இஸ்ரேல் அரசுடன் இணக்கமாக இருந்த ஹமாஸ்- இன்னொரு பக்கம்!

காசா பகுதியில் இஸ்ரேலியா வான் தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேலியா வான் தாக்குதல்
Published on

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தாக்குதலைத் தொடங்கியது ஹமாஸ் அமைப்பு. இஸ்ரேலின் உளவு அமைப்புகள் இவ்வளவு பெரிய தாக்குதலை முன்னறிவுப்பு செய்யவில்லையே என்கிற அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் மிகக்கொடுரமான மோதலாக மாறிப் போயிருக்கிறது. ஹமாஸ் ஏன் இப்படி ஒரு திடீர் தாக்குதலில் ஈடுபடவேண்டும்?

உலகப் போருக்கு முன்னரே ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியில்கூட யூத இனம் உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட ஓர் இனமாக இருந்தது, கொஞ்சம் பழைய வரலாறு. ஜெர்மனியின் இட்லர் உலகமே பதறும்படியாக பெரும் இனக்கொலையை யூத இனத்தின்மீது ஏவிவிட்டது, வரலாற்றின் கருப்புப் பக்கங்களாக உறைந்து நிற்கின்றன.

இதனிடையே, மதரீதியான ஐதீகப்படி ஜெருசலேத்தை மையமாகக் கொண்ட ஒரு குன்று (சியோன்) தேசத்தைப் படைப்பது எனும் தங்களின் கடமையென உலக யூதர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, 1947இல் பிரிட்டன் ஆதிக்கத்தில் பாலஸ்தீனம் இருந்தபோது, அதற்குள் புதிய நாடாக இஸ்ரேலை உருவாக்கிக்கொண்டார்கள். அன்று தொடங்கிய நிலவுரிமை மோதல் இந்த வாரம்வரை நீடிக்கிறது.

அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கியின் ஒட்டமான் பேரரசின் கீழ் இருந்துவந்த பாலஸ்தீனத்தை, பிரிட்டன் கைப்பற்றியபிறகு, இஸ்ரேலியர்களுக்கு முக்கிய பின்புலமாக பிரித்தானிய வல்லரசு இருந்தது. அதைப்போலவே இப்போது (அமெரிக்கக்) கழுகின் துணையோடு கண்மூடித்தனமான செயல்களில் ஈடுபட்டுவருகிறது, இஸ்ரேல் அரசு.

மேற்குலக நாடுகளும் அதன் ஆதரவுத் தரப்புகளும் கூறுவதைப்போல, ஹமாஸ் தீவிரவாத இயக்கம்தான் இந்த சில நாள்களின் போர்க் கொடூரத்துக்குக் காரணமா?

ஆம், இல்லை என்று இதற்கு பதில்சொல்லிவிட முடியாது என்பது ஒருபுறம் இருக்க, ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் சில கதைகளைக் கேட்டால், அவர்களா இப்படி என கேட்கத் தோன்றும்.

இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டு, பரப்பி உட்கார்ந்துகொள்ளும் பாணியில், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க... அதற்கு எதிராக 1987இல் முதல் பாலஸ்தீன எழுச்சி நடைபெற்றது. அப்போது உருவானதுதான், ஹரகத் அல்மக்குவாமா அல் இஸ்லாமியா- ஹமாஸ், அதாவது இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம். 1988 ஜனவரியில்தான் ஹமாஸ் எனும் பெயரில் துண்டறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு முன்னர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக- பாலஸ்தீன மக்களே எழுந்துவாருங்கள் என 87 டிசம்பரில் அறைகூவல் விடப்பட்டது. ஆனால், ஹமாஸ் பெயரில் அல்ல!

