சாத்தான் கடவுளாக இருந்த காலம்!

அ. வெண்ணிலா
அ. வெண்ணிலா
Published on

ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சு கிறது. காட்டாறுகள் உருவாகுமிடம் ஆடு தாண்டும் அளவுக்கோ, மனிதர்கள் கால் நீட்டிப் படுத்தால் முழங்கால் அளவுக்குமேல் நீட்ட முடியாமல் குறுகியதாக இருக்குமோ அவ்விதமே நீரதிகாரத்தின் தோற்றுவாயும்.

என்னுடைய நண்பரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளருமான மு.ராஜேந்திரன், காலாபாணி நாவலை எழுதி முடித்திருந்த தருணம். ‘அடுத்து என்ன எழுதப் போகிறீர்கள்?' என்று கேட்டேன். அவருக்கு அறிமுகமான திரைப்பட இயக்குநர் ஒருவர் ‘பெரியாறு அணையில் வேலை செய்த தமிழர்களைப் பிரதானப்படுத்தும் திரைப்படம் ஒன்று எடுக்கப் போவதாகவும் அதற்காக கதைச் சுருக்கம் ஒன்றை எழுதும் முயற்சியில் இருப்பதாகவும், அதையே விரித்துப் பின் நாவலாக எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்' என்றார். அணை, அணை கட்டுமானம் பிரிட்டீஷார் என்றவுடன் எனக்குச் சுவாரசியம் போய்விட்டது. சிறிதும் அக்கதையின் மீது ஈர்ப்பில்லை. காலாபாணி போன்ற உணர்வெழுச்சியான நாவலை எழுதிவிட்டு, சட்டென்று தடம் மாறுகிறாரே என்ற எண்ணமெழுந்தது. பின் மறந்தும் போனேன்.

சில நாட்கள் கழித்து அவர் எழுதியிருந்த கதைச் சுருக்கத்தை அனுப்பி, கருத்துக் கேட்டிருந்தார். அணை கட்டுமானம் என்பதைக் கடந்து, அந்த வேலைக்குக் கூலிகளாகச் சென்ற கம்பம் பள்ளத்தாக்கு மக்களை மையமாக வைத்துக் கதைச் சுருக்கம் இருந்தது. அப்போதும் ஈர்ப்பில்லை. திரைப்பட இயக்குநருக்குப் பிடித்திருந்தால் போதும், நமக்கென்ன என்று அனுப்பச் சொன்னேன்.

ஓராண்டு கழித்து, ஆனந்த விகடனில் இருந்து அன்றைக்கு ஆசிரியராக இருந்த நண்பர் சுகுணா திவாகர், ‘விகடனில் தொடர் ஒன்று நீங்கள் எழுத வேண்டும், என்ன எழுதலாம் என்று ஒன்றிரண்டு கதைச் சுருக்கங்கள் கொடுங்கள்' என்றார். பல்லவர் காலம் குறித்து ஒரே ஒரு கதைச் சுருக்கம் மட்டும் அனுப்பினேன். அது பிடித்திருந்தாலும், இன்னும் ஒரு கதைச் சுருக்கம் தர முடியுமா என்றார். வரலாற்றுப் பின்புலத்தில் வேண்டும் என்றதால், எனக்கு உடனடியாக கொடுக்க முடியவில்லை. சோழர்கள் பற்றி கங்காபுரம் எழுதிவிட்டேன். பல்லவர் பற்றி படித்திருந்ததால் அதற்கான ஒரு சுருக்கமும் கொடுத்திருந்தேன். சேரர், நான் அதிகம் அறிந்திராத வரலாறு. அதற்குள் செல்ல விரும்பவில்லை. மூவேந்தர்களுக்குப் பிறகு வந்தவர்கள் பற்றி உடனடியாக எழுதும் அளவுக்கு அக்கால வரலாற்றில் எனக்குப் பாண்டித்தியம் இல்லை. காலனிய காலம் நினைத்துப் பார்க்க முடியாது. வேறென்ன செய்வது என்று புரிபடாமல் இருந்தேன்.

