ஃபேஸ்புக் இல்லாத உலகு

ஃபேஸ்புக் இல்லாத உலகு
Published on

என்னிடம் ஒரு தம்பதி வந்தார்கள். ஒரு நாள் காலையில் அவர்களுக்குள் சண்டை. கணவர் அலுவலகம் கிளம்பிப் போகிறார். அவர் போய் சேருவதற்குள் மனைவி பேஸ்புக்கில் தங்கள் சண்டை பற்றி தகவல் இட்டு விடுகிறார். ஆபீஸ் போய் சேருவதற்குள் அதை கணவரது நண்பர்கள் பார்த்து கிண்டல் செய்யும் நிலைக்கு போய்விட்டது. தம்பதிக்குள் தகராறு முற்றிவிட்டது” இது டாக்டர் நாராயண ரெட்டியிடம் வந்த ஒரு தம்பதியின் கதை(பார்க்க அவரது பேட்டி).

பூனாவிற்கு அருகில் உள்ள அவுரங்கபாத்தில் ஒரு பெண் விவாகரத்திற்கு மனு செய்தார். விவாகரத்து செய்வதற்கான காரணம் வினோதமானது. கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆன பின்னும் கணவன் தன் சமூக வலைத்தளத்தில் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை திருமணமானவன் என்று மாற்றவில்லை. அந்த பெண்ணிற்குத் தெரியாமல் அவன் செய்யும் சில பல காரியங்களுக்காகத்தான் அவன் ஸ்டேட்டஸை மாற்றவில்லை என்று சந்தேகப்பட்டதன் விளைவு தான் விவாகரத்து மனு வரை சென்றிருக்கிறது.

உறவுகளை வளப்படுத்துவதற்குப் பயன்படுவதாக முன்னிறுத்தப்பட்ட சமூக ஊடகங்களும் இணையமும் தவறாக அல்லது தெளிவில்லாமல் பயன்படுத்துபவர் களால் சிக்கலையே உருவாக்குகின்றன. இந்தியாவில் பேஸ்புக்கில் ஏழு கோடிப்பேர் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்கள் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இப்போது இணைய இணைப்புகளின் உபயத்தால் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு சமூக வலைத்தளங்கள் சென்றுள்ளன. எனவே இது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவையாக உள்ளது நண்பர்களே!

மது, போதை பொருளுக்கு அடிமையாதல் போல் பலர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவர் பெர்னிசெட்டாகன் மனித உறவுகளில் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை பற்றி ஆய்வு செய்கிறார். அளவுக் கதிகமாக சோஷியல் மீடியாவில் செயல்படுவது உறுதியான உறவுகளைக் கூட சிதைத்து விடும் அபாயம் உண்டு என்கிறார் இவர். திருமணமான 24000 பேரிடம் இவர் ஆய்வு செய்ததில் கிடைத்த முக்கியமான விஷயம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் பெருமளவுக்கு உறவுகளில் திருப்தியை ஏற்படுத்துவதில்லை; சில விஷயங்களில் திருப்தியில்லாத மனநிலையே உருவாகி உள்ளது என்பதாகும்.

நேரிடையான சமூக சூழலில், அலுவலகத்தில் நிகழ்ந்துவிடாத ரொமான்ஸ் சமாச்சாரங்கள் பேஸ்புக்கில் குறைவான காலகட்டத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. நட்பு அல்லது காதல் வட்டத்திற்குள் வரும் இருவரும் ஒரேமனநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. ஒருவர் சீரியஸாகவும் மற்றொருவர் விளையாட்டு மனநிலையோடு இருந்தால் விவகாரமாகிவிடுகிறது. கணவனுக்கோ / மனைவிக்கோ வேறு தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், சந்தேகத்தை உண்டு பண்ணும் சூழலை பேஸ்புக் உருவாக்குகிறது.

சமூக வலைத்தளம் (அ) பேஸ் புக், குடும்ப வாழ்க்கையை பாதிக்காமலிருக்க சிலவற்றை தவிர்க்க வேண்டியிருக்கிறது.

தேவைக்கு  அதிகமான நேரம் சமூக இணைய தளத்தில் செலவிடாதீர்கள். அதில் நீங்கள் செலவிடும் நேரம் உங்கள் குடும்பத்திற்கு அல்லது மனைவிக்கு கிடைக்காமல் போகிறது.

 இதில் முன்பு ஒருநாள் நீங்கள் பதிவு செய்த விஷயங்கள் அந்தரங்கமான விஷயங்கள் இன்று எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தலாம்.

            பேஸ்புக்கில் யாரோ ஒருவருக்கு மெய்நிகர் முத்தங்கள், தழுவல்கள் (திடிணூtதச்டூ டுடிண்ண்ஞுண் - டதஞ்ண்) மூலம் ணீணிடுஞு செய்வதை ஏற்றுக் கொள்ள பல கணவர்கள் / மனைவிகளால் முடிவதில்லை.