ஹமாஸ் இயக்கம் என்றாலே ஆயுதச்சண்டை, தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிற பெயர்களையே கேட்டுக்கேட்டுப் பழகிப் போனவர்களுக்கு, அது ஓர் மனிதநேயப் பணி அமைப்பு என்பது தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். இஸ்ரேல்- பாலஸ்தீன விவகார வல்லுநர்கள் பலரும் இதை எழுதி எழுதி களைத்துப்போய் விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஹமாசின் முந்தைய பெயர், சகோதரத்துவம் சரியாகச் சொன்னால், முஸ்லிம் சகோதரத்துவம். 1928ஆம் ஆண்டில் எகிப்திய இஸ்லாமியரான ஹசன் அல்பன்னா என்பவரால், அப்போதைய பிரிட்டன் ஆதிக்க பாலஸ்தீனத்தில் தொடங்கப்பட்டது, அந்த அமைப்பு. பின்னால் 1967இல் யாசர் அராபத் தலைமையில் இடதுசாரி தேசிய இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கம் தனியொரு அரசியலை முன்வைத்து, இலங்கையில் ஈழ விடுதலை இயக்கத்தினருக்கு பயிற்சி தரும் அளவுக்கு ஒரு பக்கம் இருக்க, சகோதரத்துவ அமைப்போ ”புனிதப்போருக்கான நேரம் இன்னும் வரவில்லை; அதுவரை நாம் வலுவான ஒரு சமுதாயத்தை மறுகட்டமைப்பு செய்வோம்.” என்றது.

அதனுடைய பணிகள் முழுவதும் இஸ்லாமியத்தைப் பரப்புவதும் முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்குவதும் நலப்பணிகளுமாகவே இருந்தது. சகோதரத்து அமைப்பின் சேக் அகமது யாசின் என்ற பார்வை மாற்றுத்திறனாளி, 1973இல் இஸ்லாமியம் மையம் என்பதை உருவாக்கினார். அதை இஸ்ரேலிய அரசு அங்கீகரித்தது என்பதைவிட, அந்த மையத்தின் மூலம் கல்விநிலையங்கள், மசூதிகளைக் கட்டிக்கொள்ளவும், இதற்காக பணம் திரட்டிக்கொள்ளவும் அனுமதி அளித்தது. குறிப்பாக, காசா பகுதியில் உள்ள இசுலாமியப் பல்கலைக்கழகம் இப்படி அமைக்கப்பட்டதுதான்.

சோவியத் ஒன்றியம், செஞ்சீன அரசுகள் வலுவாக இருந்த உலக நிலைமையில், ஓர் இடதுசாரி இயக்கமான அராபத் அமைப்பைவிட, இந்த அமைப்பு ஒருவகையில் நல்லதுதான் என இஸ்ரேல் யூத அரசுத் தரப்பின் உத்தியாக இருந்திருக்கலாம்.

1979இல் ஈரானில் நிகழ்ந்த இசுலாமியப் புரட்சியானது, மேற்கு ஆசியாவில் இசுலாமிய அரசியலின் நிலவரத்தைப் புரட்டிப்போட்டது. இசுலாமிய அரசியல் என்பது எழுச்சிக்கான விசையாகவும் மாறியது. விளைவாக, பல நாடுகளில் இசுலாமிய இயக்கங்கள் அரசியலைத் தீர்மானிக்கும் இடத்துக்கு மாறின.

அதன் தொடர்ச்சியாகத்தான், 1987இல் ஏற்பட்ட பாலஸ்தீன மக்களின் எழுச்சி, முசுலிம் சகோதரத்துவம் அமைப்பையும் அரசியல் பாதைக்குத் திருப்பியது.

சேக் அகமது யாசின் தலைமையில் ஹமாஸ் 1989இல் ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருந்து முழு பாலஸ்தீனத்தையும் விடுதலைசெய்யும் புனிதப் போர்தான் தீர்வு என அதன் 1988 கொள்கைப் பிரகடனம் கூறியது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்ற பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முயற்சியை அது நிராகரித்தது. 2000களில் இரண்டாவது பாலஸ்தீன எழுச்சி வெடித்தபோது, ஹமாஸ் இயக்கம் முன்னணிப் பாத்திரத்தை வகித்தது.