அப்போதுதான் திரு ராஜேந்திரன், ‘முன்பு நாம் கதைச் சுருக்கம் எழுதிய பெரியாறு அணையின் வரலாற்றை ஏன் நீங்கள் விகடனில் எழுதக்கூடாது' என்றார். ‘காலனிய காலம், அணை, திருவிதாங்கூர், தென் தமிழகம்' இவை யாவுமே நானறியாதவை. விகடனில் தொடராக எழுத வேண்டும். வாரா வாரா கதையனுப்ப வேண்டும். வரலாற்றைத் திரட்டி எழுதுமளவுக்கு அவகாசம் இருக்காது. புதிய களங்களை எப்போது படித்துப் பயணித்துப் பார்த்து எழுதுவது என்ற தயக்கம் மேலிட்டது. தயக்கத்துக்குக் காரணம் உள்மனத்துக்குள் இருந்த ஈர்ப்பின்மைதான். ராஜேந்திரன் தொடர்ந்து வலியுறுத்தினார். ‘விகடனுக்கு ஒரு குறிப்பை அனுப்புங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் பார்க்கலாம்' என்று நீச்சல் கற்க கரையில் நிற்கும் சிறுவனை நீருக்குள் தள்ளிவிடும் தந்தையைப் போல் தள்ளிவிட்டார். கதைச் சுருக்கத்தை அனுப்பிய நாளன்றே சுகுணா திவாகர் ‘இதையே தொடராக எழுதலாம்' என்று தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். உடனடியாக மனத்துக்குள் பய உருண்டை மேலேழுந்தது. ஆனாலும் ஒத்துக்கொண்டோமே என்ற வேகமெழுந்தது.

ராஜேந்திரன் அவர்களிடம் இருந்த தரவுகளை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன். சுகுணா நான்கு அத் தியாயங்கள் முன்கூட்டி எழுதியனுப்பச் சொன்னார். நாவலை எங்கிருந்து தொடங்குவது? மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னரிடமிருந்தா? கதையின் நாயகன் பென்னி குக்கிடமிருந்தா? கதைக்குள் உலாவ இருக்கிற கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடமிருந்தா? பெரியாறு அணை கட்ட இடம் தருவதற்காக முன்வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமிருந்தா? தொடக்கம் எங்கிருந்து என்ற கேள்வியைவிட, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்று, காலனிய கால ஆட்சியின் எதிர்ப்பில் இருந்து ஓர் அரசியலைப் படித்து வளர்ந்த தலைமுறையின் மனத்தடை பிரதானமாக இருந்தது. பிரிட்டீஷார் எல்லோரும் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதைவிட, நம்மை அடிமைப்படுத்தி, அடக்கியாண்டவர்கள் என்ற நிலையில் அவர்களைப் பற்றி என்ன சித்திரத்தை நாவல் முன் வைக்கப்போகிறது, அவர்களை எப்படிப் புரிந்து கொள்வது என்ற குழப்பங்கள் அழுத்தின. கர்னல் பென்னி குக் என்ற தனிநபரின் முயற்சியாக இருந்தாலும், பிரிட்டீஷ் சர்க்கார் என்ற வலுவான அரசு இயந்திரமும் கதைக்குள் வரும். அதை எப்படிக் கையாள்வது? மீண்டும் ஐரோப்பியர்களின் வருகையையும் ஆட்சியதிகாரத்தையும் இந்தியாவை அவர்கள் உள்வாங்கி, உருவாக்கிய கட்டமைப்புகளையும் பற்றிய சிறு குறிப்புகளைத் தயாரித்தேன்.

1640ஆம் ஆண்டில் சென்னை கடற்கரையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வியாபாரத் தளம் அமைத்து, அடுத்த நூற்று ஐம்பது ஆண்டுகளில் இந்தியா முழுக்க ஆழமாக வேரூன்றுகிறார்கள். சிதறிக் கிடந்த சிற்றரசர்களுடன் உக்கிரமாக, மனிதத்தன்மையற்று, தந்திர போர்முறைகளுடன் குயுக்திகளின் மூலம் இந்திய தேசத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். சுதேசி அரசர்களிடம் கையாண்ட அதே தந்திரங்களாலும் போர்களினாலும் தங்களின் சக ஐரோப்பியத் தேசத்தவர்களையும் பலவீனமாக்குகிறார்கள். கி.பி.1760இல் நடந்த வந்தவாசிப் போருக்குப் பின், பிரிட்டன் இதைத் தன் காலனிய நாடாக, சொந்த தேசமாக சுவீகரிக்கிறது.

18ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் பிரிட்டிஷார், முழுமையான ஆட்சியாளர்களாக மாறவில்லை யென்றாலும் நிர்வாக முறைகளை வகுக்கிறார்கள். விதிகளை உருவாக்குகிறார்கள். ராணுவத்திலும் ஆட்சியதிகாரத்திலும் பணி வரையறைகளைத் தீர்மானிக்கிறார்கள். தங்களின் தேசத்திலேயே இல்லாத ஆட்சிப்பணி அதிகாரி (ICS) பதவிகளை உருவாக்குகிறார்கள். கணக்கு முறை, துறைவாரியாக ஆய்வுகள், ஆவணங்களைப் பராமரித்தல், இந்தியாவைப் பற்றி புவியியல், நிலவியல், வரலாறு, தொல்லியல், வனங்கள் ஆய்வு என அலசி ஆராய்கிறார்கள்.

