நாவலாசிரியனுக்கு முன்னால் உள்ள சவால், தனது முந்தைய நாவல்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாக அவனது அடுத்த நாவல் அமையவேண்டும் என்பதுதான். புதிய களத்துடன் புனைவாக்கத்தில் அடுத்த கட்டத்தை எட்டுவதும் மிகவும் முக்கியம்.
அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி ஆகிய மூன்று நாவல்களும் எனக்கு நன்கு பரிச்சயமான களங்கள். அவற்றின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நேரடியாக நான் அறிந்தவர்கள். இருந்தபோதும்கூட இவை ஒவ்வொன்றையும் ஒன்று மற்றதிலிருந்து மாறுபட்டதாகவே எழுதினேன். இதற்கு அடுத்து என்ன எழுதுவது என்று யோசித்த வேளையில் சிறிய ஒரு நாவலை எழுதும் முயற்சியில்தான் ‘தீர்த்த யாத்திரை'யை எழுதினேன்.
இந்த நான்கு நாவல்களுக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. மனித உறவுகள் சார்ந்த விசாரணை என்பதுதான் அது. குடும்பம், ஆண் பெண் உறவுகள் போன்ற களங்களை எழுதுபவர் என்ற வரையறைக்குள் நின்றுவிடுவேனோ என்ற எண்ணம் எழுந்தது. எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு கற்பனையின் துணைகொண்டு புனைவின் சாத்தியத்தைத் தொட்டுப் பார்க்கலாம் என்றெண்ணினேன். அதன் சிறிய தொடக்கமாக ‘மாயப் புன்னகை'யை எழுதினேன். முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
‘மனை மாட்சி'யின் அடுத்த பகுதியை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தபோது, நண்பர் மோகனரங்கனுடன் ஜெய்ப்பூர் செல்ல வாய்த்தது. இதற்கு முன்பு ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தைப் பற்றி கானுயிர் புகைப்பட நிபுணர் டி.என்.ஏ பெருமாள் சொல்லிக் கேட்டதுண்டு. ஆனால் விவரங்கள் எதுவும் தெரியாது.
டிசம்பர் 2017ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது முதல் நாளே ரந்தம்பூர் போக நேர்ந்தது. ஜெய்ப்பூரிலிருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சவாய் மாதவ்பூருக்கு இரவு பத்து மணிக்கு சென்று சேர்ந்தோம். விடிகாலையில் குளிராடைகளில் ஒளிந்துகொண்டு ஜீப்பில் பயணம். மெல்ல மெல்ல புலரும் ஒளியில் சாம்பல் வண்ணத்துடன் காடு உயிர்பெற்றது. காலை ஆறு மணி முதல் பத்து மணிவரையிலும் ஒரு பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். மான்கள், நீல்காய், கரடிகள், பறவைகளைக் காண முடிந்திருந்தது. புலிகள் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. ஓய்வுக்குப் பின் மீண்டும் மதியம் இரண்டு மணிக்கு காப்பகத்துக்குப் புறப்பட்டோம். செல்லும் வழியில் சாலையோரக் கடைகளில் ஒன்றில் ஒரு பெயர்ப் பலகை என் கண்ணில்பட்டது. ‘மச்லி'. மச்லி என்றால் மீன் என்று பொருள் என்பது எனக்குத் தெரியும். இங்கே ஒரு கடைக்கு எதற்கு ‘மீன்' என்று பெயரிடவேண்டும் என்று பொதுவாகக் கேட்டேன். ஜீப்பில் இருந்த நண்பர் செங்கதிரின் மகன் ஆதவன் “அங்கிள், மச்லி தெரியாதா?' என்று கேட்டான். ‘மச்லின்னா மீன்தானே?' என்றேன். உடனே அவன் தன்னிடமிருந்த கைபேசியில் வலைத்தளத்தைத் திறந்து ஒரு பக்கத்தைக் காட்டினான் ‘இதுதான் மச்லி'. திரையில் ஒரு புலியின் படம் இருந்தது. ‘இதுதான் மச்லி அங்கிள். குயின் ஆஃப் ரந்தம்பூர்' என்றான். ‘உலகத்திலேயே அதிகமாகப் படம் பிடிக்கப்பட்ட புலி இதுதான்' என்று கூடுதலாய் சில தகவல்களைச் சொன்னாள் நடாஷா. ‘போன வருஷந்தான் செத்துப் போச்சு' என்று அவள் சொல்லி முடித்தபோது காப்பகத்தின் நுழைவாயிலை எட்டியிருந்தோம். மச்லியைக் குறித்த உரையாடல் அத்துடன் முடிந்துவிட்டது.
