’க்’ வருமா வராதா? விக்கிக்கொண்டே கேட்டது குதிரை.
தேசிங்கு உடைவாளை சாணை பிடித்துக்கொண்டே ’என்ன ஆச்சு?’ என்றான்.
‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சிப்பெயரை அறிவித்துள்ளாரே விஜய் அதைப் பற்றிதான்?
‘சினிமாக்காரர்கள் எப்போதும் படங்களுக்குப் பெயர் வைக்கும்போது இத்தனை எழுத்து வரவேண்டும் என்று பார்த்து வைப்பார்கள். அப்படி வெச்சிருப்பாங்க… இப்ப எல்லாம் யாரு எழுத்துப் பிழை பாக்கிறாங்க…மை டியர் ஹார்ஸ்!’
குதிரை கனைத்துக்கொண்டது.
“சரி மன்னவா…. எழுத்துப் பிழைதான் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்று சொல்லியிருப்பது, இவருக்கு அரசியல் போக்கு தெரியுமா? இந்த சொல்லின் பின் இருக்கும் தற்கால அரசியல் பஞ்சாயத்து புரிந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது’
“ தெரிந்து வைத்தார் என்றால் இக்கட்சியின் சூத்ரதாரிகள் யார் என்று உடனே அரசியலில் குட்டிக் குழந்தைக்கும் புரிந்துவிடும். இது பற்றி கருத்தில் கொள்ளாமல்தான் வைத்திருப்பார்கள்..’
“அப்டியா சொல்றீங்க.. அவ்வளவு மொக்கையான டீமையா அவர் உடன் வைத்திருப்பார்? இருக்காது ராசாவே..’
தேசிங்கு வாளை ஒரு முறை காற்றில் வீசீனான்.
” எது எப்படி இருந்தாகும் அரசியல் தலைவர் விஜய்க்கு நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!. பொதுவாக பெரிய அளவில் தொண்டர்களை மாநாடு மாதிரி கூட்டி கட்சிப் பெயரை அறிவிப்பார்கள். சிம்பிளாக ட்விட்டரில் அறிவித்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார் விஜய்! அரசியல் அணுகுமுறைகள் மாறிவிட்டன என்பதை இது காட்டுகிறது! விஜயகாந்த் இல்லாமல் போன வெற்றிடத்தை விஜய் கட்சி நிரப்பும். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்குப் போகக்கூடிய இளம் வாக்காளர்களை, புதிய அரசியல் ஆர்வலர்களை இது இழுக்கும்… இவ்வளவுதான் த.வெ.க.-வின் உடனடி விளைவு என்று சொல்லப்படுகிறது’
’நம்பிக்கிறோம்’ என்ற குதிரை ’தமிழ்நாட்டில் நாடாளுமன்றக் கூட்டணிப் பேச்சுவார்த்தை சூடு பிடித்துள்ளதே? அது பத்தி ஏதாவது சொல்லுங்களேன்’ என்றது.
”தி.மு.க. கூட்டணிக்கு எப்போதும்போல யாருக்கு எவ்வளவு கொடுப்பது என்ற பேச்சுவார்த்தை இழுபறிகள்தான்.. காங்கிரஸுக்கு ஒன்றிரண்டை குறைக்க எப்போதும்போல் முயற்சி செய்வார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே, ஸ்டாலினைச் சந்திக்கிறார். அதில் முடிவாகிவிடும். காங்கிரஸுக்கும் வேறு வாய்ப்புகள் இல்லை. இடதுசாரிகளுக்கு ஒன்றிரண்டு குறைக்கலாம். மாநிலங்களவை தருகிறோம் என்று சொல்லப்படலாம். வழக்கம்போல திருமாவளவன், ரவிக்குமார் விசிகவில் நிற்பார்கள் என்கிறார்கள். இதில் புதிய வரவு என்றால் கமலஹாசன்தான்! அவர் கோவையில் நிறுத்தப்படலாம். அங்கே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் அண்ணாமலையோடு அவர் மோதுவார்!
‘தென் சென்னை என்றார்களே?’
‘கமலுக்கா? அவர் விரும்பலாம். ஆனால் திமுகவில் இப்போதைக்கு தமிழச்சி தங்கபாண்டியனையே தொகுதியில் பணிகளைப் பார்க்கச் சொல்லிவிட்டதாகக் கேள்வி.’
‘ஓ.. தென் சென்னையில் பாஜக சார்பில் யார் நிற்பார்களாம்?’
“நட்சத்திர வேட்பாளர் குஷ்பு இறக்கப்படலாம். பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி களமிறக்கப்படலாம். இன்னொரு ஆச்சர்யமும் இருக்கலாம்!’
“என்ன அது?’
“ பிரதமர் நரேந்திரமோடி தன் அமைச்சர்கள் அனைவரையும் தேர்தலில் இறக்கிப் பார்க்க முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஏற்கெனவே திருவான்மியூரில் ஒரு முக்கியப்புள்ளி வீடு வாங்கி உள்ளார். அவர் ஒருவேளை போட்டியிடக்கூடும்!’
‘நம்ம நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத்தானே சொல்கிறீர்கள்? அவர் அடிக்கடி இந்தப் பக்கம் சுற்றும்போதே நினைத்தேன்…. தமிழச்சி Vs டெல்லி தமிழச்சி என்று தலைப்பு போட ஒரு வாய்ப்பு..” குதிரை நீளமாக சிரித்துக்கொண்டது.
‘ஆ.ராசா- எல்முருகன், அண்ணாமலை- கமலஹாசன், தமிழச்சி தங்கபாண்டியன்- நிர்மலா சீதா ராமன்… ஒரே விஐபி மோதலாக இருக்கிறது என்று நினைக்கிறாயா?’
‘ ஆமாம் ராசாவே…… இன்னும் ஒரு விஷயம்… தமிழகத்தில் உண்மையிலேயே பெரிய கட்சியான அதிமுக இன்னும் கூட்டணி அறிவிப்பை மேற்கொள்ளவில்லையே?’
“ பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட நிலையில் அதிமுகவுடன் பாமக, தமாகா, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தொடருமா? அவை பாஜக அணியில் நிற்குமா என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை. அவை வெற்றிக்கூட்டணியில் அல்லது அதிகம் வாக்குகள் பெற வாய்ப்பு இருக்கும் அணியில்தான் இடம் பெற விரும்பும். இதில் தேமுதிக வேறு உள்ளது… இன்னும் சில நாட்களில் இது முடிவாகும்.’’
“ நிஜமாவே பாஜக- அதிமுக கூட்டணி முறிவு முடிந்த கதைதானா?’
‘அரசியலில் எதுவும் நடக்கலாம். ஓபிஎஸ், தினகரன் பாஜக கூட்டணியில்தான் இருப்பார்கள். அதிமுகவுடன் கடைசிவரை அதிக இடங்களைக் கேட்டு பாஜக தரப்பில் நிழல் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். ஆகவே அவசரப்பட்டு யாரும் இப்போதைக்கு வார்த்தைகளை விட மாட்டார்கள்! எல்லா அஸ்திரங்களும் பிரயோகிக்கப்படும்’
தேசிங்கு ’எல்லா’ என்ற வார்த்தையை நன்றாக அழுத்திச் சொன்னான்.
குதிரை தலையை நன்றாக ஆட்டியது.
தேசிங்கு தாவி ஏற குதிரை நான்கு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது!