கடந்த ஏப்ரல் 26 ஆம்தேதி பூனாவில் வீட்டு உரிமையாளர் ஒருவர், தான் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசுக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது, ஒரு பெண் வீட்டில் இறந்து கிடந்தார். அருகில் பதினெட்டு மாத கைக்குழந்தை அழுதுகொண்டு இருந்தது. அப்பெண் இறந்து இரு நாட்கள் ஆகி இருக்கலாம் எனத் தெரிந்தது. இரண்டு நாட்களாக பசியில் இருக்கும் அக்குழந்தைக்கு உணவு அளிக்கவோ ஆறுதல் கூறவோ ஏன் தொடுவதற்கோ கூட யாரும் முன்வரவில்லை. காரணம், கொரோனா அச்சம்.
பெண்காவலர்கள் தான் அக்குழந்தையை எடுத்து பால், பிஸ்கட், தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். கொரோனா பரிசோதனையில் அக்குழந்தைக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
‘அன்பும் இரக்கமும் அத்தியாவசியத் தேவைகள். ஆடம்பரங்கள் அல்ல. இவை இன்றி மானுடம் தழைக்காது!' என்கிறார், தலாய்லாமா.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் மானுடம் பிறர் மீது காட்டும் இரக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறதோ என அச்சம் வருகிறது.
நாம் இப்போது கொரோனாவை விட மோசமான ஒரு நோய்க்கு ஆட்பட்டுள்ளோம். அதன் பெயர் ஆங்கிலத்தில் தானட்டோஃபோபியா. மரணத்தின் மீதான அச்சம்! ‘மனிதனின் சிந்திக்கும் தன்மையை சீர்குலைத்து அவனை மனிதத் தன்மையை இழக்கவைக்கும் சக்தி அச்சத்துக்கு உள்ளது!' என்கிறார், மரியான் ஆண்டர்சன். வெறும் அச்சத்தை விட, மரண அச்சம் மிகக் கொடூரமானது!
இதை எப்படி வெல்வது ? இதற்கான பதில், ஓஷோவிடம் உள்ளது.
‘பெருந்தொற்றால் மரணிக்கும் அச்சத்தை வெல்வது எப்படி? எனக் கேட்கிறீர்கள். ஏனெனில் வைரசை எளிதாகத் தவிர்க்கலாம். ஆனால் நம்மிலும் உலகிலும் உள்ள அச்சத்தைத் தவிர்ப்பது கடினம். நோயை விட இந்த அச்சத்தால் நிறைய பேர் இறப்பர். அச்சத்தைவிட கொடிய வைரஸ் உலகில் இல்லை. இந்த அச்சத்தைப் புரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் உயிருடன் இருக்கும்போதே மரணமடைந்த சடலமாகத்தான் இருப்பீர்கள்.
இப்போது காணும் பதற்றமான சூழல் என்பது ஒட்டுமொத்த பதற்றத்தால் உருவானது. இது மெதுவாகக் குறைந்துவிடும். காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இந்த சமூகப் பதற்றம் என்பது காலந்தோறும் தன்னை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறது.
பலருக்கு உதவி கிட்டலாம்; அல்லது இறக்கலாம். இதற்கு முன்னால் ஆயிரம் முறை இது நடந்துள்ளது. தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இந்தக் கூட்டத்தின் பதற்றம், அச்சம் ஆகியவற்றின் பின்னுள்ள மனநிலையைப் புரிந்துகொள்ளாவிட்டால், இது தொடரவே செய்யும்.
விழிப்புடன் இருங்கள். அச்சத்தைப்பெருக்கும் எந்தக் காணொளியையும் காணாதீர்கள். பெருந்தொற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்காதீர்கள். திரும்பத் திரும்ப ஒன்றைச் சொல்லிக்கொண்டிருந்தால், அதை நம்ப ஆரம்பித்து விடுவீர்கள். அச்சம் என்பது உங்களை நம்ப வைக்கும். இது உடலில் வேதி மாற்றங்களை உருவாக்கும். இதுவே தொடரும்போது இந்த வேதிமாற்றங்களே உயிர்கொல்லும் விஷமாக மாற்றம் அடையும்.”
- இது, ஓஷோ சொல்வது.
கொரோனா பற்றிய பயத்தை வெல்லும்போது பதற்றம் குறையும். சகஜ வாழ்க்கை திரும்பும்.
‘வாழ்வின் முழுமையான நோக்கமே மானுடத்துக்குப் பணியாற்றுவதுதான்' என்றார், டால்ஸ்டாய்.
இந்தச் சொற்கள் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தால், சாமானியர்களின் துயரம் குறையத் தொடங்கும். எத்தனையோ இடர்களை வென்ற மானுடம், கொரோனாவையும் வெல்லும்!
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்
மே 2021 அந்திமழை இதழ்