும் தேவி அடுமனை என்று தமிழிலும் போர்டு எழுதப்பெற்றிருக்கும்.

எங்களூரில் நாங்கள் Bakery என்ற சொல்லைத் தமிழில் பேக்கரி என்று எழுத  மாட்டோம். பேக்கறி என்று எழுதுவோம். சாப்பாடு ரெடி என ஓட்டல்களில் அட்டை தொங்காது. சாப்பாடு றெடி என்ற அட்டையே தொங்கும். Ready  என்ற  சொல் எனக்கு வேறொரு சிந்தனையைத் தூண்டுகிற, காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நக்கலடிக்க, பிரபலமான அரசியல் கட்சிக்காரர்கள், பொதுமேடைகளில் ஜோக் ஒன்று சொல்லி இளக்காரம் செய்வார்கள். உண்மையில் காமரஜருக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியும்..

பல  ரசியல் பிரமுகர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களை விடவும் சிறப்பாகவும்பேசத்தெரியும்.                                                                           

ஆனால் மேடைப் பேச்சின் மூலம் தமிழ் மந்தைகளைக் கவரும் நெருக்கடி இருந்தது அரசியல்வாதிகளுக்கு அன்றும் இன்றும்.

ஒரு முக்கியமான காரியம் குறித்து பிரதம மந்திரியை சந்தித்துப் பேச, டெல்லி போயிருந்தாராம் காமராஜர். அவரை அழைத்துச் செல்ல வந்த பிரதம மந்திரியின் உதவியாளர் கேட்டாரம் – "Mr.Kamaraj are you ready?'' என்று ,  பதறிப்போன காமராஜர் பதில் சொன்னாராம், No, No, No...I am not Reddy, I am a Nadar' என்று. எவ்வளவு மலிவான அரசியல் பாருங்கள்! ஏதோ அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் கெட்டுப் போயிற்று என்றும் பண்டு புனிதமாகவே இருந்தது என்றும் இறும்பூது எய்துகிறார்கள்.

அதுபோல் ஏராளம் கேட்டிருக்கிறேன் புழுத்த மேடைப்பேச்சுக்கள். வளர்த்த நன்றியோ என்னவோ, காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று கொண்டாடியவர் தாடியைச் செதுக்கினால் இரண்டு திருப்பன் செய்யலாம் என்று பேசவில்லை. அன்று ஊரில் வழங்கிய பழமொழியைப் புதுக்கிச் சொன்னால், ‘சிகை அலங்காரக் கடை குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர் தானே கிடக்கும்!’ ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன? யேசுநாதருக்கு முகம்மது நபிக்கு, பகவத் கீதை அருளியது எவரானாலும் அவருக்கு, திருவள்ளுவருக்கு, இளங்கோ அடிகளுக்கு, ஆழ்வார் நாயன்மாருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததா என்ன?

அது கிடக்கட்டும், Baked, Half Baked, Bakery எனும் சொற்களும் அவற்றின் பயன்பாடும் நமக்குத் தெரியும். ஆனால் அடுமனை என்ற சொல் 1989-ல் முதன் முறை பார்வையில் பட்டபோது நூதனமாக இருந்தது. பிற்பாடு யோசித்துப் பார்த்தபோது தான், Bakery என்ற சொல்லின் தமிழ் ஆக்கம் அடுமனை தானா என்ற கேள்வி பிறந்தது. அடுதல் என்ற சொல்லுக்கு சமைத்தல் என்றே பொருள். அஃதாவது உணவு தயாரித்தல். எனில் எல்லா உணவு விடுதிகளுமே அடுமனைகள் தான், ஆரியபவன், ஆனந்த பவன், சூரியபவன், சந்திரபவன், ஆசாத் ஓட்டல், முனியாண்டி விலாஸ் அனைத்துமே அடுமனைகள் தானே! அது எங்ஙனம் Bakery -க்கு மாத்திரமேயான தனிச்சிறப்புச் சொல் ஆகும்?

அடுதல் எனும் சொல்லுக்குப் பேரகராதி, சமைத்தல், காய்ச்சுதல், உருக்குதல், குற்றுதல் எனப்பொருள்கள் தருகின்றது. அதாவது அடுதல் எனில் சமைத்தலுக்கான பொதுச்சொல். சமைத்தல் என்றால் Cooking என்று பொருள் தரும்போது, நம்மிடையே பல்வேறுபட்ட பக்குவங்கள் இருக்கின்றன. வதத்தல், வாட்டல், துவட்டல், புரட்டல், வெதுப்பல், வறட்டுதல், பொரித்தல், வறுத்தல், அவித்தல், காய்ச்சுதல், வேகவைத்தல், உருக்குதல், சுடுதல் எனப் பல்வகைப் பக்குவங்கள் உணவு தயாரிப்பில். எனவே Baking என்பதற்கான கலைச்சொல் அடுதல் அல்ல.

