ரத்தன் டாட்டா என்னும் மெய்யழகன்! ஏன் டாட்டா நேசிக்கப்படுகிறார்?

Ratan Tata
ரத்தன் டாட்டா
Published on

இன்று சிறிய துணிக்கடைகள், நகைக்கடைகள் வைத்திருக்கிற முதலாளிகள் கூட விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். அவர்களே நேரடியாக மாடல்களோடு நடனம் ஆடுகிறார்கள். பல கோடி செலவழித்து மேக்கப் அணிந்து கொள்கிறார்கள். கிரிக்கெட் மைதானங்களில் குத்தாட்டம் போடுகிறார்கள். இந்த முதலாளிகள் வீட்டு திருமணங்கள் பரபரப்பான செய்தி ஆகிறது. திரைப்படங்களில் நாயகர்களாக தோன்றுகிறார்கள். பெரிய முதலாளிகளைப் போலவே மிகச்சிறிய கடைகள் வைத்திருக்கிறவர்கள் கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் முகங்காட்டுகிறார்கள். தன் வேலையை மட்டும் மௌனமாக செய்வது இன்று ட்ரெண்ட் இல்லை.

ஆனால் பல ஆயிரம் கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாட்டா இந்த கண்கூசும் வண்ண வெளிச்சங்களில் இருந்து விலகியே இருந்தார். ஒரு சூரியனைப்போல ஆர்ப்பாட்டமில்லாமல் தன் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தார். உதவியோ, வெற்றியோ, கொண்டாட்டமோ அது எப்போதும் அமைதியாக இருந்தது.

எளிமையாக தன்னை காட்டிக்கொள்வது வேறு, மெய்யாகவே எளிமையாக வாழ்வது வேறு. நம்மிடையே இருக்கிற பெரும்பான்மை எளிமையிஸ்டுகள் அதற்காக பல கோடி செலவழித்து எளிமையாக இருப்பதையே நாம் அதிகமும் காண்கிறோம். ஆனால் ரத்தன் டாட்டா எளிமையாவே வாழ்ந்தவர். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் அந்த எளிமை வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.

Ratan Tata
ரத்தன் டாடா இளம் வயதில்

ரத்தன் பம்பாயில் இருந்த டாட்டா பேலஸ் எனும் பிரமாண்ட அரண்மனையில் 1937இல் பிறந்து வளர்ந்தவர். ஏராளமான வேலைக்காரர்கள் சூழ பள்ளி நாட்களை கழித்தவர். அவரை ரோல்ஸ்ராய்ஸ் காரில் வெள்ளைக்கார ஓட்டுநர் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் செல்வச் செழிப்பு. டாட்டா குழுமத்தின் சேர்மன்கள் தங்குவதற்காக பிரத்யேகமாக அரண்மனை வழங்கப்படும். ஆனால் ரத்தன் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற போது அதை ஏற்க மறுத்துவிட்டார். அது தனக்கு அவசியமில்லை என்று மும்பையின் கொலபாவில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மென்ட் வீட்டில்தான் தன் வாழ்நாளை கழித்தார். அந்த வீட்டில் இருந்த ஒரு சவுன்ட் சிஸ்டத்தை தவிர அங்கே ஆடம்பரமாக எதுவுமே இருந்ததில்லை என்று அவருடைய நண்பர்கள் சொல்கிறார்கள்.

தரமான பொருட்கள் இந்தியர்கள் வாங்குகிற விலையில் தரவேண்டும் என்பதை டாட்டா விரும்பினார். இன்று இந்தியாவில் எந்த ஒரு சாமானியனும் ஒரு நாளில் டாட்டாவின் பொருளை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது. உப்பில் தொடங்கி வாட்ச், வண்டி, இணையம், டீ, காபி, சோப்பு, செட்டாப் பாக்ஸ் என நமக்கே தெரியாமல் டாட்டா வின் பொருள் நம்மிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. டாட்டா இந்தியர்களின் அன்றாட தோழனாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

மும்பையில் ஒரு மழை நாளில் டிராபிக்கில் மாட்டிகொண்டு காரில் அமர்ந்திருந்தார் ரத்தன். காருக்கு வெளியே ஏராளமான வாகனங்கள். இருசக்கர வாகனமொன்றில் ஒரு குடும்பம் மழையில் நனைந்தபடி காத்திருந்ததை பார்த்தபோது அது டாட்டாவை மிகவும் தொந்தரவு செய்தது. அடுத்து வந்த நாள்களில் அந்த காட்சி அவர் மனதை விட்டு அகலவேயில்லை. அந்த குடும்பத்தலைவனின் துயரத்தை அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார். யாரால்தான் தன் குழந்தை மழையில் நனைவதை தாங்கிக்கொள்ள இயலும்!

 நேனோ காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா
நேனோ காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா

இவர்களிடம் கார் இருந்திருந்தால் மழையில் நனையாமல் வீடு போய் சேர்ந்திருக்க முடியும் அல்லவா… ஆனால் இவர்களால் கார் வாங்க இயலாது. ஒருவேளை இவர்களால் வாங்கமுடிகிற விலையில் கார்களை விற்பனை செய்தால்? இந்தக்கேள்விதான் டாட்டா நேனோ என்கிற புரட்சிகரமான கார் திட்டத்திற்கான முதல் விதையாக இருந்தது. இது சாத்தியமேயில்லை என உலகமே சொன்னபோது அதை சாத்தியப்படுத்தி காட்டினார் டாட்டா. ஒரு லட்ச ரூபாய்க்கு டாட்டா நேனோ காரை அறிமுகப்படுத்தினார். அவருடைய தொழில் சார்ந்த சுயநலத்தில் எப்போதும் ஒரு பொதுநலம் இருந்துகொண்டே இருந்திருக்கிறது.

ரத்தனுக்கு 10 வயதாக இருக்கும்போதே அவருடைய பெற்றோர் விவகாரத்து செய்து பிரிந்துவிட, தன் பாட்டியோடு வளர வேண்டிய நிர்பந்தம் உருவானது. ஆனால் அதுதான் அவரை பின்னாளில் மக்களை நேசிக்கும் ஆகச்சிறந்த பண்பாளராக, கருணை கொண்டவராக, குடும்ப உறவுகளை மதிப்பவராக மாற்றியது.

‘’என் பாட்டி எனக்கு கற்றுக்கொடுத்தது ஒரே ஒரு விஷயம்தான். எக்காலத்திலும் எதற்காகவும் கண்ணியம் தவறிவிடாதே என்பதே அது. கண்ணியமே என் வாழ்க்கை முறை’’ என்றார் ரத்தன் டாட்டா.

அந்த கண்ணியத்தை கைவிடக்கூடாது என்பதாலேயே அவர் டாட்டா குழுமத்தின் சேர்மனாக சேர்ந்ததும் உயர் பதவிகளில் இருக்கிற அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிகளை உருவாக்கினார். பொதுவாக விதிகளை எழுதும் கைகள் அதை பின்பற்றாது. ஆனால் டாட்டா அதில் உறுதியாக இருந்தார். அந்த விதிகளில் ஒன்று லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வது. ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக மாறிய பிறகு, டாட்டா சார்பில் மீண்டும் விமானத்துறை தொழிலில் இறங்கும் முயற்சிகளை டாட்டா மேற்கொண்டார். ஆனால் அந்த காலக்கட்டத்து சக தொழில் போட்டியாளர்களால் அதற்கு தடைக்கு மேல் தடை விழுந்துகொண்டே இருந்தது. அவர் லைசன்ஸ் கேட்டு அளித்திருந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை.

ரத்தன் டாட்டா நினைத்திருந்தால் சில பல கோடிகளை தூக்கி எறிந்து அந்த அனுமதியைப் பெற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் தன்னுடைய விழுமியங்களில் கண்ணியத்தில் உறுதியாக நின்றார். அதனாலேயே அவருக்கு விமானத்தொழில் அனுமதி கிட்டவேயில்லை. ஆனால் அதற்காக அவர் துவண்டுவிடவில்லை. பொறுமையாக பல ஆண்டுகள் காத்திருந்தார்.

என்னதான் பெரிய இடத்து பையனாக இருந்தாலும், அவர் எப்போதும் தரையில் எளிய மனிதர்களோடு வாழ்வதையே விரும்பினார். கோர்னல் பல்கலைகழகத்திலும், ஹார்வர்ட் பல்கலைகழகத்திலும் ஆர்கிடெக்சர் மற்றும் ஸ்ட்ரக்டரல் என்ஜினியரிங் படித்து முடித்த போது ஐபிஎம் அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. ஆனால் அவர் அந்த வேலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக தம் டாட்டா நிறுவனத்தின் டெல்கோவில் ஒரு சாதாரண பணியில் வேலைக்கு சேர்ந்தார்.

தன்னுடைய வாழ்வை பூஜ்யத்திலிருந்து தொடங்குவதையே அவர் விரும்பினார். டாட்டா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் மிக அடிப்படையான வேலைகளில் இணைந்து பணியாற்றினார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அப்படி பணியாற்றி வேலைகளை கற்றுக்கொண்டு பிறகுதான் 1972ல் டாட்டா நிறுவனங்களில் ஒன்றான NELCOவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். அங்குதான் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கான அடித்தளம் உருவானது. இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்களுடைய ஏமாற்றங்களை அவர்களிடம் தொழில் செய்வதில் இருக்கிற சவால்களை எல்லாம் களத்தில் இறங்கி கற்றுக்கொண்டார். அது 2012ஆம் ஆண்டு அவர் டாட்டா குழுமத்தில் இருந்து ஓய்வு பெறும் வரை உதவியது. அந்தக்கல்வியே அவருடைய டாட்டா குழுமத்தை 100 பில்லியன் டாலர் நிறுவனம் என்கிற மாபெரும் இலக்கை எட்டவும் உதவியது.

டாட்டா ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். அதனால் எத்தனை நஷ்டம் வந்தாலும் அதைப்பற்றி அவர் கவலைகொண்டதில்லை.

அவருடைய டாட்டா பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த ஒருவர் முறைகேடுகளில் ஈடுபட்டார். விஷயம் ரத்தன் டாட்டாவிடம் சென்றது. இத்தனைக்கும் அவர் ரத்தனின் நண்பரும் கூட. டாட்டாவோ அப்படியெல்லாம் இருப்பது தான் நம்புகிற கண்ணியத்துக்கு எதிரானது என்று அந்த நபரை பொறுப்பிலிருந்து நீக்கி, அவர் மீது கிரிமினல் வழக்கும் தொடர்ந்தார். டாட்டாவுடன் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கும். சாப்பிட்ட பின் வெயிட்டர் டாட்டாவிடம் பில் தருவார். டாட்டா கிரெடிட் கார்டில் பணம் செலுத்துவார். சொந்த ஓட்டலில் யாராவது பில்லுக்குப் பணம் தருவார்களா? காரணம் அவர் ஒன்றை முதலில் பின்பற்றினால்தான் பிறரும் அதை உறுதியாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் சொல்வார்! செய்தும் காட்டினார்.

அந்த அளவுக்கு கண்டிப்பாக இருந்தாலும் தன்னிடம் பணியாற்றுகிற மனிதர்களிடம் மிகுந்த அன்பையும் நேசத்தையும் அவர்களுடைய நேரத்தை மதிக்கும் பண்பையும் கொண்டிரு்ந்தார். அவருடைய நண்பர் அதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக குறிப்பிடுகிறார். எப்போதும் இரவில் டின்னர் சாப்பிடும்போது ஹோட்டல் மேனேஜர் அவரிடம் அவருடைய காரின் சாவிகளை கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதைப்பற்றி கேட்டபோது, டிரைவருக்கான வேலை நேரம் முடிந்துவிட்டால் அவரை அங்கிருந்து கிளம்ப சொல்லிவிட்டு, காரை தானே ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுவார் டாட்டா. ‘’அவனுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு, அவர்களோடு அவனும் நேரம் செலவழிக்க வேண்டும், ஒய்வெடுக்க வேண்டும்' என்றார். இந்த அக்கறைதான் டாட்டாவின் தொழிலாளர்களிடமும் சாதாரண மக்களிடமும் அவரை மரியாதைக்குரிய ஒரு மனிதராக மாற்றியது.