            உங்கள் நிலைத் தகவல்கள், கமெண்டுகளை ஒரு நிமிடம் யோசித்து போடவும். கோபத்தில் இடப்படும் கமெண்டுகள் பிரச்னையை அழைத்து வருவது உறுதி. ட்விட்டர்களில் போடும் கருத்துகளிலும் கவனமாக இருங்கள். இது தொடர்பான பிரச்னைகள் நம் கண்ணெதிரே நடந்து கைதுகள் நிகழ்ந்ததையும் நாம் அறிவோம்.

எல்லா அனுபவங்களையும் சமூக வலைத்தளங்களில் ஏற்றுவது நல்லதல்ல. அந்தரங்கமான / ஆபத்தான சிலவற்றை மனச்சுவர்களில் மட்டும் எழுதிவையுங்கள். நேரிடையாக வெளிப்படையாகப் பேசத் தயங்கும் பலர் சமூக வலைத் தளங்களில் மிக வெளிப்படையாக இருப்பதன் மர்மத்தை உளவியலாளர்கள் ஆய்ந்து கொண்டிருக் கிறார்கள்.

எனது நண்பரான வைத்தீஸ்வரன் பிரசித்தி பெற்ற ஒரு சீட்டு நிறுவனத்தில் அந்த மாதம் ஐந்து லட்சம் சீட்டு ஒன்றைப் பிடித்த தனது அனுபவத்தை பதிவிட்டார். ஒன்றரை மணி நேரத்தில் நெருங்கிய உறவினரிடம்இருந்து ஐம்பதாயிரம் கடன் கேட்டு மொபைல் அழைப்பு. விஷயத்தைக் கேட்டவுடன் மனைவி ‘எதைத்தான் பேஸ்புக்கில் போடுவது என்று விவஸ்தையில்லையா’ என்று பத்திரகாளியானார்.

பொதுவாக நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதை நிர்வாகத்தினர் விரும்புவதில்லை. பல முன்னணி ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் சோஷியல் மீடியாவில் என்ன செய்யலாம் (அ) கூடாது என்று வரையறைகள் வகுத்துள்ளன . அதை மீறிய பலர் வேலையை இழந்த சம்பவங்களும் உண்டு. சில நிறுவனங்கள் அவற்றை ப்ளாக் செய்தும் வைத்துள்ளன என்பதும் சோகமான விஷயம்.

ஓர் அலுவலக ஊழியரான சியாமளா பேஸ்புக் தான் தனது உற்சாகத்தின் ஊற்று என்கிறார். “அலுவலகத்தில் ஒன்பது மணிக்குள் வேலையை ஆரம்பித்துவிடும். நான் பன்னிரண்டு மணிக்குள் முக்கியமான பலவற்றை முடித்து விட்டு பேஸ்புக்கில் லாக் இன் செய்வேன். என் கணவருக்கு சாட்டில் ஐ லவ் யூ சொல்வேன். பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்கு மேல் பேஸ் புக்கில் நான் தொடர்ந்து இயங்குவதில்லை. லண்டனில் இருக்கும் தம்பி, சிங்கப்பூரில் இருக்கும் உறவு, உலகில் பல மூலைகளில் இருக்கும் உடன் படித்தவர்கள் என்று எல்லாருடனும் நான் நெருக்கமாக இருப்பதற்கு பேஸ்புக் தான் காரணம். ஒரு நாளைக்கு இதில் நான் செலவிடும் நேரம் 30 - 45 நிமிடங்கள் தான். பலரது சிகரெட் பிரேக்கை விட இது ஒன்றும் அதிகமில்லை. நீண்ட நாட்களாக பேஸ்புக்கில் இருக்கிறேன். ஆனாலும் என் நண்பர்கள் எண்ணிக்கை 150ஐத் தாண்டவில்லை. எங்கள் அலுவலகத்தில் உள்ளே நுழைய தான் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. ஆனால் எப்பொழுது வீட்டிற்கு போவோம் என்று சொல்ல முடியாது. இந்த பேஸ் புக் மட்டும் இல்லையென்றால் நான் இவ்வளவு உற்சாகமாக இருப்பேனா என்று தெரியவில்லை” என்கிறார். இவர் போன்று சரியான முறையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. நம்மில் பலருக்கு பல மணிநேரம் இதில் செலவாகிறது என்பதே நிஜம்.

பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் கணக்குகள் ஆரம்பிக்க அனுமதிக்கப் பட்டிருப்பதை எதிர்த்தும் இணைய போர்னோ கிராபியை எதிர்த்தும் சூடான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. உலகளாவிய அளவில் சுமார் எட்டுக்கோடிப் பேர் போலியான அடையாளங்களுடன் தங்கள் சமூக வலைத் தளத்தில் உலவுவதாக பேஸ்புக் நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இது இன்னும் அதிகம் இருக்கக் கூடும்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடங்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்தும் காண முடியாத அளவுக்கு நாம் எல்லோரும் அதற்குள்ளே சென்று விட்டோம். எனவே விழிப்புடனிருத்தல் நலமே!

மே, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com