ஹமாசின் தற்கொலைப் படைத் தாக்குதல்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இஸ்ரேல், சேக் யாசினை 2004 மார்ச்சிலும் அடுத்த மாதத்தில் யாசினுக்கு அடுத்தநிலையில் இருந்த அப்தல் அசிஸ் அல்ரேண்டசியையும் தீர்த்துக்கட்டியது. காலித் மீசேல் என்ற அடுத்தநிலைத் தலைவரையும் ஜோர்டானில் வைத்து கொல்லமுயன்றது. ஆனாலும் ஹமாஸ் இஸ்ரேலியப் படைகளுக்கு பயங்கரமான தலைவலியாக இருந்தது. சமாளிக்கமுடியாத இஸ்ரேல் 2005ஆம் ஆண்டில் காசா பகுதியிலிருந்து வெளியேறியது.

அதைத் தொடர்ந்து, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீன அரசுக்கான தேர்தல் 2006இல் நடைபெற்றது. அதில், அராபத் இயக்கத்தின் பத்தாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொத்தமுள்ள 132 இடங்களில் 74 இடங்களில் ஹமாஸ் வென்றது. அரசுக்குத் தலைமைவகிக்கும் வாய்ப்பு கிடைத்த ஹமாஸ், பழைய இஸ்ரேலிய அழிப்பு என்பதைக் கைவிட்டு, பாலஸ்தீன மக்களின் நல்வாழ்வு என்பதே இலட்சியம் என புதிய நிலைப்பாட்டை வெளியிட்டது.

ஆனால், ஓராண்டுக்குள் பதா இயக்கத்தினருடன் முரண்பட்ட நிலையில், ஹமாஸ் அரசைக் கலைத்தார், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ். இரு தரப்பு பாலஸ்தீனியர்க்கும் சண்டை மூண்டது. பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பக்கம் அராபத்தின் பதா இயக்கமும் காசாவில் ஹமாஸ் இயக்கமும் என நிர்வாகம் பிரிந்துபோனது.

காசா ஸ்ட்ரிப்
காசா ஸ்ட்ரிப்

காசா ஸ்ட்ரிப் எனப்படும் ஒரு துண்டு நிலப்பகுதியில், ஹமாஸ் இயக்கமும், இஸ்ரேல் படைகளும் தொடர்ந்து ஆதிக்கப் போட்டியில் மோதியபடி இருக்கின்றன. இசுலாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமாகவும்- பாலஸ்தீனர்களின் புனிதத்தலமாகவும் கருதப்படும் அல் அக்‌ஷா மசூதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென இஸ்ரேல் படை கைப்பற்ற முயன்றது. அப்போது முதல் அக்டோபர் 7 தாக்குதல்வரை அன்றாடச் செய்திகளாக எத்தனையோ நிகழ்வுகள் கடந்துபோய்விட்டன.

இஸ்ரேலை அழித்துதான் ஐதீகப்படியான பாலஸ்தீன நாடு என்ற இடத்திலிருந்து, 1967இல் இருந்தபடி இரு தரப்பும் ஏற்றுக்கொள்வது என கீழிறங்கியது ஹமாஸ் தரப்பு. மேலும், யூத ஒழிப்பு அல்லது எதிர்ப்பு என்கிற இடத்தைக் கைவிட்டு, இஸ்ரேலியர்கள் தங்கள் எதிரிகள் அல்லர்; சியோனிசத்தை முன்வைக்கும் இஸ்ரேலிய அரசுடன்தான் தங்களுடைய போர் என்றும் அந்த ஹமாஸ் இயக்கம் 2017இல் திட்டவட்டமாக அறிவித்தது.

அது ஒரு நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டு வந்தநிலையில், அக்டோபர் 7 தாக்குதலில் எல்லாமே நிலைகுலைந்து போய்விட்டது!

logo
Andhimazhai
www.andhimazhai.com