வரும் காலம் முழுக்க தங்களின் ஆட்சியின் கீழ்தான் இந்தியா இருக்குமென்ற நம்பிக்கையில் பிரிட்டன் இந்தியாவை உள்ளும் புறமும் அலசி ஆராய்ந்து, புதிதாக கட்டமைக்கிறது. கட்டமைக்கவும், சீரமைப்புக்கும் எடுத்துக்கொண்ட நூறாண்டு களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் சாதனைகள் செய்திருக்கிறார்கள். இன்று வரை இந்தியாவின் அறிவுச் சுரங்கமாக, நிர்வாக அடிப்படையாக, பெருமைமிகு கட்டடங்களாக இருப்பவை அந்த நூறாண்டுகளில் உருவானவைதான். விடுதலை எழுச்சிக்கான போராட்டங்கள் எழுந்தவுடன் பிரிட்டிஷ் சர்க்கார் மீண்டும் அடக்குமுறைக்குத் திரும்புகிறது என்னுடைய நாவலின் காலம், சாத்தான் கடவுளாக இருந்த காலமென்று தெரிந்தவுடன், இதயத்தைத் துளைத்துக் கொண்டிருந்த குற்றவுணர்வு குறைந்து, மனம் தெளிந்தது. அப்படித்தான் கதைக்குள் பிரிட்டீஷ் ரெசிடென்ட் ஹானிங்டன் முதல் அத்தியாயத்துக்குள் வந்தார். இந்தியப் பொருளாதாரத்தின் நிலைகுலைவுக்கும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்து போகும் பஞ்சத்துக்கும் தங்கள் ஆட்சியாளர்களின் மண்ணுக்குப் பொருந்தாத கொள்கைகள்தான் காரணமென்று மனம் புழுங்கும் அதிகாரி.

எப்படியாவது இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லதைச் செய்துவிட ஏங்கிய அதிகாரி. காலனிய தேசத்திலும் ஈரத்துடன் இருந்த மனிதர்கள் ஒவ்வொருவரையாக கதைக்குள் கோத்தேன். நான்கு அத்தியாயங்களை அனுப்பியவுடன், சுகுணா, தொடர் எத்தனை வாரங்களுக்கு எழுத முடியும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறைந்தது 40 வாரங்கள் வந்தால் நன்றாக இருக்கும், இடையில் நிறுத்த முடியாது என்று பத்திரிகையின் ஆசிரியராக அவர் அனுபவத்தில் இருந்து சில எச்சரிக்கைகளைச் சொன்னார். எனக்கும் உள்ளுக்குள் பயமிருந்தது. சின்னஞ்சிறிய இந்தக் கதையைக் கொண்டு 40 வாரங்கள் பயணிக்க முடியுமா என்று. தொடருக்கான அறிவிப்பு வந்து, தொடரும் வெளியான போதும் என் மனத்துக்குள் இந்தக் கதை ஒரு சாதாரண நாவலுக்குரிய தோற்றமே எனக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

பத்துப் பதினைந்து வாரங்களுக்குப் பிறகு, மதுரையின் தாது வருஷப் பஞ்சத்துக்கும் பெரியாறு அணைத் திட்டத்துக்கும் உள்ள தொடர்பு, வைகைக்கும் பெரியாறுக்குமான கொடுக்கல் வாங்கல், மதுரையின் நீராதாரம், மதுரையின் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பாண்டிய அரசர்களின் கட்டமைப்புகளை பிரிட்டிஷ் நிர்வாகம் எவ்விதம் மீட்டெடுத்துப் பயன்படுத்தியது, பாண்டிய வம்சாவளியில் இருந்து சென்ற பூஞ்சாறு அரசர்களுக்கும் பெரியாறுக்குமான உறவு, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் மன்னான் பழங்குடியினர் சிலப்பதிகாரத்தின் கண்ணகி - கோவலன் கதையைக் கூத்தாகச் சொல்வது என்று பண்பாட்டுத் தலைநகரத் தின் கதையுடன், பெரியாறு திரும்பும் திசையெங்கும் வேர்ப் பிடித்திருப்பதை உணர்ந்த கணத்தில்தான் உண்மையில் நாவல் தொடங்கியது. மதுரையின் வரலாற்றுடன் இருந்த பிணைப்பு பெருஒளியாய்க் கண்முன் எழுந்த கணத்துக்குப்பின் தான் இருபது வாரமா, நாற்பது வாரமா என்ற கணக்கையெல்லாம் எண்ணிப்பார்க்கக் கூட அவகாசமில்லாமல் 122 வாரங்கள் காப்பியமாக வளர்ந்தது.

ஏறிய சிவிகை இறங்காத சீமாட்டியின் எண்ணற்ற கதைகளில் ஒன்றாக நீரதிகாரம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது, வாசிக்கிற ஒவ்வொருவரிடமும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com