இந்தக் கட்டுரை எழுதி வரும்போது, என் வீட்டில் இருந்து பேரூர், செல்வபுரம் வழியாகப் பேருந்தில்  சென்றேன். ஒரு கடையில் பெயர்ப்பலகை ‘பொறி பவன்’ என்றிலிருந்ததை அனிச்சையாகக் கவனித்தேன். கீழே பொறி, கடலை, அவல் முதலானவை கிடைக்கும் என்று எழுதி இருந்தனர். பொரியைத்தான் பொறி என எழுதினார் போலும். பொரிப்பதால் பொரி. கரிப்பதால் கரி, விரிப்பதால் விரி. தரித்தல் வேறு தறித்தல் வேறு.

   திருமந்திரத்தில் ஒரு பாடல்

“அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடியாளோடு மந்தனம் கொண்டார்

இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்

கிடைக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே!”

என்கிறது. மனையாள் சமைத்து வைத்திருந்தார். அந்த உணவை உண்டார். மனைவியுடன் சற்றுக் குலாவினார். இடப்பக்கம் கொஞ்சம் வலிக்கிறதே என்றார். ஓய்வெடுக்கப் படுத்தார். கிடந்து ஒழிந்தாரே! இங்கு அடப்பண்ணி வைத்தார் என்பதற்கு சமைத்து வைத்தார் என்றும் சமையலுக்கான பொருட்கள் சேகரித்துக் கொடுத்தார் என்றும் பொருள் சொல்வார்கள்.  எதுவானாலும் அடுதல் என்றால்  சமைத்தலே அன்றி Baking அல்ல. அட்ட என்றால் சமைத்த என்பது பொருள். அட்ட மா சித்தி என்பார்கள். அங்கு அட்டம் என்றால் எட்டு. அது வேறு சமாச்சாரம். ஔவையார் எழுதிய நீதி நூல்களில் ஒன்று மூதுரை. அதனை வாக்குண்டாம் என்றும் சொல்வார்கள். இந்த ஔவையார் புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் அல்ல. இந்த நூலின் மேற்கோளாக நாம் காட்டப் போகும் பாடலை, தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் பகுதிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் மேற்கோள் காட்டி இருக்கிறார். எனவே இந்த ஔவையார், நச்சினார்க்கினியர் காலத்துக்கும் முற்பட்டவர் என்பது அறியலாம். இனி பாடல்:

‘அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் -

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்’

மூதுரையில் மொத்தம் 30 வெண்பாக்கள். அவற்றுள் நான்காவது பாடல் இது. பாடலின் பொருள் - அடுப்பில் ஏற்றிப் பாலைக் காய்ச்சினாலும், பால் தனது சுவையில் குன்றுவது இல்லை. எத்தனை அளவளாவி நட்புப் பாராட்டினாலும் நண்பர் அல்லாதவர் நண்பர் ஆகமாட்டார்கள். எத்தனை வறுமை வயப்பட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான். நெருப்பிலிட்டுச் சுட்டாலும் சங்கு வெள்ளை நிறமாகவே இருக்கும்! இங்கு ஔவை கூறும் மேன்மக்கள் என்பது சாதி, இனம், மதம் குறித்த சொல் அல்ல. மனிதப் பண்புகள் குறித்தது. நகரப் பேருந்தில் பயணம் செய்கிறவன் மேன்மக்களாக இருக்கலாம். விலையுயர்ந்த பென்ஸ் காரில் போகிறவள் கீழ்மக்களாகவும் இருக்கலாம்.

ஆடுதுறை மாசாத்துவனார் என்றொரு புலவர். பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் இவர் பாடிய பாடல் ஒன்றே ஒன்றுதான்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மாண்டபோது கையறு நிலையில் பாடிய பாடல், புறநானூற்றில்

‘நனி பேதையே, நயன் இல் கூற்றம்

விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை’

என்பன பாடலின் முதல் இரண்டு வரிகள். ‘யமனே, உன்னைப் போல சிறந்த பேதை இருக்க இயலாது. விளைச்சலைத் தரும் வித்தினைச் சமைத்து உண்டவன் தானே நீ’ என்பது பாடல்வரிகளின் பொருள். பஞ்ச காலத்தில்,

விவசாயி வீடுகளில் பட்டினி போக்க, வித்து நெல்லைக் கூட அவித்துக் காயவைத்துக் பஞ்ச காலத்தில், விவசாயி வீடுகளில் பட்டினி போக்க, வித்து நெல்லைக் கூட அவித்துக் காயவைத்துக் குத்திப் பொங்கித் தின்பார்கள். கிராமமே அவர்களை, வித்து நெல்லைக் குத்தித் தின்றவன் என்று பழி சொல்லும். இந்தப் பாடலிலும் அட்டு என்றால் சமைத்து என்று பொருள்.

