அஜீத் முன்வைக்கும் பெண்ணியம்!

அஜீத் முன்வைக்கும் பெண்ணியம்!
Published on

நேர்கொண்ட பார்வை. இந்தப்படம் சமகாலத்தில் மிக முக்கியமான ஒரு பிரச்னையைப் பேசுகிறது. அதைவிட இதில் அஜீத் என்னும் பெரிய நடிகர் நடித்திருப்பது இப்பிரச்னையை வெகுமக்களிடம் கொண்டு செல்ல உதவி உள்ளது. பெரும்பாலும் தமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்ததாகவே இருந்து வந்திருக்கிறது.பெண்களின் உடை, நடை, குணம் எல்லாவற்றுக்கும் இலக்கணம் வகுத்து வைத்திருந்தது. நாடு விடுதலை பெற்றபிறகு பெண்கள் பொதுவெளிக்கு கடந்த நாற்பது ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையில் வந்தபிறகு அவர்களுக்கான மதிப்பீடுகள் மாறிவிட்டன. அவர்களின் உறவுகள், குணங்கள், தேவைகளில் பெரும் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சமகால மனுஷிகளைப் பதிவு செய்ய தமிழ்க் கலையுலகம் மிகக்குறைந்த அளவிலேயே முயற்சி செய்திருக்கிறது. இந்நிலையில் அஜீத் இந்த படத்தில் நடிக்க முன்வந்தது முக்கியமான விஷயமே. சினிமா மட்டுமல்ல. இலக்கியமும் கூட எழுபதுகளில் மோகமுள், மரப்பசு, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படைப்புகள், பிறகு பாலகுமாரன், சாரு நிவேதிதா போன்ற சில எழுத்தாளர்களின் படைப்புகள் ஆகியவற்றுடன் பெண்ணைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டுவிட்டது. இன்றும் சமகாலப் பெண்ணின் உணர்வுகள் நம் கதைகளில் பதிவாவது குறைவே. பழைய இலக்கணங்களுடன் கூடிய பெண்களே கதை மாந்தர்களாக உலா வருகிறார்கள். நேர்கொண்ட பார்வை முன்வைக்கும் பெண்ணியம் மேலும் பல படைப்புகள் இதே கோணத்தில் வெளிவருவதற்கு பாதை போட்டுக் கொடுத்திருக்கிறது.  இப்படம் முன்வைக்கும் பெண்ணியம் பற்றி எழுத்தாளர் அராத்துவின் பார்வை பின் வரும் கட்டுரையில்.

பிங்க் மற்றும் நேர் கொண்ட பார்வைக்குப்பிறகு நோ என்றால் ‘‘நோ''தான் என்ற வாக்கியம் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. ஒரு இலக்கியம் அல்லது கவிதை உருவாக்கியிருக்க வேண்டிய விவாதத்தை ஒரு சினிமா உருவாக்கி இருப்பது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய விஷயம். அதிலும் மசாலாவுக்கு பெயர் போன இந்திய சினிமா !

தன்னை அழைத்துப் போகவில்லையே என்று பெண்ணுக்கும், தன்னுடன் வரவில்லையே என்று ஆணுக்கும் பொறாமை. இது மட்டுமல்லாமல் தன்னை ஒழுக்கமானவள் என சமூகத்தில் பறைசாற்றிக்கொள்ள வேண்டி இருக்கும் வெளிப்புற அழுத்தமும் பெண்கள் இப்படிச் சொல்ல ஒரு காரணம்.

மனைவிக்குப் பிடிக்காவிட்டால், அப்போது விருப்பமில்லாமல் நோ சொன்னாலும் நோதான், கணவன் ஏதும் செய்யக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.  எனினும், இந்தப் பிரச்சனையை பொதுப்படையாக்க வேண்டியதில்லை. அது முன்பின் தெரியாத ஒருவர் மதுவிருந்தில் ஒரு பெண்ணிடம் அத்து மீறுவதை பின்னுக்குத்தள்ளி, அதன் முக்கியத்துவத்தையும், அதைப்பற்றிய உரையாடலையும் கெடுத்து விடும்.

