குவைத் நாட்டின் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ், ‘பாலைவன சொர்க்கம்’ என்ற நூலை வெளியிட்டார். அதன் வெளியீட்டு விழா ரஷ்யன் கலாச்சார மைய அரங்கில் நடைபெற்றது. நூலை வெளியிட்டவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்த ஜி.கே. மூப்பனார். எழுத்தாளர் சுஜாதா முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். வாழ்த்துரை வழங்க ஒரு பெரிய பட்டாளமே கூடியிருந்தது.
நடிகர் விவேக், ஓய்.ஜி. மகேந்திரன், தென்கச்சி கோ. சாமிநாதன், எழுத்தாளர் பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற பலர் வாழ்த்துரை வழங்கினர். அதில் நானும் கலந்துகொண்டேன். என் அருகில் எழுத்தாளர் சுஜாதா அமர்ந்திருந்தார். பலரின் வாழ்த்துரையால் அரங்கமே சிரித்து மகிழ்ந்தது. நான் பேசத்தயாரானேன். அப்போது எழுத்தாளர் சுஜாதா என்னிடம் ஒரு சவால்விட்டார். “மற்ற அனைவரும் மக்கள் ரசிக்கக் கூடிய அளவுக்கு சிறப்பாக பேசினார்கள். சிரிக்க வைத்தார்கள்.
ஆனால், தலைமை ஏற்றுள்ள ஐயா மூப்பனார் மட்டும் சிரிக்கவே இல்லை. உன்னுடைய பேச்சால் ஐயா மூப்பனாரைச் சிரிக்க வைக்க முடியுமா?” என்று கேட்டார். நானும் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு மேடைக்குச் சென்றேன்.
”தஞ்சாவூர்க்காரர்கள் இருவர் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்தனர். அதில் ஒருவர் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உடையவர்.” என்று ஆரம்பித்தேன். ஓரக்கண்ணால் பார்த்தபோது மூப்பனார் என் பேச்சை கவனிக்க ஆரம்பித்தது தெரிந்தது.
“அதில் அந்த வெத்தலை பார்ட்டி, விமானத்தில் கொடுத்த வெளிநாட்டு சரக்கை லேசாக குடித்திருந்தார். அருகில் இருப்பவரை பார்த்து, இந்த வெத்தல எச்சிய எங்க துப்புறதுன்னு கேட்டார். அவருக்குத் தெரியல. எனக்கு தெரியாதுய்யான்னு சொன்னாரு.
ஆனா வெத்தலை பார்ட்டி விடலை… மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரு கேட்க கேட்க, வாயிலிருந்து சிவப்பு எச்சில் பக்கத்துல் இருந்தவர் சட்டையில் தெறிச்சிகிட்டே இருந்தது. பொறுமையை இழந்த அவரு. “எந்திரிச்சு நேரா போ… ஒரு சிவப்பு பட்டன் இருக்கும். அதை அமுக்கு, ஒரு டப்பா வரும் அதில துப்பிருன்னு” சொல்லி அனுப்பிட்டாரு.
அப்படி ஒரு டப்பா ஏரோப்பிளேன்ல கிடையாது. இருந்தாலும் தொந்தரவு தாங்கமுடியாமா கதைவுட்டுட்டாரு…
அதநம்பி போதையில இருந்த வெத்தல பார்ட்டி எழுந்து போய் தேடினாரு. எங்கையும் சிவப்பி பட்டன் கிடைக்கல. ஒரு அம்மா பெரிய குங்குமப் பொட்டு வச்சிக்கிட்டு தூங்கிட்டு இருந்துச்சு. அவருக்கு போதையில கண் சரியாக தெரியாம, அந்த சிவப்பு பொட்டை பட்டன்னு நெனைச்சுட்டார்.
அப்புறம் என்ன? அந்த அம்மாவின் நெத்திய புடிச்சு பொட்ட அழுத்தினாரு. அந்த அம்மா ஐயோன்னு அலறி வாய ‘ஆ’ன்னு தொறந்தாங்க. அதுதான் டப்பான்னு வாயில துப்பிட்டாரு. அந்த அம்மா இரண்டு முறை வாந்தியெடுத்து மயக்கம் போட்டுடுச்சு” என்று சொல்லி முடிச்சேன். ஐயா மூப்பனார் சத்தம்போட்டு சிரிச்சி அவரு வாயில இருந்த பாக்குத்துகள் முன்னால தெறிச்சு விழுந்தது.
நான் வந்து அமர்ந்ததும் எழுத்தாளர் சுஜாதா ‘போட்டியில ஜெயிச்சுட்டேய்யா… நானும் உன்னுடைய பெரிய ரசிகன்னு சொன்னார்!