ஜெய்ப்பூர் சுற்றுலா முடிந்து ஊர் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் இரவில் திடீரென மச்லியின் நினைவு வந்தது. உடனே அதைப் பற்றி இணையத்தில் தேடத் தொடங்கினேன். ‘மச்லி' என்ற பெயரை இட்டதும் எண்ணற்ற படங்களும் பக்கங்களும் காணொலிகளும் அடுத்தடுத்து விரிந்தன. ‘ரந்தம்பூரின் ராணி' என்று சொல்வது எத்தனை பொருத்தமானது என்பதைக் காட்டும்விதமாக மச்லியைப் பற்றிய வியப்பூட்டும் விபரங்கள் நிறைந்திருந்தன. மச்லி 2016ஆம் ஆண்டு மரணடைந்தபோது, மழைக்கு நடுவிலும் சிறப்பான முறையில் இறுதிச் சடங்கு நடந்துள்ளது. ஜெய்ப்பூரில் ஊடகங்கள் அனைத்திலும் அதைப் பற்றிய விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
மச்லியின் அபாரமான வாழ்க்கையை ஒரு புனைவாகச் சொல்லலாம் என்ற எண்ணத்தில் ‘மச்லி' என்று தலைப்பிட்டு எண்பது பக்க அளவில் ஒரு குறுநாவலாக எழுதினேன்.
கோவையில் இருந்த கானுயிர் புகைப்படக் கலைஞர் ஜெயராமிடம் இதைப் பற்றிச் சொன்னேன். உற்சா கத்துடன் அவர் புலிகளைப் பற்றி தன்னிடமிருந்த அபூர்வமான சில புத்தகங்களைக் கொடுத்தார். ‘நீங்க அந்த ஒரு புலியைப் பத்தி மட்டும் எழுதிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் விரிவாக ஒட்டுமொத்தமா ஒரு காட்டைப் பத்தியும் அதிலிருக்கும் உயிர்களைப் பத்தி எழுதிப் பாக்கலாமே. தமிழ்ல அப்பிடி எதுவும் இல்லேன்னு நெனக்கறேன்' என்று பேச்சுவாக்கில் சொன்னது என் ஆர்வத்தைத் தூண்டியது.
ரந்தம்பூர் வனத்தைப் பற்றித் தேடிப் படித்தேன். வனத்துக்குள் இருக்கும் கோட்டை, அதன் சரித்திரம், அங்கிருந்த பழங்குடிகள், மொகலாயர்களின் காலத்திலும் பிறகு ஆங்கிலேயர்களின் காலத்திலும் நடந்த வேட்டைகள், ‘புலிகள் காப்பகத் திட்டம்', புலிகளை வேட்டையாடும் மாஃபியாக்கள் என அந்த வாசிப்பு தொடர்ந்து விரிந்தது. ரந்தம்பூர் வனத்தில் மலைகளுக்கு நடுவில் உள்ள கோட்டை சரித்திரப் பிரசித்தி பெற்றது. அலாவுதீன் கில்ஜியும் பின்னர் அக்பரும் அந்தக் கோட்டையைக் கைபற்றியுள்ளனர். ஆங்கிலேய ஆட்சியின்போது துரைமார்கள் பலர் இந்த வனத்தில் புலிகளை வேட்டையாடியுள்ளனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் எடின்பரோ கோமகனும் இங்கு வருகை தந்துள்ளனர். புலிகளின் வசிப்பிடமாக இருந்த இந்த வனத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வேட்டைகளின் காரணமாக புலிகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்தது. பின்னர், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ‘புலிகள் காப்பக'த் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் சீரிய செயல்பாடுகளால் இந்த வனத்தில் புலி வேட்டை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. புலிகளின் எண்ணிக்கை பெருகலாயிற்று. அதையொல்லாம் விட புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இயற்கை வகுத்த திட்டமே ‘மச்லி' என்ற பெண் புலி. சராசரி புலிகளைவிட அதிக ஆயுள் வாழ்ந்த ‘மச்லி'யின்
சாகசங்கள் மலைக்கச் செய்பவை. இன்று ரந்தம்பூர் வனத்திலுள்ள புலிகளில் பெரும்பாலானவை மச்லியின் வாரிசுகளே.