வேறங்கோ நாம் விரிவாகப் பேசி இருக்கிறோம். ‘தெண்ணீர் அடு புற்கை’ என்ற வள்ளுவரின் சொற்பாய்ச்சல் பற்றி. தண்ணீர் தாராளமாக ஊற்றிச் சமைத்த நீர்பெருக்கிய கூழ் என்பது பொருள். இங்கும் அடு எனில் சமை. அட்ட பொருள் அடிசில். அடிசிலை உண்டார் என்றாரல்லவா திருமூலர்! வெல்லம் கூட்டிச் சமைத்ததுவே அக்கார அடிசில். அக்காரம் எனில் வெல்லம். அல்லால் அது துவாரகாபுரியில் இருந்து இறக்குமதியான பண்டம் அன்று.

ஆகவே Bakery  என்பதை அடுமனை என்றால் அது அத்தனை துல்லியமான தல்ல. அண்மையில் அகரமுதல்வர் என்னும் தமிழ் ஈழத்தம்பி எழுதிய ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ எனும் சிறுகதைப் தொகுப்பு வாசித்தேன். தலைப்பில் உங்களுக்கு ஒரு குழப்பம் வரலாம். லெப்ரினன்ட் என எழுதுகிறார்கள். கனடா நகரங்களில் ஒன்று Toronto. நாம் அதை டொரண்டோ என்று எழுதுகிறோம். ஈழத்தமிழர்கள் அதனை றொரன்றோ என்று எழுதுவதை அ.முத்துலிங்கம், சேரன், தமிழ்நதி,

செல்வம் அருளானந்தம் எழுத்துகளில் காணவியலும். T எனும் ஆங்கில எழுத்துக்கு நாம் டி என்று எழுதும்போது அவர்கள் றி அல்லது ரி என்று எழுதுகிறார்கள். இதில் பரிகசிக்க எதுவும் இல்லை.

அகரமுதல்வனின் சிறுகதைகளுக்கான மதிப்புரையும் அல்ல இது. அந்தத் தொகுப்புக்கு தம்பி லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய தீர்க்கமான முன்னுரையைக் கடந்து நான் வேறென்ன சொல்லிவிடப் போகிறேன்? அந்தச் சிறுகதைகளில் புத்தனின் புதிய முகத்தை நீங்கள் வதை முகாம்களில் சந்திக்கலாம். நெஞ்சிய ஈரமுடையவர்கள் அழாமல் வாசிக்க இயலாத கதைகள் அவை. தமிழ் மரபுக்கும், ஈழத் தமிழனின் உரிமைப் போருக்கும் எதிரான மனோபவம் கொண்ட தமிழ் அறிவு ஜீவிகள் இவை எவற்றையும் வாசிக்காமல் இன்னும் கனக்கக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்கு இப்போது பேக்கரி பற்றிய இந்தக் கட்டுரையில் அகரமுதல்வனைப் பேசுகிறேன் என்றால், மேற்சொன்ன தொகுப்பில் ‘மோன்’ என்றொரு கதை. முன்பே ‘அந்திமழை’யில்  வாசித்தது. அந்தக் கதையில் Bakery எனும் சொல்லுக்குத் தமிழ்ப்பதமாக அடுமனை பயன்படுத்தவில்லை அகரமுதல்வன். ‘வெதுப்பகம்’ என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறார். தொலைபேசியில் நான் கேட்டேன், “தம்பி இது  நீங்கள் புதியதாய்ப் பயன்படுத்திய சொல்லா?” என்று. அவர் பதில் சொன்னார், “இல்லை அண்ணன். ஈழத்தில் கனகாலமாகப் பாவிக்கிற சொல்தான்” என்று. Bake - வெதுப்பு, Baking - வெதுப்புதல். முன்பெல்லாம் தமிழ்க்கதைகளில் நாயகனோ, நாயகியோ அடிக்கடி உள்ளம் வெதும்புவதுண்டு.

ஈழம், ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழுக்குச் செய்த பங்களிப்பு சாமான்யமானதன்று. சங்க இலக்கியப் புலவர்களில் பலர் ஈழத்தவர். தமிழின் நிகண்டுகள், அகராதிகள் பல ஈழத்தவை. இன்றைய தமிழ்ப்படைப்புலகில் தீவிரமானவை ஈழத்தமிழ் படைப்புகள். எந்த அரசியல் கட்சி ஆண்டாலும் தமிழ் இனம் பற்றிய மத்திய அரசுப்பார்வை ஒன்றாகத்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். அதில் நாம் தான் காரியமாக யோசிக்க வேண்டும். ஆனால் உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று முழங்கியவர்களும் முரசறைந்து திரிந்தவர்களும் நிகழ்த்தும் மேடைக் கூத்தாட்டுகள் பற்றியும் நாம் தெளிவாக இருத்தல் வேண்டும்.

மே, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com