ரத்தன் டாட்டாவின் வெற்றிக்கு அடிப்படையான காரணம் அவர் எப்போதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். தன் வாழ்நாளெல்லாம் அதை கைவிடவேயில்லை. 1991இல் ஜேஆர்டி டாட்டாவிடம் இருந்து அவர் கரங்களுக்கு நிறுவனம் வந்த பிறகு ஒட்டுமொத்த குழுமத்தின் தோற்றத்தையும் கட்டுமானத்தையுமே மறுசீரமைக்கத் தொடங்கினார் ரத்தன் டாட்டா. இத்தனைக்கும் அந்நிறுவனத்தின் சீனியர்கள் இவருக்கு ஒத்துழைக்காமல் முரண்டு பிடித்தது தனிக்கதை.

ரத்தன் பொறுப்பேற்ற காலக்கட்டம் இந்தியா தன் கதவுகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்ட உலகமயமாக்கல் நேரம். கடுமையான போட்டி காத்திருந்தது. உலக மயமாக்கலுக்கு பிறகு இந்திய மக்களுடைய வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றம், அவர்களிடையே உருவாகப்போகும் புதிய தேவைகளை கருத்தில் கொண்டு அநேக நிறுனங்களில் அவர் முதலீடு செய்யத்தொடங்கினார். அதுதான் டாட்டாவின் தொலைநோக்கு பார்வை. அதற்காக மேற்கொண்ட ரிஸ்க். அதுதான் இன்றுவரை பலனளிக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, 100 நாடுகளில் டாட்டா தடம் பதித்திருக்கிறது. சென்ற இடமெல்லாம் சந்தையை கைப்பற்றி இருக்கிறது.

‘’ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் பெரிய ரிஸ்க். மாறிக்கொண்டே இருக்கிற உலகில் தோல்விக்கான ஒரே வழி ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்… வெற்றி வேண்டுமென்றால் ரிஸ்க் எடுங்கள்’’ என்றார் டாட்டா.

ஏன் டாட்டாவை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். ஏன் அவரை போற்றுகிறார்கள். ஏனெனில் அவர் லாபத்தை மட்டுமே நோக்கி ஓடிக்கொண்டிருந்தவர் இல்லை. . இந்தியா முழுக்க கோடிகளை கொட்டி ஏழை மக்களின் கல்விக்கும், அவர்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உதவிக்கொண்டே இருந்தார். கோவிட் உலகை தாக்கிய போது அதற்காக 500 கோடிகளை கொடையாக அளித்தார். மும்பை தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டபோது அதில் உயிரிழந்தோருக்கு ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கச்செய்தார்.

பல்வேறு ஸ்டார்ட்அப்களில் தொடர்ந்து முதலீடு செய்து உதவிக்கொண்டிருந்தார். அவர் உதவிய ஸ்டார்ட்அப்கள் பின்னாளில் பெரிய நிறுவனங்களாக வளர்ந்தன. லென்ஸ்கார்ட், பேடிஎம், ஓலா எலக்ட்ரிக் மொபைலிட்டி எல்லாம் டாட்டா முதலீட்டு நிறுவனங்கள.

ரத்தன் டாட்டா ஒரு ஆலமரத்தை போல் வாழ்ந்திருக்கிறார். அதன் ஒவ்வொரு விழுதுகளிலும் அவர் நிலைத்து வாழ்வார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com