பிங்க் படத்தில் சொல்லப்பட்டதைப்போல , கவர்ச்சியான உடை, மது அருந்துதல், சிகரட் புகைத்தல், ஏ ஜோக் சொல்லுதல், ரெஸார்ட்டுக்கு வருதல், ஒரே அறையில் இருத்தல் என எதுவுமே ஒரு பெண்ணைத் தொடுவதற்கு லைசன்ஸ் இல்லை என்பதை ஆண்கள் உணர வேண்டும். இந்த அளவு சென்ஸிபிளிட்டி இல்லாவிட்டாலும், தொட ஆரம்பிக்கும் போதே, அந்தப் பெண் ''நோ''
சொல்லும் போதோ அல்லது அசௌகர்யமான உடல் மொழியால் மறுக்கும் போதாவது தம் செய்கையை நிறுத்திக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதை விட முக்கியமான விஷயம் குறிப்பிட்ட அந்தப் பெண், இதற்கு முன்பு பலருடன் உடல் உறவு வைத்துக்கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தாலும், அது அந்தப் பெண்ணை இன்னொரு ஆண் தொடுவதற்கான லைசன்ஸ் அல்ல !

மிக மிக அடிப்படையான விஷயத்துக்கு நாம் எவ்வளவு விளக்கி கட்டுரை வரைய வேண்டி இருக்கிறது பாருங்கள். உடலுறவு என்பது இருவரும் விரும்பி, இருவர் சம்மதத்துடன் நடக்க வேண்டியது என்ற ஒற்றை வரிக்கு எவ்வளவு விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது ?

முகநூலில் ஒரு நண்பர் இப்படி கேட்டிருந்தார் & ''தண்ணி அடிக்க யெஸ். ரெஸார்டுக்கு வருவதற்கு யெஸ். ஏ ஜோக் சொல்ல யெஸ். தனியறைக்கு வருவதற்கு யெஸ். ஆனா ஆம்பிளை கை வச்சா மட்டும் நோ வா? ''

அவருக்கு புரியும்படி பதில் அளித்தேன். இந்த பதில்தான் நம் சமூக மக்கள் எல்லோருக்கும் புரியும். அந்த பதில் இன்னொரு கேள்விதான்:& '' நீங்கள் ஆண். உங்களை இன்னொரு ஆண் ரெஸார்டுக்கு அழைக்கிறார். போகிறீர்கள். மது கொடுக்கிறார். குடிக்கிறீர்கள். டின்னர் கொடுக்கிறார், சிகரட் கொடுக்கிறார். அவருடைய அறைக்கும் செல்கிறீர்கள். ஏ ஜோக் அடிக்கிறார். நீங்கள் சிரித்து விட்டு, நீங்களும் ஒரு ஏ ஜோக் அடிக்கிறீர்கள். அவர் உங்களை தனியாக அழைத்து ஏதோ(!?)  செய்யச் சொல்கிறார். என்ன செய்வீர்கள்?''

இதில் முரணான லாஜிக் என்னவெனில், மது அருந்தாத, கவர்ச்சி உடை அணியாத, ரெஸார்டுக்குச் செல்லாத பல பெண்களுக்கும் இந்த பாலியல் அத்துமீறல் நடந்து கொண்டுதான் உள்ளது. அவர்கள் வெளியில் சொன்னாலே , சமூகம் முதலில் அவர்கள் மீதுதான் பாயும் நிலையில், இந்த மது அருந்தும், ரெஸார்டுக்குச் செல்லும் பெண்கள் எப்படி இதை வெளியில் சொல்ல முடியும் ? அந்தப் பெண்ணின் பெற்ற தாயே அந்தப் பெண்ணைத்தான் முதலில் திட்டுவாள். தரக்குறைவாகப் பேசுவாள். இப்படிப்பட்ட சூழலில் தான் பிங்க் மற்றும் நேர் கொண்ட பார்வை மிக முக்கியமான படங்களாக ஆகின்றன.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் மது அருந்தவும், நடனமாடவும், பீச் ரெஸார்டுக்கு பெண்களுடன் செலவதை மட்டும் ''செலக்டிவாக'' கற்றுக்கொண்டால் போதாது. மது அருந்தும் போதும், நடனமாடும் போதும், தனியறையில் ஒரு பெண் நம்முடன் இருக்கும்போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுகொள்ள வேண்டும்.

மேலை நாடுகளில் சொந்த சகோதரிகளுடன் மது அருந்துவார்கள். அந்த சகோதரி மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு குடித்துக்கொண்டு இருப்பாள். பப்புக்கு கூட தங்கைகளுடன் செல்வார்கள். குடும்பமாக பப்புக்கு செல்வதும் உண்டு.  இந்தியாவிலே சில நகரங்களில் குடும்பமாக பப்புக்கு வருவதை பார்க்க முடியும்.

எல்லாம் வெவ்வேறு. எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்து அனுபவிக்க வேண்டும்.  ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது விருப்பமென்றால் அதை வெகு சுலபமாக புரியும்படி வெவ்வேறு தருணங்களில் உணர்த்திக்கொண்டேயிருப்பாள். அது பார்வையாக இருக்கலாம். வாய்மொழியாக இருக்கலாம். மெசேஜ் மூலம் நடக்கலாம். உடல் மொழி அல்லது தொடுதல் மூலம் தெரியப்படுத்தலாம். இருவருக்கும் பிடித்து, அதை உணர்ந்து, கொண்டாடி ஒன்றாக கலப்பது என்பது ஒரு ரஸவாதம்.

சில சமயங்களில் மது, குறைந்த ஆடை, செக்ஸியான பேச்சு எல்லாம் பெண்களுக்குத் தேவைப்படும். காதல், கமிட்மென்டில் மாட்டிக் கொள்ள விரும்பாத பெண்கள் , உடல் சார்ந்த தேவைக்கு மட்டும் ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அதை எப்படிச் சொல்ல முடியும் ? மது இல்லாமல், தனியான ஒரு அண்மை இல்லாமல் அவர்களால்
சொல்ல முடியாது. அப்படி சொல்லும்போது அப்போது ஆணுக்கும் பிடித்தால் மேலும் தொடரலாம் . யார் வேண்டாம் என்று சொன்னது?

இப்படி சமிக்ஞை கொடுத்து, முதல் முறை ஒரு ஆணுடன் உறவு கொண்ட பெண்ணுக்கு , எதன் காரணமாகவோ மீண்டும் அதே ஆணுடன் உறவு கொள்ள பிடிக்காமல் போகலாம். அதான் ஒரு தடவை பண்ணிட்டமே என்பதும் அடுத்த முறை செய்வதற்கான லைசன்ஸ் அல்ல என்பதை உணர வேண்டும். அந்தப் பெண்ணை போட்டு சும்மா தொந்தரவு செய்து கொண்டிருக்கக்கூடாது.

ஆண்கள் போகும் எல்லா இடங்களுக்கும், ஆண்கள் அனுபவிக்கும் அனைத்து உல்லாசங்களையும் அனுபவிக்க பெண்களுக்கும் உரிமை உள்ளது.

சில்மிஷங்கள் மூலமும், பாலியல் அத்துமீறல் மூலமாகவும், வன்முறையினூடாகவும் அவர்களை இங்கெல்லாம் வருவதற்கு அச்சப்படச் செய்வதற்கு ஆண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை உணர வேண்டும். ஆணோ பெண்ணோ, நம்மை நம்பி நம் இடத்துக்கு வந்தால் அவர் விருந்தினர் ஆகிறார். விருந்தோம்பல் மற்றும் விருந்தினர் மனம் புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதானே  கலாசாரம்? மேலும் இங்கே நம் நாட்டில் இத்தகைய ''ரிஸ்க்'' இருக்கையில் அவர் ஒரு ஆணுடன் தனியாக ஒரு இடத்திற்கு வருவதே மிகப்பெரிய மரியாதையும் கௌரவமும் அல்லவா அந்த ஆணுக்கு ?

உறவில் ஈடுபடுவதற்கு சில வருடங்களுக்கு  முன்பு இருந்தது போல , அந்தப் பெண்ணைத் தவிர, 500 முதல் 1000 பேரின் சம்மதம் எல்லாம் இப்போது  வேண்டாம். குறைந்த பட்சம் இருவரும் சம்மதமும் விருப்பமும் வேண்டும். காதல், அன்பு, பாசம் இதெல்லாம் இல்லையென்றாலும் பரவாயில்லை, விருப்பமும் சம்மதமும் மிக மிக முக்கியம்.

ஆடு மாடு கோழிகளை அடித்துச் சாப்பிட சட்ட ரீதியாக அனுமதிக்கும் நம் நாட்டில் கூட அவைகளுடன் விருப்பமில்லாமல் (!) உறவு கொண்டாலோ, உறவு கொள்ள முயற்சித்தாலோ, அவை புகார் அளிக்காவிட்டாலும், தெரிய வந்தால் சட்டப்படி குற்றம் மற்றும் கடுமையான தண்டனை உண்டு என்பதை அனைவரும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

செப்டெம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com