இந்தியாவில் டிக்டாக் இல்லையே என வருத்தப்படுகிறவர்கள் ஏராளமாக இருக்க, அதன் மூலம் குழந்தைக் கடத்தல் விவகாரம் வெளியில் வந்திருக்கிறது.
எங்கே, எப்படி நடந்தது இது?
முன்னாள் சோவியத் குடியரசான ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர், 19 வயது எலன் டீசாட்ஸ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள், டிக்டாக்கில் தன்னைப் போலவே அச்சுஅசலாக இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்ததும், அதை அவரால் நம்பமுடியவில்லை. திகைத்துப்போனாலும் ஆன்னா பஞ்சுலிட்ஸ் எனும் அந்தப் பெண்ணுடன் டிக்டாக் தோழியாகி இருக்கிறார்.
மாதக் கணக்கில் பேசிப் பழகியபின்னர்தான், அவர்களுக்குத் தெரிந்தது, இருவருமே தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் என்று! அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஒரேமாதிரி இருக்கிறோமே, எதற்கும் ஒரு டிஎன்ஏ சோதனை செய்துபார்க்கலாம் என முடிவுசெய்தனர்.
சோதனை செய்ததில் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய உறவு என்பதைவிட, ஒரே பெற்றோரின் இரட்டைக் குழந்தைகள் என்பதும் உறுதியானது.
அதன்பிறகு அவர்களின் மனநிலை எப்படி இருந்தது?
" முதலில் இந்தத் தகவலை மனம் ஏற்றுக்கொள்ள மிகுந்த சிரமமாக இருந்தது. என்னை மகிழ்ச்சியாக, இவ்வளவு பெரிய பிள்ளையாக 18 ஆண்டுகளாக வளர்த்தவர்கள் என் பெற்றோர் இல்லை என்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.” என்கிறார் ஆன்னா.
”ஆனாலும், எதன் மீதும் எனக்கு கோபம் இல்லை; என்னுடைய மூலத்தைக் கண்டுபிடிப்பதில் மகிழ்ச்சியடைந்த- என்னை ஆளாக்கியவர்களுக்கு மிகுந்த நன்றியுடையவள் ஆவேன்.” எனும் ஆன்னாவுக்கு பரவசம் தாங்கமுடியவில்லை.
ஆன்னாவுக்கும் எலனுக்கும் டிஎன்ஏ சோதனை நடத்த உதவியவர், ஜார்ஜியாவின் பத்திரிகையாளர் டமுனா முசெரிட்ஸ். இவரும் தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தைதான் என்பதை அறிந்தபின், இப்படியான குழந்தைகளுக்கு அவர்களின் குடும்பத்தினரைக் கண்டறிய உதவும்வகையில் முகநூல் பக்கம் ஒன்றைத் தொடங்கினார். அதில் 2 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான், பெற்றோரிடம் பொய் சொல்லி அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து, கடத்திக்கொண்டு போய், தத்து கொடுத்த பெரிய அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
புலனாய்வு செய்தியாளரான முசெரிட்ஸ் இதற்காக நாடு முழுவதும் பெரிய வலைப்பின்னலை உருவாக்கினார். அது எல்லாமே ரகசியமாகவே நடந்துமுடிந்தது.
கடந்த 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை 1.2 இலட்சம் குழந்தைகளை திருடி, தத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவர் வெளியே கொண்டுவந்தார்.
“ குழந்தைகளின் தாயார்களிடம் பிறந்ததுமே இறந்துவிட்டது; மருத்துவமனைக்குள் இருக்கும் சமாதியில் புதைத்துவிட்டோம் என்கிறபடி சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் மருத்துவமனைகளில் சமாதிகளே இல்லை. குழந்தைகளை கண்மறைப்பாகக் கடத்திக்கொண்டுபோய் தத்துப் பெற்றோருக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். பெரும்பாலான தத்துப் பெற்றோருக்கு இந்த சட்டவிரோதம் குறித்து தெரியாதபடி, கதைகளைச் சொல்லி சமாதானப்படுத்தி இருக்கின்றனர். தத்துப் பெறுவதற்கு பத்தாண்டுகளுக்கும் மேல் காத்திருக்க விரும்பாதவர்கள் இப்படியாகத்தான் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள்.” என ஊடகங்களிடம் கூறியிருக்கிறார், முசெரிட்ஸ்.
எலனின் தத்துத் தாயாரான 61 வயது லியா கொர்கொடாட்ஸ், ஒரு பொருளாதாரப் பேராசிரியர். “திருமணமாகி ஓராண்டு ஆனதுமே எங்களால் குழந்தை பெறமுடியாது என்பது உறுதியானது. அதேசமயம் அனாதை இல்லத்தில் தத்தெடுப்பது பெரும் காத்திருப்புக்குப் பின்னரே சாத்தியமாகும் என்பதும் தெரிந்தது. 2005ஆம் ஆண்டில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் 6 மாதக் குழந்தையைத் தத்துக் கொடுக்க இருப்பதாகச் சொன்னதும், அது எங்களுக்கான தருணம் என்று மட்டுமே யோசித்தேன். எலனை வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டோம். ஆனால் அதில் சட்டவிரோதம் இருப்பதாக அப்போது தெரியவில்லை. எல்லாமே முறைப்படியாகவே இருந்தன. நீதிமன்றம் இதை முறைப்படுத்தி ஏற்றுக்கொள்ள மாதங்கள் பிடித்தன.” என்பது லியா சொல்வது.
ஆன்னா- எலினாவைப் போலவே, ஆன்னா சர்டானியா- டாக்கோ கிவிடியா இரட்டையரும் இந்த முகநூல் பக்கத்தால் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
இப்படி 800 குடும்பங்கள் முசெரிட்சின் முகநூல் பக்கத்தால் ஒன்றுசேர்ந்துள்ளன.
இவ்வளவு பெரிய அளவுக்கு குழந்தைக் கடத்தலா எனக் கேள்விகள் வலுக்க... அந்நாட்டுப் பிரதமர் இரக்கில் கோபாக்கிட்சேவோ, உலக அளவில் குழந்தைக் கடத்தலைத் தடுப்பதில் தங்கள் நாடு முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்.
ஆனால், அரசாங்கத்தின் பொறுப்பு இதில் ரொம்பவும் குறைவுதான்; எங்களுக்குப் பெரிய அளவில் உதவி ஏதும் செய்யவில்லை என்கிறார், முசெரிட்ஸ்.