இதைத் தவிர, ஜிம் கார்பெட், உல்லாஸ் கரந்த், வால்மீக் தாப்பர், தியோடர் பாஸ்கரன் உள்ளிட்ட கானியலாளர்களின் வெவ்வேறு நூல்களையும் தேடி வாசித்தேன். இதற்கு இணையாக இணையத்திலிருந்தும் நிறையப் படித்தேன். காணொளிகளைப் பார்த்தேன்.
இவை எல்லாவற்றையும் பொருத்தமான அளவில் இணைத்து, உண்மைச் சம்பவங்களும் தகவல்களும் அனுமதித்த இடைவெளிகளில் புனைவை உருவாக்கி நாவலை எழுதி முடித்தேன்.
நாவலின் முதல் வரைவை வாசித்தபோது ரந்தம்பூரைப் பார்க்கவேண்டும் என்றார் வசந்தகுமார். 42 டிகிரி வெயில் கொளுத்திய மே மாதத்தில் சென்றோம். காப்பகத்துக்கு வெளியிலேயே, பாரம்பரிய அரண்மனை விடுதி ஒன்றில் நான்கு நாட்கள் தங்கினோம். காப்பகத்
துக்குள் சென்ற ஒவ்வொரு முறையும் புலிகளைக் காண முடிந்தது. கோடை காலம் என்பதால் நீர் நிலைகளின் அருகே அவற்றைக் காண முடிந்தது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பான சம்பவம் கடைசி நாள் மதியத்தில் கிட்டத்தட்ட அன்றைய நாளின் முடிவில் நிகழ்ந்தது. எங்கள் கண்ணுக்கு நேரே நூறு அடி தொலைவில் கணேஷ் என்ற புலி ஒரு மானை துரத்தி வேட்டையாடி வீழ்த்தி இழுத்துச் சென்றது. அரைமணி நேரத்தில் புலி தன் இலக்கு இருக்கும் தொலைவைக் கணித்து, பாய்ந்து வந்து, கடைசி நொடியில் காற்றில் எகிறி கழுத்தில் தாக்கி வீழ்த்திய அந்த வேகமும் ஆற்றலும் மறக்க முடியாத அனுபவம்.
மலை மேலிருந்த கோட்டையையும், கணேஷ் மந்திரையும் நிதானமாகச் சுற்றிப் பார்த்தோம். தகவல்களாக அறிந்தவற்றைக் காட்டிலும் நேரடியாக இடங்களையும் சூழலையும் பார்க்கும்போது நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் இன்னும் ஆழமானவை.
மீண்டும் சில புதிய பகுதிகளை எழுதினேன். புலிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்ட கதைகளை ‘வேட்டைக்காடு' என்று முதல் பகுதியிலும், புலிகள் பாதுகாப்புக்கான அரசின் முயற்சிகளையும் ‘மச்லி'யின் சாகசங்களையும் ‘அணிநிழற்காடு' என்ற இரண்டாம் பகுதயிலும் அமைத்தேன்.
பல்வேறு அடுக்குகளையும் இணைப்புக் கண்ணிகளையும் கொண்ட இந்த நாவலை எழுதி முடித்தபோது ‘காட்டுயுர்களில் ஒன்றாய் இருந்த மனிதன் பகுத்தறிவின் துணைகொண்டு வேறொரு உயரத்தை எட்டியிருந்தபோதும்கூட அடிப்படையில் அவனுக்குள் உள்ளேயிருக்கும் மிருக இச்சையும் குணமுந்தான் அவனைத் தொடர்ந்து இயக்குகிறது; தத்துவம், கலை, இலக்கியம், அறிவியல் என்று பல்வேறு துறைகளின் பாவனைகளைக்கொண்டு மனிதன் அந்த உயிரிச்சையை, தன்னை மட்டுமே பேணிக் காத்துக் கொள்ளும் சுயநலத்தை மூடி மறைத்துக் கொள்கிறான்' என்ற எண்ணம் உறுதிப்பட்டது.
எனக்கு நன்கு அறிமுகமான, வசதியான, இணக்கமான களங்களைத் தாண்டி முற்றிலும் வேறொரு பின்னணியில், புதிய கதைக்களத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.